Tuesday, December 24, 2019

KOTHAGIRI COMMUNITY RADIO - கோத்தகிரி சமுதாய வானொலி





கோத்தகிரி சமுதாய வானொலி


எழுதியவர்: சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்

8888888888888888888888888888888888888

(மூட்டைகணக்காய் நெல்அரிசிகம்பு ராகி சோளம்தினைவரகுசாமை கடலைஎள்ளு
கொட்டிவைக்கும்பெரும்அளவு சால்பானையும்மண்ணுல செஞ்சதுதான்இறங்கி நிண்ணுஎட்டிப்பார்த்தாலும் வெளியில்தலை தெரியாத ஆழமான
தொம்பைக் குதிரும்மண்ணுல செஞ்சதுதான்.
 அரிசிப்பானை சோற்றுப்பானைஅது வடிக்கும்வடிதட்டு
வடிநீர் ஊற்றிவைக்கும் கழுநீர்ப்பானைகுளிநீர் கொதிக்கவைக்க வென்னீர்ப்பானைமீன்குழம்பு மணக்க வைக்கும்அரிக்கன்சட்டிபஞ்சுஇட்லி வார்க்கநல்ல ஆவிசட்டிபருப்புகீரை கடையநல்ல
காவிநிற கல்லுசட்டியும்மண்ணுல செஞ்சதுதான் மத்தெடுத்து மோர்கடைந்துவெண்ணைதிரட்ட வழுவழுக்கும்வெண்ணைசட்டிதண்ணீர்தயிர் மோர்நெய் அத்தனையும்சேமித்து சேகரிக்கும்தண்ணீர்குடம் தயிர்க்குடம் மோர்க்குடமும்அத்தனையும் மண்ணின்மகிமைதான் தாயி
 கட்றா கொட்றா சாற்றுப்பல்லாகழுத்து சிறுத்த தோண்டிஅளவுசிறுத்த  சாணக்கைகுடுவை பல்லா மொந்தையும்மாசுமருவில்லா உருப்படியாமறுபடியும் வருது தாயி..)


 (ஒரு நகரத்தின் தெரு வழியாக
கோடாங்கி பாடிக்கொண்டு வருகிறார் –
ஒரு அம்மையார் வீட்டிலிருந்து வெளியே வந்து
கோடாங்கியுடன் பேசுகிறார். இதுவரை
விவசாயிகளுக்காக குறி சொன்ன
கோடாங்கி இங்கு சமுதாய
வானொலிபற்றி குறி சொல்லுகிறார்)

கோடாங்கி:
நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி

(ஒரு நடுத்தர வயது பெண்மணி
வீட்டிலிருந்து வெளியே வந்து
கோடாங்கியைக் கூப்பிடுகிறார்)

பெண்மணி:

கோடாங்கி கோடாங்கி ஒரு நிமிஷம்
நில்லுப்பா. ரொம்ப நாளாச்சி
உன்னப்பாத்து. ஏதாச்சும் ஒரு
நல்லசேதி சொல்லிட்டு போயேன்.
இந்த வருசம் இயற்கை விவசாயம்
செய்ய ஆரம்பிச்சு இருக்கோம்.
எப்படி இருக்கும் ?

கோடாங்கி:
மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே
ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே
தேவி ஜக்கம்மா
ராக்கு சொடலை

நீஒரு நல்லவாக்கு சொல்லு
நீஒரு நல்லசேதி சொல்லு
தாயி
இயற்கை விவசாயம்
இன்னல் இல்லா விவசாயம்
இட்டது எவ்வளவு எடுத்தது
எவ்வளவுன்னு
கணக்குபண்ணி செஞ்சா
கட்டுகலம் காணும்
கதிர் உழக்கு காணும்
கஷ்டம்வராது நஷ்டம் வராதுன்னு
கருத்தமாரி சொல்லுது தாயி

பெண்மணி:
:

இயற்கை விவசாயம் இல்லாம
கோடாங்கி, கடகநாத் கருப்புக்கோழி
ஒரு ஐநூறு வச்சிருக்கேன்.
ஜம்னபாரி ஆடு அம்பது 
வச்சிருக்கென். இப்பொல்லாம்
நாட்டுப்பால் நல்லவெலைக்கு போவுது.
அதனால சிந்தி பசுமாடு ஒரு
பத்து வச்சிருக்கேன். என்னோட
குடும்ப ராசிக்கு அது சரிப்படுமா கோடாங்கி ?

