வாங்க போர் செய்யலாம்
ஒரு நாட்டிற்கு எது பாதுகாப்பு ? எது அரண் ?
கண்டம்விட்டு கண்டம்தாக்கும் ஏவுகணைகளா ?
ஹிரோஷிமா நாகசாஹி ஆகிய ஜப்பானிய நகரங்களைப்போல பூமிப்பரப்பை சாம்பலாக்கி புல் பூண்டுகள் முளைக்க விடாமல் செய்யும் அணுகுண்டுகளா ? இந்த கேள்விகளுக்கு பதில் நீங்கள் சொல்ல வேண்டாம். நானும் சொல்லமாட்டேன்.
இந்த கேள்விக்கு “இல்லை” என்று பதில் சொல்லுகிறார் தாத்தா திருவள்ளுவர்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடு முடைய தரண்.
இயற்கை வளங்கள்தான் ஒரு நாட்டிற்கு அரண் என்கிறார். அதிலும் குறிப்பாக தண்ணீருக்குத்தான் தனி இடம். அதனால் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த இடத்தை வான்சிறப்பு என்று மழைக்குத்தான் மகுடம் சூட்டுகிறார்.
இன்று இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரு ஆண்டில் பயன்படுத்தும் நீரின் அளவு 3 லட்சம் கோடி காலன்(GALLON) என்று கணக்கு சொல்லுகிறார்கள்.
ஒரு நபர் ஓர் ஆண்டு முழுவதும், 365 நாளில் உபயோகிக்கும் நீரின் அளவு 450 காலன் அல்லது 90000. லிட்டர். அப்படியென்றால், ஒரு நபர் ஒரு நாளில் பயன்படுத்தும் நீர் 24.65 லிட்டர்.
இந்த அடிப்படையான கணக்கை வைத்து ஒவ்வொரு கிராமத்திற்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்று கூட கணக்கிட முடீயும். ஆனால் இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நகரத்தில் வசிப்பவர்களின் தேவை அதிகம். கிராமத்தினரை விட கூடுதலாக இருக்கும்.
உதாரணமாக தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்குத் தேவை 16 லிட்டர் என்று ஆய்வுகள் மூலம் கணக்கெடுத்தார்கள்.
இந்த 16 லிட்டர் தேவை அடிப்படையில் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் 10 லட்சம் வீடுகளில் மழை நீரை அறுவடை செய்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள் .
எவ்வளவு குறைவான மழை பெய்தாலும் மழைநீரை அறுவடை செய்தால் நீர் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்பதற்கு உதாரணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம்.
இந்த மாவட்டத்தி;ன் ஆண்டு சராசரி மழைஅளவு 200 மில்லி மீட்டர் மட்டுமே. எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும், மழைநீரை அறுவடை செய்யாமல் இருந்தால் அங்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். இதற்கு வாழும் உதாரணம் சிரபுஞ்சி. இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 11440 மில்லி லிட்டர். அங்கு ஆறு மாதம் குடிநீர்ப்பஞ்சம். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்.
மழை குறைவு அதனால் வறட்சி. மழை குறைவு அதனால் குடிநீர்ப் பஞ்சம். மழை குறைவு விவசாயம் பொய்த்துப் போனது. இவை எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கான சமாதானங்கள்.
இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாடம் என்று சொல்கிறார்கள் சிரபுஞ்சி மக்கள். ஆனால் இது உண்மையில் நாம் எல்லோருக்குமான பாடம்.
இப்போது மழை அறுவடை செய்வதில் இறங்கிவிட்டது சிரபுஞ்சி. அரசு, தொண்டு நிறுவனங்கள், மக்கள் என மூன்று அணிகளும் களத்தில் இறங்கி நிற்கின்றன. இஸ்ரேல் நாட்டின் தொழில் நுட்பங்களை ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது சிரபுஞ்சி.
வரும்காலத்தில் உலகப்போர் வந்தால் அதற்கு காரணமாக இருக்கப் போவது தண்ணீர் என்று சொல்கிறார்கள் அறிஞர்கள். நீர் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்க செயல்படுத்தும் திட்டங்களை போர் என்று அழைக்கிறது இஸ்ரேல்.
