Wednesday, April 15, 2020

பழங்குடி செரோக்கிகள் பூமிக்கு செல்லும் கேட்ஸ் கோவ் லூப் சாலை CADES COVE ROAD TO REACH CHEROKEE LAND




 பழங்குடி செரோக்கிகள்  பூமிக்கு செல்லும்
கேட்ஸ் கோவ் லூப் சாலை 

                                                   CADES COVE  ROAD TO REACH

                                                       CHEROKEE INDIANS LAND

ஐந்து லட்சத்து 14 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் ஸ்மோக்கி மவுண்டெயின்  தேசியப்பூங்காவின் ஒர் அழகான பகுதி, கேட்ஸ் கோவ் லூப் ரோட் என்ற ரோட்சைட் போர்டை பார்த்த்தும் எங்கள் கார் தானாகத் திரும்பியது, ஸ்மோக்கி மவுண்டெயின் போய் திரும்பும் போதுதான் இந்த கேட்ஸ் கோவ் லூப் ரோட்டில் நுழைந்தோம்.

ஸ்மோக்கி மவுண்டெயின் பார்த்துவிட்டு கேட்ஸ் கோவ் லூப் ரோட் போகவில்லை என்றால் இந்த விசிட் முழுமை அடையாது என்றார் சித்து என்ற சித்தார்த்தன், ‘ஸ்மோக்கி மவுண்டைன் ஹார்ட்வேர் என்றால் கேட்ஸ் கோவ் லூப் ரோட் சாஃப்ட்வெர்என்றான் என் மகன் காரோட்டி ராஜு, என் மகனும் சித்துவும் ரொம்ப குளோஸ், இருவருமே அசைவப் பிரியர்கள், அதுவும் பிரியாணி என்றால் ஒரு கட்டு கட்டிவிடுவார்கள், அதேபோல் என் மகன் ராஜு எனும் ராஜசூரியன் வஞ்சனை இல்லாமல் ஆறடி உசரம், அவன் என்னை மாதிரி இல்லை கொஞ்சம் நல்ல நிறமாக இருப்பான், என்னைவிட லட்சணமாகாக்கூட  இருப்பான், அவனிடம் ரொம்பப்பிடித்தது அவன் டிரைவிங், சித்து எனும் சித்தார்த்தன், அவரிடம் எனக்கு பிடித்தது அவருடைய அடர்த்தியான மீசை, சுண்டினால் சிவக்கும்   நிறம், அசைவ சாப்பாட்டை ஆசையாய் சாப்பிடும் விதம்,  நீலம் எனும் நீலம் டிர்க்கி, என்னைவிட சிவப்பு, கொஞ்சம் குண்டுப்பெண், கார் நன்றாக ஓட்டுவார், ஸ்டீயரிங்வீலை பிடித்தபடி காரில் உட்கார்ந்தால் ஆக்ஸிலேடர் சுலபமாக எட்டும் அளவு நல்ல உயரம், ராஜு மாதிரியே நன்றாக கார் ஓட்டுவார், மோஷி எனும் மவுசுமி திரிபுராக்கார்ர், கொஞ்ச நாளில் என்  மருமகளாக ஆக இருப்பவர், என் மகனின் இடுப்புக்குமேல் தோளுக்குகீழ் இரண்டுக்கும் இடையில் இருக்கும்படியான உயரம், சித்துவோடு போட்டிபோடும் அளவுக்கு நல்ல சிவப்பு, அதை மேட்ச் செய்வதற்காக ஒரு உயரமான ஸ்டூல்மாதிரி ஒரு செருப்பு ஷூவை அணிவார், எல்லோருமே ஒரே ஆபீசில் மென்பொருள் பொறியாளர்களாக வேலை பார்ப்பவர்கள், சித்து கேரளாக்கார்ர், நீலம் ஒரிசா, மோஷி திரிபுரா, நாங்கள் தமிழ், எல்லோரையும் சுமந்தபடி ஜப்பானின் மூக்கு நீண்ட டொயோட்டா கார் அமெரிக்காவின், கேட்ஸ் கோவ் லூப் ரோட்டில் மெல்ல ஓடிக்கொண்டிருந்தது, அமெரிக்கா பயணம் முழுக்க இந்த நால்வர் அணிதான் எங்களுக்கு வழிகாட்டிகள்.

