Monday, December 23, 2019

RUDI COMMUNITY RADIO - ரூடி சமுதாய வானொலி



ரூடி 

சமுதாய 

வானொலி 


(சமுதாய வானொலி 

வீட்டுக்கும்நாட்டுக்கும் 

நல்லது)


 எழுதியவர்:

சாமக்கோடாங்கி 
சங்கரலிங்கம்

8888888888888888888888888888888888888888888

(உலகம் முழுசும் 1999 முடிஞ்சு
இரண்டாயிரம் வந்தது
குஜராத்தில் மட்டும்
நிலநடுக்கம் வந்தது
வீடுகள் விழுந்தது
மரங்கள் விழுந்தது
ஊரும் விழுந்தது.
குஜராத்துக்காக
உலகம் அழுது புரண்டது
ஆனால் அந்த சமயம்
எழுந்து நின்றது
ரூடிவானொலி மட்டும்தான் தாயி
நிலம் நடுங்கிய பூமியிலே
உயிர் நடுங்கிய மக்களுக்கு
ஒலிபரப்பு கரம் நீட்டியது
ரூடி வானொலிதான்னு
ஆத்தா சொல்லுது தாயி.)

காட்சி : 1

இடம்:

ஒரு கிராமத்தின் முகப்புத்தெரு
காலம்: இளங்காலை நேரம்

பாத்திரங்கள்: 1. கோடாங்கி 2. குரல் 1

(நிலை: சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்
ஒரு கிராமத்தில் இருள் சூழ்ந்த
தெருக்களில் இறங்கி நடக்கிறான்.
தனது சிறு பறையை லாவகமாக
அடித்து குறி சொன்னபடி செல்லுகிறான்.
ஒருத்தர் கோடாங்கியிடம்
குறி கேட்க வீட்டைவிட்டு
வெளியே வருகிறார்)

கோடாங்கி:

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி
மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே

தேவி ஜக்கம்மா ராக்கு சொடலை
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு
நீ ஒரு நல்ல சேதி சொல்லு

இந்த கிராமத்தைப்பத்தி;; பார்த்தேன் குறையில்ல
மண்ணு மனயப்பத்திப்பாத்தேன் குறையில்ல
வீடு வாசலப்பத்திப் பாத்தேன் குறையில்ல
மக்கமனுசாளப்த்திப்; பாத்தேன் குறையில்ல
குழந்தை குட்டியப்பத்திப்; பாத்தேன் குறையில்ல
ஆடு மாட்டப்பத்திப் பாத்தேன் குறையில்ல
கோழி குஞ்சப்பத்திப் பாத்தேன் குறையில்ல


ஏழையாகிப் போன
ஏரிகுளத்தைப் பாருங்க
ஆத்தைப் பாருங்க



மரம் மட்டையப் பாருங்க
செடி கொடியப் பாருங்க
பயிர் பச்சயப் பாருங்க

வறட்சியில வாடி வதங்கிப்போன
மக்க மனுசாளப் பாருங்க
மண்ணு மனையப் பாருங்க
மாடு கன்றப் பாருங்க
ஆடு மாட்டப் பாருங்க

பசுமை இல்ல வாயுவை
அடியோடு; வராம அடிச்சு விரட்டுங்க
பருவக்கால மாற்றம் நம்பக்கம் தலைவச்சிப்
படுக்காதுன்னு ஆத்தா சொல்றா சாமி

குரல் 1:

வணக்கம் கோடாங்கி.
நீ எப்பிடி இருக்க ? சவுக்கியமா ?

கோடாங்கி:

வணக்கம் தாயி. நான் நல்லா
இருக்கேன். நீங்க எப்பிடி
இருக்கிங்க தாயி ?

குரல் 1:

நான் நல்லாதான் இருக்கேன்.
நீங்க எவ்ளோ நாளைக்கு மாடு கண்ணு
நல்லா இருக்கு. கோழி குஞ்சு
நல்லா இருக்குன்ன்னு சொல்லிகிட்டு
இருப்பிங்க. காலம் மாறிப்போச்சு.
ஆண்ட்ராய்ட்போனு அது இதுன்னு
வந்தாச்சி அதப்பத்தி எதாச்சும்
சொல்ல மாட்டியா ?