கோடாங்கி
கருங்கோழி கடகனாத்ஐனூறும்
அருமையான அம்பது
ஜம்னபாரி ஆடும்
கறக்கும் நாட்டுப்பால்மாடு
சிந்திஒரு பத்தும் சேரவச்சி
கறாரா குடும்பம் நடத்தும்
இந்தமகராசி குடுடும்பராசிக்கு
மறுவார்த்தை பேசாம
மகத்துவம் வந்துசேரும்னு
மகமாயி சொல்லுது தாயி

நல்லது நாடி வருது
அல்லது ஓடிபோகுது
பொல்லாதது  போயிசேருது
இல்லாதது கூடிவந்து
கோடிபோகும்னு 
ஆத்தா சொல்லுது தாயி

பெண்மணி:  

எல்லாம் நல்லாத்தான்
சொல்ற கோடாங்கி, ஆனா
ஒரு பரிகாரத்துக்காக அம்மனுக்கு,
கோட்டா பானையில பொங்கல்
வைக்கணும். அந்த கோட்டா பானை
மூணு மாசமா கிடைக்க மாட்டேங்குது.
அந்த கோட்டா மண்பானையிலதான்
பொங்கல் வைக்கணுமாம்.
நானும்  கோட்டாமண்பானை
கோட்டாமண்பானைன்னு,
அவணி அம்பத்தாறு தேசத்திலும்
அலஞ்சி பாத்துட்டேன். சாதா
மண்பானைதான் இருக்கு, கோட்டா
மண்பானை இல்லன்னு சொல்றாங்க.
ஆத்தாவ கேட்டு சொல்லுங்க
எங்க கிடைக்கும் கோடாங்கி ?

கோடாங்கி:

அவணியம்பத்தாறு தேசத்திலும்
அலஞ்சி பாத்தும்
நுழஞ்சி பாத்தும்
திரிஞ்சி பாத்தும்
கேட்டாலும் கெடைக்காத
கோட்டா மண்பானையால
பொங்கவைக்க முடியாம
மனசு கலங்கி நிக்கற மகராசிக்கு
ஒரு மார்க்கம் சொல்லு  தாயி ?

உங்களுக்கு கோட்டாமண்பானை
வேணும். அதை வெச்சித்தான்
பொங்கல் வைக்கணும். அந்த கோட்டா
பானையில பொங்கல் வச்சாத்தான்
உங்க வேண்டுதல் நிறைவேறும் சரிங்களா ?
அப்படி உங்க பிரச்சினைதான்
என்னன்னு சொல்லுங்க தாயி ?
அது என்ன கோட்டா மண்பானை ?

பெண்மணி:

எம்பையனுக்கு சீக்கிரமா கல்யாணம்
பண்ணனும். பொருத்தமான பொண்ணு
குருத மாட்டேங்குது. எம்பையன்
ஐடி இஞ்சினியர், எம்பியே 
படிச்சி இருக்கான். கைநிறைய
சம்பாதிக்கறான்.

பொண்ணு எனக்கு புடிச்சி இருந்தா
அவனுக்கு புடிக்க மாட்டெங்குது.
அவனுக்கு புடிச்சி இருந்தா எனக்கு
புடிக்க மாட்டேங்குது.
ரெண்டுபேருக்கும் புடிச்சி இருந்தா.
பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு
எங்கள புடிக்கமாடேங்குது.
அதுக்குத்தான் இந்த பொங்கல்.
அதுக்குத்தான் இந்த கோட்டா மண்பானை.

கோட்டா மண்பானை வாங்கி 
எங்க கொலசாமிக்கு பொங்கவச்சா
எண்ணி பத்தே நாள்ள நல்ல பலன்
கிடைக்கும்னு எங்க குருசாமி சொல்றாரு.
மூணூமாசமா முயற்சி பண்றேன்.
இந்த கோட்டா பானை கிடைக்க
மாட்டெங்குது கோடாங்கி.

கோடாங்கி:

மாரிமகமாயி
மணிமந்திர சேகரியே
ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே
தேவி ஜக்கம்மா
ராக்கு, சொடலை
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு
நீ ஒரு நல்ல சேதி சொல்லு.

