Sunday, October 15, 2017

காட்டுக்களா பள்ளிச்சிறுவர் விருப்ப பழமரம் - KATTUK KALA SCHOOL CHILDREN'S FAVOURITE FRUIT


காட்டுக்களா 
பள்ளிச்சிறுவர் 
விருப்ப பழமரம் 

KATTUK KALA
SCHOOL CHILDREN'S
FAVOURITE
FRUIT


இன்று கிராமத்தின் முகம் மாறிவிட்டது. எவ்வளவு பழங்கள் ? எவ்வளவு காய்கள் ? அந்த செடிகள் எதுவும் பார்க்க முடியவில்லை கிராமத்தில். அதில் ஒன்றுதான் இந்த களாக்காய். புழு வெட்டு வந்த சொட்டைத் தலை மாதிரி ஆகிவிட்டன கிராமங்கள.; மரங்களையும் செடிகளையும் மருந்துக்குக் கூட இல்லை.

டேங்கு ஜூரம் வர வேண்டும்;; சிக்கன்குனியா வரவேண்டும்; அப்போதுதான் நமக்கு நிலவேம்பு நினைவுக்கு வரும்; பப்பாளி  ஞாபகத்தில் வரும்; ‘மலைவேம்;பு மலையில இருக்குமா ? பிளெயின்ல கூட இருக்குமா ?’ என்று விசாரிப் போம். கஷ்டம் வரும்போது மட்டும் கோயிலுக்கு போற மாதிரி.

நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போது எங்கள் கண்கள் தேடும். ஓவ்வொருத்தன் பையிலும் புஸ்தகம் இருக்கோ இல்லையோ, நிறைய பழங்கள் இருக்கும்.
எத்தனை வகை பழங்கள் தெரியுமா ?

களாப் பழம், காரைப் பழம், குருவிப் பழம், பூலாப்பழம், மூக்குசளிப் பழம், சப்பாத்திப் பழம், திருக்கள்ளி பழம், ஆலை சப்பாத்திப் பழம், இலுப்பைப் பழம், ஆலம் பழம், அரசம் பழம். நாவல் பழம், புளியங்காய், பு.பழம்,  இலந்தம் பழம், பூனை பு. பழம், கோவைப் பழம், சுக்காம் பழம் இப்படி ஏகப்பட்ட பழங்கள்.

களாக்காய்கள் பச்சையாய் இருக்கும் ; சில அரக்கு சிவப்பாய் இருக்கும்; பழுத்தால் கன்னங் கரேலென்று மாறிவிடும். காட்டுக் களாக்காய் சைஸ் பெருசாய் இருக்கும். காய்கள் கொஞ்சம் புளிப்பாய் இருக்கும். பழங்கள் இனிக்கும். 

பூக்கள் நள்ளிரவில் பூக்கும். வாசனையில் மல்லிகையை தோற்கடித்துவிடும். 

காட்டுக் களாக்காயை குறு மரம் எனலாம். மற்றவை எல்லாமே குறுஞ் செடிகள்தான்.

வேலூர் மாவட்டத்தில் இதே மாதிரி காட்டுக் களாக்காயை ‘சொத்தக்களாக்காய்’ என்கிறார்கள்.இப்போது கூட வாணியம்பாடி சந்தையில் கூறுகட்டி விற்கிறார்கள். என்ன கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தியா இருக்கும்.

இந்த காட்டுக் களாக் காயின் தாவரவியல் பெயர் பிளகோர்ஷியா ரமாட்சி (FLACOURTIA RAMOTCHI); இந்த எல்லா வகைக்கும் சொந்த மண் ஆசியா இல்லையென்றால் ஆப்ரிக்கா இதில் பிரத்தியேகமான இந்திய வகைகளே நிறைய உள்ளன.  இதற்கு பொதுப் பெயர் ‘ இந்தியன் செர்ரி’ (INDIAN CHERRY).

இதை பிளகோர்ஷியா இண்டிகா (FLACOURTIA INDICA) என்றும் சொல்லலாம். தமிழ் நாட்டில் புதர்க் காடுகள் மற்றும் கற்களும் பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் இதனைப் பார்க்கலாம். காட்டுக் களாக்காய் (KATTU KALA)தவிர சொத்தைக் களாக்காய் (SOTTAIKALAI), கொடுமுடி (KODUMUDI) என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

பிளகோர்ஷியா ஜங்கோமாஸ் (FLACOURTIA JANGOMOS) என்ற ஒரு ரகம் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ளது. இதனை லவலோலிக்காய் (LAVALOLIKAI) என்கிறார்கள். ஈரச்செழிப்பான பகுதிகளிலும் சில இடங்களில் பயிரிடவும் செய்கிறார்கள்.

பிளகோர்ஷியா மொன்ட்டானா (FLACOURTIA MONTANA) என்ற வகை கோவை மாவட்டத்தில் மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரச் செழிப்பான இடங்களில் காணப்படுகின்றன.

பிரசவத்தை தள்ளிப்போடுவது, மூட்டு வலியை குணப்படுத்துவது, வேறு பல கை வைத்தியங்களுக்கும் கூட நம்முடைய பழங்குடி மக்கள் களாக்காயைப் பயன்படுத்தி உள்ளனர்.

‘வயசானா என்ன நடக்கும் ? ஓண்ணுமே நடக்காது. கொஞ்ச தூரம் கூட நடக்க முடியாது. மீசை நரைக்கும். தலை நரைக்கும். டை அடிச்சாக் கூட முடி கருப்பாகாது. உடம்பு தளந்து போயிடும். சேந்தாப்பல நாலு படி ஏறி எறங்க முடியாது. சுமை தூக்க முடியாது. கிட்டவும் பாக்க முடியாது. எட்டவும் பாக்க முடியாது. நொடிக்குநொடி நோய்நொடி தேடி வரும். 
 
‘தொடர்ந்து களாக்காய் சாப்பிட்டா வயசாகாதாம். தள்ளாத வயசிலயும் எதையும் தள்ளாம வாழ முடியும்னு ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சி இருக்காங்களாம்.

நீரழிவு நோய், நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்கள், போன்றவற்றை கட்டுப்படுத்தும் சக்தி உடைய சக்தியும்  ஆண்ட்டி ஆக்சிடெண்டஸ்’ ம் இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
 
Ref: www.the indianwagonblogspot.in / Flacourtia ramaotchi , www.effloraof india.com / Flacourtia ramaotchi




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...