கோடாங்கி:

சொல்றேன் தாயி
இப்பொ காலம் மாறிப்போச்சி
கைமேல காசுகொடுத்து
வாய்மேல தோசை வாங்கற
கலாச்சாரம் காலாவதி
ஆகிப்போச்சி

அதுக்கு பதிலா
டேபிட் கார்ட் வந்தாச்சி
கிரிடிட் கார்ட்  வந்தாச்சி
மொபைல் பேங்கிங் வந்தாச்சி
அதுக்கு உதவியா
ஆண்ராய்ட் போனும்
அம்சமா வந்தாச்சி
மாதாப்பிதா கூகிள் தெய்வம்
எப்பவோ ஆகியாச்சு

கருவாடும் காய்ஞ்சமிளகாயும்
கால்கிலோ அரைச்ச மஞ்சளும்
தேனும் மீனும்;
தேங்காயும் மாங்காயும்
ஆன்லைன் மார்கட்டிங்ல
அம்புட்டும் வந்தாச்சி சாமி


ஆனாலும்
ஏழையாகிப் போன
ஏரிகுளத்தைப் பாருங்க
ஆத்தைப் பாருங்க

மரம் மட்டையப் பாருங்க
செடி கொடியப் பாருங்க
பயிர் பச்சயப் பாருங்க

வறட்சியில வாடி வதங்கிப்போன
மக்க மனுசாளப் பாருங்க
மண்ணு மனையப் பாருங்க
மாடு கன்றப் பாருங்க
ஆடு மாட்டப் பாருங்க

பசுமை இல்ல வாயுவை
அடியோடு; வராம அடிச்சு விரட்டுங்க
பருவக்கால மாற்றம் நம்பக்கம் தலைவச்சிப்
படுக்காதுன்னு ஆத்தா சொல்றா சாமி 

குரல்:

நீ சொல்றது எல்லாம்
சரிதான் கோடாங்கி, ஆனா
இண்ணைக்கு எனக்கு சமுதாய
வானொலிபத்தி சொல்லு.
பெண்களுக்காக பெண்களால
நடத்தக்கூடிய ஒரு வானொலி
இருக்குன்னு சொல்றாங்க.
அதப்பத்தி ஆத்தாவக்கேட்டு
சொல்லு கோடாங்கி. எங்க பெண்கள்
சங்கத்தப்பத்தி ஒனக்கு நல்லா தெரியும்.
நீ சொல்றத வச்சிதான்
நாங்க ஒரு சமுதாய
வானொலி தொடங்கலாமா
வேணாமான்னு முடிவு செய்யணும்.

கோடாங்கி:

சொல்றேன் தாயி.
இந்தியாவுல ஏகப்பட்ட வானொலி
இருக்குஅதுல
சமுதாய வானொலி மட்டும்
இருனூற்று அம்பது இருக்கு
அதுல சேலைகட்டிய
சீலைகட்டிய
தொடு தொங்கட்டான் போட்ட
பெண்களுக்காக பெண்களால
நடத்தக்கூடிய லேடி வானொலி
இந்த ரூடி வானொலி
ஒண்ணுதான் தாயி

குரல் 1:

ரூடி வானொலி ஒன்னுதான்
லேடி வானொலி நல்ல இருக்கு.
சேலைகட்டிய சீலைகட்டி
தொடுபோட்டு தொங்கட்டான் போட்ட
வானொலி. கேக்கவே புதுசா இருக்கு.

ஆணுக்கு பெண் அட்டியில்ல
மட்டமில்லன்னு வார்த்தையில சொன்னாகூட
பெண்கள் உரிமை பெண்கல்வி,
பெண்ணடிமை, பெண்அதிகாரம்
இதப்பத்தி எல்லாம்
நிறைய விழிப்புணர்வு வரணும்
கோடாங்கி. ஆமா இந்த ரூடி வானொலி
எங்க இருக்கு ? எப்பிடி இருக்கு ?
அதப்பத்தி சொல்லு. அதுக்கு
முன்னால சமுதாய வானொலின்னா
என்னான்னு சொல்லு கோடாங்கி.

