Tuesday, December 24, 2019

CHANDERI COMMUNITY RADIO - சந்தேரி சமுதாய வானொலி




சந்தேரி சமுதாய 
வானொலி

(A CASE STUDY ON CHANDERI
COMMUNITY RADIO IN A
UNIQUE CREATIVE WAY)

(சமுதாய வானொலி வீட்டுக்கும்
 நாட்டுக்கும் நல்லது)

எழுதியவர்: 

சாமக்கோடாங்கி 
சங்கரலிங்கம்

8888888888888888888888888888888888888888888

(மானாவாரிகாட்டை உழுதுட்டு
அழுது பொறண்டாலும்
அங்குல மழைகூட
அள்ளித்தெளிக்கலன்னு
அரண்டு நிக்கற - இந்த
நல்லமணி தாயிக்கு
ஒரு நல்லவாக்கு சொல்லு தாயி.
செய்யற தொழில்அம்புட்டும்
சிக்கல் இல்லாம ஜெயிக்கணும் தாயி
நெய்யறதுணி அத்தனைக்கும்
நியாயமானவிலை கிடைக்கணும் தாயி
நல்லமணி தாயோட
நெசவு செய்யற
ஆயிரம் குடும்பமும்
ஆசைப்பட்ட வாழ்க்கையை
அம்சமா வாழ ஒரு வழி சொல்லு தாயி)


காட்சி : 1

இடம்: ஒரு கிராமத்தின் முகப்புத்தெரு
காலம்: இளங்காலை நேரம்
பாத்திரங்கள்: 1. வெங்கடேசன் 2. நல்லமணி
3. தேவராசா 4. மல்லிகா

(நிலை: ஒரு சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்
ஒரு கிராமத்தில் இருள் சூழ்ந்த
தெருக்களில் இறங்கி நடக்கிறான்.
தனது சிறு பறையை லாவகமாக
அடித்து குறி சொன்னபடி செல்லுகிறான்
பறவைகள் மரங்களிலிருந்து சிறகடித்து
பறந்து அடுத்த மரத்தில் அமர்கின்றன.
தூரத்தில இன்னும் விடியாத பொழுதை
அறிவித்து ஆந்தை ஒன்று அலறுகிறது.
குடுகுடுப்பைக்காரன் தனது சிறு பறை
அடித்து குறி சொன்னபடி செல்லுகிறான்.
நல்லமணி என்னும் பெண்மணி
கோடாங்கியிடம் குறி கேட்க
வீட்டைவிட்டு வெளியே வருகிறாள்)

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி
மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே

தேவி ஜக்கம்மா ராக்கு சொடலை
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு
நீ ஒரு நல்ல சேதி சொல்லு

இந்த கிராமத்தைப்பத்தி;; பார்த்தேன் குறையில்ல
மக்கமனுசாளபபத்திப்; பாத்தேன் குறையில்ல
குழந்தை குட்டியப்பத்திப்; பாத்தேன் குறையில்ல
ஆடு மாட்டப்பத்திப் பாத்தேன் குறையில்ல
கோழி குஞ்சப்பத்திப் பாத்தேன் குறையில்ல

வெங்கடேசன்: கோடாங்கி கோடாங்கி
ஒரு நிமிஷம். என்ன ஒரே வாரத்துல
எளச்சி போயிட்ட ?

கோடாங்கி: எப்பவும் நான் 50 கிலோ
தாஜ்மகால்தான சாமி

வெங்கடேசன்: ரொம்ப கருத்துப்போயி
இருக்கே

கோடாங்கி: எப்பவுமே நான் நவாப்பழம்
கலர்தானே. அதுக்கு மேல எப்படி
கருக்கறது சாமி ?

வெங்கடேசன்: ஆமா கண்ட தண்ணிய
குடிச்சயா ? குரல் ஒரு மாதிரியா இருக்கு.

கோடாங்கி: என் குரல் என்ன
திருக்குரலா சாமி ? வெறுங்குரல் சாமி.

வெங்கடேசன்: ஒன்னப்பாத்து யரும்
ஒண்ணுமே சொல்ல்லியா ?
நசுங்கன டப்பா மாதிரி
மூஞ்சப்பாக்கறதுக்கே சகிக்கலியே..

