Saturday, April 11, 2020

மார்க் டுவைன் பிறந்தமண் கனெக்டிகட் – பகுதி 1 - CONNECTICUT MARK TWAIN'S BIRTH PLACE




AWESOME U S A VISIT – TRAVELOGUE
அமெரிக்கா போகலாம் வாங்க - பயணக்கட்டுரை

மார்க் டுவைன் 

பிறந்தமண்  கனெக்டிகட் 

 – பகுதி 1

CONNECTICUT

MARK TWAIN'S

BIRTH PLACE

எழுதியவர்
தே.ஞானசூரிய பகவான் 

அமெரிக்காவில் கனெக்டிகட் மாநிலத்தில், ஷெல்டன் என்ற ஒரு கடலோர சிறு நகரத்தில், இந்தியஐடிகம்பெனிக்காரர்கள்  தங்கி இருக்கும் குடியிருப்பில் வசிக்கும், என் மகன் வீட்டுக்கு வந்து இறங்கி இரண்டு நாளாச்சி, அந்த அப்பர்ட்மெண்ட் மற்றும் வீடுகளுக்கு ஊடாகச் செல்லும், போக்குவரத்து வாகனங்கள் ஓடாத ஒரு சிறிய சாலையில்  என் மனைவி, மகனுடன் , நான் வாக்கிங்போய்க் கொண்டிருந்தேன், “ ரோட்டில் ஒரு ஆள்கூட நடமாடுவதைப்பார்க்க முடிவதில்லை. ஒரு ஆவிகூடவா வரக்கூடாது என்று பேசிக்கொண்டே, வாக்கிங்க் போகும் நபர்களைத் தவிர்த்து வேறு யாரும் நடந்துபோகாத நாடு என்று நான் அமெரிக்காவை வர்ணித்தேன். ரொம்பவும் குறைச்சலான எண்ணிக்கையில் எங்களைப் போலவே ஒன்றிரண்டுபேர் உதிரியாக நடந்து கொண்டிருந்தார்கள்.

எங்கள் எதிரில் ஒருஆள், எழுபதைத்தாண்டிய வயது, நீளநீளமான எலும்புகள் லேசாக தெரியும்படியான கைகள் கால்கள், பூஞ்சையான திரேகம், தலையில் சிட்டி பேங்க் விளம்பரம் போட்டவெள்ளை  குல்லாய், காக்கி நிறத்தில் பெர்முடாஸ், வெளிர் நீல நிற டி ஷர்ட் சகிதமாக, என்னைவிட கொஞ்சம் வயது அதிகமாகத் தெரிந்தவராக, கற்றாழை நார்போல முழுவதுமாய்  நரைத்துப்போன மீசையுடன் தெரிந்த வெள்ளைக்காரர், எங்கள் கண்களைப் பார்த்தபடியே அருகில் வந்து நின்று, புன்முறுவலுடன், முகம் மலர, வலது கையை உயர்த்திகுட்மார்னிங்என்று சொல்ல, அவருக்கு திரும்ப மரியாதைக்கு குட்மார்னிங் சொல்லக்கூட முடியாமல் தடுமாறிகுட்மார்னிங் குட்மார்னிங்என்றேன் இரண்டுமுறை.’ முகம் தெரியாத நபர்களுக்குகுட்மார்னிங்சொல்லும் வழக்கம் நமக்கு இல்லையே என வருத்தப்படும் இடைவேளையில், என் மகன் அவரிடம் ஆங்கிலத்தில் பிளந்து கட்டினான், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில்ஐடிபொறியாளராக குப்பை கொட்டியவன், அவனுக்கு இங்லீஷ் தண்ணிபட்ட பாடாக வரும், இந்தி ஒரிஜினல் வடநாட்டான் மாதிரி பேசுவான், மராட்டியும் பேசுவான்,  தமிழ் மட்டும்தான் கொஞ்சம் தடுமாறும், என் அப்பா பெயரில் பாதியும் என் பெயரில் பாதியும் சேர்த்து ராஜசூரியன் என்று நாமகரணம் சூட்டியிருந்தேன். 

