Sunday, April 12, 2020

கிழக்கேயும் சில அஸ்தமனங்கள் - A DAY'S AGENDA OF A VILLAGE COWBOY


LET US READ

SHORT STORIES



வாங்க
கதை 
படிக்கலாம்
 
ஞானசூரியன் கதைகள்
GNANASURIAN STORIES

(இந்த கதை பிரசுரமான ஆண்டு (அநேகமாய் 1981) இனிய(வன்) இலக்கிவீதியின் சிறந்த சிறுகதைக்கான இரண்டாம் பரிசினை பெற்றது. 1985 ல் மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் எம் ஏ தமிழ் இலக்கியத்திற்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இது நான் எழுதிய இரண்டாவது சிறுகதை. நான் எழுதிய முதல் சிறு கதை 'ஜ்வாலை" தாமரை இதழில் பிரசுரமானது. படிக்கும் போதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் கதை இது) 
 
கிழக்கேயும் சில அஸ்தமனங்கள்
A DAY'S AGENDA OF A VILLAGE COWBOY

அகரத்தா கிழவிக்கு> எஞ்சியிருக்கும் ஒரே வாரிசு பேரன் காளி. கோவணத்துடன் அலையும் அழுத்தமான பையன். பத்து வயதுப் பையன். அவன் முதல் நாள் அம்பாரம் போட்டிருந்த சாணிக் குவியலின் மீது தண்ணீரை சேர்த்து மிதித்தான்.
      விடிந்தும் விடியாத காலைப் பொழுது. புனிப்படலம் புகையாய் வியாபித்திருந்தது. அகரத்தா கிழவியின் ஒலைக் குடிசையின் பின்னால் கிழக்கில் மஞ்சள் குளித்துக் கொண்டிருந்த சூரியன் லேசாக எட்டிப் பார்த்தது
      சாணியை துவைத்து விட்டு காளி> காலைக் கழுவிக்கொண்டான். கிழவி அவனை புளியஞ்சருகு எடுத்துவரச் சொன்னாள். புளியஞ்சருகை சாணியுடன் சேர்த்து நெடுநாளைய அனுபவத்தில் வேகமாக சிறு சிறு  உருண்டைகளாக உருட்டினாள்.
      அகரத்தா கிழவிக்கு எண்பது வயசிருக்கும். எண்பது வருஷத்தின் சோகங்களும்> சுமைகளும்> ரேகைகளாகவும் சுருக்கங்களாகவும் உடல் முழுவதும் ஆக்கிரமித்திருந்தன. தலைமுடி அடர்த்தியாக கற்றாழை நாரைப் போல் பழுத்துப் போயிருந்தது. ஒரு பெரிய குடையைப் போல் பனை மட்டையை போர்த்திக் கொண்டு குனிந்துக் கொண்டிருந்த அந்தக் குடிசையில் ஒரு மரவட்டையைப்போல் சுருட்டிக்கொண்டு கிடப்பாள்.
      காளி எப்போதாவது ஒரு முறைதான் கிழவியிடம் கைச்சைகையால் பேசுவான்.
      கிழவி வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள். காளி ராவுகவுண்டரின் வீட்டுக்குப் போகத் தயாரானான். கிழவிக்கு கைச்சைகையால் காட்டினான். இப்போதெல்லாம் அவளுக்கு சரியாக காது கேட்பதில்லை. எதாவது யாராவது சொல்வதென்றால் சத்தமாக சொல்லிப் பார்த்துவிட்டு          செவிட்டுப்பொணம் என்று அலுத்துப் போய்விடுவார்கள்.
      காளி செங்கல் ஒன்றை எடுத்து> இன்னொரு செங்கல்லின் மீதுவேகமாக தட்டினான். விரலால் தொட்டு பறக்க பறக்கத் தேய்த்தான். பானைத் தண்ணீரைச் சாய்த்து வாய்க் கொப்பளித்தான். பின்னர்> இரண்டு   தடவை பல்சந்தில் பீச்சியடித்தான். முகத்தைக் கழுவியவன், குடிசையில் கிடந்த கிழவியின் கந்தல்புடவையில் துடைத்துக் கொண்டு படலை இழுத்து சார்த்தியபடியே வெளியே வந்தான்.
