Monday, December 23, 2019

SNEGI COMMUNITY RADIO - ரேடியோ சிநேகி


ரேடியோ சிநேகி

(BEST COMMUNITY RADIO IN
SIVAJI NAGAR,
BIHAR)

(LEARN THE ART OF
WRITING FOR RADIO)

சாமக்கோடாங்கிசங்கரலிங்கம்

88888888888888888888888888888

(நடு ராத்திரியில் வந்து குறி சொல்லும்
குடுகுடுப்பைக்காரன் பாணியில்
சமுதாய வானொலி பயிற்சி
பெறுபவர்களுக்காக வானொலி நிகழ்ச்சிக்காக
எழுதப்பட்டது. தேசிய அளவில்
அங்கீகரிக்கப்பட்டது)

(பீகார் மாநிலத்தில் பதேபூர் சிவாஜி நகர்
ருக்கும் ரேடியோ சினேகி
ஒரு சமுதாய வானொலி
ரேடியோ சினேகி
இரண்டாயிரத்து பத்துல தொடங்கி
ஒன்பது வருஷமா
பதினஞ்சி கிலோமீட்டர் சுற்றளவு
ஐந்நூறு கிராமங்கள்ள
பதினெட்டுமணி நேரம்
தினம் தினம் ஒலிபரப்பு
செய்கிறார்கள்.)

8888888888888888888888888888888888888888888

கோடாங்கி:

நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
அம்மா தாயி

மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே
ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே
தேவி ஜக்கம்மா
ராக்கு சொடலை

சிறுவாச்சி மதுரகாளி
திருவேற்காடு கருமாரி
திருக்கடவூர் அபிராமி
தில்லை சிவகாமி

ராஜராஜேஸ்வரி
தேவிபுவனேஸ்வரி
கன்னிகா பரமேஸ்வரி
காஞ்சி காமாட்சி
கவனமா சொல்லு தாயி
காசி விசாலாட்சி
கருத்தா சொல்லு தாயி
மதுரை மீனாட்சி
மறைக்காம சொல்லு தாயி


வீடு வாசலை பார்த்தேன்
குறையில்ல
வீட்டில் வாழுமான
அரசனப்பத்திப்பாத்தேன்
குறையில்ல
வீட்டில் வாழுமான
கொம்பனப்பத்திப்பாத்தேன்
குறையில்ல


மனைவி மக்களை பத்திப்பாத்தேன்
குறையில்ல
குழந்தை குட்டியை பத்திப்பாத்தேன்
குறையில்ல
காடு கழனியப்பத்திப்பாத்தேன்
குறையில்ல
பயிர் பச்சையப் பத்திப்பாத்தேன்
குறையில்ல
மாடுகண்ணப் பத்திப்பாத்தேன்
குறையில்ல
கோழிகுஞ்சப் பத்திப்பாத்தேன்
குறையில்ல.

(ஒருபெண் அழுகையுடன் தாலாட்டு
பாடும் சத்தம் கேட்கிறது)
 
பெண்:

ஆராரோ ஆரரிரோ
ஆராரோ ஆரரிரோ
கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
என் கண்ணே கண்மணியே
காரிருளில் வந்துதித்த
கண்மணியே கண்ணுறங்கு
பெற்றவளை கண்கலங்க
வைத்துவிட்ட பெண்மயிலே
கண்ணுறங்குகண்ணுறங்கு
(தேம்பி தேம்பி அழுதல்)

கோடாங்கி:

என்ன தாயி விடியக் காத்தால
அழுதுகிட்டு இருக்கிங்க
அப்படி என்னதான் நடந்து போச்சு
எந்த கப்பல் கவிழ்ந்து போச்சு
நீ இப்படித் தேம்பித் தேம்பி அழறே தாயி

பெண்:

பொழுது விடிஞ்சத்த் தவிர
என்னோட வாழ்க்கை விடியலையே கோடாங்கி
  
கோடாங்கி:

அப்படி என்னதான் உனக்கு கஷ்டம் தாயி ?

பெண்:

நான் என்ன கோடாங்கி சொல்றதுக்கு.
தவமாய் தவமிருந்து பெற்ற ஒரு பிள்ளையும்
பொம்பளையாய்ப் போச்சு. பொட்டப்புள்ளை
வச்சுக்கிட்டு என் வாசப்படி
மிதிக்காதன்னு மாமியாரும் சொல்றாங்க.
மாமனாரும் சொல்றாரு. அதெல்லாம்
பரவா இல்ல கோடாங்கி,   
அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து
தொட்டுத்தாலி கட்டின புருஷனும்
வெளியே போடின்னு சொன்னா நான்
என்ன பண்ணுவேன் கோடாங்கி ?
சாகறதத்தவிர எனக்கு வேற
வழியே தெரியல.  நான் சாகறதுக்காகக்
கூட எனக்கு கவலையில்லை கோடாங்கி.  
ஆனால் இந்த பச்சசிசுவை நினைச்சாத்தான்
எனக்கு கஷ்டமா இருக்கு கோடாங்கி.