நீர் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பதில் உலகத்தின் முன்னணி நாடு இஸ்ரேல். அது எப்படி இந்த பிரச்சனை தன்னுடைய நாட்டில் கையாளுகிறது என்று நாம் தெரிந்துக் கொள்வது நமக்கு உபயோகமாக இருக்கும்.
நீர் அறுவடை கழிவுநீரை மறு சுழற்சிசெய்தல், கடல்நீரை உப்பு நீக்கி தொழிலகங்களால் சுத்திகரித்தல், ஆகியவற்றை தண்ணீர் பிரச்சனையாக தீர்க்க இஸ்ரேல் தனது ஆயுதங்களாக பயன்படுத்தி வருகிறது.
உலகிலேயே கழிவுநீரை சுத்தம் செய்து பயன்படுத்துவதில் முதலிடம் இஸ்ரேல். இந்த நாட்டின் மொத்த கழிவு நீரை முக்காவாசி அளவு சுத்திகரித்து உபயோகிக்கிறது.
இஸ்ரேலை தவிர்த்து, கழிவு நீரை சுத்திகரிப்பதில் குறிப்பிடும்படியாக இரண்டு நாடுகளைச் சொல்லலாம். ஓன்று ஸ்பெயின், இன்னொன்று யு.எஸ்.ஏ. இரண்டும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றன.
கழிவுநீரை மறு சுழற்சி செய்வதில் ரசாயனப் பொருட்களைப் பயன் படுத்துவது போக முக்கியமாக உயிரியல் முறையினைக் கையாளுகிறார்கள்.
கழிவு நீரில் இருக்கும் தூசு துப்பட்டைகள், அழுக்கு அனாச்சாரம், ஓடுகள் என அனைத்தையும் சாப்பிட்டு சுத்தம் செய்கின்றன சில மீன்கள். இதற்காக இரண்டு வகையான மீன்களை இவர்கள் வளர்க்கிறார்கள்.
பிரேசில் நாட்டில்கூட, மழைநீர் அறுவடைத் தொட்டியில் இருக்கும் நீரை, ஒரு வகையான மீன் கொண்டு சுத்தம் செய்கிறார்கள்.
நம்நாட்டில் கூட தண்ணீரில் கொசுக்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை அழிக்க “கமப்;யூசியா” என்னும் மீன் வகையை பயன்படுத்துகிறார்கள்.
உப்பு நீரில் தொழிலகங்கள் என்னும் ‘டிசலைனேஷன் பிளாண்ட்’ன் மூலம் சுத்தம் செய்யும் நீரை முழுமையாக இஸ்ரேலியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
கடல்நீரை ‘மணல் வடிகட்டி’ என்னும் ‘சேண்ட் பில்டர்’ மூலம் வடிகட்டி பின் ஆர்.ஓ. என்று சொல்லப்படும் ‘ரிவர்சிபிள் ஆஸ்மாஸிஸ்’ மூலம் சுத்தம் செய்கிறார்கள்.
நீர் சேமிப்பைப் பொருத்தவரை பெய்யும் மழைநீரில் 10 முதல் 12 சதம் நீர்அறுவடை செய்துவருகிறார்கள்.
கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதை 75 லிருந்து 80 சதமாக உயர்த்துவோம். எங்கள் உப்பு நீக்கி தொழிலகங்கள் முழுமையான உற்பத்தியை எட்டும்படி செய்வோம். நீர் அறுவடையை எப்போதும்போல செய்வோம். இன்னும் ஒருசில ஆண்டுகளிலேயே எங்கள் தண்ணீர் பிரச்சனையை தகர்த்து எறிவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல. தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக நாங்கள் தொடுத்திருப்பது போர்; அந்த போர் தொடரும் என்றும் உறுதியாக சொல்கிறார்கள்.
அந்த போரை நாமும் தொடங்கலாமே !
பூமி ஞானசூரியன் - செல்பேசி - +918526195370, மின்னஞ்சல் :gsbahavan@gmail.com
No comments:
Post a Comment