இப்போது எங்கள்கார் கேட்ஸ்கோவ்’ன்  அழகிய லூப்சாலையில் போய்க்கொண்டிருந்தது, லூப்ரோட் என்றால், ஒரு பிரதான சாலையிலிருந்து பிரிந்து சென்று சில குறிப்பிட்ட ஊர்களை அல்லது இடங்களை மட்டும் தொட்டுக்கொண்டு மறுபடியும் வந்து பிரதான சாலையில் சேரும் சாலை என்று அர்த்தம்.

இப்போது கேட்ஸ்கோவ்பற்றி சொல்லுகிறேன், ஒரு வரியில் சொல்லுகிறேன்,  கேட்ஸ்கோவ் என்றால் இயற்கை அழகு, இயற்கை உயிர்கள், அடங்கிய பூர்வீகக்குடிகளின் பாரம்பரிய ராச்சியம்.

சாலையின் இருபுறமும் கொட்டிக்கிடக்கும் அழகு, மேகங்களை சீண்டிப்பார்க்கும் மரக்கூட்டம், பல்கிட்டும் குளிர், மண்வெளி போர்த்தி இருக்கும் மிக நீண்ட அகலமான  பசும்புல் போர்வைகள், இங்கு வேட்டை சட்ட விரோதம் என்பதால் சுதந்திரமாக சுற்றித்திரியும் சில்மிஷம் செய்யாத வன விலங்குகள், செரோக்கி பூர்வீகக்குடி மக்களின் வேட்டைக்காடுகள், பிற்கால ஐரோப்பிய குடியேறிகளின் அடையாளங்களாக அங்கு நிற்கும் மரவீடுகள், தானியக்கிட்டங்கிகள், சர்ச்சுகள், பள்ளிகள், கிரிஸ்ட் மில்ஸ் (CRIST MILLS) அனைத்தும் இந்த லூப்ரோட்டின் கொடை.

கேட்ஸ்கோவ்ன் இன்னொரு சிறப்பான அம்சம், இங்கு சுதந்திரமாய் சுற்றிதிரியும் வனவிலங்குகள், வட அமெரிக்காவின் செல்லம் ரிவர் ஓட்டர், (RIVER OTER)எனும் நீரிலும் நிலத்திலும் வழும் பிராணி, உலகின் மிகப்பெரிய மான் வகைகளில் ஒன்று எல்க் (ELK), வட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இன்னொருவகை வெள்ளைவால் மான்கள்(WHITE TAILED DEER), இவை தவிர நாய்க்கும் பூனைக்குமான இடைப்பட்ட பிராணி ரக்கூன் மற்றும் போல்கேட் என அழைக்கப்படும் ஸ்கன்க் (SKUNK) மற்றும் கயோட் (KAYOTE). 

வட அமெரிக்காவின் புத்திசாலி விலங்கு ரக்கூன், இரவில் இரைதேடும் மூக்கு நீண்ட எலிப்பூனை, அசைவ உணவுதின்னி, எப்படிப்பட்ட குளிரையும் தாங்குபடியாக இயற்கையாகவே ஸ்வெட்டர் போட்ட உடம்பு, மலைப்பகுதிகள் சதுப்பு நிலங்கள், கடற்கரை மணல், நகர்ப்புறம் என அனைத்து இடங்களிலும் உலாவரும் சர்வலோக சஞ்சாரி, ராத்திரி நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து தானியங்கள், காய்கள், பழங்கள் என அனைத்தையும் திருடித்தின்னும் ,கோழிப்பண்ணைகளில் நுழைந்து முட்டை குஞ்சுகள் தீவனங்கள் ஆகியவற்றையும் விடாது, சுற்றுலா தலங்களில் கேம்ப் சைட்களில் டெண்ட்களில் நுழைந்து, சமைத்தும் சமைக்காமலும் வைத்திருக்கும் அத்தனை உணவுப்பொருட்களையும் ஒரு கை பார்க்கும், இதுமாதிரி அடாவடி செய்வதில் இவை நம்மூர் எலிகளைப்போல, உடல் எடை மட்டும் 9 கிலோவரை இருக்கும், இதன் அறிவியல் பெயர் புரோசியான் லோட்டர் (PUROSIYON LOTOR), இதற்கு  நாய்க்கும் பூனைக்குமான இடைப்பட்ட விலங்கு என்று அர்த்தம், எலிகளின் சேட்டைகளைக்கொண்ட பூனை என்று சொல்லலாம், உள்ளே எலி வெளியே பூனை.

