மழை நீர் அறுவடை
நமது உடனடி தேவை
RAIN HARVESTING
OUR IMMEDIATE
NEED
ஒரு நாட்டின் பொதுவான இயற்கை வளங்கள், அந்த நாட்டுக்;குத் தான் சொந்தம். நதிகள், காடுகள், மலைகள், அனைத்தும் நாட்டுக்குத்தான் சொந்தம். ஆனால் அதைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும், அத்தனையும் அந்த குடிமக்களைச் சார்ந்தது.
மன்னர்களுடைய காலத்தில் முடியாட்சியாய் இருந்தபோது கூட, அரசு நிர்வாக இயந்திரத்ததை, நிர்வகித்தது குடியாட்சி.
நமது மாவட்டத்திற்கு என்ன தேவை ? எங்கு தேவை ? எப்படி தேவை ? எப்போது தேவை ? என்றெல்லாம் மக்கள் தெரிந்திருந்தால்தான், அவற்றை அரசிடம் கேட்டுப்பெற முடியும்.
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும். என்கிறது விவிலியம். நாம் முதலில் எதற்காக தட்டவேண்டும் ? எதைத் தட்ட வேண்டும். ? இதனை புரிந்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் என்ன இருக்கிறது ? முதலில் இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் நமக்கு என்ன தேவை என்பது விளங்கும்.
நம் ஊரில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது ? இன்னும் எவ்வளவு தண்ணீர் தேவை ? அதனை எப்படி பெருக்குவது ? என்றெல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நம் ஊரில் அதிகம் பயன்படுவது கிணற்றுப் பாசனமா ? ஏரிப்பாசனமா ? இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிணற்றுப்பாசனம்: திறந்தவெளி கிணறுகளிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதுதான் கிணற்றுப்பாசனம் .தண்ணீரை கிணற்றிலிருந்து இறைக்க ‘ஏற்றம்’ என்ற எளிமையான கருவி ஆரம்ப காலத்தில் பயன்பட்டது. ஏற்றம் இறைக்க இரண்டு பேர் தேவைப்பட்டது. வேலைச் சுமை ,உடல்வலி தெரியாமலிருக்க பாடிக்கொணடே இறைப்பார்கள். அந்தப் பாடல்களுக்கு ‘ஏற்றப்பாட்டு’ என்று பெயர். ஏற்றப்பாட்டு மிகவும் பிரபலமானது.
ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்பது பழமையான சொல்வழக்கு. ‘மூங்கில் இலைமேலே’ என்ற பாட்டை பாதியிலே விட்டு விட்டுப் போய்விடுவான் ஒரு ஏற்றக்காரன். அதைக் கேட்டுக்கொண்டிருந்தார் கம்பர். அதனை எப்படி முடிப்பது என்பது தெரியவில்லை. கடைசியாக அவனிடமே அவர்கேட்க ‘மூங்கில் இலைமேலே தூங்கும்பனி நீரே’ என்று சொல்லி ஆச்சரியப் படுத்துவான் அந்த ஏற்றக்கார பாட்டுக்காரன்.
பின்னர் மாடுகளை வைத்து ‘கமலை’ என்னும் கருவியினைப் பயன்படுத்தியும் நீர் இறைத்தார்கள்.
ஏற்றம், கவலையைத் தொடர்ந்து ஆயில் என்ஜின் நீர் இறைத்தது. மக்கள், மாடுகள் கவலையும் ஒழிந்தது. மின்சாரம் வந்தது. மின் மோட்டார் நீர் இறைத்தது. இவை எல்லாமே கிணற்றுப் பாசனம்தான்.
குழாய் கிணற்றுப் பாசனம்: நிலத்தில் துளையிட்டு குழாயினை இறக்கி நீர் இறைக்க ஆரம்பித்த பின்னால்தான் நிலத்தடி நீருக்கே ஆபத்து வந்தது. பத்தடி, பதினைந்தடி தோண்டினால் போதும். தண்ணீர் எம்பிககுதிக்கும் ஒரு காலத்தில்.
இப்போதெல்லாம், ஆயிரம் அடி ஆழத்திற்கு நிலத்தைக் குடைந்தாலும் தண்ணீருக்கு பதிலாக எம்பிக் குதிப்பது, போர்போடுபவர்களின் கண்களில் கண்ணீர்தான். போர் போடுபவர் கண்களில் கண்ணீர்தான் வருகிறது. போர்-ல் காற்று மட்டும்தான் கனத்த வேகத்துடன் வருகிறது.
வங்கிக் கணக்கில் பணம் போடாமல், பணம் எடுக்க முயற்சிப்பது மாதிரி, மழைநீரை சேமிக்காமல் போர் போட்டால் என்னவாகும் ? தண்ணீர் வராது. காற்றுதான் வரும்.
இப்போதெல்லாம் எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் போடலாம் போர்; எல்லாம் காசுதான். நிலத்தடியில் நீரை சேகரம் பண்ணாமல், எவ்வளவு ஆழம் போட்டு என்ன செய்யமுடியும் ?
குழாய் கிணற்றுப்பாசனம் புற்றீசல் போல பெருகிவிட்டது. இதனைப் பெருமளவு பெருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம் எனபதைப் போல குழாய்க் கிணறும், கண்டிப்பாய் நம்மை தண்ணீர்ப் பஞ்சத்தில் தள்ளிவிடும்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment