Monday, July 15, 2019

நீதிமன்றங்களின் நீண்ட தாழ்வாரங்களில் ஓடியே கால்சலித்துப்போன காவிரி ஆறு - OUR TWELVE RIVERS - POEMS



நீதிமன்றங்களின்
நீண்ட தாழ்வாரங்களில்
ஓடியே கால்சலித்துப்போன 
காவிரி ஆறு 


தே. ஞானசூரிய பகவான் 


(ஆறுகளைப் போற்றுவோம் 
கவியரங்கத்தில் ஆறுகளை 
அறிமுகம் செய்த கவிதைகள்)

தே. ஞானசூரியபகவான் 

1. காவிரி ஆறு

பிறந்த ஊர் எதுவாக
புகுந்த ஊர்தான்
தாய்மார்களுக்கு
அதிகாரம் தரும் ஊர்.

பிறந்தமண் கன்னடமாக
இருந்தாலும்
காவிரித்தாய்
புகுந்த ஊர் தமிழ்தான்.

நீள்வயல்களில் ஓடிஓடி
நீர்தந்த காவிரித்தாய்
நீதிமன்றங்களின்
நீண்ட தாழ்வாரங்களில்
ஓடியேஇன்று கால்சலித்துப்
போகிறாள்.   

காவிரித்தாயே காவிரித்தாயே
காதலர் விளையாட பூவிரித்தாயே
என்று பாடிய காலம் ஒன்று உண்டு
இனி காவிரித்தாயே காவிரித்தாயே
கழனிகள் பயிர்காக்க நீர்மறுத்தாயே
எனப்பாடும் நிலைதான் நிலவுகிறது

வாருங்கள் வாணியம்பாடி 
தமிழ் சிந்தனையாளர் மன்ற
தலைவரே  
கவிஞர் சுப்பிரமணியம் அவர்களே
காவிரிப்பற்றி உங்கள் 
கருத்தில் நெய்த 
பாவிரியுங்கள் கேட்போம். 

2. தென்பெண்ணை

கன்னடத்தில்
தட்சிண  பினாக்கினி
தமிழில் தென்பெண்ணை.


கர்நாடகத்தின்
நந்திமலையில் பிறந்து
ஒசூர் கிருஷ்ணகிரி
செங்கம் தாணிப்பாடி
திருவண்ணாமலை மணலூர்பேட்டை
திருக்கோவிலூர் கடந்து
கடலூர் கடலில்
சப்தமில்லாமல்
சங்கமமாகும் ஆறு.

சிலமாதங்கள் நீரோடும்
பலமாதங்கள் மணலோடும்
பல ஆண்டுகளாய் என்
கனவோடும் நனவோடும் ஆறு
தென்பெண்ணயாறு அது 
என்பெண்ணையாறும்கூட

காரணம் எனக்கு
நாகரீகம் 
சொல்லித்தந்தது 
தென்பெண்ணை 
நதிக்கரைதான்.

பிடிகொடுக்காமல் வழுக்கும்
ஆறா குறவை விலாங்கு
அடிக்கடி சிக்கிக்கொள்ளும்
வெகுளிமீன் கெண்டை
விரைப்பாகக்  குத்தும் முள்ளும்
குத்தாமல்  வளையும் மீசையும்
அணிந்தபடி அலையும்
கெளுத்தி மீனையும் எனக்கு
அறிமுகம் செய்தது
என்பெண்ணைதான்.

இஸ்லாமியா கல்லூரியின்

இனியநல் தமிழ்ப் பேராசிரியப்  
பெருமகனாரே  தமிழ்ச்செம்மலே 
சிவராஜி அவர்களே 



தென்பெண்ணையா  
தேன்பெண்ணையா  
என்பெண்ணையா 
உண்மைஎது  சொல்லய்யா   


3. பாலாறு

கர்நாடகாவில் 93 கிலோமீட்டரும்
ஆந்திராவில் 33 கிலோமீட்டரும்
தமிழகத்தில் 222 கிலோமீட்டரும்
ஓடும் ஆறு.

நதிகள் இணைப்பில்
இந்திய அரசால்
தமிழுக்காக 
அனுமதிக்கப்பட்ட ஒரே ஆறு என 
பாலாறுபற்றிப்  பாட வருகிறார்
பாலாற்றங்கரைக் கவிஞர் ஏசி வெங்கடேசன்  
மற்றும் தமிழ் தாசன் அவர்கள்.

4. செய்யாறு

ஒருதாய் தன் மகன் விளையாட
ஒரு ஆற்றையே செய்து கொடுத்தார்

அப்படி ஒருதாய் தன் சேய்க்கு
பாரியும் ஓரியும் ஓய்வில்லாமல் ஆட
நீரில் செய்துகொடுத்த
நீள்ஆறுதான் சேய்ஆறுஎனும்
செய்யாறு.

செய்யாறுசெய்த தாய்பார்வதி 
செய்தஆற்றில் நீந்திவிளையாடி
நீள் சரித்திரம் படைத்த  
சேய்முருகன்பற்றியும்  
செய்யாறுபற்றியும்  
கவிதாமணி ராதாஅவர்களே
தாஒரு கவிதை என 
வேண்டுகின்றோம்.