அமெரிக்கவை விட்டுபோகும் முன் இந்த எலிப்பூனையை பார்த்துவிடவேண்டும் என நான் சொன்னேன், ‘ரொம்ப சுலபமாய் பார்ப்பீர்கள், இங்கு எல்ல இட்த்திலும் பரவலாய் பார்க்கலாம்’ என்றான் ராஜு

ஒரு நாள்ஸ்றீதர்ரிட்ஜ்ன் சிட்அவுட்டில் ஒரு நாள் உட்கார்ந்திருந்தேன், அதுதான் நாங்கள் தங்கியிருக்கும் இடம், கனெக்டிகட்டில் ஷெல்டன் நகரின் ஒரு பகுதி, கிட்டத்தட்ட 500 இரண்டு அடுக்கு வீடுகளைகொண்ட அப்பார்ட்மெண்ட்களை உள்ளடக்கிய  பகுதி, வீட்டு ஓனர்களும் இருந்தார்கள் வாடகைக்கும் அங்கு வசித்தார்கள், எங்கள் வீட்டின் வடப்புறம் கிழக்கு மேற்காக அக்கம்பக்கத்து நகரங்களுக்கு செல்லும் ரோடு, நிமிஷத்திற்கு 10 முதல் 15 கார்கள் பறக்கும் சாலை, அதற்கு அந்தப்புறம் ஐந்தாறு கட்டிடங்களில் தனியார் நிருவனங்கள், சாலைக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் புல்வெளி, அதில் வளைந்தும் நெளிந்தும் நிற்கும் பைன் மரங்கள், வீடுகளின் பின்புறம் சுமார் 30 மீட்டர் அகலத்திற்கு பச்சைக்கம்பளம் விரித்ததுபோல புல்வெளி, அதன் எல்லையில் நம்மூர் ரயில்வே  வேலி மாதிரி மரப்பட்டைகளால் அமைக்கப்பட்ட வேலி, அந்த வேலிக்கடியில், என் ஒரு வாரக்கனவு நிஜமாகும் வகையில் ஒரு எலிப்பூனை ரக்கூன்.

இந்த இடத்தில்  ரக்கூனுக்கு அடுத்தபடியாக வட மெரிக்காவின் இன்னொரு சில்மிஷப்பூனை ஸ்கங்க்’, பெரிய மிருகங்கள்கூட ஸ்கங்க்என்றால் நடுநடுங்குமாம், மனிதர்கள் காத தூரம் ஓடுவார்களாம், இந்த பிராணியின் மலப்புழையின் இருபுறமும்  இரு சுரப்பிகள் இருக்கும், தீயணைக்கும் எஞ்சினில் இருக்கும் குழாய்கள் போல இந்த இரண்டும் நாற்றம் பிடித்த திரவத்தை பீச்சியடிக்குமாம், அதை தாக்க வரும் மிருகம் துரத்திகொண்டு வருகிறது என்று வைத்துகொள்ளுங்கள், உடனே இந்த நாற்ற திரவத்தை பீச்சி அடிக்கும்,  அனேகமாய் அது அந்த மிருகத்தின்  முகத்திலும் தெறிக்கலாம் அல்லது உடம்பில் எங்கு பட்டாலும் அந்த நாற்றத்தை தாங்க முடியாதாம், அதனால் எந்த மிருகமும் இதை பார்த்தாலே பயந்து ஒதுங்கிக்கொள்ளுமாம்,, அந்த நாற்றம் எப்படி இருக்கும் தெரியுமா ?, அழிகிய முட்டை, பூண்டு, எரியும் ரப்பர் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்தால் வரும்  வாசனையுள்ள திரவத்தைதான் தன் எதிரிகளின் மீது அபிஷேகம் செய்யுமாம், அதனால்தான் பெரிய மிருகங்கள்கூட ஸ்கங்க்’ வாடை வந்தாலே மிரண்டு ஒடுகின்றனவாம், கருப்பு, வெள்ளை, கிரீம் என்ற கலவையில் தென்படும், இவை பூச்சிகள், புழுக்கள், பல்லி, ஓணான், தவளை, பாம்புகள், பறவைகள், அவற்றின் முட்டைகள் எதையும் விடாதாம், காய்கள், கிழங்குகள், பழங்கள், கொட்டைகள், இலை தழை புற்கள் என சைவ அயிட்டங்களும் இதற்கு தள்ளுபடி கிடையாதாம், அதிகபட்சமாக ஒண்ணரை அடி நீளமும் எட்டு கிலோ எடையும் இருக்கும், ‘ஸ்கங்க்வடஅமெரிக்காவின் பிரபலங்களில் ஒன்று, இதன் அறிவியல் பெயர் கோனிபேட்டஸ் மைடாஸ் (CONIPATUS MIDAS).

