Friday, August 2, 2019

தங்கத்தை எடைபோட பயன்பட்ட ஆனை குண்டுமணி - CORAL BEAN USED IN GOLD BUSINESS




தங்கத்தை எடைபோட 

பயன்பட்ட

ஆனை குண்டுமணி


CORAL BEAN

USED IN

GOLD BUSINESS


தாவரவியல் பெயர்: அடிநேன்த்ரா பவோனினா (ADENANTHERA PAVONINA)
தாவரக்குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)
தாயகம்: இந்தியா (INDIA
)


மாமியார்கள் மருமகள்களை  திட்டும்போது ஒரு குண்டுமணி தங்க நகை கூட போட்டு வரவில்லை என்று குறைசொல்லுவது  பல வீடுகளில் வாடிக்கை. இதை நான் பலமுறை கிராமங்களில் கேட்டிருக்கிறேன்.; குண்டு மணிக்கும் தங்க நகைக்கும் உள்ள தொடர்பு என்ன என்று இதுநாள் வரை நானும் சிந்தித்ததில்லை. நீங்கள் யாராவது அது பற்றி யோசித்தீர்களா ? சிறிய அளவு என்பதால் சொல்லுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆரம்ப காலங்களில் தங்கத்தை எடைபோட ஆனைகுண்டுமணிதான் எடைகல்லாக பயன்பட்டது என்று தெரிந்துகொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.

நான்கு குண்டுமணி ஒரு கிராம்

அதைவிட ஒரு ஆச்சரியமான செய்தி ! ஆனைக்குன்றுமணி விதைகள் ஒவ்வொன்றும் ஒரே எடையில்தான் இருக்கும். எந்த வித்தியாசமும் இருக்காது. நான்கு குண்டுமணிகளை எடைபோட்டால் சரியாக ஒரு கிராம் இருக்குமாம். எந்த நான்கு குண்டுமணியை எடை போட்டாலும் ஒரு கிராம் தான் இருக்கும். 

கிழக்கு ஆசியாவில்இந்தியா, சீனா,  ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து,   கம்போடியா, லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், சாலமன்தீவுகள் ஆகிய இடங்களில் ஆனைகுண்டுமணி பரவியுள்ளது.

1.ஆனைகுண்டுமணி மரத்தின் பல மொழிப்பெயர்கள்

1.1. தமிழ்; ஆனைக்குண்டுமணி> மஞ்சாடி (ANAIKUNDUMANI, MANCHADI)
1.2. இந்தி: ரக்த் சந்தன் படிகும்ச்சி (RAKTH CHANDAN, BADIGUMCHI)
1.3. மராத்தி: தோர்லாகூஞ்ச் (THORLA GOONJ)
1.4. மலையாளம்: செம்> மஞ்சாடி (SEM, MANCHADI)
1.5. தெலுங்கு: குரிவேண்டா> எனுகாகுருகிஞ்சி (GURIVENDA, ENUGAGURUGINJI)
1.6. கன்னடா: அனிகோலகஞ்சி (ANIKOLAGUNJI)
1.7. பெங்காலி: ரஞ்சனா (RANJANA)
1.8. ஒரியா: சோககைன்ஜோ (SOKAKAINJO)
1.9. கொங்கணி: ஆட்லிகஞ்சி (ODLYGUNJI)
1.10. அசாமிஸ்: சந்தன் (CHANDAN)
1.11. குஜராத்தி: படிகும்ச்சி (BADIGUMCHI)
1.12. சமஸ்கிருதம்: ஷரகா> குஞ்சண்டானா> தமரகா (SHARAKA, KUNJANDANA, TAMRAKA)

புரதம் அதிகம் கொண்டது

தாழ்வான வெப்பமண்டலப் பகுதிகள்> மித வெப்ப மண்டலப் பகுதிகள்;  கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரமுள்ள பகுதிகள்,  அதிக மழை பெறும் ஈரச் செழிப்பான இடங்கள், ஆழமான மண் கண்டம், மண் ஆழம் குறைந்த பகுதிகள், கல்லான் கரடுகள்,; மற்றும் ஓரளவு நடுத்தரமான கார அமில நிலை உள்ள பகுதிகளில் குண்டுமணி பிரச்சினை இல்லாமல் வளரும்.

வேர்கடலைபோல இதன் விதைகளை வறுத்து மேல்ஓடுகளை நீக்கிவிட்டு சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். சுலபமாக ஜீரணமாகும். சுவையாகவும் இருக்கும். இதன் விதைகளில் 25 சதம் எண்ணை மற்றும் 39 சதம் புரதமும் உள்ளது.