கோடாங்கி:

சபரிமலை கணபதியே
சபரிமலை ஐயப்பா
மருவத்தூர் பராசக்தி
ருவில்லா மகாசக்தி
மனசு கலங்கி நிக்கிற
இந்த மகராசிக்கு
ஒரு மார்க்கஞ்சொல்லு
பச்சை புள்ளையோட
பரிதவித்து நிக்கிற
இந்த பதிவிரதைக்கு
ஒரு வழியச்சொல்லு.


அம்மா தாயி
மண்ணுக்கு மரம்பாரமில்ல
மரத்துக்கு இலைபாரமில்ல
கொடிக்கு காய்பாரமில்ல
வேருக்கு செடியும்கொடியும்
மரமும் பாரமில்ல
தாய் சேய்க்கு பாரமில்லன்னு
ஆத்தா சொல்லுது தாயி

பெண்:

ஏன் கோடாங்கி இந்த பச்ச மண்ண
வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது ?



கோடாங்கி:

பெத்த புள்ளையோட
பேதலிச்சு நிக்கிற
இந்த பெண்மணியை
னிச்சி நிக்கச் சொல்லு
தைரியமாக நிக்கச்சொல்லு
காலம் கனிஞ்சு வரும்னு
ஆத்தா சொல்லுது தாயி

பெண்:

நீ என்ன சொல்ற, பொட்ட கோழி
கூவி பொழுது விடியுமா கோடாங்கி ?

கோடாங்கி:

சேவல் கோழி கூவலன்னாலும்
பொழுதும் விடியும் தாயி
பொண்ணு பிறந்தா
பொன்ன குடுக்கும்
பொருளக் குடுக்கும்
பெத்த தாய்க்கும்
வளத்த தகப்பனுக்கும்
கண்ணக் குடுக்கும்
தன்னக்குடுக்கும்
ஆணுக்குப்பொண்ணு அட்டியில்ல
மட்டமில்லன்னு ஆத்தா சொல்லுது தாயி

பெண்:

அப்போ நானும் என் பொம்பள
புள்ளயும் சாகக்கூடாதுன்னு ஆத்தா
சொல்றாளா கோடாங்கி ?

கோடாங்கி:

ஆமா தாயி

பெண்:

அதுசரி கோடாங்கி என்ன
சாகக்கூடாதுன்னு சொல்றேவேற யாரு
எனக்கு இருக்காங்க ?

கோடாங்கி:

ன் தாயி கையுங்காலும் இருக்கே தாயி  

பெண்:

கையும் காலும் இருந்தா போதுமா கோடாங்கி ?

கோடாங்கி:

கையும் இருக்கணும் காலும் இருக்கணும்
கூட நம்பிக்கையும் இருக்கணும்னு
கருத்த மாதிரி சொல்லுது தாயி. நான் வர்றென் தாயி.


நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
அம்மாதாயி.


காட்சி 2

ஆண் குரல் 2: 

கோடாங்கி கோடாங்கி
ஒரு நிமிஷம். நல்ல சமயத்துல வந்து
அந்த பொண்ணுக்கு ஆறுதல் சொன்னிங்க.
எம்பேரு கார்மேகம்.  பெண்கள்
மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக  
வேலை பாக்கறோம். இந்த மாதிரி பெண்களோட
பிரச்சினைகளுக்கு  தீர்வுகாணறதுதான்
எங்க வேலை. இதுக்காக ஒரு தொண்டு
நிறுவனம் வச்சிருக்கோம். எங்க நிறுவனத்தோட
பேருசக்தி சம்யுக்தா’.

கோடாங்கி

ரொம்ப நல்லது சாமி. நான்
எதாச்சும் ஆத்தாவக் கேட்டு உங்களுக்கு
குறி சொல்லணுமா சாமி ?

ஆண்குரல்

கோடாங்கி. எங்களோட
சக்தி சம்யுக்தாதொண்டு நிறுவனம்  
120 கிரமங்கள்ள வேலை பாக்கறோம்.
பொதுவா நாங்க வளர் இளம் பருவ
பெண்கள் பிரச்சினைகள், அத்ற்கான
விழிப்புணர்வு, அதற்கான தீர்வுகள்பற்றி
சொல்றதுதான் எங்க வேலை. இதை
விரிவு படுத்த இல்ல தீவிரப்படுத்த
எங்களுக்கு ஒரு சாதனம் வேணும்.
அது ஏன் சமுதாய வானொலியா
இருக்கக்கூடாதுன்னு நினச்சோம்.
எங்களமாதிரியே ஒரு தொண்டு நிறுவனம்
ஒரு சமுதாய வானொலி வச்சிருக்கறதா
கேள்விப்பட்டோம். அதப்பத்தி உங்ககிட்ட
கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்.

