நன்னெறி தேர் இழுக்க வடம் பிடிப்போம்
கவிதை
தே .ஞானசூரிய பகவான்
88888888888888888888888888888888888
(திரு.வேலாயுதம் - திருமதி.வள்ளியம்மாள் அறக்கட்டளை தொடக்கவிழா, மண்ணின் மைந்தர் திரு.வே.சாம்பசிவம் ஐஎப்எஸ் (ஓய்வு) 82 முத்துவிழா, புத்தக வெளியீட்டுவிழா – பள்ளி சீர் வழங்கும் விழா மற்றும் கிராமப் படிப்பகம் தொடக்க விழா – நன்னெறி கிராமத்தில் 21.04.2019 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் வழங்கிய வாழ்த்து மடல்)
88888888888888888888888888888888888888888888888
இந்த கோடையில் நடக்கும்
ஐம்பெரும் கொடை விழாவின்
நன்னெறி நாயகன் சாம்பசிவம் அவர்களோடு
கூடியிருக்கும் அனைவருக்கும்
கோடி வணக்கம்.
இந்த ஐம்பெரும் விழாவில்
ஐந்தாறுவரி கவிதைப்பாடி
வாழ்த்துசொல்ல வாய்ப்ப தந்த
உடுக்கை இழந்தவன் கைபோல
உதவும் நட்பின் இலக்கணம்
வேலாயுதம் அவர்களுக்கு
வணக்கமும் நன்றியும் சொல்லுகிறேன்
இந்த ஊருக்கு
நன்னெறி என
பெயர் வைத்தவர்களை
பாராட்ட வேண்டும்
இந்த ஊரைச்சேர்ந்த மனிதர்கள்
நன்நெறி மென்நெறி
செந்நெறி வன்நெறி என
எந்நெறிக்கு சொந்தக்காரராக இருந்தாலும்
அவர்கள் நன்னெறிக்காரர்களாகத்தான்
இருக்க முடியும்.
காரணம் சாம்பசிவம் அவர்கள்
இந்த ஊர்க்காரர்
அவரும் நன்னெறி சாம்பசிவம்.
அதனால்;
உறவுகளை நேசிப்பதிலும் - நல்ல
உள்ளங்களை வாசிப்பதிலும்
பெரியோர்கள் மற்றும்
பெற்றோர்களின் அன்பினை
யாசிப்பதிலும்
இல்லாதவர்களுக்கு
இல்லை எனாது
போஷிப்பதிலும்
நன்னெறிகளை
சுவாசிப்பவர் இந்த
நன்னெறி சாம்பசிவம்
ஒரு பானைசோற்றுக்கு
ஒரு சோறுதான் பதம்.
அதனால்தான் சொல்லுகிறேன்
ஒரு நன்னெறி கிராமத்திற்கு
ஒரு சாம்பசிவம்தான் பதம்.
கம்பனது கட்டுத்தறியும்
கவிபாடும் என்பதுபோல
சாம்பசிவம் ஊர்க்காரர்கள்
எல்லோருமே நன்னெறிக்காரர்கள்தான்
கெடுப்பதும் எடுப்பதும் மட்டுமே
நடப்பாக மாறிப்போன உலகம் இது.
கொடுப்பதற்குத் தேவை
பணம் இல்லை மனம்தான் எனும்
மாண்புமிகு கொள்கைக்கு சொந்தக்காரர்
நன்னெரி கிராமத்தின்
சடையப்ப வள்ளல் சாம்பசிவம் !
பட்டம் வாங்கி போனபின்னே
பட்ட கடன்தீர்க்க பாவிமகன்
பார்க்காமல் பாரின் போய்
பரிதவிக்க விட்டானே
என்று தந்தைமார்கள் புலம்பும் காலம் இது.
பாசம் என்ற போர்வையில்
சம்பளம் இல்லாத வேலைக்காரி
பதவியிலிருந்து பாசம்மிகும் என்மகள்
எப்போது எனக்கு
விடுப்பும் விடுதலையும் தருவாளோ ?
என்று தாய்மார்கள் தவிக்கும் காலம் இது.
ஆனால் சாம்பசிவம் அவர்களோ
தந்தைதாய் பெயரில்
அறம்செய்ய ஓர்
அறக்கட்டளை தொடங்கி அவர்களை
பெருமைப்படுத்தும் விழா இது (1)
வனத்துறையில் பணியாற்றி
வான்முட்ட சாதனைகளைச் செய்த
சரித்திர நாயகன் இவர்
அதனால்தான்
கானகத்துறையின் மானசீகக் கூடலாக
மலர்ந்துள்ளது இந்த விழாத்தோட்டம்.
சாம்பசிவம் அவர்கள்
அகவை எண்பதை எட்டியதற்கான
முத்தான விழா இது.
ஊரும்பேரும் சொல்ல
உதவும் செய்திகளை
உரக்க பதிவு செய்த
உன்னத புத்தகக் கருவூலம் ஒன்றினை
உலகம்அறிய வெளியிடும் விழா இது.
