Friday, August 4, 2017

அடையாறு சென்னையின் முக்கிய ஆறு - RIVER ADAYARU OF CHENNAI


                                                               
 அடையாறு 
சென்னையின் 
முக்கிய ஆறு - 

RIVER ADAYARU 
OF CHENNAI

அடையாறு

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில்
அடையாற்றின் குறுக்கில்  கட்டப்பட்டுள்ள
திரு.வி.க.  பாலம் உடையாமல்  போனது
பெரும் அதிசயம். இதற்கு நானே நேரடி
சாட்சியாக இருக்கிறேன். அந்த
பாலம் நடைந்திருந்தால் நானும்
உடைந்திருப்பேன். என்னை புதைத்த
இடத்தில் அருகம்புல் முளைத்திருக்கும்.


நான் அன்று அடையாறு மற்றும் சத்யா
ஸ்டுடியோவிற்கும்  இடையே அடையாற்றின்
குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை  கடக்க
அடையாறு முனையில்  காரில் காத்திருந்தேன் .
மழை விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது.

அடையாறு பாலத்தின் கூரையைத் தொட்டபடி  தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எனக்குத் தெரிந்து ஏறத்தாழ நின்று  போனது பாலத்தின் இரண்டு முனைகளிலும்  போலீஸ்காரர்கள் நடந்து செல்பவர்களை தடுத்தனர்.  டூ வீலர் மற்றும் சைக்கிளில் செல்வோர்  வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்;தார்களே  தவிர  கடந்து செல்லவில்லை.

நான் என் காரில் உட்கார்ந்திருந்தேன். நானும் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். “போகலாமா வேண்டாமா” முடிவெடுக்கமுடியாமல் உட்கார்ந்திருந்தேன். என்னோடு என் மனைவியும் என் ஓட்டுநரும் உடன் இருந்தனர்.

“பாத்துகிட்டே இருங்க பத்தே நிமிஷத்துல பாலம் தரைமட்டம் ஆகப்போவுது பாருங்க ..” என்று சத்தமாக சொன்னார் ஒரு பெரியவர்.

“பெருசு வாயை வச்சிகிட்டு சும்மா இருக்கமாட்டே..” என்றார் பக்கத்தில் இருந்த ஒருத்தர் அவரை கடித்தார்.

பாலத்தின் இரண்டு மூன்று இடங்களில்;  பாலத்தின் மேலேயும் தண்ணீர் தெறித்து வீழ்ந்துக் கொண்டிருந்தது.  நான்கூட  இந்த வெள்ளத்தில்  இந்தப்பாலம் தப்பாது என்று  என் மனைவியிடம்  சொன்னேன்;. “ஏங்க நீங்க வேற ..” என்று என்னை அதட்டினாள் என மனைவி. எங்கள் உரையாடல் முடிவதற்கு முன்னால் என் கார் பாலத்தில் என்ட்ரி ஆகிவிட்டது.
“குமார் குமார்…மேடம் பயப்படுவாங்க வேண்டாம் சொன்னா கேளு..” என்று நான் அலறினேன். “பயப்படாதிங்க சார்”  என்று காரை கவனமாக மெல்ல ஓட்டினன்;.   “மறுபடியும் நான் மேடம் பயப்படுவாங்க” என்று சொல்ல “மேடம்தான் சார் வண்டியை எடுக்க சொன்னாங்க..” என்றான்.

எந்தசமயத்திலும் பாலம் உடையலாம். காரோடு அடித்துச் செல்லலாம். “முன்னாள் ரேடியோ ஆபீசர் திருவிகா பாலத்தில் ஜல சமாதி” அடுத்த நாள்  பேப்பரில்   இப்படி ஒரு செய்தி வரும். என் மனசுக்குள்; வேகமாய் ஒரு சினிமா ஓடியது.
   
பாலத்தின் அடுத்தமுனையை நாங்கள் சென்றடைந்தபோது, அந்;த  முனையிலிருந்தவர்கள்  எங்களை ஒலிம்பிக்கில் ஜெயித்தவர்களைப்போல பார்த்தனர். நான்திரும்பிப் பார்த்தேன் காரிலிருந்து.  எங்களுக்குப்   பின்னால்  ஒரு மானுடமும்  வரவில்லை.    பாலம் முழுக்;க காலியாக இருந்தது.  பாலத்தின் மீது  இன்னும் கூடுதலான இடங்களில் நீர்  தெறித்து விழுவது தெளிவாகத்  தெரிந்தது. பாலத்தையும் ஆபத்தையும் தாண்டி வந்துவிட்டோம். ஆனாலும் பயம்;; மற்றும் படபடப்பை மட்டும்  தாண்ட முடியவில்லை.
  
அடையாறு  என்றதும் இந்த சம்பவம்தான்  என்மனதில்  நிழலாடுகிறது.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...