Thursday, July 20, 2017

DRIP IRRIGATION - வேருக்கு நீர் ஊட்டும் அம்மா

                                                              

 வேருக்கு நீர் ஊட்டும் அம்மா

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் பெயர் குப்புசாமி. அவர் எப்போதும் காலையில் எழுந்த உடனே வயக்காட்டுக்குப் போவார். அப்படி ஒரு நாள் வயல் வரப்பில் நடந்து கொண்டிருந்தார். அவருடைய  கம்பு பயிரில் களை மண்டிப்போய் இருந்தது.

இனிமேலும் களை எடுப்பதைத் தள்ளிப்போட முடியாது என்று தோன்றியது. அப்போது தள்ளிப்போட முடியாத இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வந்தது. 

அதாவது அவருடைய தம்பிக்கு பெண் பார்த்து முடிக்க வேண்டும். பெண் பார்ப்பது சாதாரண காரியம் இல்லை. அந்த காலத்தில் பெண் பார்ப்பதாக இருந்தாலும் மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தாலும் 10 செருப்பு தேய வேண்டும்.

கம்புக்கும் களை எடுக்க வேண்டும். தம்பிக்கும் பெண் பார்க்க வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தார். அடுத்த நாளே கம்புக்கு களை எடுக்க 10 பெண்கள் வேண்டும் என்று தம்பிக்கு கட்டளை போட்டார்.

களை எடுக்கும் வேலை 5 நாட்களுக்கு நடந்தது. தினமும் 10 முதல் 15 பெண்கள் களை எடுக்க வந்தார்கள்.. அவர்களை மேற்பார்வை பார்க்கும் வேலையையும் தம்பியிடமே ஒப்படைத்தார்.

ஆறாவது நாள் தம்பி அண்ணனிடம் வந்து வெட்கப்பட்டு நின்றார். "என்னடா பொண்ணு பாத்துட்டியா ? யாருன்னு சொல்லு தை முடியறதுக்குள்ள முடிச்சிடலாம் என்றார்." அண்ணன் கம்புக்கு களையும் எடுத்து முடித்தார் தம்பிக்கு பெண்ணும் பார்த்து முடிச்சார்.

கம்புக்கு களையெடுத்த மாதிரி தம்பிக்கு பெண் பார்த்த மாதிரி சொட்டுநீர் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதுடன் உரத்தையும் அதில் கலந்து கொடுத்துவிடலாம். உரமும்  மிச்சம் ! நேரம் மிச்சம் ! காசும் மிச்சம் ! எப்படி என்று பார்க்கலாம்.

சொட்டு நீர் பாசனத்தின் அடிப்படை இதுதான். சொட்டு நீர் பாசனம் பாசன நீரை வேர் பகுதிக்கு செல்கிறது. பாசன நீர் விரயமாவது இல்லை. அதுபோல சொட்டு நீரில் உரத்தை கரைத்து பயிர்களுக்கு அளிக்கலாம்.

பாசனமும் கொடுக்கலாம். உரமும் கொடுக்கலாம். இந்த முறையில் நீரையும்இ உரச்சத்துக்களையும் சொட்டு நீர்ப்பாசனம் வேர்களுக்கு அருகில் எடுத்துச் சென்று   பயிர்களுக்குக் கொடுக்கிறது.

இதனால் உரம் வீணாவதில்லை. உரங்களை சிக்கனமாக இட முடிகிறது. பயிர்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. சாகுபடி செலவு கணிசமாகக் குறைகிறது. உரமிடுவதற்கு ஆகும் ஆள் செலவு குறைகிறது. களை முளைப்பது குறைகிறது. பூச்சி நோய் தாக்குதல் குறைகிறது. மகசூல் அதிகரிக்கிறது.

சொட்டுநீர் பாசனத்தில் உரம் உட் செலுத்தப் பயன்படுத்தும் உபகரணங்கள்
இதற்கு வென்சரி, உரத்தொட்டி, உரச் செலுத்தி ஆகிய மூன்று கருவிகளில் ஒன்றினைப் பயன்படுத்தலாம்.

வென்சரி மிக எளிமையான விலை குறைவான கருவி. உரக்கரைசலை இது மெயின் சொட்டுநீர் குழாயில் உட்செலுத்துகிறது. சிறிய பாசனப் பகுதிக்கு ஏற்றது. 

அடுத்து உரத்தொட்டி.  மெயின் சொட்டுநீர் குழாயில் செல்லும் நீரின் ஒரு பகுதியை தொட்டியின் மூலம் செலுத்தவேண்டும். தொட்டியில் இடும் உரம் இந்த நீரில் கரைந்து பாசன நீருடன் கலக்கும். 

