Thursday, August 3, 2017

ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் 32 வது அதிபர் ஆனார் - ROOSEVELT BECAME THE PRESIDENT OF USA


 

                 ரூஸ்வெல்ட்               
  அமெரிக்காவின் 
32 வது அதிபர் ஆனார்

ROOSEVELT
BECAME THE
PRESIDENT OF USA

யாரும் நம்ப மாட்டார்கள், கடுமையான பஞ்சமும் வேலையில்லாத் தி;ண்டாட்டமும் வாட்டி வறுத்தெடுத்தது அமெரிக்காவை 1930 களில் என்றால். ஆனால் அதுதான் உண்மை. 1929 ஒரு கருப்பு ஆண்டு.

அப்போதுதான் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் கண்ணாடிச்சில்லுகளாக நொறுங்கிப்போனது.  வியாபார நிறுவனங்கள் அடுக்கிய சீட்டுக்கட்டுகளாய் சரிந்து போயின. வங்கிகள் தங்கள் கதவுகளை இறுக இழுத்துப் பூட்டின. பெருநகர சாலைகளில் வேலைவாய்ப்பின்றி மக்கள் அலையும் நிகழ்வுகள் பெருகின.

அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி ஹூவர் செய்வதறியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தார். அதைத் தவிர ஒரு துரும்பையும் அவரால் கிள்ளிக்கூட போட முடியவில்லை.

அரசியல் தலைவர்களும் அரசாங்கமும் ஏதாவது செய்யும் என மக்கள் எதிர்பார்த்தனர். நிலைமை மோசமானதே தவிர சீரடையவில்லை.

 இதற்கிடையே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் (FRANKLIN DELANO ROOSEVELT) என்ற விவசாயி அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். இந்த பொருளாதார  சீரழிவைச் சரி செய்யும்  திட்டத்தோடு ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தார் ரூஸ்வெல்ட்.

நொறுங்கிப் போயிருந்த அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்யவும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்செய்யவும், ஃபாஸ்ட்புட் மாதிரி ஒரு திட்டம் வைத்திருந்தார் ருஸ்வெல்ட். தனது வயலில் தனக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திட்டத்தை வகுத்திருந்தார்.

இந்த திட்டத்திற்கு “ரூஸ்வெல்ட்டின் நியூ டீல் ஆர்மி” (NEW DEAL ARMY)என்று பெயர் வைத்தனர். இதுதான் பின்னர் சி சி சி ஆனது. சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (CIVILIAN CONSERVATION CORPS) என்பதுதான் இதன் ஆங்கில நீட்சி. தமிழில் இயற்கைவள பாதுகாப்பு ராணுவம்.

இயற்கை வளங்களை பாதுகாக்க ஒரு பிரம்மாண்டமான இளைஞர் படையை உருவாக்கினார். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களை இந்த படையில் சேர்த்தார். பயிற்சி தந்தார். சீர் கெட்டிருந்த இயற்கை வளங்களை சீர்படுத்தினார்.

நிலங்கள் மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டன. நீராதாரங்கள் புத்துயிர் பெற்றன. நிலங்களின் தன்மைக்கு ஏற்ற புதிய பயிர்முறை அறிமுகம் செய்யப்பட்டது, கால்நடைகளுக்கு தீவன உற்பத்தி மேம்படுத்தப்பட்டது. காடுகள் காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டன. மரங்கள் பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டன. ஓடைகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பாலங்கள் கட்டப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. புதிய டெலிபோன் லைன்கள் அமைக்கப்பட்டன. மாநில வனப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. காடுகளில் தரமற்ற மரங்கள் வெட்டப்பட்டு உயர்தர மரவகை நடப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 150 வகையான வேலைகளை செய்தது சி சி சி.

பெயர் மட்டும் அல்ல, திடடத்தையும் ஒரு போரைப்போல நடத்தினார் ரூஸ் வெல்ட். தொழிலாளர்துறை, வேளாண்மைத்துறை, போர் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றிடம் திட்டத்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். ரூஸ்வெல்ட்டின் செல்லத் திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.

ராபர்ட்ஃபெச்னர் (ROBERT FECHNER) என்பவரை இதற்கு இயக்குநராக நியமித்தார்; ஃபெச்னர் முதல் உலகப்போரின்போது லேபர் பாலிசியின் சிறப்புச் செயலராக பணிபுரிந்தவர். ரூஸ்வெல்ட்’ன் நம்பிக்கையைப் பெற்ற அரசு அதிகாரி.

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திட்டம் இது. ஒன்று நிலவளத்தை மேம்படுத்தி மண்ணரிப்பைத் தடுத்து,  நீர் ஆதாரங்களை சீர் செய்து, வனங்களை மேம்படுத்தி, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், இரண்டு வேலை வாய்ப்பை அதிகரித்தல், மூன்று  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்துதல்.

ஒரே வரியில் சொல்வதானால், இயற்கைவளங்களை பாதுகாத்து மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டம்தான் சி சி சி. இதைத்தான் நாம் இன்று நீhவடிப்பகுதி திட்டம் என்று நாம் செயல்படுத்தி வருகிறோம். இதனை நாம் ஆங்கிலத்தில் வாட்டர்ஷெட் டெவலப்மெண்ட் (WATERSHED DEVELOPMENT)என்கிறோம்.

இந்த திட்டம்தான் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை காப்பாற்றியது. இன்று உலகத்தின் பணக்கார நாடாக நடைபோடும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கிப்பிடித்தது இந்த சி சி சி தான். அதற்கான அடித்தளத்தை அற்புதமாக வடிவமைத்தார் ரூஸ்வெல்ட்.


பூமி ஞான சூரியன், செல்பேசி; +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com









No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...