Thursday, December 19, 2019

INTERLINKING OF RIVERS - முடியுமா ? முடியாதா ?



முடியுமா  முடியாதா  நதி நீர் இணைப்பு  ?

தே. ஞானசூரிய பகவான் 


✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️




மோடி அரசு வந்த பின்னால்
இந்த எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
முடியுமா முடியாதா நதி நீர் இணைப்பு?

இந்த கேள்விக் குறியை அப்படியே
அந்தரத்தில் விட்டுவிட்டு
இந்த இணைப்பு ஏன் வேண்டும் ?
அதற்கு என்ன அவசரம் ? என்ன அவசியம் ?
அடிப்படையான சிலவற்றைப் பார்க்கலாம்.

மிகவும் தட்டுப்பாடான மழை,
வேண்டாத விருந்தாளியாக
அடிக்கடி வரும் வறட்சி, வெள்ளம்,
மழைப் பொழிவில் ஏற்படும் ஏற்றதாழ்வு,
இதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள்,
இந்திய துணைக்கண்டத்தில்
எட்டு மாநிலங்களில்
'மெகா சீரியல்' ஆகிவிட்டது.

தமிழ்நாடு, கர்னாடகா, ஆந்திரா,
மகாராஷ்ட்டிரா, மத்தியப்பிரதேசம்,
குஜராத், அரியானா, ராஜஸ்தான் - இவைதான்
அந்த துரதிருஷ்டசாலி எட்டு மாநிலங்கள்.

எடுப்பதற்கு எட்டாத
ஆழத்திற்குப் போய்விடும்
நிலத்தடி நீர், குழாயடியில் எப்பொதும்
காத்திருக்கும் குட வரிசைகள்,
வருஷத்தில் ஒரு பயிர் எடுக்கவே
பெருமூச்சு விடும் மானாவாரி நிலங்கள்,
இவை எல்லாம் இந்த எட்டு மாநிலங்களின்
சாமுத்ரிகா லட்சணங்கள்
இந்திய துணக்கண்ட்த்தின்
85 % வறண்ட பிரதேசங்கள்
இந்த எட்டுக்குள்தான் அடக்கம்.

இந்தியாவில் ஏற்படும் சராசரி
ஆண்டு வெள்ள சேதாரம் மட்டும்
1343 கோடி ரூபாய், 1998 ம் ஆண்டின்
சேதாரம் மட்டும் 5846 கோடி ரூபாய்,
என்கிறது மத்திய அரசின்
'நேஷனல் வாட்டர் டெவெலப்மென்ட்
ஏஜென்சி புள்ளிவிவரம்.

இவ்வளவு சேதாரத்திற்கு பொறுப்பேற்கும்
இரண்டு புண்ணிய நதிகள் கங்கை,
பிரம்மபுத்திரா. வெள்ளங்கள் ருத்ரதாண்டவம்
ஆடுவது இந்த நதிகள் பாயும் 60 % நிலப்பரப்பில்தான்.

வருஷம் தவறாமல் இப்படி
வெள்ளத்தின் பேரில் நஷ்டக் கணக்கெழுதும்
மாநிலங்கள் அஸ்ஸாம்,
பீஹார், மேற்குவங்காளம் மற்றும்
உத்தரப்பிரதேசம் .

தற்போது 200 மில்லியன் டன்னாக
இருக்கும் நமது உணவு உற்பத்தி
2050 ல் 450 மில்லியன் டன்னாக உயர வேண்டும்.
.
தற்போது 95 மில்லியன் எக்டராக
இருக்கும் நமது பாசனப் பரப்பும்
160 மில்லியன் எக்டராக அதிகரிக்க வேண்டும் .

தற்போது கைவசம் உள்ள நீரின்
மூலம் 140 மில்லியன் எக்டர்
நிலப் பரப்பிற்குப் பாசனம் அளிக்கவே
'உன்னைப்பிடி என்னைப்பிடி' என்று இருக்கும்.
160 மில்லியன் எக்டர் என்றால் முழி பிதுங்கிவிடும் .

