Saturday, March 7, 2020

நிலக்கடலை மதிப்பு கூட்டுதல் மூலமாக பல தொழில்களை செய்ய முடியும் – GROUNDNUT BASED INDUSTRIES – PART I





நிலக்கடலைமதிப்பு கூட்டுதல் மூலமாகபல தொழில்களை செய்ய முடியும் பகுதி 1

 GROUNDNUT BASED VALUE ADDITION INDUSTRIES – PART I


இன்று உலகத்திலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்டது என்ற ஒரு பெருமைக்குரியது இந்தியா. இன்று கிராமங்களில் விவசாயத்திற்காக வேலை பார்ப்பதற்கு ஆள் கிடைப்பதில்லை என்ற சூழ்நிலைஉள்ளது. 

இன்னொருபக்கம்  ன்று வெளிநாடுகளில் வேலைபார்க்கும் நமது இளைஞர்கள் பலர் இந்தியாவுக்கு திரும்ப வந்து கிராமப்புறங்களில் ஏதாவது வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். 

இந்த  சூழ்நிலையில் பல புதிய தொழில்கள் அவர்களுக்கு தேவை. இதற்கு நமக்கு உதவியாக இருப்பவை நம்முடைய விவசாய விளைபொருட்கள்தான். நம்முடைய வேளாண்மை பொருட்களை மதிப்பு கூட்டுதல் மூலமாக நிறைய புதிய புதிய தொழில்களை நாம் உருவாக்க முடியும். 

அப்படி செய்வதால்  நம் நாட்டின்  பொருளாதாரம் மேம்படும்.துபோல அந்த இளைஞர்களின்  சுய பொருளாதாரத்தையும் மேம்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். அதுமட்டுமல்ல இந்திய விவசாயத்தையும், விவசாயிகளின் வருமானத்தையும்  மேம்படுத்துவதாக அமையும். 

அந்த வகையில்தான் இந்த தொடரில் இந்த கட்டுரையில் நிலக்கடலை மதிப்புக்கூட்டுதல் மூலம் என்னென்ன தொழில்களை செய்ய முடியும் அதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். அதிலும் குறிப்பாக நிலக்கடலை பால் தயாரிப்பதுபற்றி பார்க்கலாம்.



நிலக்கடலையில் மதிப்பு
கூட்டுதல் மூலம்
பலவிதமான தொழில்களை
தொடங்க முடியும்

நிலக்கடலையில் மதிப்பு கூட்டுதல் மூலமாக என்னென்ன பொருட்களை செய்ய முடியும் ? என்னென்ன தொழில்களை செய்ய முடியும் என்று பார்க்கலாம்.

1. நிலக்கடலையிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் செய்யலாம்.

2.வறுத்த நிலக்கடலை தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் தொழில் செய்யலாம்.

3.நிலக்கடை கேக்கு, இதர இனிப்புப் பொருட்கள் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து  விற்பனை செய்யும் தொழில் செய்யலாம்.

4.கடலைப் பிண்ணாக்கு பயன்படுத்தி கால்நடைத்தீவனம் தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்யலாம்.

5. நிலக்கடலை பால் தயார் செய்து பசும்பால் தட்டுப்படுள்ள இடங்களில் விற்பனை செய்யலாம்.

6. நிலக்கடலை பட்டர் தயார் செய்து ஏற்றுமதி செய்யலாம்.

உலக அளவில் நிலக்கடலை உற்பத்தியில் நாம் இரண்டாம் இடத்தில் உள்ளோம். அதேபோல இந்திய அளவில் நாம் குஜராத் மற்றும் ஆந்திராவுக்கு அடுத்ததாக மூன்றாம் இடத்தில் உள்ளோம்.

ஆனால் இந்தியாவில் உற்பத்தியாகும் நிலக்கடலையில் பெரும் பங்கு எண்ணெய் எடுப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். நேரடி உணவாகவும் சாப்பிடுகிறார்கள். சமைத்தும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். வறுத்தும் அவித்தும் தின்பண்டமாக விற்பனை செய்கிறார்கள். 