கோடாங்கி:

மக்களா கேளுங்க மகமாயி வாக்கு இது
ஜனங்களா கேளுங்க ஜக்கம்மா வாக்கு இது

நீங்க சொல்ற அந்த சமுதாய வானொலி
பீகார் மாநிலத்தில் பதேபூர் சிவாஜி நகர்
ருக்கு சாமி அதன் பேரு ரேடியோ சினேகி

ரேடியோ சினேகி
இரண்டாயிரத்து பத்துல தொடங்கி
ஒன்பது வருஷமா
பதினஞ்சி கிலோமீட்டர் சுற்றளவு
ஐந்நூறு கிராமங்கள்ள
பதினெட்டுமணி நேரம்
தினம் தினம் ஒலிபரப்பு
செய்யறாங்க சாமி !

ஆண் குரல்: 

பீஹார்ல சிவாஜி நகர்
சமுதாய வனொலி எதப்பத்தி
எல்லாம் ஒலிபரப்பு செய்யறாங்கன்னு
சொல்லமுடியுமா கோடாங்கி ?


கோடாங்கி:

ஏறத்தாழ நீங்க 
வேலை பாக்கறமாதிரியான
வேலைகளத்தான் அவுங்களும்
செய்யறாங்க சாமி. அதாவது
இளம்பருவப் பெண்கள் 
பிரச்சினையை மையமாவச்சி.

எழுப்பப்படாத பிரச்சனைகள்
எழுதப்படாத பிரச்சனைகள்
வெளிப்படையாக
பேசப்படாத பிரச்சினைகள்
பேசமுடியாத பிரச்சினைகள்
பேச அச்சப்படும் பிரச்சினைகள்
பேச கூச்சப்படும் பிரச்சினைகள்
பேச மயங்கும் பிரச்சினைகள்
பேசத் தயங்கும் பிரச்சினைகள்
அப்படின்னு பலமாதிரியா
மூடார்த்தமாவும் கூடார்த்தமாவும்
சொல்றாங்க சாமி

குரல்

அப்படிப்பட்ட பிரச்சினைகள்
என்னன்னு கொஞ்சம் ஒடைச்சி
சொல்லேன் கோடாங்கி.
இதப்பத்தி சரியான விழிப்புணர்வு இல்ல.
அதனாலதான் நிறைய பிரச்சினைகளே வருது.

கோடாங்கி:

சொல்றேன் சாமி,
இளம்பருவ பெண்களுக்கு
மட்டுமல்ல
இளம்பருவ ஆண்களுக்கும்
இந்த விழிப்புணர்வ
கண்டிப்பா குடுக்கணும்
கருத்தா குடுக்கணும்


அவங்களுக்கு
பாலியலச் சொல்லணும்
பாலுணர்வச் சொல்லணும்
வளர் இளம் பருவம்னா
என்னன்னு சொல்லணும்
சுய இன்பம் சொல்லணும்
ஆண்பெண் பிறப்புறுப்புபத்தி
அவசியம் சொல்லணும்

அதுமட்டுமில்லாம
பால்வினை நோய்
எச் ஐ வி
பாதுகாப்பான உடலுறவு
மாதவிடாய்
கர்ப்பம் கர்ப்ப்ப்பை
கர்ப்பிணிக்கான
உணவுமுறை
சுகப்பிரசவம்
முன்பின் பிரசவத் தகவல்கள்
தாய்ப்பால்
தாய்சேய் நலம்
எல்லாத்தப்பத்தியும்
ரேடியோ சினேகி
விஸ்தாரமா சொல்லுது சாமி

குரல் 2: 

ஆச்ச்ரியமா இருக்கு கோடாங்கி.
இப்போ நீ சொன்ன அத்தனை வேலயையும்
நாங்களும் செய்யறோம் கோடாங்கி. இது
இல்லாம வேற என்ன நிகழ்ச்சிகள் செய்யறாங்க ?.

கோடாங்கி

கிராமத்து கலைஞர்ளை
ஊக்குவிப்பது
கைவினைப் பொருட்களுக்கு
விற்பனை ஏற்பாடு
திறந்தவெளி
கழிப்பறைப்பிரச்சினைகள்
சுகாதாரப்பணி தொண்டர்களை
உருவாக்குதல்
இப்படி சில நிகழ்ச்சிகளயும்
ஒலிபரப்பு செய்யறாங்க.சாமி

கோடாங்கி

இளம் பருவப் பெண்கள்
பிரச்சனைகளைப் பற்றி குரல் கொடுக்க
நாங்களும் சினேகி வானொலி மாறி முயற்சி
செய்வோம் கோடாங்கி. சினேகி வானொலி பற்றி
விளக்கமாக எடுத்துச் சொன்னிங்க.
எங்களை மாதிரி தொண்டுநிறுவனங்களும்
சமுதாய வானொலி தொடங்கலாம்னு
புரிஞ்சிகிட்டோம். உங்களுக்கு ரொம்ப நன்றி கோடாங்கி.

கோடாங்கி:

இன்னும் நன்றி சொல்லவேண்டியது
நிறைய இருக்கு சக்திசம்யுக்தா
சமுதாய வானொலி தொடங்கறதுக்கான
வேலைங்களப் பாருங்கன்னு
ஆத்தா சொல்லுது நான் வர்றேன் சாமி.

நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
அம்மா தாயி.

88888888888888888888888888888


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...