      சூரியன் சற்று மேலே கிளம்பி வேப்ப மரத்தின் பின்னால் மறைந்து கொண்டது.
      வீதியில் பத்து வயதுப் பையன் ஒருவன் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். பையனின் அம்மா சிலேட்டையும் புஸ்தகத்தையும் வைத்துக் கொண்டு> அவனை மிரட்டியபடி டியூஷனுக்காக வாத்தியார் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போனாள். வாத்தியார் வீட்டு மூலை திரும்பும் வரை காளி அவர்களை நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
      மங்கலாக பழைய நினைவுகள் அவன் மனத்தில் நிழலாடின. பாதிப்பாதி முகங்களாக வந்து போயின. அப்போதுங்கூட பாட்டி சாணிதான் ;தட்டிக் கொண்டீருந்தாள். அப்பாவை இவனுக்கு பிடிக்காது.
      நினைவுகளை உதறிவிட்டு தூக்கத்தில் நடப்பவனைப் போல் நடந்து கொண்டிருந்தான் காளி.
      ராவுகவுண்டரின் வீட்டில் கொல்லைப்புற வழியாக நுழைந்தான். அதுதான் வழக்கமான வழி அவனுக்கு. அவனைப் பார்த்ததும் மாடுகள் ம்மா  ம்மா" என்று கத்த ஆரம்பித்தன. அந்த மாடுகள் மட்டும்தான் தன்னிடம் அன்பாக இருப்பதாக தோன்றும் அவனுக்கு.
     ஏண்டா இப்படி ஆபிசுக்கு வர்றமாதிரி பத்து மணிக்கு வந்தா எப்படி?  என்று இரைந்தார் ராவுகவுண்டர். ஏதாவது சத்தம் போட்டு விரட்டினால்தான் காளி பயந்துக்கொண்டு வேலை செய்வான் என்பது கவுண்டரின் நம்பிக்கை. கவுண்டர் வீட்டு சுவர்க் கெடிகாரம் ஹாலிலிருந்து எட்டுமுறை அடித்து ஓய்ந்தது. காளி எதையும் பொருட்படுத்தாமல் கூடையில் சாணியை வாரிக் கொண்டிருந்தான். க்கத்தில் நின்ற மொட்டைப் பசு காலை அகட்டி வைத்து மூத்திரம் பேய்ந்து காளியின் மேல் பன்னீராய் அபிஷேகம் செய்தது.
      ராவுகவுண்டர் குமட்டி குமட்டி வாந்தியெடுப்பது போல> காறித் துப்பிவிட்டு> பல்துலக்கிக் கொண்டிருந்த வேப்பங்குச்சியைக் கடித்து இரண்டாக பிளந்து நாக்கை வழித்துக் கொண்டே காளியின் வேலைகளை மேற்பார்வையிட்டார்.
      மாட்டுக் கொட்டகை ஓரமாக நீண்டு இறங்கியிருந்த தாழ்வாரத்தில்> ஓர் ஓரமாக காளி> குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். அவனுக்கு எதிரில் ராவுகவுண்டரின் மனைவி> பெரியமனசு பண்ணியிருந்த நசுங்கிய அலுமினியத் தட்டு இருந்தது. மாட்டுக் கொட்டகையின் குறுக்கு விட்டத்தில் அமர்ந்து கொண்டு ;சடசடவென பேசிக் கொண்டிருந்த சிட்டுக் குருவிகள் சுர்ரென்று பறந்து வந்து உட்கார்ந்து தலையை அப்படியும் இப்படியுமாகச் சாய்த்து சாய்த்துப் பார்த்தன.
      வட்டாவில் இருந்த பழைய சாதத்தை> ராப்பிச்சைக் காரனுக்குப் போடுவதைப்போல> வேண்டா வெறுப்பாக கொட்டிவிட்டு சிட்டுக் குருவிகளை விரட்டியவாறு போனாள்> ராவுகவுண்டரின் மனைவி.