கடலை பிண்ணாக்கு தீவனம் தயாரிக்கும் தொழிலில் பயன்படுத்துகிறார்கள். கடலைக் கொடியும் தீவனமாக உபயோகமாகிறது. கடலை பிண்ணாக்கை இயற்கை உரமாக பயன்படுத்துகிறார்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் கூட நிலக்கடலையில் என்னென்ன பொருட்களை மதிப்புக்கூட்டுதல் மூலம் தயாரிக்க முடியும் என்ற தகவல்கள் நிரம்ப உள்ளன. அவற்றை எப்படி தயாரிக்கலாம் என்று கூட விரிவாக எழுதப்பட்டுள்ளது

அதிலிருந்து நிலக்கடலை பாலை எப்படி தயாரிக்கலாம் என்ற செயல் முறையை இங்கு சுருக்கமாக தந்துள்ளேன். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தின் இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.

(www.agritech.tnau.ac.in / POST HARVEST TECHNOLOGY/ AGRICULTURE / OILSEEDS/ GROUNDNUT PRODUCTS / GROUNDNUT MILK)

2. நிலக்கடலைப் பால் தயாரிக்கும் வழிமுறை

நிலக்கடலைப் பால் தயாரிக்க முதலில் நல்ல தரமான நிலக்கடலை கொட்டைகளை தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை தூசுதுப்பட்டை இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த பின்னர் அவற்றை லேசாக வறுக்க வேண்டும். 

வறுத்த பின்னர் அவற்றின் சிவப்பு நிற தோலை நீக்க வேண்டும். தோல் நீக்கிய கடலைப்பருப்பில் நடுவில் இருக்கும் முளைக்குருத்துக்களை (GERMS)நீக்கவேண்டும். அந்த முளைக் குருத்துக்கள் நீக்கப்பட்ட பருப்புகளை அரைத்து சீரான கூழாக தயாரிக்க வேண்டும். 

அந்த கூழ் தயாரிக்க ஏழு மடங்கு வரை தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். இதுதான் நிலக்கடலை பால். இந்த நிலக்கடலை பாலுடன் கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற ரசாயனத்தைச் சேர்த்து அதன் கார அமில நிலையை 6.8 ஆக மாற்ற வேண்டும். 

அத்துடன் டை சோடியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் பாஸ்பேட் ஆகியவற்றை சேர்த்து நிலக்கடலைப் பால் பதப்படுத்வேண்டும். இந்த நிலக்கடலை பாலை வடிகட்டி அத்துடன் தேவைப்படும்  போலிக் ஆசிட், கால்சியம்,  இரும்பு ஆகிய தாது உப்புக்களை சேர்க்க வேண்டும். 

இப்படி தயாரித்த நிலக்கடலைப் பாலுடன் கொஞ்சம் இனிப்பு சேர்க்க 7 சதம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். இந்த நிலக்கடலை பாலை ஹோமோஜினைஸ் மற்றும் நீராவிசெலுத்தி  மேலும் பதப்படுத்த வேண்டும்.  இப்போது நிலக்கடலை பால் தயார். 

இந்த பாலை பாட்டில்களில் அடைத்து குளிர்பதன பெட்டிகளில் சேமிக்க வேண்டும். அடுத்து வியாபாரம்தான்.

3. சத்து நிறைந்த நிலக்கடலை பாலை
பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

நிலக்கடலை பாலை, பசும் பாலுக்கு பதிலாக கூட உபயோகப்படுத்தலாம். சத்து நிறைந்த இந்த பாலை பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை பயன்படுத்த தொடங்கினால் சிறந்த உணவாக மாறும் வாய்ப்பு.  ஆனால் இதற்கு பழக்கப்படுத்த வேண்டும். இதனை அறிமுகம் செய்தால் போதும். பழகிவிடுவார்கள். பீஸா, பர்கர், மேகி சாப்பிட எந்த பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்தார்கள் ?

4. நிலக்கடலை பாலை கண்டு பிடித்தவர்
கருப்பு லியனர்டோ என்னும்
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

நிலக்கடலை கண்டு பிடித்தது யார் என்று பார்க்கலாம். ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற விவசாய அறிஞர் தான் முதன் முதலில் கண்டுபிடித்தவர். அவர் விவசாய அறிஞர் மட்டுமல்ல, இயற்கை வளங்களை பாதுகாத்த  அறிவியல் அறிஞரும் கூட. 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மிசவுரி என்ற இடத்தில் பிறந்தவர். 