மூன்றாவது உரம் உட்செலுத்தி. இந்த கருவி குழாயில் செல்லும் நீரின் அழுத்தத்திலேயே இயங்கும். நீர் மற்றும் உரத்தின் விகிதாச்சாரம் எப்போதும் ஒரேமாதிரியாய் இருக்கும்.

சொட்டுநீர்ப் பாசனம் மூலம் உரம் அளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

இதனால் உரம் பயிர்களின் வேர்ப் பகுதிக்கு கிடைக்கிறது. பயிரின் தேவைக்கு ஏற்ப பலமுறை பிரித்துக் கொடுக்கலாம். உரமிடும் ஆட்செலவு குறைகிறது. உரத்தின் பயன்பாட்டுத் திறன் 90 சதமும் மேல்தூவும் முறையில் 50 சதமூம் குறைகிறது. உரச் செலவு 25 சதம் குறைகிறது.
என்ன உரங்களை கொடுக்கலாம் ?

அம்மோனியம் நைட்ரேட், யூரியா ஆகியவை நீரில் முழுசாய் கரையும் தழைச்சத்து உரங்கள். மோனோ மற்றும் டை அம்மோனியம் பாஸ்பேட், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவை நீரில் முழுசாய் கரையும் மணிச்சத்து உரங்கள். போட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவையும் இந்தவகை சாம்பல் சத்து உரங்கள்.

சொட்டுநீர்ப் பாசனத்திற்கான சிறப்பு உரங்கள்.

மோனோ அம்மோனியம் பாஸ்பேட், பாலிபீட் மல்ட்டிகே. பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவை  சொட்டுநீர்ப் பாசனத்திற்கான சிறப்பு உரங்கள். இந்த உரங்களில் இரும்பு, மங்கனீசு, போரான், மாலுப்டினம், தாமிரம், துத்தநாகம் ஆகிய நுண்நூட்டச் சத்துக்களும் உள்ளன.

முக்கியமாய் கவனிக்க வேண்டியவை

உரம் தூசு தும்பு இல்லாமல் சுலபமாகக் கரையுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பழவகை மற்றும் புகையிலை பயிர்களுக்கு குளோரைடு உரங்களை உபயோகிக்கக் கூடாது.

சொட்டு நீர்க் கருவிகளை அரிக்கும் உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. அதிக அளவு உரத்தைப் பயன்படுத்தக் கூடாது. உரங்களைப் பிரித்து பல முறையாக இட்டால் பலன் அதிகம்.

குறுகிய காலகிப் பயிருக்கு (காய்கறிகள்) வாரம் ஒருமுறை. நீண்டகாலப் பயிருக்கு ( கரும்பு, வாழை ) 2 வாரத்திற்கு ஒரு முறை.

மூன்று கருவிகளில் ஏதாவதொன்றை நீர் வடிகட்டிக்கு முன்பாக மெயின் குழாயில் பொருத்திக் கொள்ளவேண்டும். ஒரு பங்கு உரத்தை 5 பங்கு நீருடன் கரைக்க வெண்டும். உரக் கரைசலை செலுத்தும் முன் சொட்டுநீர்ப் பாசனத்தை 20 நிமிடம் இயக்க வேண்டும்.

உரம் உட் செலுத்தும் அமைப்பின் வால்வுகளை இயக்கி உரத்தை நீருடன் கலக்குமாறு செய்ய வேண்டும். உரக்கரைசல் தீர்ந்த பிறகும் 15 நிமிடம் சொட்டுநீர்க் கருவியை இயக்கி உரக்கரைசல் முழுவதும் வெளியேறும்படி செய்ய வேண்டும்.
சொட்டுநீரில் அடைப்பு எப்போது ஏற்படும் ?

உப்புத்தனமை உடைய பாசன நீரைப் பாய்ச்சும்போது நாடைவில் குழாய்களில் அடைப்பு ஏற்படும். அடைப்பை நீக்க பிரதானக் குழாயின் இறுதியில் உள்ள பிளஷ் வால்வை இயக்க வேண்டும். பக்கவாட்டுக் குழாயின் இறுதியில் மடக்கி வைக்கப்பட்டு அமைப்பைத் திறந்து நீரை வெளியேற்றலாம்.
ஐந்துசத நீர்த்த கந்தக அமிலத்தை உட் செலுத்தியும் ஒரு இரவு வைத்திருந்து பின் அமிலத்தை வெளியேற்றி அடைப்பை நீக்கலாம்.

குழந்தைக்கு சோறு ஊட்டும் அம்மா மாதிரி பயிர்களின் வேர்ப்பகுதிக்கு நீர் ஊட்டுகிறது சொட்டுநிர்ப்பாசனம். 

பூமி ஞானசூரியன் - +918526195370



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...