கேட்ஸ்கோவ் லூப் சாலையில் கிட்டத்தட்ட பாதி தூரம் கடந்திருப்போம், மாறிமாறி வரும் விதவிதமான மரங்களைக்கொண்ட காடுகள், மற்றும் புல்வெளிகளின் ஊடாக எங்கள் கார் கல்யாணஊர்வல கார்மாதிரி நகர்ந்தது, எங்களுக்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட கார்கள், ஆனாலும் அங்குலம் அங்குலமாக ரசிக்கும்படியான பயணம் அது, மூன்று நான்கு இடங்களில் இறங்கி புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டோம், பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மர வீடுகள், கண்ணுக்கெட்டிய  தூரம்வரை மண் முகம் காட்டாத புல்வெளிகள், மரங்களின் ஊடாக கார்களின் அணிவகுப்பை எதிர்பார்க்காமல் வாக்கிங் வந்த வான்கோழிகள், புல்மேய்ச்சலில் இருக்கும் செம்மஞ்சள்  குதிரை மந்தை, சில மைனா வகைகள், இன்னும் பெயர் தெரியாத பலவகைப் பறவைகள், இவை எல்லாம்தான் கேட்ஸ்கோவில் கிடைத்த போனஸ் பொக்கிஷங்கள்.

மே மாதம் முதல் செப்டெம்பர் வரை 5 மாதங்களில் சனி, புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை லூப் ரோட்டில் சைக்கிளோட்டிகள் மற்றும் பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், இதர நாட்களில் தட்பவெப்பநிலையின் கடைக்கண் பார்வை இருந்தால் பகல் முழுவதும் கார் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள், சுற்றுலா பயணிகள் இங்கே தங்கி இருந்தும் சுற்றிப்பார்க்கலாம், இதற்கென இங்கு 159 கேம்ப் சைட்டுகள் வைத்திருக்கிறார்கள், பயணிகளின் தேவைக்கு ஏற்ப டெண்ட்டுகள் தருவார்கள், தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலம் கேம்ப் சைட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்

நீங்கள் விரும்பினால் குதிரைகளிலும் சென்று இந்த பகுதிகளில் சுற்றி வரலாம், அதற்கென தனியாக ஒரு கேம்ப் சைட் உள்ளது, அதற்குஅந்தோணிகிரீக்என்று பெயர், இந்த கேம்ப் சைட்டில் உங்களுக்கு தேவைப்படும் குதிரைகளை, முடாக்கு இல்லாத குதிரை வண்டிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்,

செரோக்கி எனும் அமெரிக்க பூர்வீக் பழங்குடி மக்கள் ஒரு காலத்தில் ஆட்சிசெய்த பூமி இது, இந்த வனாந்திரத்தில் ஆற்றங்கரைகளில் சிறுசிறு கிராமங்களாக பலநூறு ஆண்டுகள் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், ஒரு காலத்தில் இங்கு செரோக்கிகளின் தலவனாக இருந்தவன்   அபிராம்என்ற பெயருடையவன், அவன் பெயரில் நம்மை வரவேற்கிறது லூப்ரோட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அபிராம் நீர்வீழ்ச்சி’, இப்போது ஒக்லஹாமா மற்றும் வடகரோலினா மாநிலங்களில் இந்த செரோக்கிகள் வசித்து வருகிறார்கள், கேட்ஸ்கோவ் காடுகளை அலங்காரம் செய்பவை பைன், ஒக், ஹேம்லக், மற்றும் ரோடோடெண்ட்ரான் பூமரங்கள்,

இந்த பகுதியின் இன்னொரு விச்சித்திரமான பிராணி கோயேட், இதனைப் பார்த்தவுடன் இது நாயா ஓநாயா என்ற சந்தேகம் எழும், இதற்கு ஒரு ஆராய்ச்சியே செய்யவேண்டிவரும், இந்த பிராணிகள் ஓடும்போது கவனிக்க வேண்டும், அதன் வால் மேல்நோக்கி அமுங்கி இருந்தால் அது நாய், அதன் வால் நேராக இருந்தால் அது ஓநாய், கீழ்நோக்கி அமுங்கி இருந்தால் அது கோயேட், இவை இரவு நேரத்தில் ஒற்றையில் சென்று வேட்டையாடும், அவற்றிற்கு பாம்புகளும் பறவைகளும் பிடித்தமான சிறப்பு உணவு, அசைவ உணவு கிடைக்காத குளிர்காலங்களில் சுத்த சைவமாக மாறிவிடும், ஆச்சர்யமான மிருகம்.