கோடாங்கி: அது ஏற்கனவே நசுங்கன
டப்பாதனே சாமி

வெங்கடேசன்: சரி அதெல்லம் கெடக்கட்டும்
வா காலங்கார்த்தால ஒரு காப்பிடீயாவது
குடிச்சுட்டு போவெ

கோடாங்கி: ஓகோ.. இப்பொத்தான் எனக்கு
விஷயமே புரியுது..

வெங்கடேசன்: என்ன புரியுது கோடாங்கி ?

கோடாங்கி: இல்ல இன்னக்கி ஏதொ
விவகாரமான கேள்வி கேக்கப்போற..
சாமி எல்லாரும் காலடி தடத்தை,
மண்ணுல பாப்பாங்க.. நான் தண்ணியில
பாப்பேன். என்ன சங்கதின்னு சொல்லுங்க சாமி

வெங்கடேசன்: ஊரு ஒலகத்துல
மக்க மனுசாளு கையபுடிச்சு காலப்புடிச்சு
காக்காபுடிச்சு சந்தோஷமா இருக்காங்க.
இதெல்லாம் தெரியாம நீ என்ன
மனுஷன்னு கேட்டுட்டா எம்பொஞ்சாதி.
இதுவரைக்கும் நான் தும்பிகூட
புடிச்சதில்ல காக்கா புடிக்க எனக்கு
நீதான் சொல்லிகுடுக்கணும் கோடாங்கி

கோடாங்கி:

தும்பிகூட புடிக்க தெரியாத - இந்த
நம்பிராசனுக்கு தங்கமான ஒரு
குறியச் சொல்லு.
காக்காபுடிக்க தெரியாம
கலங்கி நிக்கற இந்த மகராசனுக்கு
ஒரு குறியச் சொல்லு தாயி..

மக்களா கேளுங்க மகமாயி வாக்கு இது.
ஜன்ங்களா கேளுங்க ஜக்கம்மா வாக்கு இது

பொஞ்சாதி சொன்னத
சாக்கா வச்சி
காக்கா புடிக்கறது அவ்வளவு
சுலபமான வேலை இல்ல.
சூட்சுமமான வேலை
அதுக்கு பக்குவமும் பதிவிசும் வேணும்னு
அந்த ரெண்டும் அட்ச்சர சுத்தமா
உங்கிட்ட இல்லன்னு
ஆத்தா சொல்லுது சாமி
ஆமா
உங்க கிராம பூராவும்
புடவை நெசவு செய்யற
தொழில் செய்யறீங்கன்னு
எனக்கு தெரியும்
நீங்க என்ன செய்யறீங்க சாமி ?

வெங்கடேசன்:

நாங்களும் அதே புடவை நெசவுதான்
செய்யறோம் கோடாங்கி. ஆனா
எங்க வீட்ல பொடவை நெசவைவிட
பொடவை வசவு ஜாஸ்தியா இருக்கும்.






கோடாங்கி :

(சிரித்தபடி) சாமி பொடவை நெசவு
இல்லாத வீட்லகூட பொடவை
வசவு இருக்கத்தான் செய்யும்.
அதுக்கு கவலைப்படாம தொடர்ந்து
பொடவை நெசவை செய்யுங்கன்னு
ஆத்தா சொல்லுது நான் வரேன் சாமி.

வெங்கடேசன்:

ஆத்தா சொன்னத
அப்பிடியெ மனசுல ஏத்திக்கறேன்
இன்னொரு தடவை சொல்லு கோடாங்கி.

கோடாங்கி :

எல்லா வீட்லயும் பொடவை
வசவு இருக்கத்தான் செய்யும்.
அதுக்கு கவலைப்படாம தொடர்ந்து
பொடவை நெசவை செய்யுங்கன்னு
ஆத்தா சொல்லுது நான் வரேன் சாமி.

