Monday, July 15, 2019

குடமுழுக்கும் கும்பாபிஷேகமும்கூட தடம்தப்பிப் போகும் - SAVE RIVERS POEMS BY GNANASURIA BAHAVAN




குடமுழுக்கும் 

கும்பாபிஷேகமும்கூட

தடம்தப்பிப் போகும்

தே. ஞானசூரிய பகவான்

(ஆறுகளைப்போற்றுவோம் 
கவியரங்கில் பாடிய கவிதை) 

தண்ணீரே நீ தடம்பதித்தால் நடப்பதும்
தடம்பதிக்க மறந்தாலும்
என்ன நடக்கும் ?
சொல்லுகிறார்
என் ஐயன் திருவள்ளுவர்

தண்ணீர் தடம் பதித்தால்
மரணம் தராத அமுதம் வார்க்கும்
பசிநீக்கும் தாகமும் தீர்க்கும்

அது தடம் பதிக்க மறுத்தால்
அல்லது மறந்தால்

திரும்பிவராத உயிர் போக்கும்
திருப்திபடாத ஊரும் உலகும்
ஏர் மறக்கும்

பசும்புல்லும்தன் கிரீடம் துறக்கும்
கடலின் பெருஉடலும் உருசிறுக்கும்
குடமுழுக்கும் கும்பாபிஷேகமும்கூட
தடம்தப்பிப் போகும்
தடுமாறிப் போகும்


தானம் தவம் செய்வோர்கூட
வானத்தை கைகாட்டி
கேளாச் செவியராய்
மீளாத் துயர் உற்றவராய்
மீளவழி தெரியாத வராய்
வானம்பார்த்த பூமியாய்
வாளாய் இருப்பர்.

இவை அனைத்தும்
அய்யன் திருவள்ளுவன்
அய்யிரண்டு குறளாய்
வான்சிறப்பில் சொன்ன
நீர் சிறப்பைத்தான்
என் சொந்த வரிகளில்
மலிவுப் பதிப்பாய் உங்களுக்கு
மாந்தத் தந்திருக்கிறேன்.

குரல்நீட்டிப் பேசுவதும்
விரல்நீட்டி குற்றப்பத்திரிக்கை
வாசிப்பதும்
இந்த கவிஅரங்கின்
நோக்கம் அல்ல.


ஊர்கூடி தேர்இழுக்கலாம் வாங்க

ஓடுநீர் கொள்ளும்
ஆறு முதற்கொண்டு
சிறுநீர் கொள்ளும் குட்டைவரை
முப்பத்து ஒன்தாயிரம் ஏரிகள் குளங்கள்
முப்பத்திமூன்று ஆறுகள்
இரண்டு லட்சம் ஓடைகள் என
வேறுவேறு பெயர்களில்
நீர் மறந்துபோன
நீர்ஆதாரங்களை
சீர்செய்து சிறப்புசெய்து
உழும் தொழிலுக்கும்
உழா தொழிலுக்கும் உதவ
ஊர்கூடி தேர்இழுக்கலாம் வாங்க என
ஊரக்கக் கூவியழைப்பதுதான்
இந்த கவியரங்கத்தின் இலக்கு


இங்கு

காவிரி தென்பெண்ணை
பாலாறு தமிழ் கண்டதோர்
வையைப் பொருனைநதி
அமராவதி கொற்றலையாறு

இல்லை தண்ணீர்என
கைவிரிக்கும் காவிரி பாலாறு
முல்லைப்பெரியாறு

கைவைத்து அள்ளிகுடிக்கக்கூட
தண்ணீர் தராத வைகை


சங்கத்தமிழ் பொருனை என
அழைத்த தாமிரபரணி

ஆன்பொருனை என அழைத்த
அமராவதி

கொற்றலையாறு கூவம்
ஆரணியாறு செய்யாறு
என சில ஆறுகளை மட்டும்
பல கவிஞர்கள்
போற்றிப்
பாடுகிறார்கள்.


அவர்களை அழைப்போம்
அவர் தரும் கவிதை கேட்போம்.

மூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூ

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...