நான் எகிப்து, இங்கு குடியேறி  நிறைய வருஷங்கள் ஆச்சி, இப்போது நான் அமெரிக்காகாரன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்கிறேன், இங்குதான் நானும் வசிக்கிறேன், என் உதவி தேவைப்பட்டால் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்” என்று சுருக்கமாக சொல்லியபடி தனது நீளமான கைகளை வீசிவீசி பேசினார்

ஐ பிலிவ் யூ ஆர் ஃபிரம் இண்டியா. யூ ஆர் இண்டியன்ஸ்..ஐயேம் வெர்ரி ஹேப்பி டு மீட் யு ஆல்என்றார்,  அவர், நான்நைல் நதிக்கரை எகிப்துதானேஎன்று நான் கேட்டதும்  அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்ததைப் பார்த்தேன். அவர் கேட்ட அடுத்த கேள்விக்கு என் முகத்து ஜீரோவாட்ஸ் பல்ப்கூட அணைந்து போனது, அவர் கேட்டது இதுதான், “இந்தியாவில் நீங்கள் எந்த நதிக்கரையிலிருந்து வருகிறீர்கள் ?”. சென்னை கூவம் நதிக்கரையில்தானே இருக்கிறது என்று தயங்கியபடி கூவம் ரிவர்என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டேன், ‘லைக் நைல் ?’ என்று அவர் கேட்க, நான் எஸ் எஸ்வேறு வழியில்லாமல் வழிந்தேன். காவேரி தென்பெண்ணை பாலாறு ஏதாச்சும் ஒன்றை சொல்லியிருக்கலாம், அவர் எங்களிடமிருந்து விடைபேற்று போன பின்னால் சொன்னான் என் மகன், எனக்கும் அது சரி எனப்பட்டது.
அதற்குப்பிறகு ஒரு மாதத்திற்கு மேல் அங்கு இருந்தும் அந்த நைல் நதிக்காரரை நான் பார்க்கவில்லை, ஆனால் நான் பார்த்த அத்தனை அமெரிக்கர்களும் ஒரே மாதிரியாக இருந்தார்கள், பிறரிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதம், முகம் தெரியாத நபர்களாக இருந்தாலும் அவர்களுடைய கவுரவத்திற்கு குறைவு நேராதவாறு நடந்து கொண்ட இங்கிதம், ஏதோ ஒரு கடை அல்லது கட்டிடத்திற்குள் நுழையும்போது, அங்கிருந்து வெளியே வருபவர்கள் நமது வருகைக்காக, தானாக திறந்து மூடும் கதவினை திறந்தபடி, அதனை பிடித்துக்கொண்டு நாம் உள்ளே போகும்வரை நிற்கும் பொறுமை மற்றும் பெருந்தன்மை, நம்ம ஊரின் நட்சத்திர ஹோட்டல்களின்   வாயிற்காவலர்களைப் போல தென்படும், அந்த புன்னகையில் பொய்மையும் போலித்தனமும் இல்லாத மகிழ்ச்சியும் அடக்கமும் காட்டும், அப்போது நமக்கு கூச்சமாகவும் இருக்கும், சில சமயங்களில் இந்த வாய்ப்பை நானே உருவாக்கிக்கொண்டு அதை அப்படியே செய்து பார்த்தேன், அவர்கள் மனம் வாக்கு செயல் எல்லாவற்றாலும் அதற்கு ‘நன்றிசொன்னார்கள். நானும் கடை கண்ணிகள், கார் நிறுத்தும் இடங்கள், உணவு விடுதிகள், பூங்காக்கள், கடலோர நடைமேடை எங்கு சென்றாலும், வெள்ளைக்கார்ர்கள், கருப்பு அமெரிக்கர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அன்றுமுதல், ‘ஹாய், குட்மார்னிங்க்சொல்லிக்கொண்டிருந்தேன், அது மகிழ்ச்சியாக இருந்தது, ஒரு மாதம் கழித்து இந்தியா வந்த முதல் நாள் சென்னையில், அப்படி ஒருமுறை முன்பின் தெரியாத ஒருத்தருக்கு வணக்கம் வைக்க, “நீங்கள் யார் ? என் உறவினரா ? என்னிடம் வேலை பார்த்தவரா ? அல்லது நான் உங்களிடம் வேலை பார்த்தேனா ? எதற்காக எனக்கு வணக்கம்  வைத்தீர்கள் ? நான் என்ன எம்பியா ? எம்எல்ஏவா ? வார்ட் கவுன்சிலர்கூட இல்ல. தெரிந்தவர்கள் வணக்கம் வைத்தாலே எனக்கு பிடிக்காதுஎன்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமலே போய்விட்டார், அதன் பிறகு  முகம் தெரிந்தவர்களுக்குகூட  ஹாய்சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கத் தொடங்கினேன்.

