Sunday, July 30, 2017

சரக்கொன்றை சர்வதேச அளவிலான அழகு பூ மரம் - SARAKONRAI - TREE OF SUPREME FLOWERS


                                            

 சரக்கொன்றை 
சர்வதேச அளவிலான 
அழகு பூ மரம்

SARAKONRAI - TREE OF 
SUPREME
FLOWERS

                              தாவரவியல் பெயர்: கேசியா பிஸ்டூலா (CASSIA FISTULA)
                              தாவரக்குடும்பம்: சீசால் பீனியேசியே (CESALPINEACEAE)
                             பொதுப் பெயர்: கோல்டன் ஷவர் ட்ரீ (GOLDEN SHOWER TREE)
                                                                  சொந்த நாடு:இந்தியா
ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

ஐரோப்பாவின் மிக அழகான மரத்தின் பெயர் ஐரோப்பிய லெபர்னம்; மரங்களின் மஞ்சளழகி சரக்கொன்றையின் சர்வதேசப் பெயர் இந்திய லெபர்னம்; தங்கக் குளியல் எனும் ‘கோல்டன் ஷவர்’ இதன் ஆங்கிலப் பெயர்.  
அளவெடுத்து தைத்த சட்டையைப் போல தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற தகுதியான மரம். 

நெடுநெடுவெனவும்  வளராது ; குறு மரமாகவும் வளராது; நடுத்தரமாக வளரும்.

தலைபருத்த  பஞ்சு மிட்டாய் போல  தழை அமைப்பு கொண்ட  மரம்.

மழைக்காலம்  முடிந்த பின்னால்  பாருங்கள் !  இலைமுழுக்க  உதிர்த்துவிட்டு  எக்ஸ்ரே  மரம்போல  நிற்கும். 

வெய்யில் விஸ்வரூபம் எடுக்கும்  மாதங்களில்தான் சரக்கொன்றை மரத்தில் அரைத்த மஞ்சள் நிறத்தில் பூங்கொத்துக்கள் புறப்பட  ஆரம்பிக்கும்.

ஆங்கிலத்தில் இதனை தங்கக் குளியல் மரம் என அழைத்தாலும்
தமிழில் இதனை பீறிட்டுக் எழும் தங்க ஊற்று எனலாம்.
 
அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தால்; பகல் இரவு  தெரியாது; பார்க்கும்போதே  பாதங்களில்;  வேர் இறங்கினாலும்  பலருக்கும்  தெரியாது. 
 
சரக்கொன்றை மரத்தில் காய்கள் இறங்கிவிட்டால் கரடிகளுக்கும் குரங்குகளுக்கும் கொண்டாட்டம் தான் ;காரணம்  அவைதான் கரடிக்கு குச்சி மிட்டாய் ; குரங்குக்கு குருவி மிட்டாய். 


ஓட்டைகள் போடாத  முரட்டு புல்லாங்குழல் இதன்  நெற்றுகள்;  அதற்குள் அடுக்கிவைத்த  புதிய பத்துரூபாய் காசு மாதிரி  விதைகள்; ஒரு புல்லாங்குழலில்;  ஒரு நூறு இசை  ஒளிந்திருப்பது போல  ஒரு நெற்றில்  ஒரு  நூறு  விதைகள் ஒடுங்கி  இருக்கும் ..!

இலை பூ, காய் நெற்று   மரம் வேர்  அத்தனையும்மருந்துகள்  செய்ய  மகத்தான  சரக்குகள்  என்கிறார்கள் சித்த மருத்துவ  சிறப்பு  அறிஞர்கள்.

கரிசல்  மண் தவிர,  அனைத்து மண் கண்டங்களிலும் சரக்கொன்றை செழித்து வளரும். 

மண் கண்டம்  குறைந்த  கரம்பிலும்  வறண்ட  மணலிலும்கூட  சரக்கொன்றை சரஞ்சரமாய்  பூத்து   சாதனை  செய்யும்.

ரகசியமாய்ச்  சொல்லுகிறேன்  கேளுங்கள் !

அய்நூறு மில்லி  மழைகூட  ஆண்டு  முழுவதும் பார்க்காத 
ராஜஸ்தானத்து   மண்ணில்கூட சரக் கொன்றை சட்டமாய் வளரும். 

விதையாக விசிறி விதைக்கலாம்; நாற்றாக  நடவு செய்யலாம்;  வேர்ச்  செடியாக  எடுத்து நடலாம் !  

'இது வெறும்  மரக்கொன்றை  அல்ல் சரக் கொன்றை"

அழகு தேவைப்படும் அத்தனை இடங்களிலும் சரக்கொன்றையை சகட்டு மேனிக்கு நடலாம். 

பூமி,  ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com







No comments:

LEARN TO BUILD A ROBOT - ரோபோக்களை நாமே தயார் செய்யலாம்

கடிதம் 7 ரோபோக்களை நாமே தயார் செய்யலாம் LEARN TO BUILD A ROBOT ரோபோக்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நிறைய புத்தகங்கள் வந்துள்...