1943ம் ஆண்டு வரை வாழ்ந்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். நிலக்கடலையில் மட்டும் 100 வகையான பொருள்களை உருவாக்கியவர், கண்டுபிடித்தவர் அவர்தான். முதன் முதலாக இந்த நிலக்கடலை பாலை உருவாக்கிய மேதை அவர்.

நிலக்கடலையிலிருந்து உணவு பண்டங்கள் மட்டுமல்ல அழகு சாதனப் பொருட்கள், சாயங்கள், பெயிண்டுகள்,  பிளாஸ்டிக்,  கேசோலின் மற்றும் நைட்ரோ கிளிசரின் ஆகியவற்றை கண்டுபிடித்தார். 1941 ஆம் ஆண்டு டைம் பத்திரிகை (TIME MAGAZINE) இவரை பிளாக் லியனர்டோ (BLACK LEONARDO) என்று எழுதியது.

நிலக் கடலை மாவுடன் கொஞ்சம் எண்ணெய், கொழுப்பு, புரொட்டீன், கார்போஹைட்ரேட் கொஞ்சம் நிலக்கடலை சாம்பல் (GROUNDNUT ASH) மற்றும் தண்ணீர் சேர்த்து இந்த நிலக்கடலை பாலை தயார் செய்தார். 

அவர் அப்படி தயார் செய்த பால் பசும் பாலுக்கு சமமாக இருந்தது. பசும்பாலுக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பசும்பாலை விட மிகவும் மலிவாக தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.

5. நிலக்கடலை பால்,
பசும்பாலைவிட
கொஞ்சம் உசத்தி

ஒரு கப் பசும் பாலில் அதாவது டயரிமில்க் ல் இருப்பது போல நிலக்கடலை பாலிலும் 8 கிராம் புரதம் அடங்கியுள்ளது. அத்துடன் நிலக்கடலை பாலில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இன்னொரு முக்கியமான அம்சம் நிலக்கடலைப் பாலில் வேகன், கோஷர், மற்றும் டயரி கொலஸ்ட்ரால், ஹார்மோன், மற்றும் லாக்டோஸ் இல்லாதது. இதனை நேஷனல் பீநட் போர்டும் (NATIONAL PEANUT BOARD) அங்கீகரித்துள்ளது.

வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது புரதப் பற்றாக்குறை. இந்த பிரச்சனையை அதிக செலவில்லாமல் தீர்க்கக் கூடியது காய்கறிகள் மூலமாக கிடைக்கும் புரதம் மட்டும்தான்.

6. இரண்டு வகையான
பால் வகைகளை ஆராய்ச்சி
மூலமாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இரண்டுவகையான நிலக்கடலை பால் வகைகளை ஆராய்ச்சி மூலமாக தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொய்யாப் பழங்களின் தசையை சேர்த்து ஒரு வகையான நிலக்கடலை பாலை தயார் செய்துள்ளார்கள். அதுபோலவே பிரேசில் நாட்டின் உம்பு என்னும்த்தின் பழத்தசையையும் பயன்படுத்தி ஒருவகை நிலக்கடலைபாலை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று ஜர்னல் ஆப் தி சவூதி சொசைட்டி ஆப் அக்ரிகல்சுரல் சயின்சஸ் (JOURNAL OF THE SAVUTHI SOCIETY OF AGRICULTURAL SCIENCES) 2015ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதற்கான இணைப்பினை இங்கே கீழே தந்துள்ளேன்.

LINK: www.sciencedirect.com / PRODUCTION OF PEANUT MILK BASED BEVERAGES ENRICHED WITH UMBU AND GUAVA PULPS)

உலகத்திலேயே அதிகமான பால் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமை உடையது இந்தியா. இரண்டாவதாக அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவைவிட இந்தியா இரண்டு பங்கு பாலை உற்பத்தி செய்கிறது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் 20 சதத்தை இந்தியா மட்டுமே உற்பத்தி செய்கிறது. 

ஆனால் கூட பெருநகரங்களில் அதாவது சென்னை பெங்களூர் இப்படிப்பட்ட நகரங்களில் கூட பால்தட்டுப்பாடு இருக்கிறது. பசும் பாலை போதுமான அளவு நம்மால் கொடுக்க முடியவில்லை. அல்லது உற்பத்தி செய்ய முடியவில்லை என்று கூட சொல்லலாம். அதனால் நிலக்கடலை போன்ற தாவர வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் பால் வகைகளை நாம் பயன்படுத்தலாம்.