காட்சி 2

(சரக்கொன்றை கிராமத்தின் இன்னொரு
தெருவில் குடுகுடுப்பயை அடித்தபடி
பாடலை பாடியபடி கோடாங்கி நடக்கிறான்.
சற்று தொலைவில் ஒரு மாரியம்மன்
கோயிலில் பொங்கல் வைக்க ஏற்பாடு
நடக்கிறது. மாரியம்மன் பாடல் ஒலிக்கிறது.
பெண்கள் சாரிசாரியாக கோயிலை நோக்கி
சென்று கொண்டிருக்கிறார்கள்.)

இடம்: மாரியம்மன் கோயில்
பாத்திரங்கள்: 1. கோடாங்கி 2. நல்லமணி

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி
மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே

தேவி ஜக்கம்மா ராக்கு சொடலை
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு
நீ ஒரு நல்ல சேதி சொல்லு

நல்லமணி;: கோடாங்கி கோடாங்கி..
ஒரு நிமிஷம் நில்லேன்.

கோடாங்கி: யாரு தாயி ?

நல்லமணி;: நாந்தா நல்லமணி கோடாங்கி..

கோடாங்கி:

அம்மன் கோயில்  பொங்கல் வைக்க
போயிகிட்டிருக்கிங்கன்னு நினைக்கிறேன்.
எதாச்சும் குறி கேக்கணுமா  தாயி ..
ஆத்தாவை கேட்டு அம்புட்டும்
அம்சமா செல்றேன் தாயி

நல்லமணி;:

ஆமா கோடாங்கி> நாங்க கோயில்ல
பொங்க வைக்கத்தான் போறோம்.
முக்கியமா உங்கிட்ட குறிகேக்கவும்தான்
போறோம். விடிஞ்சும் விடியாத
இந்த சமயத்துலதான்
நீ வருவென்னு தெரியும்.
ஒனக்குத் தெரியும் எங்க ஊர்
சரக்கொன்றையில நெசவாளர்களுக்குன்னு
ஒரு சங்கம் இருக்கு.      

ஆசைக்கு அளவில்லன்னு சொல்லுவாங்க.
நாங்க எங்களுக்கு அதுவேணும்
இது வேணும்னு கேக்கல.
தூங்கி எழுந்து மறுபடியும் தூங்க
போறவறைக்கும் மாடா ஒழைக்கறோம்.

கூலிக்கு போய் வேலை பாத்தாலும்
கூலி கட்ட மாட்டேங்குது.
சொந்த தறி போட்டாலும்
போட்ட மொதல எடுக்க முடியல.
கையத்தினி இருக்கிற
காடு கரம்ப ஒட்டி மானாவாரியா
ஏதாச்சும் விதச்சிவிடலாம்னா
மழை மனசு வக்க மாட்டெங்குது.

எங்கப்புள்ளங்கள வளத்து படிக்கவச்சி
கரைசேக்கறது எப்பிடின்னு புரியாம
அல்லாடி கெடக்கறோம் கோடங்கி.
எனக்கு மட்டுமில்ல இங்க இருக்கற
ஆயிரம் குடும்பத்துக்கும் அதே பாடுதான்.
நீதான் அந்த ஆத்தாவக்கேட்டு
எங்க வயித்துல பாலை வாக்கணும்.

கோடாங்கி:

மழைவிட்டும் துவானம் விடாத மாதிரி
கைக்கு எட்டினது
வாய்க்கு எட்டாத மாதிரி
வேலை கிடச்சும்
கூலி சரியா கிடைக்கல
உழைப்புக்கு ஏத்த
ஊதியம் கிடைக்கலன்னு
உரிமைக்கு குரல் கொடுக்கற
இந்த உத்தமிக்கு ஒரு வழி சொல்லு தாயி

வேட்டி சேலை
லுங்கி துண்டு போர்வை
அத்தனையும்
சொந்தமா செஞ்சாலும்
சொகப்படல உருப்படல
மானாவாரிகாட்டை உழுதுட்டு
அழுது பொறண்டாலும்
அங்குல மழைகூட
அள்ளித்தெளிக்கலன்னு
அரண்டு நிக்கற - இந்த
நல்லமணி தாயிக்கு
ஒரு நல்லவாக்கு சொல்லு தாயி.
செய்யற தொழில்அம்புட்டும்
சிக்கல் இல்லாம ஜெயிக்கணும் தாயி
நெய்யறதுணி அத்தனைக்கும்
நியாயமானவிலை கிடைக்கணும் தாயி
நல்லமணி தாயோட
நெசவு செய்யற
ஆயிரம் குடும்பமும்
ஆசைப்பட்ட வாழ்க்கையை
அம்சமா வாழ ஒரு வழி சொல்லு தாயி