      காளி கடைசியாக மோராக புளித்திருந்த தண்ணீரைக் குடித்தான். குடலில் சிவ்லென்று இறங்கியது. குருவிகளுக்காக அவன் இறைத்த சோற்றுப் பருக்கைகள் அங்கே சிதறிக் கிடந்தன. இப்போது குருவிகள் தைரியமாக கீழிறங்கி வந்தன. காளி அவற்றுக்கு வசதியாக தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
     தனக்கே தகறாராம் தம்பிக்குப் பழையதாம். இது ஒண்ணும் குறைச்சலில்ல என்று சொல்லிவிட்டு கவுணடரின் மனைவி> காளியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். இம்மாதிரியான வசவுகள் காளிக்குப் பழகிப் போயிருந்தது.
      ராவுகவுண்டர் வீட்டுத் தோட்டத்தில்> வாழைமரத்தின் நிழல்கள்  நீளமாக ஓடியிருந்தன. பனிமூட்டத்தில் சூரியன் மண்ணெண்ணை விளக்காகப் புகைந்து கொண்டிருந்தது.
      காளி மாடுகளை பூட்டுத்தறித்து விட்டான். கருப்புக் காளைக்கு மட்டும் அண்ணாந்தோல் போட்டு மாட்டினான். கறவைப் பசுவின் கன்றுக் குட்டியை இடம்மாற்றிக் கட்டினான். மொட்டைப் பசுவும் மயிலைக் காளையும் கட்டுத் தறியைவிட்டு வெளியேறிக் காலாறின. கன்றுக்குட்டி 'ம்மா ம்மா …” என்று கத்தியது. கறவைப்பசு காதை நிமிர்த்தி> கண்ணைச் சிமிட்டி> திரும்பிப் பார்த்தது. காளி அதட்டி ஓட்டினான்.
      பையன்கள் பள்ளிக் கூடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர். இவனுக்கு அப்பா அம்மா இருந்தால் இவனையும் இப்படி பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைப்பார்களா?  பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லிக் கொடுப்பார்கள்?  இவன் அம்மாவும் இவனைப் பள்ளிக்கூடம் போகவில்லையென்று அடிப்பாளோ?  ராவுகவண்டரின் சின்ன மகனைப் போல் இவனும் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பானோ?  சாப்பிடச்சொல்லி அம்மா இவனைக் கெஞ்சுவாளோ?  இவனுக்கு தீபாவளி பொங்கல் தவறாமல் புதுசாய் கால்சட்டையும் மேல்சட்டையும் கிடைக்குமோ?  நீண்டதொரு பெருமூச்சு அவன் நாசித் துவாரங்களிலிருந்து வெளியேறியது. இரண்டு முத்துக்கள் கலங்கிப் போன அவன் கண்களிலிருந்து உடைந்து நொருங்கி கோடாய் கன்னத்தில் வழிந்தது.
      ஏரிக்கரை பச்சைப் போர்வையில் மறைந்து கிடந்தது. மாடுகள் நின்று மேய்ந்தன. மயிலைக் காளை மட்டும் மொட்டைப்பசுவின் வாலை மோப்பம் பிடித்தது. மொட்டைப்பசு வாலை இறுக்கிக் கொண்டு வளைய வளைய வந்தது. புற்கள் பயிராக விளைந்து கிடநதன. இன்னும் பனிக் குடங்கள் புல்லின் நுனிகளில் கிரீடமாக உட்கார்ந்து கொண்டு ஒளி வீ.சின. அவற்றின் அருகில் அமர்ந்து பார்த்தால் சிவப்பு பச்சை மஞ்சள் ஊதா ஆரஞ்சு என்று மந்திர ஜாலங்காட்டும். காளி இமை கொட்டாமல் உறிக்கும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பான். இந்த விஷயங்கள் எல்லாம்தான் காளிக்கு    பொழுதுபோக்கு.
      சூரியன் தலைக்கு மேல் தங்கப் பழமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஏரிக்கரையில் கரிசல் மண்ணில் உடைந்து கிடந்த கிளிஞ்சல் ஓடுகளும்> நத்தை ஓடுகளும் பளபளத்தன. வேகமாக பறந்து வந்த மீன்கொத்தி ஒன்று, தொப்பென்று தண்ணீரில் விழுந்து> மீனைக் கவ்விக் கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த பனஞ்சோலையில் சென்று உட்கார்ந்துக் கொண்டது. ஐந்தாறு கருடன்கள் ஏரிக்கு மேல் வட்டமடித்தன. மொட்டைப் பசுவின் முகத்தில் ஒரு கரிச்சான் குருவி பறந்து வந்து உட்கார்ந்து வாலை அழுத்தி அழுத்தி கீச் கீச் " சென்று கத்தியது.