4. கொற்றலை ஆறு

திருவள்ளுர் மாவட்டத்தில் 
கருப்பெற்று உருப்பெற்ற ஆறு 

கொற்றலை என்றும் 
கொசத்தலை என்றும் 
கொசஸ்தலை என்றும்
முப்பெயர் பெற்ற ஒற்றை ஆறு

எண்ணூர்க்கடலில் 
சங்கமமாகும் சென்னைநகர ஆறு
அது பற்றிய  
அழகிய கவிதை ஒன்றை 
அள்ளித்தாருங்கள்  
கவிஞர் விஜயலட்சுமி 
அவர்களே.

5. வைகை

கைவைத்து அள்ளிப்பருக மட்டும்
தண்ணீர் தரும் ஆறு 
வை கை ஆறு என்று
கலைவாணர் என்எஸ்கேவால்    
வர்ணிக்கப்பட்ட ஆறு

வெள்ளைக்காரர்
பென்னிகுயிக்கால்
நீர்வளம் கூடிய ஆறு
வைகைபற்றிப் பாட வருகிறார்
மதுரைக் கவிஞர்
மதுரக்கவிஞர் சுவாமிநாதன் அவர்கள்

6. வைகை

இல்லை வைகை என
ஆகி இருக்கும்
முல்லைப்பெரியாறு
இல்லை என்றால் என்கிறார்கள்
உண்மையா அது
என்று சொல்ல வருகிறார்
அடுக்கம் மலைக்கிராமத்தின்
அருமைக் கவிஞர் லட்சுமி மைந்தன்


7. மணிமுத்தாறு

மேற்குத் தொடர்ச்சி
மலையின்
கிழக்குப்பகுதியில் பிறக்கும்
தாமிரபரணியின்
துணையாறுகளில்  
மணியானஆறு  மணிமுத்தாறு 
ஆறும் அணையும்
இறங்கும்  அருவியும் 
வீழும் நீர்வீழ்ச்சியும்
அரணான வனத்தோடு 
சரணாலய புலிகளையும்
அணிகளாய் உடைய ஆறு
மணிமுத்தாறு என்கிறார்களே 
உண்மையா என்று 
கவிதை சொல்லுங்கள் 
இளம்பாரதி அவர்களே. 

8. அமராவதியாறு

கரூர் திருப்பூர்
மாவட்டங்களுக்கு
அறுபதாயிரம் ஏக்கர்
பயிர்  சாகுபடிக்கு
உயிர்க்கொடை தரும்
அமராவதி ஆறுக்கு
கவிக்கொடை தாருங்கள் 
கவிஞர் கரூர் கிருஷ்ணன் 
அவர்களே ! 


9. கூவம்

முப்பத்தியிரண்டு கிலோமீட்டர்
நகரவாசியாக
நாற்பது கிலோமீட்டர்
கிராமவாசியாகவும்
ஓடும் ஆறு நீ

சென்னை நகரின்
அசுத்தங்கள் அத்தனையும்
அருவருப்பு கொள்ளாமல்
சுத்தம் செய்யும் புனிதஆறு

ஆறுகளில் மேரு கூவம் ஆறுபற்றி
கவிதை வழங்க வருகிறார் 
கவிஞர் முப்பரிமாணம் 
மோகன் அவர்கள்.


  

10. ஆரணியாறு

ஆந்திராவின் நாராயணவனம்
காப்புக் காட்டில் பிறந்து
பழவேற்காடு ஏரியில் சேர்ந்து
வங்கக் கடலில்
சங்கமம் ஆகும் ஆரணியாறுபற்றி
கவிதைபாட வருகிறார்
ஆரணிநகரின் மண்ணின் மைந்தர்
கவிஞர் கு ப நா மதனகவி


11. தாமிரபரணி

ஆண்டு முழுவதும் நீரை
அள்ளிச் செல்லும் ஆறு
தமிழ்நாட்டின் ஒரே
ஜீவநதி என்னும்
பெருமை உடைய ஆறு

முத்துக்குளிக்கும் தூத்துக்குடிக்கும்
இருட்டுக்கடை அல்வா
திருநெல்வேலிக்கும்
நாகர்கோவிலுக்கும்
தாகம் தீர்க்கும் ஆறு
தாமிரபரணி

சங்க இலக்கியத்தில்
பொருனை என்னும்
பேருடைய ஆறு
தாமிரபரணியை
போற்றிப்பாட வருகிறார்;
சந்திரபுஷ்பம் அவர்கள்.

12. பவானி ஆறு


நீலமலையில் 
ஆரவாரமாய்ப்  பிறந்து 
மலையாள மண்ணின்  
அமைதிப் பள்ளத்தாக்கில்
அமைதி கெடாமல் நுழைந்து
மறுபதிப்பாய்  தமிழுக்கு 
தாராளம் காட்டும்ஆறு பவானி

காவிரிக்கு அடுத்ததாய்
தொலைதூரம் 
தொடர் ஓட்டம் செய்யும்
தமிழின் இரண்டாவது 
நீளமான  ஆறு.

உலகின் சுவையான
தண்ணீரை தன்னகத்தே 
கொண்டிருக்கும்
சிறுவாணி ஆற்றை
துணையாறாய்க் கொண்ட
பவானி ஆறுதனை
போற்றிப் பாட வருகிறார்
கவிஞர் மோகன்ராஜ்   
அவர்கள்

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...