பள்ளி விளையாட்டு;த் திடலுக்கு
பாந்தமான நிலமும்தந்து அதில்
பாலர்கள் ஓடியும் ஆடியும்
பந்துகள் அடித்தம் பிடித்தும்
அம்சமாய் விளையாட
அனைத்து சீரும்
சாம்பசிவம் அள்ளித்தரும் விழா இது
பள்ளி கல்லூரி பல்கலைக்
கழகங்கள் பலவும் கதவுகளை
இழுத்து மூடினாலும்
ஊரைப்படியுங்கள் உலகைப் படியுங்கள்
‘ஓதுவது ஒழியேல’; என அவ்வை சொன்னதன்
அடியொற்றியும் இங்கு சாம்பசிவம் திறக்கும்
படிப்பகம் - அதற்கொரு விழா.
இப்படி ஐம்பெரும் விழா காணும்
சாம்பசிவம் அவர்களை
வாழ்த்த முடியாது
காரணம் அவர் எண்பத்தியிரண்டு
நான் எழுபது – அதனால்
வாழ்த்த மட்டும் முடியாது
வாழ்த்தி வணங்குகிறேன்
சாம்பசிவன் இவர்
சகமனிதர்களை நேசிப்பதில்
உயர்ந்த புருஷன்
உலக மரங்களின்
உயரமான அரசன்
கிங் செக்கோயா மாதிரி
ஆனால் நானோ
தரையோடு தரையாய்
படுத்துக் கிடக்கும்
பூவுலகின் குள்ளமரம்
ஆறு சென்டிமீட்டர் உயரமும்
மூன்று சென்டிமீட்டர் பருமனும்
வளரும் வில்லோ மரம்மாதிரி
(சாலிக்ஸ் ஹெர்பேசியா)
.
நீங்களே சொல்லுங்கள்
உயர்ந்த மரம் கிங் செக்கோயாவை
குள்ளமரம் வில்லோ வாழ்த்த முடியுமா ?
;
அலக்சாந்தர் சேனையோடு
அலப்பு நீங்க அடிநிழல் தந்த
ஆலமரம் அண்ணல் சாம்பசிவம்
அணைத்துக் கொண்டு
அண்ணாந்து பார்த்தால்கூட
அரைவாசி உடம்புக்கும்
நிழல் தராதது
பனைமரம் நான்
நீங்களே சொல்லுங்கள்
பனையும் பாக்கும்
நெட்டிலிங்கமும்
ஆலமரத்தின் அகல நீளம்பற்றியும்
அது தரும் நிழல்பற்றியும்
அனுபல்லவியும் பல்லவியும் எழுதி
இது வாழ்த்துப்பா
இதுதான் என் வாழ்த்தப்பா என
நான் வாசிக்க முடியுமா ?
இந்த பூமியை ஆண்டவராக
இருந்தாலும்
நாளும் நாம் கும்பிடும்
ஆண்டவராக இருந்தாலும்
அங்குல நிலத்தைக்கூட
அடுத்தவர் ஆள
அனுமதிக்க மாட்டேன் என
பாரதம் நடத்திய
கவுரவர் பூமி இது
இருபத்தைந்து சென்ட் நிலத்தை
இனிய கொடையாக ஈந்தவர்
நமது சாம்பசிவம் அவர்கள்.
பள்ளிப் பிள்ளைகள்
துள்ளி விளையாட
அள்ளித் தருகிறார் ஓரிடம் என்றால்
நன்னெறி கிராமத்தின் கல்வித்தேருக்கு
வடம் பிடிக்கிறார் என்று அர்த்தம்..
இந்த ஊரின்
குழந்தை நாற்றுக்களின்;
குன்றாத வளர்ச்சிக்கு
கல்விநீர் பாய்ச்ச குடம் எடுக்கிறார்
என்று அர்த்தம்.
இதை எல்லாம் சாம்பசிவனார்
கடமைக்கு செய்யவில்லை
கடனே என்றும் செய்யவில்லை.
இனிவரும் இளைஞர்கள் இவர்
தொட்டபணி தொடர
கடனும் உண்டு
கடமையும் உண்டு என
தடம்பதித்து செல்லுகிறார்
என்று அர்த்தம்.
அவர் பதித்த தடத்தில்
பாதம் பதிப்போம்
கல்விப்பயிருக்கு நீர்பாய்ச்ச
குடம் சுமப்போம்.
அவர்போற்றிய
நன்னெறி தேர்இழுக்க
வடம் பிடிப்போம்
அவரும் அவர் துணைவியாரும்
அவருடைய வாரிசுகளும் வாழ்வாங்கு வாழ
வாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி, வணக்கம்.
தே. ஞானசூரிய பகவான்
நிறுவனர் மற்றும் செயல்தலைவர்
பூமி இயற்கைவள பாதுகாப்பு இயக்கம்
தெக்குப்பட்டு
No comments:
Post a Comment