      மரகதப் பயிர்களாக தளதளத்துக் கொண்டிருந்த புற்கள் மாடுகளின் வாயில் அரைபட்டுக் கொண்டிருந்தன. தூரத்தில் ஒரே மஞ்சளாக நெருஞ்சி பூத்துக் கிடந்தது. நெருஞ்சி; பூக்களின் மீது கால்கள் அழுந்தப் பதிந்து நடந்தால்        மெத்மெத்தென்று இருக்கும். இன்னும் கொஞ்சநாள் போனால் ரணமாக்கிவிடும் களாச்செடிகளும்> காரைச்செடிகளும் புதர்மண்டிக் கிடந்தன. களாச் செடிகள் மல்லிகையாய் பூத்திருந்தன. அரக்கு நிறத்தில் களாப் பிஞ்சுகள் வெய்யிலில் மின்னின. காரைப் பழங்கள் பழுத்திருந்தன. பக்கத்தில் இருந்த சப்பாத்திக் கள்ளியின் காம்புகளில் ஓடிய சிவப்பு வண்ணம் அவைகளைப் பழங்கள் என ஊர்ஜிதப்படுத்திக் காளியின் நாவில் நீர் சொட்ட வைத்தன. காலையில் குடித்த அரை வயிற்றுக்கஞ்சி காணாமல் போயிருந்தது.
      அண்ணாந்தோல் போட்ட கருப்புக்காளை> தலையை தூக்கிப் பார்த்தது. பின்னங்காலில் உட்கார்ந்திருந்த குருட்டு ஈயை வாலால் அடித்து ஓட்டியது. காலை இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தது. ஏரிக் கரையின் மீது ஏறி> சோமுரெட்டியின் கம்பங்கொல்லையில் இறங்கியது. மனைவியின் மூக்கும் காதும் மூளியானபிறகு> இவருக்கு சொந்தமான அந்த சின்ன துண்டு நிலத்தில்> செழித்து வளர்ந்திருந்த கம்புப் பயிர்கள் தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் கம்புப் பயிர்கள் கருப்புக்காளையின் குளம்புகளில் நசுங்க ஆரம்பிததன.
காளி களாப் பழங்களை கோவணத்தில் சேகரித்துக் கொண்டான். சப்பாத்திப்பழம் ருசியாக இருந்தது. கொட்டைகளைத் துப்பினான். காளியின் கை> வாய்> பல்> நாக்கு எல்லாவற்றிலும்> சப்பாத்திப் பழத்தின் சிவப்புப் படிந்தது. இன்னொரு சப்பாத்திப்பழம் புதரின் உட்புறமாக இருந்தது. சப்பாத்திக் கள்ளியின் முட்கள் மஞ்சள் மஞ்சளாக கூர்த்திருந்தன. முள் தைத்துவிடாமல் ஜாக்கிரதையாகக் கையை உள்ளே நுழைத்தான். திடீரென்று காளியின் முதுகில் சாட்டை ஒன்று மின்னலாய்ப் பாய்ந்தது போலிருந்தது. அம்மா வென்று சுருண்டு விழுந்தான். ஒரு அவகாசத்திற்குப் பின் புளியன் மிலாறு காளியின் உடலில் அசுர வேகத்தில் சுழன்றது. கை ஓயும் வரை அடித்தார். காளி புழுவாகத் துடித்தான். மாட்டவுட்டு அடிச்சுடுங்க நாங்க வயித்துல ஈரத்துணிய போட்டுக்கிறோம்…” என்று இரைந்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டிக் கொண்டே போனார் சோமுரெட்டி.
      கருப்புக்காளை பனஞ்சாலை பக்கமாக ஓடிக்கொண்டிருந்தது. உடம்பெல்லாம் நெருப்பாக சுட்டதுபோல் எரிந்தது. எழுந்து துடைத்துக் கொண்டு காளையின் பின்னாவ் ஓடினான் காளி.