கொலசாமி கோயிலுக்கு
பொங்கல் வைக்க
கோட்டா மண்பானைகிடைக்காம
மனசு கலங்கி நிக்கற
இந்த மகராசனுக்கு
ஒரு மார்க்கம் சொல்லு தாயி

அவணி அம்பத்தாறுதேசமும்
அலஞ்சிதிரிஞ்சும் கிடைக்காத
இந்தகோட்டா மண்பானை
எங்க கிடைக்கும் எப்பிடிகிடைக்கும்னு
எசவான ஒரு வழியை
எடுத்து சொல்லு தாயி

காஞ்சிகாமாட்சி கருத்தா சொல்லு தாயி
மதுரை மீனாட்சி மறைக்காம சொல்லு தாயி
மகராசரேகேளுங்க மகமாயி வாக்குஇது
கேட்டா கிடைக்காத கோட்டாமண்பானை
வாங்கவழி சொல்லுது ஆத்தா
கேளுங்க சாமி

வேலூருக்கு ஏலகிரிமாதிரி
நீலகிரிக்கு கோத்தகிரி தாயி
கோத்தகிரி மலைவாசிக்கு
கோத்தர் பழங்குடின்னு பேரு
கோத்தர்பழங்குடி பலகாலமா
பக்குவமா பதிவிசா செய்யற
சகலவிதமான சட்டிபானைக்கும்
ஒட்டுமொத்த பேருதான்
கோட்டா மண்பாணை தாயி..
கோத்தகிரி போனா
கோட்டா பானைய
கொண்டுவரலாம் தாயி

குரல் 1:  வேலூருக்கு ஏலகிரி மாதிரி நீலகிரிக்கு
கோத்தகிரி. நீலகிரி மலையில
கோத்தகிரி இருக்கு. அங்க குறும்பர்,
இருளர், கோத்தர் அப்படீன்னு
ரெண்டு மூணு மலை ஜாதி
மக்கள் இருக்காங்க. அதுல கோத்தருங்க
செய்யற மண்பானைக்கு பேருதான்
கோட்டா மண்பானை. எதுக்கும்
ஆத்தா சொன்னதை இன்னொரு
தடவை சொல்லு கோடாங்கி.

வேலூருக்கு ஏலகிரிமாதிரி
நீலகிரிக்கு கோத்தகிரி தாயி
கோத்தகிரி மலைவாசிக்கு
கோத்தர் பழங்குடின்னு பேரு
கோத்தர்பழங்குடி பலகாலமா
பக்குவமா பதிவிசா செய்யற
சகலவிதமான சட்டிபானைக்கும்
ஒட்டுமொத்த பேருதான்
கோட்டா மண்பாணை. தாயி..
கோத்தகிரி போனா
கோட்டா பானைய
கொண்டுவரலாம் தாயி

முப்பது வருஷத்துக்கு முன்னாடி
போட்டா ஒடைஞ்சாகூட
கோட்டாதான் வேணும்னு
அடம்புடிச்ச காலம் இருந்தது தாயி -அது
கோட்டா மண்பானை
மோட்டாவா இருந்த காலம் தாயி

இடைப்பட்ட காலத்துல
இரும்பு வந்திச்சு
பித்தளை வந்திச்சு
தாமிரம் வந்திச்சு
தகரம் வந்திச்சு
இம்சைபுடிச்ச எவர் சில்வர் வந்திச்சு -
தரம் கெட்ட
தரித்திரம் பிளாஸ்ட்டிக்கும் வந்து
மோட்டாவா இருந்த
கோட்டா சட்டிபானைய
சோட்டாவா ஆக்கிருச்சி தாயி

மண்பானையா இருந்த கோட்டா இப்போ
மறுபடியும் பொன்பானையா ஆயிருச்சி தாயி

கோத்தகிரி சமுதாய வானொலி இந்த
கோட்டா மண்பானைக்கு
மறுவாழ்வு குடுத்திருக்கு தாயி
கோத்தகிரி சமுதாய வானொலி கேட்டா
இந்த கோட்டா மண்பானை
எங்க எப்பிடி என்ன விலைக்கு கிடைக்கும்னு
தெரியும் சாமி
இந்த கோத்தகிரி சமுதாய வானொலி கேட்டா
இந்த கோட்டா மண்பானைபற்றி
முழுசும் தெரிஞ்சிக்கலாம் சாமி.
ஆக மண்பானைக்கு
மறுவாழ்வு வந்தாச்சுன்னு
ஆத்தா சொல்லுது சாமி.