ஒரு வழியாய் கேட்ஸ்கோவ் லூப்ரோட்டில் இருந்து மீண்டும் ஸ்மோக்கி மவுண்டைனின் தலைப்பகுதி கிளிங்க்மேன்ஸ் டோம் (CLINMANS DOME) போய் திரும்பவேண்டும், ஸ்மோக்கி மலைச்சாரலின் சிகரம் கிளிங்க்மேன்ஸ் டோம், டென்னிசி மாநிலத்தின் உயரமான பகுதி, 6684 அடி உயரத்தில் 20 டிகிரி பாரன்கீட் தாண்டாத வெப்பம் வைத்திருக்கும், கோடையில்கூட பற்கள் தந்தியடிக்கும் குளிர், டிசம்பர் முதல் மார்ச்வரை கிளிங்மேன்ஸ்டோம் போக தடா ! காரணம், உயிருக்கு உத்தரவாதம் தராத பருவநிலை அங்கு நீடிக்கும், அந்த சாலை எப்போதும் பனியால் மூடியிருக்கும், அதன் கொடிப்பாதைகளில் நடந்துபோனால் அதன் அழகை முழுமையாக தரிசிக்கலாம், சுமார் 100 மீட்டர் நடந்தால் அங்குள்ள 54 அடி டவரில் ஏறி பறவைக்கண் பார்வையாக ஸ்மொக்கிமலையை கூடுதலாக ரசிக்கலாம், ஸ்மோக்கி மலைகளின் உச்சிதான் கிளிங்மேன்ஸ் டோம், அங்கு சுமார் 20 () 25 கார்களும், 50 () 60 டூவீலர்கள் நிறுத்தும் வசதியும், ரெஸ்ட் ரூம்களும் உள்ளன, ரெஸ்ட் ரூம் என்றால் கழிவறை, இதனை கம்ஃபர்ட் ரூம் என்றும் அழைக்கிறார்கள், இப்படி இந்தியாவில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் இடங்களில் எல்லாம் கம்ஃபர்ட் ரூம் அமைத்தால் எப்படி இருக்கும் ?, நம் இந்தியாவைச்சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் பெரிய போறுப்பில் இருக்கும் அதிகாரிகள், ஆட்சியில் இருக்கும் அரசியல் பிரமுகர்களும் இங்கு வந்து சென்றிருப்பார்கள், ‘கம்ஃபர்ட் ரூம்பற்றிஇவர்களுக்கு தோன்றவில்லையா ?
 
எப்போதும் மேய்ந்து திரியும் மேகங்கள், அடிக்கடி பெய்யும் மழை, அங்கு எப்போது நீங்காமல் நிறைந்திருக்கும் குளிர், ஆகாயத்தை அப்போதைக்கப்போது உரசிப்பார்க்கும் பைன் ஓக் ஹேம்லக் மற்றும் இன்னபிற மரவகைகள் இவைதான் கிளிங்க்மேன்ஸ்டோம்.

கேட்ஸ் கோவ் என்பது மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகிய பள்ளத்தாக்கு, அதிகம் சில்மிஷம் செய்யாத வெள்ளைமான்கள், கருங்கரடிகள், கொயேட்கள், காட்டுப்பன்றிகள், புஷ்டியான பூனை மாதிரியான ரக்கூன்கள், ஸ்கங்க் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் வனவிலங்கு பூங்கா, வகைவகையான பைன், ஹேம்லக், ரோடொடெண்ட்ரான், மரக்காடுகள், எல்லையில்லாமல் பரந்து விரிந்திருக்கும் புல்வெளிகள், 18, 19 நூற்றாண்டுகளில் இங்கு வசித்த ஆங்கில வெள்ளைக்கார குடியேறிகள் விட்டுச்சென்ற மரவீடுகள் போன்ற மிச்சசொச்சங்கள்,  அத்தனையும் ஒருகாலத்தில் அமெரிக்க பூர்வீக்குடி செரோக்கிகளின்  பூமியாக இருந்தது, இந்த கேட்ஸ்கோவ்.


1 comment:

சுப்ரமணிய பாலா said...

https://www.பயணங்கள் தொடரனும் ...நிறைய நிறைய நீங்கள் எதற்காக உங்கள் நிறத்தை தாழ்வாக நினைக்கனும்..நீங்கள் கம்பீரமானவர் முக்யமாக மீசை ...லட்சணமாக தான் உள்ளோம்...தொடரனும் இன்னும் பல கட்டுரைகள்

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...