கோடாங்கி:  

இந்த ரூடி வானொலி இருக்குமிடம்
மணிப்பூர் கிராமம்  
மணிப்பூர் கிராமத்து
மக்களோட  மணியான வானொலிஇந்த
ரூடி வானொலி
மணிப்பூர் கிராமத்து
பெண்கள் சமூகத்துக்காக
பெண்கள் சமூகம்
நடத்துற மீசைவச்ச வானொலி இந்த
ரூடி வானொலி
அஹமதாபாத் மாவட்டத்துல
குஜராத் மானிலத்துல இருக்கற
குள்ளமில்லாத வானொலி.
குடும்பப்பாங்கான வனொலின்னு
ஆத்தா சொல்லுது தாயி

குரல்:

ரூடி வானொலிய சேலை கட்டிய
வானொலின்னு சொன்ன.
அப்பொறம் சீலை கட்டியதோட
தோடு போட்டது தொங்கட்டான்
போட்டதுன்னு சொன்ன.
அப்பொறம் லேடி வானொலின்னு
சொன்ன. அதெல்லாம் சரி.
அது என்ன மீசை வச்ச வானொலி.
பெண்களுக்கு மீசை மேல
ஆசை வரலாம். அவங்களுக்கே
வரணும்னு ஆசப்படக்கூடாது.
இதுதான் கோடாங்கி குசும்பா ?

கோடாங்கி: (சிரித்தபடி) நீங்க சொல்றது
எல்லாமே சரிதான் தாயி.
மீசைன்னா ஆண்களின் அடையாளம்.
அது சரிதான். ஆனா தைரியம் வீரம்
இதெல்லாம் ஆண்களுக்கும்
பெண்களுக்கும் பொதுவான
குணம் தாயி. அதனாலதான்
மீசைவச்ச வானொலின்னு சொன்னெ.
தப்பா தாயி ?

குரல்:

சரி கோடாங்கி இப்பொ எனக்கு
சமுதாய வானொலின்னா என்ன ?
அதனால ஒரு சமூகத்துக்கு
என்ன பிரயோஜனம் ?
ஒரு கிராமத்துல இருக்கும்
எங்களமாதிரி மகளிர் சங்கங்கள்
இதைத் தொடங்க முடியுமா ?
நிறைய செலவு புடிக்குமா ?
அதைப்பத்தி சொல்லு கோடாங்கி.

கோடாங்கி:

சனிமூலை கணபதியே
சபரிமலை ஐயப்பா - இந்த
சமுதாய வானொலியோட
முன்னோடியான விஞ்ஞானி
இந்தியாவுல சமுதாய
வானொலிக்கு பிள்ளையார் சுழிபோட்டு
இன்றைக்கு இருநூத்து அம்பது
வானொலிக்கு வழி செஞ்ச
புண்ணியவான்
டாக்டர் ஸ்ரீதர் சமுதாயவானொலிபற்றி
சொன்ன செய்தியெ
அப்பிடியே அவர் குரல்ல
டக்குன்னு குடு தாயி.

(டாக்டர் ஸ்ரீதர் அவர்கள் சமுதாய வானொலி பற்றி பேசுவது)

கோடாங்கி: இவர்தான் தாயி முதன் முதல்ல இந்தியாவுல சமுதாய வானொலியெ கொண்டுவந்தவர்.

குரல்:

வானொலி விஞ்ஞானி
டாக்டர் ஸ்ரீதர்பற்றி நாங்க
கேள்விபட்டிருக்கோம்.
அவர் குரலை கேட்க
ஏற்பாடுசெஞ்ச ஆத்தாவுக்கும்
ஒனக்கும் ரொம்ப நன்றி கோடாங்கி.
அந்த ரூடி வானொலிய எப்பொ
தொடங்கினாங்க ? எவ்ளோ நேரம்
ஒலிபரப்பு செய்யறாங்கந்னு
சொல்லு கோடாங்கி.

கோடாங்கி:

ரூடியொட ஒலிபரப்பு எல்லை
பத்து கிலோமீட்டர் நாப்பது கிராமம்
தினசரி காலைமாலை எட்டுமணி நேரம்
ஓயாமல் ஒலிபரப்பு செய்யற
சாயாத சமுதாய வானொலி தாயி



இதை எப்போ தொடங்கினாங்க
தெரியுமா தாயி ?
உலகம் முழுசும் 1999 முடிஞ்சு
இரண்டாயிரம் வந்தது
குஜராத்தில் மட்டும்
நிலநடுக்கம் வந்தது
வீடுகள் விழுந்தது
மரங்கள் விழுந்தது
ஊரும் விழுந்தது
குஜராத்துக்காக
உலகம் அழுது புரண்டது
ஆனால் அந்த சமயம்
எழுந்து நின்றது
ரூடிவானொலி மட்டும்தான் தாயி
நிலம் நடுங்கிய பூமியிலே
உயிர் நடுங்கிய மக்களுக்கு
ஒலிபரப்பு கரம் நீட்டியது
ரூடி வானொலிதான்னு
ஆத்தா சொல்லுது தாயி.