கங்கை, பிரம்மபுத்திரா,
கோதாவரி, மகாநதி, ஆகியவைதான்
உபரியான தண்ணீருடன் நம்மை
உருட்டி மிரட்டும் நதிகளாக உள்ளன.
இந்த பணக்கார நதிகளுடன்
நம்முடைய 'அன்றாடம்காய்ச்சி'
நதிகளை இணைக்க முடியும்.

அப்படி முடிந்தால்
விவசாயம் பார்த்துக்கொள்ளலாம்,
தொழிற்சாலைகளுக்கும் தாராளம் காட்டலாம்,
குடம் இங்கே 'குடி நீர் எங்கே'
'சிந்துபாத் தொடர்' க்கு சுபம் போடலாம்.
மின்சாரம் தயாரிக்கலாம்,
ஜனங்களுக்கு 'பவர்கட் ஷாக்' அடிக்காது,
நீர்வழி போக்குவரத்தை
ஏற்படுத்தி பேருந்துகளில்
படிக்கட்டு பயணத்தையும் ,
கூரைமேல் பயணத்தையும் 
மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

வடநாட்டின் வெள்ள நதிகளை
நல்ல நதிகளாக மாற்றிவிட முடியும்.
உபரி நீரோடு ஓடிப்போய்
உருப்படி இல்லாமல் கடலில் குதிக்கும்
இந்த நதிகளை ஓட்டிக்கொண்டு வந்து 
நமது தொண்டை வறண்ட நதிகளோடு
இணைப்பது முடியும்தான் என்கிறது,
இந்திய அமைச்சகத்தின்
 'நேஷனல் வாட்டர் டெவெலப்மென்ட்
ஏஜென்சி.

ஆனால் இப்போதைக்கு
அதிரடி மோடி அரசு நினைத்தால்தான்
முடியும்  என்று பரவலாக மக்கள்
நம்புகிறார்கள். இன்னொன்று இந்த வறண்ட
பிரதேசங்களான எட்டு மாநிலங்களூம்
ஒற்றுமையாக ஒரு கூட்டமைப்பை
உருவாக்கலாம்.

தண்ணீர் இல்லாத 'டார்க் மாநிலங்கள்'
கூட்டமைப்பு' உருவாக்கலாம்,
சார்க் நாடுகள் கூட்டமைப்பு மாதிரி .
ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது ?
என முடிவு செய்ய வேண்டும்.
யார் பூனை ?  யார் மணி 



________________________________________



3 comments:

Yasmine begam thooyavan said...

நதி நீர் இணைப்புக்கு தாங்கள் கொடுத்த புள்ளி விவரம் ரமணா படத்தில் வரும் விஜயகாந்தை நியாபகப் படுத்துகிறது. அந்த அளவுக்கு ஈடுபாடோடு எழுதியுள்ளீர்கள்.
நதிகள் இணையுமா? என்பது விடை தெரியாது. ஆனால் உங்கள் நீங்கள் எல்லோர் மனதிலும் இணைந்து விட்டீர்கள்.
Modiji Pani lavoji புத்தகத்தை ஆவளோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். சூப்பர்.

ஏ. யாஸ்மின் பேகம் தூயவன்.
எழுத்தாளர்.

Gnanasuriabahavan Devaraj said...

தற்போது பாரதப்பிரதமர் நதிகள் இணைப்பிற்கான திட்டத்தினை அறிவித்துள்ளார்.இதனை வேண்டித்தான் இந்த நூலை 2019 ம் ஆண்டு KINDLE PUBLICATION மூலம் வெளியிட்டேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்தாழ மிக்க பாராட்டுக்கள் என்னை நிறைய எழுதத் தூண்டுவதற்காக எனது நன்றியும் வணக்கமும் - தே.ஞானசூரிய பகவான்

Gnanasuriabahavan Devaraj said...

வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று புத்தகமாக வெளியிட உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்ளுகிறேன். ஆன்லைனில் KINDLE APP மூலம் வாங்கலாம், அதன் விலை ரூ.120/ மட்டுமே. அதனை செல் அல்லது லேப்டாப்பில் படிக்கலாம். தே.ஞானசூரிய பகவான்.

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...