என்னதான் சொன்னாலும் மனபூர்வமாக வணக்கமும் நன்றியும் சொல்லும் பண்பு அமெரிக்கர்களின் குரோமோசோம்களில் குறையில்லாமல் குடியிருக்கிறது

ஆனாலும் தமிழ்நாடு பண்பாடுகளை பேணி பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ‘ஒருவன் வணக்கம் சொல்லும்போதே மரியாதையாக சொல்லுகிறானா இல்லயாஎன்று கண்டுபிடிப்பேன் என்பார்  எங்கள் தமிழ் ஆசிரியர் ஒருத்தர், வணக்கம் சொல்லுவதைப்பற்றியே முக்கால் மணி நேரம் வகுப்பு எடுத்தார் ஒருநாள், கரக்கும்பிடு, அரைக்கும்பிடு, சிரக்கும்பிடு என மூன்றுவகை வணக்கங்களை வகைப்படுத்தினார், கரக்கும்பிடு என்றால் இருகைகளையும் கூப்பி சாமிகும்பிடுவது மாதிரி வணக்கம் சொல்வது, நெற்றியில் வெய்யில் படாமல் மறைப்பது மாதிரி  ஒரு கையால் வைக்கும் வணக்கம், அரைகும்பிடு, அரசர்களை அல்லது கோர்டில் நீதிபதிகளை கும்பிடுவது மாதிரி ஒரு கையைவடிவில் வயிற்றில் பொருத்தி  தலை தாழ்த்தி வணங்குவது சிரக்கும்பிடு, இந்த மூன்றுவகை இல்லாமல் நான்காவதும் ஒரு வகை உண்டு, அது தனக்கு ஆக வேண்டிய காரியத்துக்காக போடும் கும்பிடு, அதன் பெயர் கூழைக்கும்பிடு

நாம் அடுத்த அத்தியாயத்திற்கு போகும் முன்னால், கொஞ்சம் கனெக்டிகட் மாநிலம் மற்றும் ஷெல்டன் நகர் பற்றியும்,  நாங்கள், நானும் என் மனைவியும்  அமெரிக்கா வந்ததன் நோக்கம் குறித்தும்   கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

கனெக்டிகட் மாநிலம் அமெரிக்காவில், சவுத் நியூ இங்லேண்ட் என்று சொல்லக்கூடிய பகுதியின் ஒரு அங்கம்,   கிராமப்புறங்கள், கடலோர நகரங்கள், இதர சிறு நகரங்கள் ஆகியவற்றின் தொகுப்பு, பழங்காலத்து கப்பல்களைக்கொண்ட துறைமுக மியூசியம், யேல் பல்கலைக்கழகம், திஅட்வென்ச்சர்ஸ் ஆஃப் டாம்சாயர்எழுதிய  மார்க் ட்வெயின் அவர்களின் பிறந்த ஊரைக்கொண்டது, ,நியூயார்க்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் (125 கி,மீ. தொலைவு) இருக்கும் மாநிலம்,   ஆகியவை கனெக்டிகட் மாநிலத்தின் இதர முக்கியமான சமச்சாரங்கள், இதைச் சேர்ந்த ஒரு பெருசு என்றும் சிறுசு என்றும் சொல்லமுடியாத, மின்சார மரங்களைக்கூட ஒரிஜினல் மரத்தில் தயாரித்து வைத்திருக்கும்,  கையடக்கமான அழகான நகரம்தான் ஷெல்டன், அங்குதான் நாங்கள் எங்கள் மகனுடன் தங்கியிருக்கிறோம்.

ஷெல்டன் நகரில் முக்கியமாக  வசிப்பவர்கள், வெள்ளைக்கர்ர்கள் 94.4 சதம், கருப்பர் மற்றும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் 1.12 சதம், நேட்டிவ் அமெரிக்கர் என்று சொல்லப்படும் பூர்வீகக்குடிகள் வெறும் 0.15 சதமும், ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர் 2.08 சதமும், ஹிஸ்பானியர், லேட்டினொ என்ற இனத்தோரும் இங்கு கலவையாக வசிக்கிறார்கள், ஃபேக்டரி , மில், தொழிற்சாலை என்று முரட்டு நகரமாக இருந்த ஷெல்டன் இப்போது, அலுவலக கட்டிடங்கள் வசிப்பிட குடியிருப்புகள் மிகுந்த, மென்பொருள் பொறியாளர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வீடுகள் தரும் மிருதுவான நகரமாக மாறியிருக்கிறது.

