Wednesday, July 19, 2017

WATER - FLOOD CONTROL STRATEGIES - வெள்ளம் தடுக்க என்ன செய்யலாம் ?

                          
வெள்ளம் தடுக்க  
என்ன செய்யலாம்  ?


2015 ஆம்ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தை சுலபமாக மறக்க முடியுமா  ?

காரும் பஸ்சும் ம் போன சாலைகளில்   படகுகள்  போனவற்றை  மறக்க      முடியுமா  ?  தரைத்தளம் தண்ணீரில் மூழ்கி இருந்தது.  மொட்டைமாடியில்,  ஹெலிகாப்டரின்   உணவுப்  பொட்டலங்களுக்காக  குழந்தைகளுடன் காத்திருந்த மக்களை மறக்க முடியுமா  ?  பிணமான  அவன் மனைவியின்  பிணத்தோடு   கண்ணீர் வடித்தபடி   தண்ணீர் வடிவதற்காக  காத்திருந்த  கணவனை  மறக்க      முடியுமா  ?

தமிழக ஆறுகளின்  இணைப்புக்  கால்வாய்த்  திட்டங்கள் என்ற நூலின்  ஆசிரியர் பொறியாளர்   தீ .நடராஜன்  சென்னையில் வெள்ளத்தை  தடுக்க மூன்று முக்கியமான வழிமுறைகளை தனது நூலில் குறித்துள்ளார்.
  
முக்கியமான மூன்று கருத்துக்களை முன்வைக்கிறார்.  ஒன்று  குடிமராமத்து முறையை மீண்டும் செயல்பாட்டிற்கு       கொண்டு வருவது. இரண்டாவது  நீர் ஆதாரங்களின்  கரையோர குடிசைகளை  அப்புறப்படுத்தி அவர்களை மாற்று இடங்களில்  குடி அமர்த்துதல்.  மூன்றாவது மிகையான வெள்ளநீர்க்; காலங்களில், நீர் தங்கு  தடையின்றி கடலில்  சேர்ப்பதற்கு  ஏற்ப ஆறுகளை சீர் செய்வது.  

இந்த மூன்றையும்  சரிவர  செய்துவிட்டால், வெள்ளம் வந்தால்கூட சென்னை வாசிகள்   எப்போதும் போல,  பல்லவனில்  பயணம்செய்து  ஆபிசுக்குப் போய்வரலாம்.  

குடிமராமத்து: வீட்டிற்கு ஒரு ஆள் என்று  ஒன்று சேர்ந்து  ஊருக்கு பொதுவான வேலைகளை  ஊதியம் வாங்காமல் செய்வதுதான்,  குடிமராமத்து. திருவிளையாடற் புரராணத்தில் பிட்டுக்கு  மண்சுமந்த  சிவபெருமான்    பிரம்படி பட்டது கூட  குடிமராமத்து வேலையின்  போது தான்.

சேர, சோழ,  பாண்டியர்கள்  மற்றும்  பல்லவர்  காலத்திலும் கூட மக்கள் அமைப்புக்களே  இயற்கை  வளங்களைப்   பாதுகாத்தனர். 

அறநிலையங்கள்,  நீதிநெறிமுறை ஆகியவற்றை பராமரிக்க தனி வாரியம் இருந்தது. நாணயங்கள்  தொடர்பான   வற்றை  கவனிக்க  பொன் வாரியம். வரித்தண்டல் செய்ய பஞ்ச வாரியம் மற்றும்   நீர் நிலைகளை கவனிக்க ஏரி வாரியங்களும் இருந்தன.  ஆட்சி முடியாட்சியாக இருந்தாலும்   குடியாட்சி யாகவே  அது செயல்பட்டது  என எழுதுகிறார்  தமிழ்நாட்டு வரலாற்று நூலின் ஆசிரியர்  இறையரசன்.

நூறுநாள் வேலைத்திட்டத்தின்  நிதியை இதற்கு பயன்படுத்தலாம்.  நகர்ப்புறங்களில் கூட  நீர்நிலைகளை பராமரிக்கும்  வேலைகளை  இத் திட்டத்தின் கீழ் செய்யலாம்.  இதுபோன்ற வேலைகளைச்  செய்வதற்காக  உடல்  உழைப்பு தரக்கூடிய  இளைஞர்களைத்  திரட்டலாம்.  

வடஅமெரிக்காவில்   1930 வாக்கில்  இயற்கை வளங்களை பாதுகாக்க இளைஞர்படை ஒன்றை  (CIVILIAN CONSERVATION CORPS) நிறுவினர்.    அதில்   வனங்கள் பாதுகாப்பு ராணுவம் (TREE ARMY) மண்பாதுகாப்பு வீரர்கள், (SOIL SOLDIERS) என்று தனித்தனி அமைப்புக்கள்  செயல்பட்டன.  

பண்டை தமிழர் வாழ்க்கை முறையில்  பரிச்சயத்தில்  இருந்தவை  அனைத்தும் வெள்ளைக்காரர்களின்  ஆட்சியில்  வழக்கொழிந்து  போயின.    அப்போது உழவுத் தொழிலுக்கு  முன்னுரிமை  அளிக்கப்படவில்லை.  இயற்கை வளங்கள்  பாதுகாக்கப்  படவில்லை. (இப்போ என்ன வாழுதாம் என்று முணுமுணுப்பது கேட்கிறது)

இதனால் அந்த காலகட்டத்தில்  பஞ்சங்கள் ஏற்பட்டன.  தமிழ்நாட்டின்   பஞ்சத்திற்கு   ஆயிரக்   கணக்கானோர்  பலியாயினர்.  இதில் அதிகம் பலியானது  வட ஆற்காடு   மாவட்டத்தினர். அங்கு மக்கள் கீரையையும்  ,களி  மண்  உருண்டைகளையும் தின்றனர்  என  சரித்திர ஆசிரியர்கள்  எழுதுகின்றனர்.

இரண்டாம் பிரச்சனை  நீர்பிடிப்பு பகுதிகளில்  கால்வாய்களின் ஓரத்தில்,  குடிசைகளை  குடியிருப்புக்களை அகற்றலாம். அவர்களுக்கு மாற்று இடங்களை  வீடுகட்ட ஒதுக்கலாம். அவர்களுக்கு   பட்டா கொடுக்கலாம். அந்த மனையின் விலைக்கு ஏற்ப அவர்களுக்கு     குறைச்சலான வட்டிவிகிதத்தில்  கடன் கொடுக்கலாம்.  பதினைந்து அல்லது 20 ஆண்டுகளில்  அதனை வட்டியும் முதலுமாக  வசூல் செய்யலாம்.  ஆக்கிரமிப்புக்களை அகற்ற அருமையான யோசனை இது. 

ஆனால் சிலர் இந்த மனையை கடனில் வாங்கி அதில் வீடுகட்டி   வாடகைக்கு விட்டுவிட்டு  மறுபடியும்  கால்வாய் ஓரத்தில் கால் கிரவுண்ட்  கிடைத்தாலும்  ஆட்டையை  போட்டுவிடுவார்கள்.  ஏரிகளுக்கும் குளங்களுக்கும், அந்தக் கால்வாய் மூலம்தான்  தண்ணீர்  வரும்.  அந்த வரத்துக் கால்வாயில் ஆக்கிரமிப்பு  இருந்தால்,  சொட்டு தண்ணீர் கூட  ஏரிக்கு வராது.  இது குளங்களுக்கும் பொருந்தும். 

"அப்போதெல்லாம்  ஒரு மழை  பேஞ்சா  எங்க  ஏரி ரொம்பி   கோடி போவும்,  இப்போல்லாம்  எவ்ளோ மழை பேஞ்சாலும்  ஏரிக்கும்  கையளவு  தண்ணீ கூட சேரமாட்டேங்குதுங்க" பல  கிராமத்து  பெரியவர்கள் சொல்லுவதை நான் , கேட்டிருக்கிறேன்.  இதற்கு முக்கிய காரணம்  ஆக்கிரமிப்பு.

பல இடங்களில் ஏரிகளில்   திடீர் நகர் ஏற்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  முதல்நாள் காலி ஏரியாக இருக்கும்.  அடுத்த நாள் பார்த்தால் நூறு  குடிசைகள் இருக்கும. குடிசைகள் ஊடாக  இரண்டு மூன்று கட்சிக்   கொடிகள் பறக்கும். 
நரி வலம்  போனா என்ன  ?   நரி  இடம்போனா என்ன  ?  நம்மை  கடிக்காம  போனாசரி.  நூற்றுக்கு  தொண்ணூற்று எட்டு  சதவீத அதிகாரிகள்  அப்படித்தான்.   

