Sunday, December 22, 2019

TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய கூரைநீர் அறுவடை


RAIN  HARVESTING POTS OF PAZHAVERKADU


 

 

 

பழவேற்காடு பகுதியில்
பாரம்பரிய
கூரைநீர்
அறுவடை


TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU


தே.ஞான சூரிய பகவான் B.Sc(Ag), M.A (jmc)

@@@@@


சமீபத்தில் ஒரு செய்தியை வாட்ஸ் அப்பில் பார்த்தேன். அநேகமாக அது ஏதாவது ஒரு பத்திரிகையில் வந்த செய்தியாகக்கூட இருக்கும். வெகு காலமாய் தனது வீட்டின் கூரை நீரை அறுவடை செய்து அதனை குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தி வருபவர் அவர்.

ஒரு நாளைக்கு எவ்வளவு
தண்ணீர் வேண்டும் ?


ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு  தண்ணீர் பயன்படுத்துவார் ? குடிக்கவும் சமைக்கவும் ஒரு நபருக்கு ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் மொத்த நீர் எவ்வளவு ? அவர் கணக்குப்படி சுமார் 10 ஆயிரத்து சொச்சம் லிட்டர். 

இந்த 10 ஆயிரத்து சொச்சம் லிட்டர் தண்ணீரை மழைக்காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டால்  வருஷம் 365 நாட்களும் தண்ணீர் பிரச்சனை வராது என்கிறார் அவர்.


ஒரு நாளைக்கு 

குடிக்க சமைக்க 


அவர் சொல்லும் கணக்கு இதுதான், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குடிப்பதற்கு தேவைப்படுவது 3 லிட்டர் நீர். சமைக்க தேவைப்படுவது 4 லிட்டர். ஆக குடிக்கவும் சமைக்கவும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் நீரின் அளவு 7 லிட்டர் மட்டுமே. 

அப்படி என்றால் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருப்பதாகக் கொண்டால் அவர்களின் ஒரு நாளைய தேவை 28 லிட்டர் மட்டுமே. அப்படி என்றால் ஒரு ஆண்டுக்குத் தேவைப்படும் நீர் தோராயமாக 365 நாட்களுக்கு அதாவது ஒரு ஆண்டிற்கு 10 ஆயிரத்து 220 லிட்டர். 

இந்த அளவு தண்ணீரை எத்தனை நாட்களில் அறுவடை செய்யலாம் ? ஒரே மழையில்கூட இந்த 10 ஆயிரத்து 220 லிட்டர் தண்ணீரை சேமித்துவிட முடியும். சுமாராக மழை பெய்தால் கூட போதுமானது. ஐந்தே நாட்களில் இந்த 10 ஆயிரத்து 220 லிட்டர் தண்ணீரை சேமித்து விட முடியும். ஒரு நாளைக்கு 2000 லிட்டர் தண்ணீரைக்கூட சேகரிக்க முடியும்.

சால் மற்றும் 

தொம்பையில்

தண்ணீர் சேமிப்பு


முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கிராமத்து வீடுகளில் தானியங்களை சேமிக்கும் பெரிய பெரிய மண் பானைகளை 
வைத்திருப்பார்கள். பெரும் சம்சாரிகள் வீடுகளில் பெரிய தண்ணீர் சேமிப்பு பாத்திரங்கள் இருக்கும். 

அவற்றில் ஐந்து முதல் பத்து மூட்டை தானியங்களைக்கூட கொட்டி வைக்கலாம்.நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் கூட ஒரு சால் மற்றும் தொம்பை இருந்தது. வீட்டு உபயோகத்திற்கு தானியம் எடுக்க வேண்டும் என்றால் ஒரு சிறு பையன்களை உள்ளே இறக்கி விடுவார்கள்.

 கூடவே ஒரு கூடையை தருவார்கள். அந்தக் கூடையில் தானியத்தை நிரப்பி அந்த குதிர் அல்லது தொம்பைக்குள் இருந்தபடி கொடுக்க முடியும்.நான் சிறுவனாக இருந்தபோது இப்படி தொம்பைக்குள் இறங்கி தானியம் எடுப்பது எனது வேலைகளில் ஒன்றாக இருந்தது. 