இங்கு இந்த இடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 முதல் 40 இந்தியர்கள், சுமார் இருபது வீடுகளில் வசிக்கிறார்கள், இரண்டிரண்டு குடும்பங்களை குடியமர்த்துவதற்கு வாகாக வீடுகளை கட்டியிருக்கிறார்கள், தரைதளத்தில் ஒரு வீடு, முதல் தளத்தில் ஒரு வீடு. பெரும்பாலும் அவை அனைத்தும் மரத்தால் கட்டப்பட்டவை, என் மகனும் அவர் நண்பரும் மேல்தள வீட்டில் குடியிருந்தார்கள். எல்லா வீடுகளின் கூரைகளும் கூம்பு வடிவத்தில் சரிவாக அமைத்திருக்கிறார்கள், காரணம், இங்கு பெய்யும் மழை மற்றும் பனி ஐஸ்கட்டிகளின் எடையை தாங்க முடியாமல் கூரைகள் சுலபமாக நொறுங்கிப் போகும், சரிவான கூரைகளில் பனிக்கட்டிகள்கூட வழுக்கியபடி உருண்டு கிழே இறங்கிவிடும்.

என் மகனும் அவர் நண்பரும் மேல்தள வீட்டில் குடியிருந்தார்கள் என்று சொன்னேன், இருவருமே திருமணமாகாதவர்கள், என் மகனின் திருமணத்திற்காக பெண்பார்ப்பதுதான், எங்கள் அமெரிக்க விஜயத்தின் முக்கிய நோக்கம், என் மகன் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் மோஷியும், அங்கேயேதான் வேலை பார்த்தார். அவர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல, இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்தில், திரிபுராவைச் சேர்ந்தவர். அவர் சென்னை எஸ்ஆர்எம் மில் என் மகனோடு படித்தவர், பேச சொல்லிக்கொடுத்த பச்சைக்கிளி மாதிரி தமிழ் பேசுவார், அவர் தந்தையார் திரிபுராவில்  பிரபலமான கிரிமினல் லாயர், அந்த சமயம் முதலமைச்சராக இருந்தவரின் வகுப்பு தோழர், அப்போது அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து கொண்டிருந்தது, இவரும் காம்ரேட்தான், கம்யூனிஸ்ட்காரர், கம்யூனிஸ்ட் என்றால் சாதாரண கயூனிஸ்ட் அல்ல. ரொம்பவும் சீரியசான ஆசாமி, பாதி வாழ்க்கைவரை அவருக்கு எல்லாமும் கட்சிதான் கம்யூனிஸ்ட்தான், வீட்டுக்கு அரிசி புளி, மிளகாய், உப்பு வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று தெரிந்துகொள்ளாத ஆளாய் இருந்தவர், ஏறத்தாழ நானும் ஏறத்தாழ அப்படிஆளாய் இருந்ததனால்தான் பின்னால் எங்களுக்குள் நடந்த கல்யாண பேச்சுவார்த்தையும், கல்யாணமும்  சுமூகமாக முடிந்தது. இரண்டுபேர் மனைவிகளும் எங்களை வெளியே துரத்தி விடாமல் இருந்தது எப்படி என்று 71 வயதில் யோசித்துப்பார்க்கிறேன், அதுமட்டும் பிடிபடவில்லை.

என் மகனின் நண்பர், கேரள மாநிலத்தவர் பெயர் சித்து, திருமணம் செய்துகொள்ள இருந்தவர் டிர்க்கி என்ற ஒரிசா மானிலத்துப் பெண், அவரும் அமெரிக்காவில்தான் வேலை பார்த்தார். அவர்கள் வீட்டிலும் கல்யாண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள், அவர் முழு பெயர் சித்தார்த்தன், சுருக்கமாக சித்து, ஏறத்தாழ  ஒரு மாத காலம் அங்கு தங்கி நானும் என் மனைவியும் ஏகப்பட்ட இடங்களை சுற்றிப்பார்த்தோம், எதிர்கால மணமக்கள் நால்வருமே எங்களோடு சுற்றி வந்தது, அந்தப் பயணத்தை வெற்றுப்பயணமாக இல்லாமல் அன்புகமழும் வெற்றிப்பயணமாக மாற்றினார்கள், என்றுதான் சொல்லுவேன்.

 / தொடரும் /

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...