Monday, July 24, 2017

KODAIKANAL LAKE - கொடைக்கானல் ஏரி



                                                         கொடைக்கானல்  ஏரி

தமிழ்நாட்டின் அழகான சுற்றுலாத்தலங்கள் என்;று  பட்டியல்  போட்டால்  முதல் இரண்டு இடத்தை  சிபாரிசு இல்லாமல் பிடிப்பவை, ஊட்டி  மற்றும் கொடைக்கானல்.   இரண்டும் மலை மீது  வீற்றிருக்கும் நகரங்கள்.  மரக்காடுகள் போய் கான்கிரீட் காடுகள்  மலிந்துவிட்டதால் ஊட்டியைவிட தூக்கலாக ஜொலிக்கிறது கொடைக்கானல்.   

சிறுவர்கள்,  சிறுமிகள்,  இளைஞர்கள்,  இளைஞிகள்,  ஆண்கள்;,  பெண்கள்;  இப்படி எல்லா வயதினரையும்   கவரும் ஒரேஇடம்   கொடைக்கானல்  ஏரி. அதன் முகப்பில் இருக்கும்  அழகிய  போட் கிளப்  கட்டிடம்.   மிதிவண்டி  போல மிதித்தும்,  துடுப்புக்களால் துழாவியும்,  என்ஜின்களை பொருத்தியபடியும்; பயணிகளுடன்  ஏரியில் நீந்தும்  பல்வகைப் படகுகள்.  எப்போதும் சுறுசுறுப்பாய்  மக்கள் கூட்டத்துடன்  அசைந்து செல்லும் ஏரியின் கீழ்த் திசைச்சாலை. 

பல் வண்ணப் பூக்களுடன்  நம்மைக் கவர்ந்திழுக்கும் தென்திசைப் பூங்கா.  ஏரியைச்சுற்றிலும் வலம் வரும் தார்ச்சாலைகள்.   அவற்றின் விளிம்பில் ஆகாயத்தை துழாவியபடி  நிற்கும் யூகலிப்டஸ் மற்றும் பைன்மரங்கள்;  அத்தனையும் ஏரியின் அழகுக்கு  அழகு சேர்க்கும் அம்சங்கள்.

சிறுவர்  சிறுமியர், என்ஜின் வைத்த படகுகளில் சவாரிசெல்ல வேண்டும்.  இளைஞர்கள், இளைஞிகளுக்கு   ஏரியோர சாலைகளில்  குதிரை  சவாரியை பரிட்சித்துப் பார்க்க  வேண்டும். பெற்றோர்களைப்  பொருத்தவரை  குழந்தைகளை பத்திரமாக  பார்த்துக்கொள்ள வேண்டும். 

பெரியவர்கள்  ‘நாங்க இங்கேயே   உட்கார்ந்துக்கிட்டு  இருக்கோம்.   நீங்க பார்த்துட்டு சீக்கிரமா வந்துடுங்க’  என்று சொல்லிவிட்டு  ஸ்வெட்டரின் பட்டன்களை   கழுத்துவரை போட்டபடி  வசதியான ஒரு பெஞ்சில்     உட்கார்ந்துக்   கொள்வார்கள். 

இது தவிர சாலை ஓரங்களில், குவியல் குவியல்களாக ஸ்வெட்டர்களை குவித்துவைத்தபடி  நேப்பாள நாட்டு சகோதர, சகோதரிகள்  வியாபாரத்தில் குறியாய் இருப்பார்கள்.  குழந்தைகள் விரும்புகின்ற  பல வண்ண பிளாஸ்டிக்  மற்றும் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள்,  பேட்டரியில் ஓடும் கார், ஜீப், ஏரொப்ளேன், ட்ரெய்ன்  போன்ற விளையாட்டு சாமான்கள்,  அத்தனையும் பெற்றோர்களின் பொறுமையை  சோதிக்கும்.  

 கொடைக்கானல்  ஏரியை  வெட்டியவர்  சர் வெர்ரி  ஹென்றி லெவின்ங்கி  (SIR VERE HENRY LEVINGE) என்ற வெள்ளைக்காரர்,    பிரிட்டிஷ்  ஆட்சியில்;   மதுரை மாவட்டத்தின் அன்றைய கலெக்டராக இருந்தார்.  ஆனால் கொடைக்கானலை  ஒரு நகரமாக  உருவாக்கியவர்கள்,  பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த  பாதிரிமார்கள்.

ஆண்டு தோறும் ஏரிக்கு பக்கத்தில் இருக்கும்,  பூங்காவில் பூக் கண்காட்சி நடைபெறும்.  அரசு தோட்டக்கலைத்துறை  இதனை ஏற்பாடு  செய்யும்.  மலைப்பகுதியில் வரும்  பூக்கள், செடிகள் என  அனைத்தும் கண்காட்சியில் இடம்பெறும்.  பலவண்ண  மலர்களைக் கொண்டு,  பல்வேறு வடிவங்களில் அலங்கரித்து  காட்சிக்கு வைத்திருப்பார்கள்.  தனிப்பட்ட  நபர்களும் தங்கள்  பூக்களை,  செடிகளை காட்சிக்கு வைக்கலாம்.  அழகான பூக்களுக்கும் செடிகளுக்கும்  பரிசுகள் வழங்கி,  ஊக்கப்படுத்துவார்கள். 

