Wednesday, July 19, 2017

FOUR SIXTH OF OUR RAIN GOES WASTE - VEENAI POGUM MAZHAI


வீணாய் போகும் மழை 

'அடேய் காவலா, என்னுடைய ராஜ்ஜிய பரிபாலனத்தில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா ? மக்கள் சுபீட்சமாக இருக்கிறார்களா ? "

'உங்க ஆட்சியில் ஜனங்க கவலையின்னா என்னென்னு கேக்கறாங்க மகாராஜா. மாசத்துக்கு மூணு மழை மணி அடிச்ச மாதிரி பேயுது. பாலாறும் தேனாறும் மாறி மாறி பாயுது.;  புலியும் மானும் ஆத்துல பக்கம் பக்கமா நிண்ணு தண்ணி குடிக்குது மகாராஜா" இன்றும் கூட தமிழ்நாட்டு தெருக்கூத்தில் இது பிரபலமான வசனம்.

அந்த காலத்தில் 'எந்த ராஜா எந்;த பட்டினம் போனாலும்";  மாதம் மூன்று மழை. 365 நாள் கொண்ட ஒரு ஆண்டில் 36 மழை, அதாவது 10 நாளைக்கு ஒரு மழை மணி அடிச்ச மாதிரி பெய்தது. மண் கண்டத்தில் ஈரம் காத்துக் கிடந்தது. ஓர் ஆண்டில்; மூன்று போகம் விளைந்தது; கட்டு கலம் கண்டது; கதிர் உழக்கு கண்டது.

கணினியும் வலைத்தளமுமாக மாறிவிட்ட இந்த தகவல் யுகத்தில் வாழும் நம்மை விட நமது முன்னோர்கள் மழை பற்றி நிறைய செய்திகளை விரல் நுனியில் வைத்திருந்தார்கள்.

இன்றும் விவசாயம் சோறு போடும் தொழிலாக இருந்தாலும் 'நெல் காய்ப்பது செடியிலா மரத்திலா என்று நமது குழந்தைகளால் 'டக்" கென்று பதில் சொல்ல முடியவில்லை. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் ?;

குளியல் அறை குழாயில் தண்ணீர் வரவில்லையா ? சமையல் அறையில் திடீர் என்று தண்ணீர் வராமல் வேலை நிறுத்தம் செய்கிறதா ? மானாவாரி நிலத்தில் விதைத்த கடலை காய்கிறதா ? ஒண்ணரை லகரத்தில் போட்ட போரில் தண்ணீருக்கு பதிலாக காற்று வருகிறதா ? ஆயிரம் அடி ஆழ்குழாய் கிணறு ஆறே மாதத்தில் அம்போ என்று கைவிட்டு விட்டதா ?  அப்போது மட்டும்தான் நமக்கு மழை நினைவுக்கு வரும். கஷ்டம் வரும்போது மட்டுமே கடவுள் ஞாபகத்துக்கு வருவது மாதிரி.

ஒர் ஆண்டில்; சராசரியாக தமிழ்நாட்டில் கிடைக்கும் மழை 950 - 970 மில்லி மீட்டர். ஒட்டுமொத்த இந்தியாவில் கிடைப்பது 1250 மில்லி. உலக நாடுகளின் ஆண்டு சராசரி மழை வெறும் 800 மில்லி மீட்டர்.

தமிழ்நாட்டின் மழை அளவும், இந்திய நாட்டின் மழை அளவும் உலக நாடுகளின் மழை அளவைவிட அதிகம். இது ஒரு சராசரி மனிதனை மிரட்டும் சேதி !

' தேவைக்கு மேல் பெய்து கொண்டுதான் இருக்கிறேன். அதை சேமித்து வைத்துக் கொள்ள துப்பு இல்லை என்றால் அது யாருடைய தப்பு ?" மழைக்கு பேசத் தெரிந்தால் இப்படி கேட்கும். அதற்கு பேயத் தெரியுமே தவிர பேசத் தெரியாது.

முட்டிக்கு மேல் டவுசர் போட்ட மூணாங்கிளாஸ் மாணவன் கூட 'உலகில் அதிக மழை எங்கே பேய்கிறது" என்று கேட்டால் டக்'கென்று சொல்வான் 'சிரபுஞ்சி" என்று. கொஞ்சம் வயசான பெரியவர்கள் தான், ரஷ்யா அமெரிக்கா என்று தடுமாறுவார்கள்.

உலகின் மிக ஈரமான பகுதி என்று கொண்டாடும் சிரபுஞ்சி, இந்தியாவில் வடகிழக்கு பகுதியில்; மேகாலயாவின் ஒரு நடுத்தர நகரம், இன்றும் கூட மூக்கின்மேல் விரல்வைக்கும் அதிகாரப் பூர்வமான ஆண்டு சராசரி மழை 11444 மில்லி மீட்டர்.