நல்லமணி:

கோடாங்கி. நான் ஏற்கனவே சொன்னமாதிரி
நாங்க ஆயிரம் குடும்பம் நெசவாளர்கள்
இருக்கோம். எல்லாருக்கும் நெசவுதான்
தொழில். நாங்க எல்லாரும் சேர்ந்து
ஒரு சங்கம்கூட வச்சிருக்கொம்.
அந்த சங்கத்துலருந்து நிறையபேர்
உங்கள சந்திக்க கோயில்ல காத்திருக்கங்க
கோடாங்கி. வாங்க அங்க போகலாம்.

கோடங்கி: சரிங்கம்மா நல்லமணி.
வாங்க கோயிலுக்குப் போகலாம்.

(கோடாங்கியும் நல்லமணியும்
மாரியம்மன் கோயிலை நோக்கி நடக்கிறார்கள்)


காட்சி 3

இடம்: மாரியம்மன் கோயில்
மாரியம்மன் பாடல் ஒலிக்கிறது.
பாத்திரங்கள்: 1. கோடாங்கி, 2. நல்லமணி
3. சரக்கொன்றை கிராம நெசவாளர்
சங்க தலைவர் ஆசிரியர் தேவராசா
4. சங்கத்தின் செயலாளர் மல்லிகா
88888888888888

நல்லமணி:

கோடாங்கி, இவர்தான் எங்க சரக்கொன்றை
கிராம நெசவாளர் சங்கத்தின்  தலைவர்.
ஒய்வு பெற்ற  ஆசிரியர்.
எங்க ஊர்க்காரங்க முக்கவாசிப்பேர்
எல்லாரும் அய்யாகிட்டதான் படிச்சொம். 
அய்யாபேரு தேவராசா.

கோடாங்கி:

ஐயா வணக்கம்யா.

தேவராசா:

வணக்கம் கோடாங்கி. எங்களுக்குன்னு
ஒரு சமுதாய வானொலி இருந்தா
எங்க பிரச்சினை எல்லாம் சரியா
போகும்னு சொல்றாங்க. 
ஏற்கனவே வடநாட்டுலகூட  
நெசவாளர்கள் எல்லாரும் சேர்ந்து
சந்தேரி வானொலின்னு ஒரு சமுதாய
வானொலி நடத்தறாங்களாம். 
அதேமாதிரி நம்ம ஊர்ல சரக்கொன்றை
சமுதாய வானொலின்னு நடத்தமுடியுமா ?
நடத்தலாமான்னு அதப்பத்தி ஆத்தாவக்கேட்டு
ஒரு நல்ல வழிசொல்லு கோடாங்கி.

கோடாங்கி:

மக்களா கேளுங்க
மகமாயி வாக்கு இது
ஜனங்களா கேளுங்க
ஜக்கம்மா வாக்கு இது

சரக்கொன்றை கிராமத்து
நெசவாளர் சமூகத்துக்காக
ஒரு சமுதாய வானொலியை
சட்டுன்னு தொடங்கச்சொல்லுன்னு
ஆத்தா சொல்லுது சாமி

சந்தேரிசமுதாய வானொலி
சாதிச்ச கதையசொல்லு
சந்தேரிக்கு நெசவப்பத்தி
போதிச்ச கதையச்சொல்லுன்னு
ஆத்தா சொல்லுது சாமி

சந்தேரி பொடவையும்
சந்தேரிதுணி துப்பட்டாவும்
சந்தையில முன்னெறி
சகலமான நாட்டுக்கும்
சகஜமாக போனகதைய
சரக்கொன்றை ஜனங்களுக்கு
எடுத்துசொல்லுன்னு
ஆத்தா சொல்லுது சாமி

மல்லிகா:

வணக்கம் கோடாங்கி. எம்பேரு மல்லிகா.
நான் இந்த சரக்கொன்றை நெசவாளர்
சங்கத்தோட செயலாளரா இருக்கேன்.
அது மட்டுமில்லாம எங்க கிராமத்துல
மகளிர் குழு தலைவியாவும் இருக்கேன்.

