Thursday, March 19, 2020

நிலக்கடலை நமக்கு பாதுகாப்பான உணவு - GROUNDNUT A MATCHLESS PROTECTIVE FOOD






நிலக்கடலை நமக்கு பாதுகாப்பான உணவு

GROUNDNUT A MATCHLESS PROTECTIVE FOOD 



நிலக்கடலை பல தொழில்களுக்கு வாய்ப்பு தரக்கூடியது என்பது நமக்கு புதிய சேதி. அதற்கு அடிப்படையான செய்தி, நிலக்கடலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பாதுகாப்பானவை என்பது. முக்கியமாக சக்கரை மற்றும் இருதய நோயினை உண்டாக்க இது காரணமாக இருக்காது என்பது. இன்னும் புதுபுது தகவல்கள் கிடைக்கும் கட்டுரைக்குள் நுழையுங்கள்.

 மார்ச்- இது நிலக்கடலை மாதம் 

அமெரிக்காவின் பிரபலமான உணவு நிலக்கடலை. ஒவ்வொரு அமெரிக்கரும் ஒரு ஆண்டில் 9 பவுண்ட் நிலக்கடலையை சராசரியாக சாப்பிடுகிறார்கள். 1941 ஆம் ஆண்டிலிருந்து தேசிய நிலக்கடலை வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். 1974 ஆம் ஆண்டிலிருந்து ஒரு வாரமாக இருந்த இந்த விழா ஒரு மாதமாக ஆகிவிட்டது. அலபாமாவில் உள்ள அப்பா என்ற அமைப்பு இந்த மார்ச் மாதத்தை நிலக்கடலை மாதமாக கொண்டாடும் வரையில் எல்லோரையும் தூண்டி வருகிறது. அப்பா என்றால் அலபாமா பீநட் அசோஷியேஷன் (ALABAMA PEANUT ASSOCIATION)என்று அர்த்தம்.
 
நிலக்கடலை கொழுப்பு இதயத்திற்கு தொல்லை தராது

நிலக்கடலையில் இதயத்திற்கு தொல்லை தராத கொழுப்பு உள்ளது. இதனை அன்சேச்சுரேட்டட் ஃபேட் (UNSATURATED FAT) என்று பெயர். இது இதயத்திற்கு பாதுகாப்பானது என்கிறார்கள். அதுமட்டுமல்ல மரங்களிலிருந்து கிடைக்கும் கொட்டைகளிலேயே அதிகமான புரதம் வேர்க்கடலையில் தான் இருக்கிறது. அத்துடன் இயற்கையாக கொலஸ்ட்ரால் இல்லாதது. குறைவான சேச்சுரேட்டட் ஃபேட் ள்ளது. இதில் இன்னொரு சிறப்பு உள்ளது. அதாவது இருபத்தி ஒன்பது வகை வைட்டமின்கள், தாதுஉப்புகள், ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், குறிப்பாக மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் ஆகியவை பிரதானமாகக் கொண்டுள்ளது  இந்த நிலக்கடலை.
 
அடிக்கடி நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு  ஆயுள் அதிகரிக்கிறது.

அடிக்கடி நிலக்கடலை சாப்பிட்டால் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழலாம் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அண்மையில் செய்த ஆராய்ச்சி இதனை நிரூபித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து வகையான கொட்டைகளிலும் மக்கள் அதிகம் சாப்பிடுவது நிலக்கடலைதான். பொதுவாக போர்க்காலங்களில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம். அதுபோல அமெரிக்காவில் வாழும் அந்த சமயத்தில் காப்பித்தூள் கிடைக்காத நிலை இருந்தது. அந்த சமயத்தில் நிலக்கடலை தோலை அரைத்து அந்த பவுடரை காப்பித்தூளாக பயன்படுத்தினார்கள்.
 
நம்ம ஊரின் நிலக்கடலை கேக்தான் பீநட் க்ள்ஸ்டர் டே 

பீநட் க்ள்ஸ்டர் டே என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி கொண்டாடும் நிலக்கடலை திருவிழா.  பீநட் க்ள்ஸ்டர் டே என்றால் கடலையில் செய்யும் ஒருவகை இனிப்பு. இன்னும் புரியும் மாதிரி சொன்னால் நம்ம  கடலைபர்பி, கடலை கேக்,  பீநட் க்ள்ஸ்டர் எல்லாம் ஒன்றுதான். நாம் வெல்லத்துடன் நிலக்கடலைப் பருப்பை சேர்த்து நிலக்கடலை பர்பி செய்கிறோம். அதேதான் பீநட் க்ள்ஸ்டர். வெல்லத்திற்கு பதிலாக சாக்லேட் சேர்த்தால் பீநட் க்ள்ஸ்டர். அவ்வளவுதான். இதில் பல வகை உண்டு. கேராமல் கிளஸ்டர்,  பட்டர்காட்ச் கிளஸ்டர், சாக்லட் பீநட் க்ள்ஸ்டர், என பலவகை உண்டு.
 
நிலக்கடலை பிரியர்களுக்கு தடை போடுவது சிரமம்

எதற்கு வேண்டுமானாலும் தடை போடலாம். சாப்பிடாதே என்று நிலக்கடலை பிரியர்களுக்கு தடை போடுவது சிரமம். அவர்கள் எங்கு போனாலும் கடலை எங்காவது கிடைக்காதா என்றுதான் பார்ப்பார்கள். அமெரிக்காவின் விண்வெளி வீரர் ஆலன் பி ஷெப்பர்ட் என்பவர் ராக்கெட் பயணத்தின்போது நிலக்கடலை சாப்பிட்டபடியே பயணம் செய்தாராம்.  இதற்கு அனுமதி வாங்க, அதனை எடுத்து செல்ல, எப்படி சாப்பிடுவது ? எவ்வளவு சாப்பிடுவது ? பச்சையாகவா ? வறுத்தா ? அவித்தா ? எவ்வளவு சிரமப்பட்டாரோ ?