உலகத்தில் அதிக மழை ஊற்றும்; ஊர் சிரபுஞ்சி என்பது தெரிந்த சேதி. ஆனால்; ஓர் ஆண்டில் ஆறு மாதம் 'குடம் இங்கே குடிநீர் எங்கே?" என்று சிரபுஞ்சி தாய்மார்கள் குடத்துடன் குரல் கொடுப்பது தெரியாத சேதி. 'எங்க ஊர்ல அதிக மழை பேயுதுன்னு  அஜாக்கிரதையா இருந்துட்டோம். எவ்வளவு பேஞ்சாலும் அதை சேமிக்கலன்னா நம்ம தண்டிக்காமல் விடாது தண்ணீர் என்று புரிஞ்சிகிட்டோம். இது எங்களுக்கு மழை சொல்லித் தந்த பாடம்"; என்கிறார்கள் சிரபுஞ்சிக்காரர்கள்.

'புத்திசாலிகள் அடுத்தவர் அனுபவங்களில் கற்றுக்கொள்ளுவார்கள்" நாம் சிரபுஞ்சியைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும்;.; ஏற்கனவே பெரிய விலையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.

இன்று பஸ்ஸில், ரயிலில், டிக்கட் வாங்கவில்லை என்றால்கூட தண்ணீர் பாட்டில் வாங்காமல் யாரும் ஏறுவதில்லை.  

இன்னும் சில ஆண்டுகளில் சாலைகளில் பெட்ரோல் பங்குகளைவிட தண்ணீர் பங்குகளை அதிகம் பார்க்கலாம்; பல்குத்த குச்சி செய்யும் வியாபாரிகள் நுகர்வோர் தலையில் மிளகாய் அரைக்க நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெய்யக்கூடிய மொத்த மழைநீர் ஆறு பங்கு என்றால் அதில் ஒரு பங்குதான் ஆற்றில் ஓடும். ஆறு என்பது அதனால் வந்த பெயரா ? மீதம் உள்ள ஐந்து பங்கு நீர் பூமிக்குள் இறங்கும். அந்த ஐந்து பங்கில் நான்கு பங்கு நம் கையில் அகப்படாத நீh,; அந்த நான்கு பங்கும் சேதாரம் ஆகிவிடும். கடைசி ஒரே ஒரு பங்கு மட்டுமே நிலத்தடி நீராக தங்கும். 

இந்தத் தோராய கணக்குப்படி, தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை 970 மிமீ. அதில் ஆற்றின் ஓடும் நீரின் அளவு 161.6 மிமீ. நிலத்தடி நீராக சேகரம் ஆவது  161.6 மிமீ.  இதில் 646.8 மிமீ நீர் வீணாகப் போகிறது. 

இதே ரீதியில் பார்த்தால் இந்தியாவில் ஓர் ஆண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 1250 மிமீ. அதில் ஆற்றின் ஓடும் நீரின் அளவு 208.3 மிமீ. நிலத்தடி நீராக சேகரம் ஆவது 208.3 மிமீ. மட்டும்தான். இதில்  833.4 மிமீ நீர் வீணாகப் போகிறது.

'நமக்கு கிடைக்கும் மழை அதிகம். உலக நாடுகளின் சராசரி மழை அளவைவிட அதிகம். மழை சில ஆண்டுகளில் குறைவாகப் பெய்யும். சில ஆண்டுகளில்; அதிகமாகப் பெய்யும். பருவ மழை சில ஆண்டுகள் சரியான சமயத்தில் பெய்யும். சில ஆண்டுகள் தாமதமாகப் பெய்யும். சில ஆண்டுகள் பரவலாகப் பெய்யும். சில ஆண்டுகளில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கூட பெய்துவிட்டு கம்பி நீட்டும். தேவையான சமயத்தில் பேயாது. 

பல சமயங்களில்;. சிலசமயம் உடுக்கை இழந்தவன் கைபோல கை நீட்டும்" இதுதான் மழையின் கேரக்டர். இதற்கு முக்கிய காரணம் பருவநில மாற்றம்.

அந்த மழை நீரை ஒழுங்காய் சேமித்தால் தண்ணீர் பஞ்சம் வராது. வரட்சிவராது. பயிர் இழப்பு வராது. விவசாயிகளுக்கு வருமான இழப்பும் வராது. கிராமத்தில் ரீயல் எஸ்ட்டேட்டும் வராது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளையும் தவிர்க்கலாம், தடுக்ககலாம்.

இதை வீட்டிலும் செய்யலாம் பயிர் செய்யும் காட்டிலும் செய்யலாம். எப்படி செய்யலாம் என்பதைத்தான் நாம் திட்டமிட வேண்டும்.

பூமி ஞானசூரியன் - 8526195370




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...