இப்போதும் அனேகமாக ஒரு கிராமத்தில் ஒன்றிரண்டு வீடுகளில் கூட இப்படிப்பட்ட தொம்பைகள் குதிர்கள் இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். தண்ணீர் சேமிப்பதற்கான சிறியதும் பெரியதுமான பாத்திரங்கள் எல்லாம் கூட வழக்கொழிந்து போய்விட்டன. 

 மழைநீர் அறுவடை செய்து அதனை சேமித்து வைக்க வேண்டும் என்றால் தொட்டிகள் வைத்துக்கொள்ளலாம். ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை என்றால் பத்து தொட்டிகள் வேண்டும். 

தொட்டி முறையில் நீர் அறுவடை செய்வது கொஞ்சம் செலவு பிடிப்பது.இது ஒருமுறை செலவு என்பதால் சில சிமெண்ட் தொட்டிகளை கட்டிக் கொள்ளலாம். 

ஆனால் அதற்கு கொஞ்சம் இடம் வேண்டும். தொட்டிகளை நிலத்தடியில்கூட அமைக்கலாம். 10 ஆயிரத்து 220 லிட்டர் தண்ணீர் சேமிக்க எந்த அளவு தொட்டிகள் வேண்டும் ? இதனை எப்படி கணக்கிடுவது ?

ஒரு கனமீட்டர் 

தொட்டியில் 

ஆயிரம் லிட்டர் 

தண்ணீர்

இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.  ஒரு கனமீட்டர் தொட்டியில் 
ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளும். அப்படி என்றால் 10 கன மீட்டர் அளவுள்ள 
தொட்டியில் 10 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கலாம். நமது தண்ணீர் தேவை, 
 மற்றும் நமக்கு இருக்கும் இட வசதிக்கேற்ப இதனை அமைத்துக் கொள்ளலாம்.

கர்நாடாகாவில்  

கட்டிடத்திற்கு கீழே

மழை நீர் சேகரிப்பு 


15 ஆண்டுகளுக்கு முன்னால் நீர் மேலாண்மை பற்றிய பயிற்சி எடுப்பதற்காக கர்நாடகாவின் தும்கூர் சென்றிருந்தோம். நான்கு நாட்கள் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். 

விடுதி மிகவும் வசதியாக இருந்தது. அங்கே எங்களுக்கு ஒரு 
ஆச்சரியமான செய்தி காத்திருந்தது. அது என்ன என்றால் அந்த விடுதி கட்டிடத்தின் மேல் கூரையில் இருந்து 75 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரித்து அதனை கட்டிடத்தின் அடியில் ஒரு பெரிய தொட்டியில் சேகரித்திருந்தார்கள். 

அதுமட்டுமல்ல அந்த விடுதியின் தண்ணீர் தேவையை அங்கு அறுவடை செய்த மழைநீரை கொண்டே சமாளிக்கிறார்கள்.அந்த தண்ணீரை பயன்படுத்துவதற்கு முன்னால் ஆயிரம் லிட்டர் தண்ணீருடன் 
4 கிராம் என்ற அளவில் பிளீச்சிங் பவுடர் சேர்த்து அரை மணி நேரம் தெளிய வைத்து பிறகு பயன்படுத்துகிறார்கள். 

 பழவேற்காடு 

கடலோர கிராமம்


பழவேற்காடு கடலோர கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. பழவேற்காடு 13 தீவுக்கிராமங்களையும் உள்ளடக்கியது. இங்கு வசிக்கும் செட்டியார் என்னும் மீனவ சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், தெலுங்கு பேசும் ரெட்டியார் சமூகத்தினர் ஆகிய அனைவரின் பிரதான தொழில் மீன் பிடிப்பதுதான்.

கடலோரத்தில் அமைந்துள்ள இந்த மீனவர் குப்பங்கள் அத்தனையும் மணற்பரப்பில் தான் அமைந்துள்ளன. இந்த மணல் பரப்பில் 4 அல்லது 5 அடி 
தோண்டினாலே தண்ணீர் எட்டிப் பார்க்கும். ஆனால் அத்தனையும் உப்பு தண்ணீர். வாயில் வைத்தால் குமட்டிக்கொண்டு வரும்.