      இதே மாதிரிதான் இவன் அப்பா> அம்மாவை மூர்க்கத் தனமாக அடிப்பார். பெரியவனானவுடன் அப்பாவை கத்தியால் வெட்டிவிட வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். பெரும்பாலும்> அப்பா அம்மாவை ராத்திரி நேரத்தில்தான் அடிப்பார்;. ஒன்றுமே. நடக்காதது போல் திண்ணையில் ணங் ணங்…” கென்று வெற்றிலை இடித்துக் கொண்டிருப்பாள், பாட்டி;. காலையில் அம்மா> அப்பாவிற்கு சோறு போடும் போதும் அவர் மவுனமாக சாப்பிடும் போதும் இவருக்கு வெட்கமாக இலுக்காதோ…” என்று தோன்றும். எல்லாம் கனவுகளாக வந்து போயின.
      மாடுகள் ஏரியில் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. தண்ணீரில் வானம் ரத்தக்களறியாகியிருந்தது. சூரியன் மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தது. காற்றில் ஈரம் கூடியிருப்பதாக தெரிந்தது. புளியன் மிளாறு பட்ட இடமெல்லாம் ரத்தம் கசிந்து போயிருந்தது. அழுது நிறுத்தியிருந்த அவன் கண்கள் சுத்தமான வெள்ளையாயிருந்தன. கண்ணிலிருந்து வடிந்தநீர் காய்ந்து போயிருந்தாலும்> அதன் பாட்டை    மட்டிலும் பளபளப்பாக தெரிந்தன. மொட்டைப்பசு போட்ட தளதளத்த சாணியை எடுத்து காயத்தில் பூசிக் கொண்டான்.
      இவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. அப்பா அம்மாவை கண்டபடியாக அடித்துவிட்டுப் போகும்;போதெல்லாம் இப்படித்தான் பாட்டி சாணிப்பூசி விடுவாள். அம்மா சிரிக்கும் போது அழகாக இருக்கும். ஒருநாள் அம்மா கடைக்காரர் மாணிக்கத்திடம் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அன்று அப்பா  அவனிடம் உனக்கென்ன பேச்சு  என்ன சிரிப்பு?" என்றுசொல்லி அம்மாவை அசிங்கமாகத் திட்டினார். அம்மாவும் அப்பாவை எதிர்த்துப் பேசினாள். கடைசியில் அப்பா அம்மாவின் மயிரைப்பிடித்து இழுத்துப் போட்டு அடித்தார்
      ஆறாத ரணங்களாக வலித்துக் கொண்டிருந்த> அவன் நினைவுகளிலிருந்து விடுபட்ட போது> பனஞ்சாலையின் பின்னால் சூரியன் நெருப்புக் குழம்பில் மிதந்துக் கொண்டிருந்தது. நாரைகள் சில வெள்ளைச் சிறகுகளை விரித்தபடி வந்து ஏரிக் கரையில் இறங்கி> மெதுவாக காலைத் தூக்கி வைத்து, நடை பயின்றன. கொக்குகள் சில பறந்து போயின. காளி மனதுக்குள் பூப்போடு பூப்போடு…” என்று சொல்லிக் கொண்டே> கை விரல்களைப் பார்த்தான். மாடுகள் வீட்டை நோக்கி நகர ஆரம்பித்தன. காரைமுட்களும்> சப்பாத்தி முட்களும் குத்திய இடங்களில்  ஆழமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வலி தொடர்ந்தது. நல்ல வேளையாக சோமு ரெட்டி மாட்டைப் பட்டிக்கு ஓட்டிச் செல்லவில்லை.
      அப்பா அம்மாவை அடித்துவிட்டுச் சென்ற பின்னர்> பாட்டி அம்மா முகத்தில் தண்ணீர் தெளித்தாள். அடிபட்டு வீங்கிய இடங்களில் ஒத்தடம் கொடுத்தாள். நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு> அப்பாவை திட்டினாள். இவன் அம்மாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அம்மாவின் உடம்பு அனலாய்க் கொதித்தது. அம்மா திணறித் திணறி மூச்சு விட்டாள். கண்ணை மூடிக்கொண்டே பேசினாள். அப்பா வெளியே  போயிருந்தார்.
