Wednesday, August 9, 2017

மரூலா வியாபார மரமாகியிருக்கும் காட்டு மரம் - MARULA - BUSINESS TREE OF AFRICA MARULA - WILD BECOMES BUSINESS TREE


                                              
மரூலா வியாபார 
மரமாகியிருக்கும்
காட்டு மரம் 

MARULA -
BUSINESS TREE 
OF AFRICA


மரூலா ஆப்பிரிக்க மரம்

MARULA AFRICAN TREE

தாவரவியல்பெயர்;
ஸ்கெலரோகேரியா பிர்ரியா
(SCELEROCARYA BIRREYA)

---------------------------------------------------------------------------------------------------------------
பீர் பிராந்தி மாதிரியான ‘கிக்’ தரும் பழங்களை தரும் தென் ஆப்பிரிக்க மரம் மரூலா.
      சில நாட்களுக்கு  முன்னால் ‘வாட்ஸ் அப்’ ல்  ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்தேன்;  ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு குரங்குகள் அதிலிருந்த பழங்களைப் பறித்து தின்று கொண்டிருந்தன.  

மரத்தின் அடியில் இரண்டு யானைகள் நின்றிருந்தன.  ஒரு யானை தலையினால் முட்டி அந்த மரத்தை உலுக்கியது;  முக்கால் வாசிப் பழங்கள் உதிர்ந்த பின்னால், இரண்டு யானைகளும் சேர்ந்துக் கொண்டு அவற்றை ருசிக்க ஆரம்பித்தன.  

பக்கத்தில் நாலைந்து குரங்குகள்; கொஞ்சம் தள்ளி இன்னொரு இன்னொரு மரத்தடியில் ஒரு குழுவாய் சேர்ந்து தீப்பறவைகள்;    ஒன்றிரண்டு ஒட்டச்சிவிங்கிகள்; எல்லாம் பழங்களை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தன.  

அடுத்தக் காட்சியில், குடித்துவிட்டு ஆட்டம் போடும் யானைகள்;  தடுமாறும் குரங்குகள். தள்ளாடிய படி நடந்து செல்லும் காட்டுப் பன்றிகள் ;  இடறிவிழும் தீப்பறவைகள் ;  எல்லாம் நம்பமுடியாத காட்சிகளாக இருந்தன.

இந்த மரூலா மரங்கள் தென் ஆப்பிரிக்காவின் 'மியோம்போ" காடுகளில் மாமூலான மரங்களாம்.

மா,முந்திரி,ஆகிய மரங்களைப் போல அனாகார்டியேசியே  (ANACARDIACEAE) என்னும் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது;  பனை போல ஆண்பெண் மரங்கள் தனித்தனியாக உள்ளன.

மரூலா பழங்களிலிருந்து பீர், பிராந்தி போன்ற மதுவகைப் பழச்சாறு, கொட்டைகளிலிருந்து எண்ணெய் போன்றவைகளை எடுத்து விற்பனை செய்கிறார்கள். 

ஒட்டச்சிவிங்கி, யானை, நீர்யானை போன்ற விலங்குகளுக்கு  தீவனமாக உணவளிக்கிறது மரூலா. குரங்கு, காட்டுப்பன்றி, மான், போன்ற நடுத்தர உடல் அளவுகொண்ட மிருகங்களும், நெருப்புக்கோழி போன்ற பறவைகளும், இதன் பழங்களை ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு குத்தாட்டம் போடுகின்றன.
யானை போன்றவை  இதன் தழை பட்டைகள், காய்கள், பழங்கள் என ஒன்றுவிடாமல் தின்று தீர்க்கின்றன.  யானைகளின் சாணத்தின்  மூலமாகத்தான் காடுகளில் மரூலா மரங்கள், பரவுவதாகச்  சொல்லுகிறார்கள்.
இந்த மரங்கள் அதிகபட்சமாக 18 மீட்டர் உயரம் வரை வளரும். என்ற ‘தி காட் மஸ்ட் பீ கிரேஸி’ (THE GOD MUST BE CRAZY)  என்ற உலகப்புகழ் பெற்ற சினிமா எடுத்தவர்  ஜேம்  உய்ஸ். (JAMES VUIS);  அவர் தனது செய்திப்படம் ஒன்றில் மரூலா பழம் சாப்பிடுவதை அழகாகவும் நகைச்சுவையாகவும் பதிவு செய்துள்ளார்.

மரூலா பழங்கள் பழுத்து, உதிர்ந்து, கனிந்த பழங்களை யானைகள் மிகவும் ரசித்து உண்ணும்;  இந்த போதைப்பழம், 10,000 ஆண்டு சரித்திர பின்புலம் உடையது;  தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமிபியா நாடுகளைச்சேர்ந்த மக்களிடையே இந்தப்பழம் மிகவும் பிரபலம். ஆப்பிரிக்க நாடுகளைப் பொருத்தவரை ' மரூலா" ஒரு கற்பக விருட்சம் ;   இலைகள் , பட்டை, பூக்கள், பிஞ்சு, காய்கள், பழங்கள், கொட்டைகள் என, அனைத்து பாகங்களும், பல வகைகளில் பயனாகிறது.

 இதன் பழங்களின் தோலை கொதிக்க வைத்து மரூலா காபி தயார் செய்கிறார்கள்; ஒரு காலத்தில் ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் பிரதான உணவுகளில் மரூலாவும் ஒன்றாக இருந்துள்ளது.  மிருதுவான இதன் மரங்கள், கடைசல் வேலை செய்ய ஏற்றவை;  உட்புற பட்டைகளில் கயிறு தயாரிக்கிறார்கள்; பட்டையிலிருந்து இளங்காவி நிறத்தில் ஒருவகையான சாயமும் தயாரிக்கிறார்கள்.

சிறிய ' பிளம் " (PLUM) பழங்களைப்போல இருக்கும் மரூலாவிலிருந்து ,ஜாம், ஜெல்லி, மற்றும் மதுபானங்கள் தயாரிக்கலாம்.  இதில் வைட்டமின் ' சி " அதிக அளவில் உள்ளது. 

ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே ஒரு வித்தியாசமான நம்பிக்கை நிலவுகிறது; மரூலாவின் ஆண் மரங்களின் பட்டையின் சாற்றினை அருந்தினால், பெண்குழந்தை பிறக்கும். ஆண்குழந்தை பிறக்கவேண்டுமென்றால், நீங்கள் பெண் மரத்தின் பட்டை சாற்றை குடிக்க வேண்டும்.

மரூலா மரங்களிலிருந்து மேளக்கருவி, தேனிப்பெட்டிகள், ஸ்டூல், உரல், உலக்கை போன்றவை,  செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவிலுள்ள, 42 இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களின் 'பெண்கள்" இந்த பழங்களைச் சேகரித்து, இதிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுக்கும் பணிகளில், ஈடுபட்டுள்ளார்கள்;  ‘மரூலா நேச்சுரல் ப்ராடெக்ட்ஸ்’ ‘மரூலா பார்மர்ஸ் ட்ரஸ்ட்’ போன்ற அமைப்புகள், இதன் பழங்களை, கொட்டைகளை, விதைப் பருப்புகளை, விற்பனை செய்வதில், இந்த பழங்குடி பெண்களுக்கு  உதவுகின்றன. 

ஆப்பிரிக்க மக்களின் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது மரூலா.    ஆனால் இன்று, வேலை வாய்ப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவும் மரமாக விளங்குகிறது.

    பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com          

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...