குடிக்க சமைக்கவும் முடியாது. காலங்காலமாக இங்கு வசிக்கும் மக்கள் குடிசைகளில் மழைநீரை  அறுவடை செய்தார்கள். அறுவடை செய்த நீரை குடிக்க சமைக்க பயன்படுத்தி வந்தார்கள்.

தண்ணீர் உபயம் 

செய்யும் 

மெதூர் கிராமம்

இப்போது அவர்களுக்கு மெதூர் என்னும் கிராமத்திலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் வருகிறது. பழவேற்காட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துல்ளது இந்த மெதூர் கிராம்ம். இந்த தண்ணீர் வருவதற்கு முன்னால் 
பழவேற்காடு மக்கள் அனைவருக்கும் மழைநீரை விட்டால் வேறு வழியில்லை.

அதற்காக அவர்கள் தொட்டிகளுக்கு சமமான மண்பானைகளை ஜாடிகளை
பயன்படுத்தி வந்தார்கள். பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 
இந்த வித்தியாசமான பானைகளை நான் பார்த்திருக்கிறேன்.

மழைநீர் 

சேமிக்கும் 

பழைய பானைகள்

இப்போதும்கூட சில வீடுகளில் இந்த பானைகளை பழைய ஜாமான்களோடு 
ஜாமானாக போட்டுக்கிடப்பதைப் பார்க்கலாம். டச்சுக்காரர்களின் வழிவந்த 
ஒருசிலரும் இன்னும் இங்கு வசிப்பதாகச் சொல்லுகிறார்கள். 

ஒரு காலத்தில் சென்னை நகரம் ஒரு சிறிய கிராமமாக இருந்தது. அந்த சமயம் கிட்டத்தட்ட பத்தாயிரம் நெசவுத் தறிகளைக் கொண்ட நகரமாக இருந்தது பழவேற்காடு என்று எழுதுகிறார்கள். 

சரித்திர ஆசிரியர்கள். இதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னாலேயே பழவேற்காட்டில் கால் பதித்தது டச்சுக்காரர்கள்தான்.இன்றும் கூட பழவேற்காட்டில் சிதிலமடைந்த டச்சுக்காரர்களின் கல்லறையை பார்க்கலாம். 

பழவேற்காட்டில் டச்சுக்காரர்களை நினைவுபடுத்தும் வகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றும் உள்ளனர். அவர்களை சாயாக்காரர்கள் என்று சொல்லுகிறார்கள். அங்கு மசூதி தெருவில் வசிக்கும் இவர்கள் இன்றும் கூட மழைநீரை அறுவடை செய்து அதனை ஓர் ஆண்டு வரை கூட வைத்திருந்து 
பயன்படுத்துகிறார்களாம்.


மழைநீரை சுத்தம்செய்ய சேமித்து வைத்திருக்கும் மழைநீரை சுத்தம்செய்ய இவர்கள் வித்தியாசமான ஒரு சிகிச்சை முறையை கையாளுகிறார்கள். அதாவது நெருப்பில் வைத்து செந்நிறமாக பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியை தண்ணீரில் ஓரிரு நிமிடம் மூழ்கி வைத்திருப்பார்கள். 

இப்படி தயார் செய்த குடிநீரில் எவ்விதமான கிருமிகளும் இருக்காது என்று காலம்காலமாக நம்புகிறார்கள். நோய்களைப் பரப்பும் எல்லாவிதமான கிருமிகளையும் இந்த சிகிச்சை முறை அழித்துவிடுமாம்.

வேண்டுகோள்


குடிநீர் பிரச்சினை உடைய ஒவ்வொரு குடும்பத்தினரும் மழை நீரை அறுவடை செய்யலாம். சுத்தம் செய்யலாம். குடிக்க சமைக்க குளிக்க அனைத்து காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். இதில் சந்தேகம் ஏதும் இருந்தால் 8526195370 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

மழை நீரை அறுவடை செய்து ஒரு நீர் உறிஞ்சு குழியில் விட்டால் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். இனி வரும் கலத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை என்றால் நமது ஊர் மட்டமும் உயராது. 

பூமி ஞானசூரியன்



1 comment:

Anonymous said...

Very simple and valuable information. Villagers are not at all knowing the importance of water. Water harvesting should start from village level. Just like toilet construction water harvesting tanks to be constructed in each house.
V.Sambasivam IFS (Retd), Houston , Texas.

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...