விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி
மலைத் தொடரின், மேற்கு சரிவில்
உற்பத்தியாகிறது சங்கராபரணி ஆறு.
பச்சமலை, மேல்மலையனூர்
மலைச் சரிவுகளிலிருந்தும் வரும் நீர்
தென்பாலை என்னுமிடத்தில் சஙகராபரணியுடன்
சேர்கிறது.
வராக நதி, செஞ்சி ஆறு என்னும்
இரண்டு செல்லப் பெயர்களும் உண்டு இதற்கு.
கிழக்கு நோக்கி ஓடுகிறது சங்கராபரணி.
அத்துடன் அன்னமங்கலம் பகுதியிலிருந்து
வரும் கூடுதலான வடிநீர் மேலச்சேரி
என்னுமிடத்தில் சேர்கிறது. பின்
தென்புறம் திரும்பி சிங்வார் கிராமத்தின்
கிழக்கு பகுதியில் பாய்ந்து
மீண்டும் கிழக்கு நோக்கிச் செல்கிறது.
இதன் இரண்டாவது துணையாறு
நரியார் ஓடை ஊருணித்தாங்கல்
கிராமத்திற்கருகில் சங்கராபரணியுடன்
சங்கமமாகிறது.
வல்லம் கிராமத்திற்கருகே இந்த
ஆறு தென்கிழக்கு திசையில் திரும்புகிறது.
இத்துடன் வீடூர் என்னுமிடத்தில்
இதனுடைய மூன்றாவது துணையாறு
தும்பியாறு கலக்கிறது. இதனை அடுத்து
இருப்பதுதான் வீடூர் நீர்த்தேக்கம்.
வீடூர் நீர்த்தேக்கத்திலிருந்து
வெளியேறும் சங்கராபரணி மீண்டும்
தென்கிழக்குப் பகுதியில் திரும்பி
ராதாபுரம் என்னுமிடத்தில் பம்பையார்
என்னும் துணைநதியை தன்னோடு
இணைத்துக் கொண்டு அங்கிருந்து
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்
மணலிப்பேட்டை என்னுமிடத்தில்
நுழைந்து, செல்லிப்பட்டு என்ற
இடத்தில பம்பை என்னும் துணைநதி
துணைக்கழைத்துக் கொண்டு ஓடுகிறது,
சங்கராபரணி.
இதன் கடைசி துணைஆறு குடுவையாறு. இது போட் ஹவுஸ் அருகில்; சுண்ணாம்பார் என்ற இடத்தில் சேர்ந்து, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் பயணம் செய்து பேரடைஸ்பீச் என்னுமிடத்தில் கடலில் சேர்கிறது.
இந்த ஆற்றின் நீளம் 78.6 கி.மீ. இதில் 34 கி.மீ புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பயணம் செய்கிறது.
அன்னமங்கலம் ஆறு, நரியார் ஓடை, கொண்டியாறு, பம்பையாறு, பம்பை, குடுவையாறு ஆகிய ஆறு நதிகள் சங்கராபரணியின் துணை ஆறுகள்.
சங்கராபரணி ஆற்றங்கரையில் மிகவும் பழமையான கோயில்கள் எல்லாம் அமைந்துள்ளன. பாடல் பெற்ற ஸ்தலங்களாக 4 கோயில்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. கங்கை வராக நந்தீஸ்வரர் கோயில், திருக்காஞ்சியில் வராக நதிக்கரையில் அமைந்துள்ளது.
இந்து மதத்தின் நம்பிக்கையின்படி, கங்கை நதிக்கு சமமமான சக்தி படைத்தது சங்கராபரணி ஆறு. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் மாசிமகத் திருவிழா, தேர்த்திருவிழா உட்பட 10 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும்.
சிங்கவரம் ரங்கநாதர் கோயில், ஈசாலம் ராமனாதீஸ்வரர் கோயில், திருவாமாத்தூர் அழகியநாதர் கோயில், குறவர் பனங்காட்டூர், பனங்காட்டீஸ்வரர் கோயில், திருக்காவேரி சந்திரசேகரர் கோவில் ஆகியவை விழுப்புரம் மாவட்டத்தில், சங்கராபரணியின் விசேஷமான ஆற்றங்கரைக் கோயில்கள்.
மதகடிப்பட்டு, மஹாதேவர் கோயில், திருபுவனை பெருமாள் கோயில், திருவண்ணார் கோயில், வடுகூர்நாதர் கோயில், வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில், திருக்காஞ்சி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் கங்கை வராக நாதீஸ்வரர் கோயில்; ஆகியவை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோயில்களாகும்.
வீடூர் நீர்த் தேக்கம், பொறையார் அகரம், ஊசுட் ஏரி படகுக் குழாம், அரியாங்குப்பம், சுண்ணாம்பார் படகுக் குழாம் ஆகியவை சங்கராபரணி ஆற்றங்கரையின் சுற்றுலா தலங்கள் ஆகும்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞசல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment