Sunday, August 6, 2017

அமெரிக்காவை விவசாயம்தான் மேம்படுத்த முடியும் ரூஸ்வெல்ட் AGRICULTURE CAN BRING THE GLORY TO USA - ROOSEVELT


அமெரிக்காவை 
விவசாயம்தான்
மேம்படுத்த முடியும் 
ரூஸ்வெல்ட் 






ONLY AGRICULTURE

CAN BRING BACK 

THE GLORY

TO USA - ROOSEVELT


(முன்கதை சுருக்கம்: கிரேட் டிப்ரஷன்’ல் உலக நாடுகள் அத்தனையும் பாய்மரம் இல்லாத படகு மாதிரி தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் அதிபர் தேர்தல் வந்தது. தேர்தலில் ரூஸ்வெல்ட் ஜெயித்தார். அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (சிசிசி) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.)

கிரேட் டிப்ரஷன் எப்படி அமெரிக்க மக்களை அலைக்கழித்தது ? அவர்கள் எப்படி துன்பப்பட்டார்கள் ? எப்படி துயரப்பட்டார்கள் ? இதைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் சிசிசி யின் மகத்துவம் புரியும். இயற்கை வளங்களை சீர் செய்யும் வேலை எப்படி இதற்கு உதவியாக இருந்தது ? இதை புரிந்துகொள்ள முடியும்.

கற்பாறையின்மீது விழுந்த கண்ணாடி ஜாடி மாதிரி ஆனது 1929 ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டாக் எக்சேஞ்ச.; இதுதான் கிரேட் டிப்ரஷனின் முதல் அட்டாக். வேலைவாய்ப்பு தந்த கம்பெனிகளும், தொழிலகங்களும் பகுதி பகுதியாகவும் முழுவதுமாகவும் காணாமல் போயின.

13 முதல் 15 மில்லியன்பேர் வேலையின்றி சாலைகளில் அலைந்தனர்.
வாங்குவோரிடம் டப்பு இல்லாததால் கடைக் கண்ணிகள் வெறிச்சோடிக் கிடந்தன. பொருட்கள் மட்டும் குவிந்திருந்தன. சராசரி மக்களின் வீட்டு அடுப்புகளில் பூனைகள் தஞ்சமடைந்தன. பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடின. வறுமையில் மக்கள் தற்கொலை செய்துகொள்வது பத்திரிக்கைகளில் அன்றாட தலைப்புச் செய்திகளாயின.

இந்த ராட்சச பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பாம்பின் விஷமாகப் பரவியது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளை சின்னாபின்னமாக்கியது. 

வேலையில்லாமல் மக்கள் சாலையில் அலைந்தனர்; அது 1930 களில் 4 மில்லியனாக இருந்தது. அடுத்த ஆண்டே 6 மில்லியனாக ஆனது. 

தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதாளத்தை நோக்கி பயணம் செய்தது.
நம்ம ஊர் மோர் வினியோகம் மாதிரி இலவச ரொட்டியும் சூப்பும் விநியோகம் செய்தார்கள் பசையுள்ளவர்கள்; நகரம் கிராமம் என்ற வித்தியாசம் இன்றி இலவசங்களுக்கு நீண்ட வரிசைகள் நின்றன.

ஒரு முரட்டு சூறாவளியில் பிடுங்கி எறியப்பட்ட மரங்களாய் விவசாயிகளை முற்றிலுமாக சாய்த்தது கிரேட் டிப்ரஷன்.

விளைபொருட்களின் விலை அறுவடைக் கூலியைக்கூட ஈடுசெய்வதாக இல்லை. அவை எல்லாம் வயலோடு வயலாக அழுகி மக்கிப் போயின. சராசரி குடும்பங்களில்  பசியும் பட்டினியும் நிரந்தர விருந்தாளியாகக் குடியேறின.
“100 டாலருக்கு 2 டாலர் தரட்டுமா ? சரின்னா சொல்லுங்க. இன்னும் கொஞ்சநாள் போச்சின்னா அதுகூட கிடைக்காது” என்று வங்கிகள் வாடிக்கையதளர்களிடம் பேரம் நடத்தின.

1933 ல் ஆயிரக்கணக்கான வங்கிகள் தங்கள் வியாபாரத்தையும் கதவுகளையும் இழுத்து மூடின. ஜனாதிபதி ஹூவர் அரசு தள்ளாடிய வங்கிகளைத் தாங்கிப்பிடிக்க முயன்று தோற்றுப்போனது. “இதெல்லாம் எங்க வேலை இல்லப்பா.. ஆளை விடுங்கப்பா” என்றது. பொறுப்புகளைக்  கூட்டிவாரி குப்பைக் கூடையில் கொட்டியது அரசாங்கம்.

கொஞ்ச நாட்களில் அதிபர் தேர்தல் வந்தது. “நீங்க அதிபரா இருந்து கிழிச்சது போதும் போயிட்டு வாங்க..அப்புறமா பாப்பொம்..” என்று  மக்கள் ஹூவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

1933 மார்ச் 4 ம்நாள் ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய முழுபெயர் ஃபிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட். சுருக்கமாக மக்கள் அவரை ‘எஃப்டிஆர்’(FDR) என அழைத்தனர். இனி நாம் அவரை இன்னும் சுருக்கமாக ‘ரூஸ்’என்று அழைக்கலாம்.

‘ரூஸ்’ அடிப்படையில் ஒரு விவசாயி. ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு விவசாயம்தான் அடிப்படை. விவசாயத்திற்கு அடிப்படை இயற்கை வளங்கள்தான். இயற்கை வளங்களை பாதுகாக்காமல் பராமரிக்காமல் மேம்படுத்தாமல் ஒரு ஆணியையும் கழற்ற முடியாது என்று நம்பினார் ‘ரூஸ்’.

அரசு கட்டிலில் ஏறிய உடன் எஃப்டிஆர்  கிரிக்கெட் ஆல்ரவுண்டர் மாதிரி அடித்து ஆடினார். தினமும் ஜனங்களோடு ரேடியோவில் பேசினார். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். பிரபலமான இந்த ரேடியோ பேச்சுக்கு “ஃபைர் சைட் சேட்ஸ்” (FIRE SIDE CHAT) என்று பெயர். நெருப்பு கணப்பின் அருகில் அமர்ந்து பேசுவது என்பது ஒரு பழக்கம். நாம்; டீக்கடையில் உட்கார்ந்து பேசுவது போல. 

ரூஸ் பதவியேற்று 100 நாட்கள் ஆனது. தொழிற்சாலைகளில் சக்கரங்கள் சுழன்றன. வங்கிகள் கதவுகளை மெல்லத் திறந்தன. விவசாயிகள் தைரியமாய் அறுவடை செய்தனர். கடைகண்ணிகளில் ஜனங்கள் நடமாட ஆரம்பித்தனர். தேங்கிக் கிடந்த  பொருட்கள் வியாபாரம் ஆகத் தொடங்கின. தினம்தினம் பல ஆயிரக் கணக்கில் இளைஞர்களுக்கு வேலை தந்து பெற்றோர்களின் வயிற்றில் பாலை வார்த்தார், ‘ரூஸ்’. சி சி சி பிரபலமானது.
அதன் பின்னர் அமெரிக்காவின் ஜி டி பி ஒவ்வொரு ஆண்டும் 9 சதம் துள்ளி குதித்தது. ஆனால் 1938 ல் மீண்டும் ஒருமுறை பொருளாதார வீழ்ச்சி தனது தனது புத்தியைக் காட்டியது. 

1939 ல் ஹிட்லரின் நாடுபிடிக்கும் ஆசையால் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. போரில் ஹிட்லருக்கு எதிரான முடிவை எடுத்தது அமெரிக்கா. “அவ்ளோ திமிரா உனக்கு என்ன செய்யறோமுன்னு பார்” என்று அமெரிக்காவின்  பேர்ள்ஹார்பரில் மூர்க்கமாக குண்டுகளை வீசியது ஜப்பான். “நீங்க வீசினது வெறும் கோலிக்குண்டு நாங்க போடறோம் பாரு அதுதான் குண்டு” என்று பதிலடி கொடுக்க அமெரிக்கா போரில் குதித்தது.

போரின் விளைவாக தொழிற்சாலைகளில் உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. உற்பத்தி மளமளவென அதிகரித்தது. விளைவு 1942 ல் அமெரிக்கா மாமூல் நிலைமையை எட்டியது. கிரேட் டிப்ரஷன் போயே போச்சி.

கிரேட் டிப்ரஷனும் உலகம் முழுவதையும் சீரழித்தது. அதனால் அதையும் உலகப்போரின் பட்டியலில் சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்படிப்பார்த்தால் உலகை உலுக்கியவை மூன்று உலகப்போர்கள்.

இதை எழுதும் நோக்கம் அமெரிக்க சரித்திரத்தை எழுத வேண்டும் என்பதல்ல  “இயற்கை வளங்கள பாதுகாக்க இப்பவாச்சும் கவனிக்கலாம் சாமி” என்று சொல்லத்தான்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, இமெயில்: gsbahavan@gmail.com
----------------------------------------------------------------------------------------------------

No comments:

LEARN TO BUILD A ROBOT - ரோபோக்களை நாமே தயார் செய்யலாம்

கடிதம் 7 ரோபோக்களை நாமே தயார் செய்யலாம் LEARN TO BUILD A ROBOT ரோபோக்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நிறைய புத்தகங்கள் வந்துள்...