கோடாங்கி: வணக்கம் தாயி.

மல்லிகா:

கோடாங்கி, சந்தேரி பொடவைன்னு
கேள்விப்பட்டிருக்கென். சந்தேரி பொடவை
மாதிரி எங்க சரக்கொன்றை பொடவையும்
பேருவாங்கணும்.  இந்த சந்தேரி ஊரு
எங்க இருக்கு ? இந்த சந்தேரி பொடவை
எப்பிடி பிரபலமாச்சின்னு சொல்லு கொடாங்கி.

கோடாங்கி:

சந்தேரிஒரு சின்னஊரு
சிங்கார ஊரு சீரான ஊரு
மத்தியப்பிரதேசம் மாநிலத்துலஇதுஒரு
மகத்துவமான ஊரு தாயி

சந்தேரிஊரு
மும்மாரிமழை
பெய்யாத ஊர்தாயிஆனாலும்
சமுதாய வானொலியால
பொன்மாரி மும்மாரி
முழுசாக பெய்யும்
ஊரா மாறிப்போச்சி தாயி

ஒரு காலத்துல
அடுத்த ஊர்ல சொன்னாகூட
அப்பிடியான்னு கேட்ட
சந்தேரி பொடவை
அமெரிக்கா ஆஸ்திரேலியா
ஆப்ரிக்காசீனா அரேபியான்னு
ஐஸ்கிரீம் கண்டம்
அண்ட்டார்ட்டிக்கா வரைக்கும்
அசத்துதுன்னா அத்தனைக்கும்
காரணம் சந்தேரி சமுதாய வானொலின்னு
சகலமான ஜனங்களும்  
சாமிமேல சத்தியம்வச்சி
சொல்றாங்க தாயி

நல்லமணி:

ஒரு காலத்துல வெளிய தெரியாம
இருந்த சந்தேரி பொடவை
வெளிநாடுகள்ளயும் நல்ல வெலை
போகுதுன்னா அதுக்குக் காரணம்
சமுதாய வானொலின்னு சொல்றிங்க.
ஒரு நெசவாளர் சமூகத்தை சேர்ந்தவளா
கேக்கறேன்  கோடாங்கி. இந்த சமூக
வானொலி நெசவாளர்களுக்கு
எப்பிடி உதவியா இருக்கு ?

கோடாங்கி:
நெசமாவே நெசவுத்தொழில
சிறப்பாசெய்ய சீராசெய்ய
நிறமா செய்ய தரமா செய்ய
அதையே வரமா செய்ய - இந்த
வானொலி பாடம்நடத்துது  தாயி

சாயம் சரியாஏத்தறது
பாவு சரிபாக்குறது
இழையில சிக்கு
இல்லாம எடுக்கறது
தெம்பேற்றி மழை பேஞ்சா
தணல் போட்டு அனல் காட்டி
தறியேற்றி ஜரிகைவச்சி
நெசவடிச்சி மடிப்புவச்சி அது
கலையாம குலையாம
கடைக்கு அனுப்பற வரைக்கும்
கண்ணுல விளக்கெண்ண ஊத்தி
கடைசிவரைக்கும் பாக்க
பாடம் சொல்லித் தருது
இந்த சமூக வானொலி தாயி

நல்லமணி:

கோடாங்கி, நீங்களே நெசவு பண்ணமாதிரி
அம்புட்டும் சொல்லிட்டிங்க ஆச்சரியமா
இருக்கு கோடாங்கி. தொழில சுத்தமா
தெரிஞ்சவங்க பாடமா சொல்லிக்குடுப்பாங்க.
நாங்கூட சென்னை வானொலியில
விவசாயத்தைக்கூட பாடமா நடத்தினத
கேட்டிருக்கேன். ஒரு தடவை அறிவியல்
பாடம் கூட தொடரா நடத்தினாங்க