குரல் 1. குஜராத் பூகம்பத்தப்பற்றி
நீ சொன்னது எனக்கு
கண்ணீரையே வரவச்சிட்டது
கோடாங்கி.

கோடாங்கி: ஒரு சின்ன கிராம்ம் இல்ல
நகரம் இல்ல ஒரு சமூகம்
வளரணும்னா அதுக்கு சமுதாய வனொலி
உயிர்நாடியா இருக்கும் தாயி.

வளரும் ஊரை வளரும் சமூகத்தை
இன்றுபோய் நாளைவா
என்று சொல்லாமல்
மடியில் மனமார அள்ளிவைத்து
வளர்ச்சிக்கு வழிகாட்டும்
சின்ன வானொலி
சிக்கனமான வானொலி
சீரான வானொலி
ஒரு சின்ன குழு மக்களுக்கு ஏற்ற
சிங்கார வானொலி

ஏறமுடியாத
மலைமக்களுக்கும்
இறங்கமுடியாத பள்ளத்தாக்கு
மக்களுக்கும்
நுழைய முடியாத அடர்வனத்து
ஆதிவாசி மக்களுக்கும்
அணுக்கமானது  இந்த
சமுதாய வானொலி தாயி

காரும் பஸ்சும் கரண்ட்டும் ரோடும்
காணமுடியாத
பழங்குடி மக்களுக்கும்கூட
பாந்தமான வானொலி
பக்குவமான வானொலி
இந்த சமுதாய வானொலி தாயி

மேயப் போகும் மாட்டுக்கு
புல் இருக்கும் தோட்டம் தெரியணும்
தேனெடுக்கும் தேனீக்கு
பூவிருக்கும் காடு தெரியணும்
வில்லெடுத்த வேட்டைக்காரனுக்கு
வேட்டை என்னன்னு
விவரம் தெரியணும்

அதனால சமுதாய வானொலிகூட
சகட்டுமேனிக்கு நடத்த முடியாது
அதுக்கு போகும் இடம் தெரியணும்.

பெண்ணுரிமையும்
பெண் கல்வியும்
பெண் அதிகாரமும் தான்
இந்த வானொலியோடு இலக்கு தாயி



தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
இது மனுஷங்களுக்கு மட்டுமில்ல தாயி
சமுதாய வானொலிக்கும் பொருந்தும் தாயி

ரூடி ரேடியோவின் இரண்டு
கண்களில் ஒன்று சத்ய ஜீவன்
இரண்டாவது சிருஸ்டி.

உடல் ஆரோக்கியமும் நல்வாழ்வும்
நயம்பட பேசுவது சக்தி ஜீவன்

சப்பாத்தி குருமா
பூரிக் கிழங்கு
சென்னா மசாலா
ராஜ்மா இப்படி
நாவுக்கு ருசியான செய்திகளை
காதுக்கு ருசியாக சமைக்கும்
சமையல்கூடம்தான்  சிருஷ்டிதாயி
சேலைகட்டிய இந்த லேடிஸ்பெஷல்
சமூக வானொலிய
ஐந்துலட்சம்பேர் அன்றாடம் கேக்கறாங்க தாயி



குரல்:

கோடாங்கி நீ சொன்னதெல்லாம்
கேட்டது அந்த ரூடி வானொலியெ தேடிபோயி
வேலைபாத்த மாதிரி
இருக்கு கோடாங்கி. ரூடி மாதிரி
ஒரு வானொலியெ சீக்கிரமாவே
நாங்களும் தொடங்கறோம்.
ஒனக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே
தெரியல கொடாங்கி.

கோடாங்கி:

நன்றி சொல்றது இருக்கட்டும் தாயி.
சீக்கிரமா உங்க மகளிர் சங்கத்து
மூலமா ஒரு சமுதாய வானொலியெ
தொடங்குங்க தாயி. நான் வறேன் தாயி.

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி

8888888888888888888888888888










No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...