கடலையை பார்த்தால் கார் தானாக நிற்கும்

வெளியூர்களுக்கு நான் பயணம் செய்யும்போது சாலை ஓரங்களில் எங்கு நிலக்கடலையை விற்பனை நடந்தாலும் என்னுடைய கார் தானாக நின்றுவிடும். இரண்டு மூன்று கிலோ கடலை கொள்முதல் செய்த பின்னர்தான் கார் புறப்படும். கார் பயணத்தில் சாப்பிடுவதற்காக. அதேபோல் என்னுடைய கார்ஓட்டிகள் (டிரைவர்கள் அல்ல) இருவருமே காரை ஓட்டிக்கொண்டே நிலக்கடலையைறித்து சாப்பிடுவதில் வல்லவர்கள்.  ஆனால் எங்கள் குழுவிலேயே வேகமாக நிலக்கடலை உறிப்பதில் எனக்கு அனுபவம் ஜாஸ்தி !

போர்வீர்ர்களை சண்டைபோட உற்சாகப்படுத்தியது நிலக்கடலை

இரண்டாவது உலகப் போரின்போது வீரர்களுக்கு நிலக்கடலை தந்து உற்சாகப்படுத்தினார்கள். இதற்காக வாராவாரம் 50,000 பவுண்டு நிலக்கடலை போர்முனைக்கு போனது. எம்போரியா என்னும் ஹோல்சேல் காப்பி கம்பெனி போர் முனைகளில் இதனை  வாராவாரம் சப்ளை செய்து.
 
நிலக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம்.
 
இதுவரை யாரும் சொல்லவில்லை, சத்து அதிகமாக இருப்பவை என்று சொல்லப்பட்ட பல வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களைவிட நிலக்கடலையில் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக திராட்சை, கிரீன்டீ, தக்காளி,  ஸ்பினாச், கேரட் ஆகியவற்றை விட நிலக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம்.
எண்ணையாக, உணவுப்பண்டமாக பயன்படுத்தினார்கள்.
 
நிலக்கடலை இன்று அமெரிக்காவின் மிக முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று. ஆனால் இதனை அமெரிக்காவுக்கு அறிமுகம் செய்தவர்கள் ஆப்பிரிக்க மக்கள்தான். 1700 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நுழைந்த நிலக்கடலை, அடுத்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவின் வியாபார பயிரானது. அமெரிக்காவில் முதன்முதலாக வெர்ஜினியா மாநிலத்தில் தான் ஆரம்பகாலத்தில் எண்ணையாக, உணவுப்பண்டமாக பயன்படுத்தினார்கள். அத்தோடு கோகோவுக்கு மாற்றாகவும் இதனை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 


இரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம், மற்றும் மாரடைப்புக்கு பாதுகாப்பானது

பீட்பட்டர் அல்லது நிலக்கடலை வெண்ணை என்பது இன்னும் நம் நாட்டில் புழக்கத்தில் இல்லை. அதனால் இதனை இப்போதைக்கு பீநட்பட்டர் என்றே சொல்லலாம். இதை பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. காரணம் NUT அழுத்தம், மாரடைப்பு ஆகிவற்றிற்கு பாதுகாப்பானது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்று உபாதைகளுக்கு பாதுகாப்பானது. இதிலுள்ள நல்லகொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ, மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், எலும்புகள், மற்றும் தசை வளர்ச்சிக்கு பாதுகாப்பானது.

இரண்டு காட்டு நிலக்கடலை ரகங்கள் (WILD GROUNDNUT VARITIES)

நாம் இன்று உலகம் முழுவதும் பயிரிடும் நிலக்கடலை, இரண்டு காட்டு ரகங்களை சேர்த்து உருவாக்கப்பட்டதுதான். அந்த இரண்டு  நிலக்கடலை ரகங்களும், பொலிவியா மற்றும் அர்ஜெண்டினாவை சேர்ந்தவை. அவை இரண்டும் தென் அமெரிக்க நாடுகள். அந்த ரகங்களின் தாவரவியல் பெயர் அராச்சிஸ் அய்ப்பன்சிஸ் மற்றும் அராச்சிஸ் டூரானென்சிஸ்(ARACHIS IPAENSIS, ARACHIS DURANENSIS).
 
இந்தியாவின் நிலக்கடலை மாநிலங்கள் குஜராத். ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு.
 
இந்தியாவில் நிலக்கடலை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்கள், குஜராத் ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 27.87 சதம் உற்பத்தி செய்வது குஜராத். இரண்டாம் நிலையில் இருப்பது ஆந்திரப்பிரதேசம். மூன்றாம் நிலையில் இருப்பது தமிழ்நாடு. இவை தவிர மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒரிசா, மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்கள்.

இதில் சொல்லப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பிடித்திருக்கும். பயனுடையதாக இருக்கும். புதிய பிசினஸ் ஐடியாக்கள் கிடைத்திருக்கும். தொடர்ந்து படியுங்கள். கட்டுரைபற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370, மின்ன்ஞ்சல்: gsbahavan@gmail.com



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...