கோடாங்கி: ஆமா தாயி
நெசவுத் தோழில்
நுணுக்கங்களை
பாடம் மாதிரியும்
படம் மாதிரியும்
வானொலியில வகைவகையா
சொல்லித்தர்றாங்க

பளபளக்கும்
பட்டுநூல் புடவைக்கு
ஒரு பாடம்
சாயம்போகாத
கெட்டிநூல் சேலைக்கு ஒரு பாடம்
சின்னாளம்பட்டி
சுங்கடிசேலைக்கு ஒருபாடம்
எங்கடி சேலை என்று
கேட்கும்படியான
ஒளிபுகு சேலைக்கும்
ஒருபாடம்

பளபளன்னு வழவழன்னு
மினுக்கும் சேலைக்கும்
ஜிஜிலுன்னு ஜிமிக்கிவச்சி தச்ச
சிலுக்கு சேலைக்கும்
காஞ்சிபட்டு ஆரணிப்பட்டு
கோடம்பாக்கம் பட்டு
அத்தனை பட்டுக்கும்
அடுத்தடுத்து பாடங்களை
நடத்துது இந்த சந்தேரி வானொலி தாயி.
முக்கியமா விற்பனையப்பத்தியும்
முழுசா சொல்லித் தருது
இந்த சந்தேரி சமுதாய வானொலி

மல்லிகா:

கோடாங்கி, இந்த சந்தேரி வானொலி
ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம்
ஒலிபரப்பு செய்யறாங்க ? நிகழ்ச்சிகளை
யார் தயார் செய்யறாங்க ? நெசவுத்தொழில் 
இல்லாம வேற நிகழ்ச்சிகள்
ஒலிபரப்பு செய்யறாங்களா கோடாங்கி ?

கோடாங்கி:

சந்தேரி வானொலி தொடங்கி
ஒன்பது வருஷம் ஆகுது
காலயில நாலுமணி
மாலையில நாலுமணி
ஆகமொத்தம் எட்டுமணி நேரம்
ஒலிபரப்பு செய்யறாங்க தாயி

நெசவுத் தொழில் இல்லாம
வேலை வாய்ப்பு
சுயதொழில் ஆலோசனை
உடல் நலம் ஊட்டச்சத்து
பெண்ணுரிமை பெண்கல்வி
பல்துறை ஊடகப்பயிற்சி
குழந்தை திருமணம்
சட்டம் சார்ந்த
விழிப்புணர்வு
அத்தனை பற்றீயும்
அம்சமா பேசுது இந்த
சமுதாய வானொலி சாமி

தேவராசு: ரொம்ப நன்றி கோடாங்கி.
ஆத்தா சொன்ன மாதிரி சீக்கிரமா
நாங்க சரக்கொன்றை
சமுதாய வானொலி தொடக்கவிழா
அழைப்பிதழோட வந்து உன்னப் பாக்கறோம்.

நல்லமணி, மல்லிகா:

(ஒரே குரலில்) ஆமா கோடாங்கி
தொடக்க விழாவுக்கு கண்டிப்பா
நீ வரணும் கோடாங்கி..

கோடாங்கி:

கண்டிப்பா நான் வர்றேன் தாயி
எதிர் வரும் காலத்துல
சரக்கொன்றை வானொலியும்
சந்தேரி சமுதாய வானொலி மாதிரி இந்த
நெசவாளர் வீடுகள்ள
நிச்சயமா விளக்கேத்தி வைக்கும்
இனி கஷ்டமில்ல
நஷ்டமில்ல
கலக்கம் வேணாம்
தயக்கம் வேணாம்
கண்டிப்பா பயனுண்டு
காரியம் ஜெயமுண்டுன்னு
கருத்தமாரி சொல்லுது தாயி.


நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
அம்மா தாயி

(இன்னொரு வீட்டின் எதிரில்
சாமக்கோடாங்கியை ஒருவர் அழைக்க
அவருக்கு குறிசொல்ல அவரை
நோக்கி நடக்கிறார். தெரு நாய்கள்
வாய்விட்டு குலைத்து
அவரை வரவேற்கின்றன.)

88888888888888888888888888888888888888888888











No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...