கொடைக்கானல்  செல்ல விரும்பும்  சுற்றுலாப்பயணிகளுக்கு, உதவும் வகையில்  ரயில் தடம் ஒன்று ஏற்பாடு  செய்யப்பட்டது. இந்த ரயில் சென்னையிலிருந்து  திருநெல்வேலி வரை செல்லும்.  இதில்  பயணம் செய்து அம்மையநாயக்கனூர்  ரயில்  நிலையத்தில்  இறங்கி, அங்கிருந்து பஸ்ஸில் கொடைக்கானல் செல்ல முடியும். 

கொஞ்சநாளில் அம்மைநாயக்கனூர்,  ரயில்  நிலையம்  கொடைரோடு  ஆனது.  ரயில்  நிலையத்திலிருந்து  80 கி.மீ. பஸ்ஸில் போனால் கொடைக்கானலை  அடையலாம்.  பழனியிலிருந்து  64 கி.மீ.   மதுரையிலிருந்து 135 கி.மீ.    தொலைவிலும்   உள்ளது கொடைக்கானல்.
 
கொடைக்கானல்   ஏரிக்கு  மூன்று ஓடைகள் நீரை  சீராக அளிக்கின்றன.  ஏரியிலிருந்து அதிகப்படியாக  வடியும் நீர்   பெருமாள் மலை என்னும்  இடத்தில்  180 அடி உயரத்திலிருந்து வெள்ளியருவி  (SILVER FALLS) என்னும் நீர் வீழ்ச்சியாக   இறங்குகிறது.  இந்த இடம்  ஏரியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது .
 
இப்பகுதியின் பிரதான மலர்ச்செடி,  13 ஆண்டுகளுக்கு ஒரு முறை  பூக்கும்  குறிஞ்சி  மலர்.  இதன் தாவரவியல் பெயர்  ஸ்ட்ரோபிலான்த்தஸ்  குந்த்தியானா. (STROBILANTHUS KUNTHIANA) 2004ல்   பூத்த   குறிஞ்சி  இந்த ஆண்டு  2016  ல்   மலரக்காணலாம்.  மலை வாழை. ப்ளம்,  பேரி போன்றவை  இப்பகுதியின் பிரபலமான பழவகைகள்.  

இந்த ஏரியின் தண்ணீரை ஆய்வு செய்து பார்த்ததில், குடிப்பதற்கோ சமைப்பதற்கோ ஏற்றதல்ல  என கண்டுபிடித்துள்ளனர்.  சுற்றுலா பயணிகளின் வரவு மற்றும்  சுற்று வட்டாரத்தில் குடியிருப்போர்,  ஏரியை சுற்றியிருக்கும்    உணவு விடுதிகள்,  இதர வியாபார ஸ்தலங்கள் அனைத்தும்  ஏரி நீரை மாசுபடுத்தி வருகின்றன.  ஏரி நீரில்  பாதரசக்கழிவுகள்  கலந்திருப்பதாக  ‘டிப்பார்ட்மெண்ட் ஆப்  அட்டாமிக் எனர்ஜி’(DEPARTMENT OF ATOMIC ENERGY) என்னும்  அரசுத்துறை  தனது ஆய்வில்  கண்டுபிடித்துள்ளது.

எரிக்கரையிலிருந்து  200  அடி தொலைவிற்கு   எவ்விதமான  கட்டிடங்களும்  கட்டக் கூடாது என்னும் கோர்ட்  உத்தரவு   உள்ளது.  ஆனாலும்  இதுபற்றி  யா ரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

இந்திய அரசின்  சுற்றுசூழல் மற்றும்  காடுகள்,  அமைச்சகத்தின் ஆய்வுப்படி,  சுத்தம் செய்ய வேண்டிய அசுத்தமான ஏரிகள்  என 65 ஏரிகளை அடையாளம்  கண்டிருக்கிறார்கள்.  ஆந்த 65 ல் கொடைக்கானல்  ஏரியும் ஒன்று.

 நேஷனல்  கன்சர்வேஷன்  பிளான் (NATIONAL CONSERVATION PLAN)  என்ற திட்டப்படி, இந்த 65  ஏரிகளும் சுத்தப் படுத்தப் படும்.   இந்த திட்டத்தில்;   பயோ  ரெமெடியேஷன் என்ற முறை  கையாளப்பட உள்ளது. 

கழிவுநீரை சுத்திகரித்தல்,   சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல்,   விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,  ஏரியில் வளரும் நீர்  தாவரங்களை   நீக்குதல், இடையே  அவசரத் தேவையாய் கருதுபவைகளை   செய்தல், வேலிகள் அமைத்தல், குதிரை லாயங்கள் நிறுவுதல்,  புள்ளி விவரங்கள் சேகரித்தல்,  ட்ரெட்ஜிங்  (DREDGING)  போன்ற  வேலைகள்  இத்திட்டத்தில்  அடங்கும்.  

அதுபோன்ற  காரியங்களை செய்வதில்  உள்ளுர் மக்களை ஈடுபடுத்தி செய்வதன் மூலமாக மட்டுமே  நீடித்த அல்லது நிலைத்த,  மாற்றங்களை கொண்டுவர  முடியும். மீண்டும் மீண்டும்  மாசு படுவதை  எப்போதும் தடுக்க முடியாது. தொடர்ந்து   இதற்கு  நிதி ஆதாரங்கள் தேடுவதும், அவ்வளவு சுலபமான காரியம் அல்ல
.   
(சொற்குற்ற்றம்  பொருட் குற்றம் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். கூடுதல் தகவல் இருந்தால் அனுப்பி வையுங்கள் )

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...