குரல் 1 : மறுபடியும் மண்பானை
வரப்பொகுதுன்னு சொல்லுங்க.
இப்போதான் எல்ல ஊர்லயும்  
மண்பானை சமையல் வந்தாச்சே.
டாக்டருங்களே முப்பதியெட்டு
நாளைக்கு மண்பானை தண்ணிய குடிங்க,
நாப்பத்தியெட்டு நாளைக்கு மண்பானை
சமையலை சாப்பிடுங்கன்னு சொல்றாங்கள
அந்த காலத்துல எல்லாமே
மண்பானைதானே கோடாங்கி.

கோடாங்கி:

ஆமா ஆமா தாயி
மூட்டைகணக்காய் நெல்அரிசி
கம்பு ராகி சோளம்தினை
வரகுசாமை கடலைஎள்ளு
கொட்டிவைக்கும்
பெரும்அளவு சால்பானையும்
மண்ணுல செஞ்சதுதான்
இறங்கி நிண்ணு
எட்டிப்பார்த்தாலும் வெளியில்
தலை தெரியாத ஆழமான
தொம்பைக் குதிரும்
மண்ணுல செஞ்சதுதான்.

அரிசிப்பானை சோற்றுப்பானைஅது வடிக்கும்
வடிதட்டு
வடிநீர் ஊற்றிவைக்கும் கழுநீர்ப்பானை
குளிநீர் கொதிக்கவைக்க வென்னீர்ப்பானை
மீன்குழம்பு மணக்க வைக்கும்அரிக்கன்சட்டி
பஞ்சுஇட்லி வார்க்கநல்ல ஆவிசட்டி
பருப்புகீரை கடையநல்ல
காவிநிற கல்லுசட்டியும்
மண்ணுல செஞ்சதுதான்

மத்தெடுத்து மோர்கடைந்து
வெண்ணைதிரட்ட வழுவழுக்கும்
வெண்ணைசட்டி
தண்ணீர்தயிர் மோர்நெய் அத்தனையும்
சேமித்து சேகரிக்கும்
தண்ணீர்குடம் தயிர்க்குடம் மோர்க்குடமும்
அத்தனையும் மண்ணின்
மகிமைதான் தாயி

கட்றா கொட்றா சாற்றுப்பல்லா
கழுத்து சிறுத்த தோண்டி
அளவுசிறுத்த  சாணக்கை
குடுவை பல்லா மொந்தையும்
மாசுமருவில்லா உருப்படியா
மறுபடியும் வருது தாயி..

குரல் 1: ரொம்ப சந்தோஷம். இந்த கோட்டா மண்பானை வாங்க வழி சொல்லிட்டிங்க. கோத்தகிரி போனா கோட்டா மண்பானை  வாங்கிக்கலாம்.

கோடாங்கி: சரியா சொல்லிட்டிங்க. இந்த கோத்தகிரி எங்க இருக்குன்னு தெரியுமா சாமி.

குரல் 1: நம்ம கோத்தகிரிதானே தெரியாம
என்னா ? நீலகிரி மலையிலதான
இருக்கு. போன வருசம் எங்க ஊர்ல
எல்லாரும் ஊட்டி டூர் போனோம்.
பச்சப்பசேல்னு அழகான ஊரு.
ஏன் கோடாங்கி ? சென்னை
வானொலி தெரியும். மதுரை
வானொலி தெரியும். திருச்சி வானொலி
தெரியும். திருநெல்வேலி வானொலி தெரியும்.
கோயம்புத்தூர் வானொலி தெரியும்.
அது என்ன சமுதாய வானொலி ?

கோடாங்கி:
மக்களா கேளுங்க மகமாயி வாக்கு இது
ஜனங்களா கேளுங்க ஜக்கம்மா வாக்கு இது

பலஊருக்கு பலசெய்தியும் பல சேதியும்
சொல்லும் வானொலி ஒருவகை தாயி
அதுதான் சென்னை வானொலி
மதுரை வனொலி திருச்சி வானொலி
எல்லாம்.

சிலஊருக்கு சிலசெய்தியும் சில சேதியும்
சிக்கனமாக சொல்லும் சின்ன வானொலி - அது
ஒரு கிலோவாட் வானொலி தாயி.