அந்த இரண்டு சதவீத அதிகாரிகளை  இரண்டு ஆண்டில் இருபத்தியெட்டு இடத்திற்கு மாற்றுவார்கள். கடைசிவரை தண்ணீர் இல்லாத  காட்டில் காலம்பூராவும் அலைந்துக் கொண்டிருப்பார்கள் அவர்கள்.   

ஆனால்  இப்படிப்பட்ட  பொருப்புக்கள், மக்கள் கையில் இருக்க  வேண்டும்.  அப்படியிருந்தால் கொடியேற்றும் சால்ஜாப்பு எதுவும் நடைபெறாது.  இந்த வியாதிக்கு   உள்ளுர்க்காரர்கள்தான்  சரியான மருந்தைக்  கொடுப்பார்கள்.
கிராமம் நகரம் என்ற பாகுபாடு  இல்லாமல்  எல்லா இடத்திற்கும் ஏற்ற  சர்வரோக நிவாரணி குடிமராமத்து. 
 
ஆக்கிரமிப்புக்களை அகற்றிவிட்டால்,  கால்வாய்களை சுலபமாக  ஆழப்படுத்தலாம்,  அகலப்படுத்தலாம்,  கரைகளை பலப்படுத்தலாம்.  நீரோட்டத்தை சீர் செய்யலாம்.  வேலி மீறிய கிளைபோல  தண்ணீர்  கால்வாயை  மீறாது.
  
குடியிருப்புக்களில்,  வெள்ளம் புகாமல் தடுக்கும்  மூன்றாவது ஆயுதம், தங்கு தடையின்றி தண்ணீர்  ஓட,  தடம் ஏற்படுத்தித் தருவதுதான். 

அதற்கு கடந்த 30  ஆண்டுகளில்,  சென்னை நகரில் பெய்த மழையினை  ஆய்வு செய்ய வேண்டும்.    எத்தனை முறை வெள்ளம் வந்தது  ? எத்தனை முறை  பேரழிவுகளை   ஏற்படுத்தியது  ?  ஆய்வு செய்ய வேண்டும்.
முப்பது ஆண்டு காலத்தில் ஏற்பட்ட  பெரிய வெள்ள நீரின்  அடிப்படையில்  நீர் ஆதாரங்களின்  அளவுகளை கணக்கிடவேண்டும்.   அதற்கேற்றபடி மாற்றங்களை  செய்ய வேண்டும்.  ஆழம் அகலம்  எவ்வளவு  இருக்க வேண்டும்  என முடிவு செய்ய வேண்டும்.  

அதற்கேற்ற படி  மாற்றங்களை செய்ய  வேண்டும்.  இடம் அளித்தால்  வெள்ளத்தின் கொள்ளிடத்திற்கு ஏற்ப  நீர்வள ஆதாரங்களில்  போதுமான; இடம் அளித்தால், வெள்ளம் கரைக்குள்  அடக்கி  வாசிக்கும்.  குடியிருப்புகளில் புகுந்து  அழிச்சாட்டியம் செய்யாது.

ஏரி வாரியம் போன்ற  நீர் நிர்வாகம்  அமைப்பை  உருவாக்குவுது,  நீர் ஆதார எல்லைக்குள்  நீர் ஆதார  எல்லைக்குள்  அத்து மீறல்களை அப்புறப்படுத்துவது,  வெள்ளம் வரும் காலத்திலும்  நிலை குலையாத நிலைக்கு  நீர்  ஆதாரங்களின் எல்லைகளை  விசாலப்படுத்துவது போன்றவைதான்   நம்மை வெள்ளத்திலிருந்து   காப்பாற்ற   உதவும்  கவசங்கள்  என்கிறார்  பொறியாளர் தீ.  நடராஜன்.

பூமி ஞானசூரியன் - செல்பேசி: 8526195370, மின்னஞ்சல் :gsbahavan@gmail.com





No comments:

உண்மையா இப்படியெல்லாம் நடக்குமா ? UNBELEIVABLE , BUT ITS ALL TRUE

உண்மையா  இப்படியெல்லாம்  நடக்குமா ? எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்தாலும் எவ்வளவு குரூரமான குற்றங்களைச் செய்தாலும்     அவுங்க திருந்த வாய்ப...