தொழுநோயை குணப்படுத்தும் 

ஆனைக் குண்டுமணி மருத்துவப் பயன்களையும் உடையது. இதன் இலைகளில் கஷாயம் தயாரித்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் மற்றும் கீல் வாதம் குணமாகும். இதன் பட்டையை பயன்படுத்தி தொழுநோயைக் குணப்படுத்தலாம். இலை மற்றும் பட்டை கஷாயம் கொடுத்தால் வயிற்றுப்போக்கு சீதபேதி மற்றும் தொண்டைச்சதை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். அரைத்து தூளாக்கி நீரில் கலந்து டானிக்காக குடிக்கலாம். இது தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை குணமாக்கும்.

 நிழல் மரம்

ஆனைக்குன்றுமணி மிக வேகமாக 20 மீட்டர் உயரம் வரை வளரும் அழகான இலையுதிர்க்கும்; மரம். இதன் பூக்கள் மிகவும் வாசனையானவை.  சாலை ஓரங்களில் அழகு மரமாக, வீதிகளில் நிழல்மரமாக, காபி மற்றும் ஜாதிக்காய், ஏலக்காய், ரப்பர் தோட்டங்களில் நிழலுக்காகவும் வளர்க்கிறார்கள்.

ஆனை குண்டுமணியை எந்த நிலத்தில் வளர்க்கிறோமோ அந்த நிலத்தின் வளத்தை மேம்படுத்தும். காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில்; நிலைப்படுத்தும். சீரழிந்த வனப்பகுதிகளை மேம்படுத்த ஆனைக்குன்றுமணி மரங்களை அறிமுகம் செய்யலாம்.

நெற்றியில் நாமம் போடலாம்

இதன் பட்டையில் சாப்பானின் எனும் ரசாயனம் இருப்பதால் இதனை சூப்பாக பயன்படுத்தி துணிகள் துவைக்கலாம்; ஷாம்புவாக பயன்படுத்தி குளிக்கலாம். இந்த பளிச்சென்ற சிவப்பான விதைகள்; பொம்மைகள் செய்ய, மணிமாலைகள் செய்ய, மற்றும் அழஅழகான ஆபரணங்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் தங்கம் வெள்ளி மற்றும் வைரத்தை கூட எடைபோட குண்டுமணிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் பட்டைகளில் இருந்து சிவப்பு சாயம் எடுக்கிறார்கள். இந்த அட்டைகளை தூள்செய்தால் சிவப்புவண்ண பவுடர் கிடைக்கும். அதனை நெற்றியில் நாமம்இடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் தற்போது இதற்கான செயற்கையான பொருட்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் மக்களின் வாழ்க்கைமுறை அத்தனையும் இயற்கையோடு எப்படி தொடர்புடையதாக இருந்து வந்துள்ளது என்பதை அறியும் போது ஆச்சரியமாக உள்ளது. அதைவிட்டு எப்படி நாம் விலகி வந்துவிட்டோம் என்பதை அறிய ஆச்சரியமும் வருத்தமும் அதிகரிக்கிறது.

மரத்தின்  வைரப்பகுதி வெட்டியதும் மஞ்சளாகவும் பின்னர் வெளிக்காற்றில் சிவப்பு நிறமாகவும் மாறும். மரம் மிகவும் கடினமானது. எடை அதிகம் இருக்கும். கடினமான மரங்களை பயன்படுத்தும் எல்லா வகைகளிலும் இதையும் பயன்படுத்தலாம். கட்டுமான வேலைகளில், வாகனங்கள் கட்டுமானம், கடைசல் பொருட்கள் அத்தனையும் செய்யலாம்.

கிளைகளை வெட்டி வைக்கலாம்

விதைகள் கடினமான ஓட்டினால் ஆனதனால் 12 முதல் 24 மணி நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும். 100 சதமும் பத்தே நாட்களில் முளைத்துவிடும். விதைகளை சேமித்து பல ஆண்டுகள் கூட வைத்திருக்கலாம்.. மற்றும் பூவரசு போல பெரிய கிளைகளை வெட்டி வைத்தால் நன்றாக வளரும்.
888888888888888888888888888

















2 comments:

Malarmesai Bagavan said...

Very interesting information. Picture of the tree and the seed will be more live.

GNANASURIA BAHAVAN DEVARAJ said...

Thank you very much for the comments.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...