7.சீனாவில் சோயாமொச்சை பாலை
அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


ஏற்கனவே சீனாவில் சோயா மொச்சையில் இருந்து பாலை எடுத்து அந்த பாலை அதிக அளவில் உபயோகப்படுத்துகிறார்கள். நாம் எப்படி இங்கு டீ காபி போடுவதற்கு பசும்பாலை பயன்படுத்துகிறோமோ அதே போன்று சோயா மொச்சையில் இருந்து எடுக்கும் பாலை பயன்படுத்துகிறார்கள். 

அதேபோல அல்மாண்ட் கொட்டையில் (ALMOND NUT) இருந்தும் பால் எடுத்து பயன்படுத்துகிறார்கள். இது போன்ற தாவர வகைகளில் பாலை தயாரித்து பயன்படுத்துவதால் நாம் பசும்பாலை முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. சோயாமொச்சை உற்பத்தியில் நாம் 5 இடத்தில் உள்ளோம். நமக்கு முன்னால் உள்ளது சீனா. முதலிடத்தில் உள்ளது யு எஸ் ஏ.

8. நிலக்கடலை பாலில் சத்தும் 
அதிகம் விலையும் மலிவு

அது தவிர நமக்கு தேவையான சத்துப்பொருட்கள் இருக்குமாறு இந்த பாலை தயார் செய்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் சத்து பற்றாக்குறையை நோயை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். இன்னொன்று பசும்பாலை விட இது மிகவும் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு முக்கியமான விஷயம் நாம் இப்பொழுது நிலக்கடலை போன்ற வேளாண்மை உற்பத்திப் பொருட்களில் இருந்து இது போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் போது புதிதாக ஒரு தொழிலை செய்யக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. 

இந்த நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய இடங்களில் இதுபோன்ற நிலக்கடலைப் பால் அல்லது நிலக்கடலை கடலைப் பிண்ணாக்கு மற்றும் நிலக்கடலை எண்ணெய் தயாரிக்க கூடிய தொழில்களை தொடங்க கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது. நிலக்கடலை அதிகம் சாகுபடி ஆகும் இடங்கள் தொழில் கிராமங்களாக உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

9. முடிவுரை

இதுபோல வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் சார்புடைய தொழில்களை தொடங்கும் பொழுது கிடைக்கக்கூடிய உபரியான வருமானம் அல்லது லாபமும் விவசாயிகளையும் விவசாயத் தொழிலையும் மேம்படுத்த உதவும். 

புதியதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு இதுவரை புதிய தொழில் அமையும். அதேபோல் இன்று கிராமங்களில் தொடங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் என்ன தொழில் செய்வது என்று குழம்புகிறார்கள். 

இந்த உற்பத்தியாளர் நிறுவனங்கள் எல்லாம், இதுபோன்ற வேளாண்மைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு கூட்டுதல் தொழில்களை தொடங்க வாய்ப்பு உள்ளது.வற்றை அவர்கள் தேர்ந்தெடுத்து செய்ய முடியும்.

நாம் ஆவின் பால்பூத் வைத்திருப்பதைப்போல மலேஷியாவில் சீனர்கள் சோயாபால்கடை வைத்துள்ளார்கள். ஒரு தடவை நான்கூட அந்த ஒரு சீனாக்காரரின் கடையில் சோயா பால் குடித்தேன். “சீனாவில் சோயா பிரபலம் என்று எனக்கு தெரியும். நீங்க கொடுத்த சோயாபால் நன்றாக இருந்தது” என்று அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன். “ரொம்ப நன்றி. தமிழ்காரங்க எது நல்லா இருந்தாலும் பாராட்டுவாங்க” என்று தமிழில் சொன்னார் அந்த சீனாக்காரர்.

ஆச்சரியத்துடன் பார்த்தேன் அந்த சீன நாட்டு தமிழ் விரும்பியை.

FOR FURTHER READING
ON THE RELATED TOPICS

1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html

3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html

4. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA /  Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html

5. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி 2 - FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA - PART – 2 /  Date of Posting: Feb 12th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2-food-processing-industries-of-india.html

6. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html




1 comment:

pandi said...

நல்லதொரு பயனுள்ள தகவல்கள்....நன்றி🙏🙏🙏🙏🙏

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...