விளம்பரத்தை விஸ்தாரமாப்போட்டு
வியாபார விருத்திக்கு
அஸ்திவாரம் போட்டுத்தரும்
அற்புத வானொலி
அந்த காலத்துல விவித்பாரதி - அப்போ
நிகழ்ச்சிதான் சதுரசாப்பாடு
விளம்பரம் ஊறுகாய்
இப்போ எஃப் எம் வானொலியில
விளம்பரம்தான் சதுரசாப்பாடு

குரல் 1: ஆனா கோத்தகிரி வனொலி
சமுதாய வானொலி இல்லீங்களா ?

கோடாங்கி:
ஆமா சாமி
இதுகோத்தகிரி சமுதாய வானொலி
புதுசா இருக்கும் புதுமையா இருக்கும்
வித்தியாசமா இருக்கும்
விசேஷமா இருக்கும் தாயி

வேணுமின்னா கொஞ்சம் கேட்டுப்பாரு தாயி
ஆத்தாவோட அனுசரணையால
உங்க ஆண்ட்ராய்ட் போன்லயே
கோத்தகிரி கம்முனிட்டி ரேடியோவை
கலக்கலா கேக்கலாம்
கோத்தகிரி சமுதாய வானொலி
அலைவரிசை 90.4 எம் எச் இசட்

வளர்ச்சி இல்லாத ஒரு சமூகம்
தளர்ச்சி இல்லாம
மலர்ச்சியொட வளரணும் - அதுக்கு
வழி செய்யறதும்
வகைசெய்யறதுதான்
சமுதாய வானொலி
ஜனங்களுக்காக ஜனங்களே
நடத்துற அரசாங்கம்தான்
ஜன்நாயக அரசாங்கம்அதுமாதிரி
பழங்குடி சமூகத்துக்காக
பழங்குடி சமூகமே
ஒலிபரப்பு செய்யற வானொலிதான்
கோத்தகிரி சமுதாய வானொலி தாயி
ஏழாயிரம்பேர்கூட இல்லாத
ஏழேகிராமத்துல வசிக்கும்
கோத்தர் பழங்குடி சமூகத்துக்கான
வானொலி சாமி இது

குரல் 1:

ஒரு சமுதாய வானொலின்னா
என்னான்னு தெரிஞ்சிகிட்டேன் கோடங்கி.
இந்த வானொலியில என்ன நிகழ்ச்சியெல்லாம்
செய்யறாங்கன்னு சொல்ல முடியுமா கோடாங்கி. ?

கோடாங்கி:

இந்த வானொலி
பழங்குடி மக்களின்
கலை கலாச்சாரம் பேசும் - இந்த
மலை மக்களின் நிலை பேசும்
விளைபொருட்களின் விலை பேசும்
உயர்அறிவுக் கண்திறக்கும் கல்வி பேசும்
சுத்தம் சுகாதாரம் பேசும்
திருவிழா பண்டிகை பேசும் சாமி

கைவினைத் தொழிலுக்கு
கைகொடுக்கும்
உற்பத்திப் பொருளுக்கு
உரியஅறி முகம்கொடுக்கும்
பிரச்சினைகள் தீர்க்க தோள்கொடுக்கும்
தொழில் செய்ய
ஊக்கம் கொடுக்கும்
உற்ற நண்பனாக
உற்சாகம் கொடுக்கும்
வேற என்ன வேணூம் தாயி ? 

கோடாங்கி: கொடாங்கி ரொம்ப நன்றி.
எனக்கு கொட்டா பானை வாங்க
வழி சொன்னிங்க. என் பிரார்த்தனை
தள்ளிப்போகாம உடனே நடக்க வழி
பண்ணிங்க. அதுமட்டுமில்லாம
சமுதாய வானொலி ஒரு
சமூகத்துக்கு எவ்ளோ உதவியா
இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன்.
நீ சொல்றத எல்லாம் கேட்கும்போது
எங்க சமூகத்துக்கும் இப்பிடி ஒரு
வானொலி தொடங்கலாம்னு
தோணுது கொடாங்கி.

கோடாங்கி: நீங்க உங்க சமூகத்துக்காக
ஒரு சமூக வானொலி தொடங்க
எந்த சிக்கலும் வராதுன்னு
ஆத்தா சொல்றது தாயி
ரொம்ப நன்றி நான் வர்றேன் தாயி, 
நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி


88888888888888888888888888888888




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...