      காலையில் எழுந்து பார்த்தபோது> பாட்டி அம்மாவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். நிறையபேர் வந்து குடிசையை அடைத்துக் கொண்டு நின்றனர். அப்பாவும் வந்து அழுதார். ஜனங்கள் அப்பாவைக் குரோதமாகப் பார்த்தார்கள். மெதுவாக திட்டினார்கள். அம்மா செத்துவிட்டாள் என்று வாத்தியார் பையன் ராமு சொன்னான்.
      அந்த நினைவுகள் இப்போதுகூட இவனை வலிக்கச் செய்தன. காளியின் கண் இமைகளில் கண்ணீர் முத்துக்கள் கடைவாயில் உப்புக் கரித்தன. மாடுகள் பாப்பாங் குளத்தை; தாண்டி நடந்தன. குளக்கரையில்  உலர்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த ஏகாலி துணி காயறது தெரியல பொறம்போக்கு பொறம்போக்கு மாட்ட அந்தப் பக்கம் ஓட்டக் கூடாது?" என்று கூவியபடி கையை ஓங்கினான். காளி பயந்தவனாய்> மாடுகள் துணிகளை மிதித்து விடாமல் விலக்கி ஓட்டினான்.
      ராவுகவுண்டரின் வீடு நெருங்கியது. மாடுகளைத் தொழுவத்தில் ஓட்டிக் கட்டலானான் காளி. கவுண்டரின் மனைவி> சின்ன மகன் ராமு சாப்பிடவில்லையென்று> அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள். மாடுகள் ஒன்று விட்டு ஒன்று மாறி மாறி கத்த ஆரம்பித்தன. ராவுகவுண்டர் சீக்கிரமாக வைக்கோல் போடச்சொல்லி காளியை அதட்டினார். காளி பதட்டமில்லாமல் வைக்கோல் போட்டுவிட்டு கவுண்டரிடம் சொல்லிக் கொண்டு வெளியே போனான். கொல்லைப்புறம் கதவை தாளிட்ட கவுண்டர்> சனியம் பிடிச்ச மூதேவி நெஞ்சழுத்தக்காரன்" என்று முணுமுணுத்துக் கொண்டு திரும்பினார்.
      அம்மா செத்துப் போனபிறகு, இரண்டு நாள் வரைக்கும் அப்பா திரும்பி வரவில்லை. பாட்டி ஒப்பாரிவைத்து அழுது கொண்டிருந்தாள். இவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்றாவது நாள் வாத்தியார் வந்து பாட்டியிடம்> என்னவோ சொன்னார். பாட்டி மூக்கைச் சிந்தி புடைவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டு> ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். காளியும் அவள் பின்னாலேயே விரைந்தான்.
      சந்தைத் தோப்பில் ஒரே கூட்டமாக இருந்தது. அங்கே இலுப்பை மரங்கள் நிறைய இருக்கும். காளிக்கு சந்தைத் தோப்பு என்றால், ரொம்ப பயம். அங்கு முனீஸ்வரன் இருப்பதாக பாட்டி அடிக்கடி சொல்லுவாள். பாட்டி கூட்டத்தின் அருகே சென்றதும் எல்லோரும் அவளுக்கு விலகி வழி விட்டார்கள். முன்னால் சென்ற பாட்டி> மாரடித்துக் கொண்டு சத்தம் போட்டு அழுதாள். காளி கஷ்டப்பட்டு எல்லோரையும் விலக்கிக் கொண்டு ஆச்சர்யத்துடன் பார்த்தான். இலுப்பை மரத்தில் அப்பா கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார்.
      அண்ணார்ந்து பார்த்தான் காளி. வானம் இருட்டிக் கிடந்தது. நட்சத்திரங்களும் நிலாவும் காணாமல் போயிருந்தன. ஊரே அமைதியில் மூழ்கிச் செத்துக்கிடந்தது. பாட்டி வெற்றிலை இடிக்கும் ஓசை மட்டும் துல்லியமாகக் கேட்டது. கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள். காய் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. பாட்டியின் கந்தல் புடவையை எடுத்து விரித்து சாய்ந்தான். அப்படியும் இப்படியுமாக நெளிந்தான். உடம்பெல்லாம் ரணமாக வலியெடுத்தது. கண்களை செருகிக் கொண்டு வந்தது தூக்கம். அதற்கு முன்னால் இவனுடைய> அம்மாவின் முகம் ஒருமுறை தெளிவற்று வந்துபோனது.
                            
                                         


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...