புங்கன் -
பயோ டீசல்
தரும் மரம்
PUNGAN
TREE OF
BIO DIESEL
தாவரவியல் பெயர்: டெர்ரிஸ் இண்டிகா (DERRIS INDICA)
தாவரக் குடும்பம்: ஃபேபேசியே (FABACEAE)
பொதுப் பெயர்: புங்கம் (PUNGAM)
தமிழ் இலக்கியங்களில் அகம் சார்ந்த பாடல்கள், அந்த புறம் சார்ந்த சுற்றுச் சூழலையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் என்பார்கள்.
அப்படி ஒரு பாடலில், தலைவனைப் பிரிந்த தலைவி அவனுக்காக காத்திருக்கிறாள்; அப்போது வேனில் என்ற வெயில் முடிந்து இளவேனில் மழையை வருவிக்கிறது; ஆறு நிரம்பி ஓடுகிறது ; கரையோர மரங்களில் மலர்கள் குலுங்குகின்றன; இதனை கலித்தொகை பாடல் ஒன்று படம் பிடிக்கிறது.
'எரிஉரு உறழ இலவம் மலர
பொறிஉரு உறழ புன்குபூ உதிரப்
புதுமலர்க் கோங்கம் பொன்னைத் தாதூழிப்பத்
தமியார்ப் பிறந்துஎறிந்து எள்ளி முனிய வந்து
ஆர்ப்பது போலும் பொழுது; என் அணிநலம் . "
'செவ்லிலவு மரங்கள் நெருப்பை அணிந்துக் கொண்டிருக்
கின்றன ! பொறியினை வாரி இறைத்ததைப்
போல புங்க மலர்கள் உதிர்ந்து
கிடக்கின்றன ! கோங்கம் பூக்கள் பொன் தூள் போல
சிதறிக் கிடக்கின்றன ! இந்த மலர் சூடும்படி என்னவன்
வரவில்லையே ... " என்று ஏங்குகிறாள் அந்தத் தலைவி.
எனக்கு அரைக்கால் சட்டை வயசிலேயே அறிமுகமானது புங்கன் கொட்டைகள்தான்; அவற்றை நான் தாயத்து என்று நினைத்திருந்தேன் ;குழந்தைகள் கழுத்திலும், அரைஞாண் கயிற்றிலும் கட்டிக்கொண்டு இருப்பார்கள்; அதை கட்டிக் கொண்டால் பேய் பிசாசு வராது எனபார்கள்.
யார் சொன்னார்கள் ..? நான்கு சுவர்களுக்கு இடையேதான் குளிர் சாதனம் செய்ய முடியுமென்று ..? நான்கு மூலை ரோட்டில்கூட குளிர்சாதனம் செய்யலாம்; அய்ந்தாறு புங்கம் மரங்களை நட்டுப் பாருங்கள் ! குளிர்சாதனம் காற்றுக்கு குளிர்ச்சி மட்டும்தான் கொடுக்கும்; ஆனால் இம்மரத்தின் தழை காற்றில் கரைந்திருக்கும் தூசையும், மாசையும் துப்புரவாய் துடைத்துத் தரும் !
அது போல புங்கன் கிளைகள் கோணல் மாணலாய் இருந்தாலும், அழகாய் வளரும்.
முழுசாய் பயன்படுத்த்படாத மரங்கள் என்று பட்டியல் போட்டால், அது முன்னூற்றைத் தாண்டும் ! அதில் பிரதானமான ஒன்று தான் புங்க மரம் !
இலைகள் தோல் பதனிடும் தொழிலுக்கு உதவும்; பயிருக்கு உரமாக்கலாம்; தானியம் குதிர்களில் இலைப்பொடி இட்டு பூச்சிகள்; வராமல் அடித்து விரட்டலாம்.
விதைகளில் வடிக்கும் எண்ணெயில் சோப்பு செய்யலாம்; தோல் பதனிடலாம்; டீசல் தயாரிக்கலாம்; வேம்பு எண்ணெய்ப் போலவே புங்கன் எண்ணெய்யும் பூச்சிகளை விரட்ட புத்திசாலித்தனமாய், உபயோகப்படுத்தலாம்.
புங்கன் கொட்டைகள் பார்க்க அழகாய் இருக்கும்; தொட்டுப் பார்க்க மெத்தென இருக்கும்; முதிர்ந்த விதைகள் பார்க்க 'லெதர் கோட் ' போட்டது மாதிரி தெரியும் !
புங்கன் மரத்தை தோட்டத்தைச் சுற்றிலும் நட்டால் அது காற்றுத்தடுப்பு மரம்; வயலில் நட்டால் அது தழை உர மரம்; மண்ணில் நட்டால் அது காற்று அரிப்பு தடுப்பு மரம்; சரிவு நிலங்களில் நட்டால் அது மண் அரிப்பு தடுப்பு மரம்; சாலைகளில் நட்டால் அது நிழல் மரம; பூங்காக்களில் நட்டால் அது பூ மரம்; சாகுபடிக்கு நட்டால் அது எண்ணெய் மரம்; ஆனால்; எங்கு நட்டாலும் அது பருவகால மாற்றத்திற்கு மருந்து மரம் !
மணல்சாரி, செவ்வல், கரிசல், உவர் இப்படி எத்த்தனை வகை மண்ணாக இருந்தாலும் புங்கன் சாதனை நிகழ்த்தும் !
உகாண்டா, கேமரூன், ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில், பாலைவனம் பரவுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக புதிய புங்கன் விதை ஒன்றை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்; இதன் தாவரவியல் பெயர் மில்லேஷியா பின்னேட்டா (MILLETIA PINNATA).
புங்கன் மரம் ஒரு புதையல் மரம் ! எல்லோரும் சொல்கிறார்கள் இது பயோ டீசல் தரும் என்று ! அங்கொன்றும் இங்கொன்றும் ஆமை வேகத்தில், சில ஆய்வுகள் நடக்கின்றன் இந்த ஆய்வுகள் வெற்றி கண்டால், புங்கன் மரம் 'டீசல் மரம்" என்ற புதிய நாமகரணம் பெறும் !
புங்கன் ஓர் எண்ணெய் மரம்; இதன் பயோ டீசலில் கார்கள்; ஓட்டலாம்; உயவு எண்ணெய்யாக உபயோகப் படுத்தலாம்; பெயிண்ட் மற்றும் வார்னிஷ் செய்யலாம்; சோப்பு செய்யலாம்; சீப்பு செய்ய பிளாஸ்டிக் செய்யலாம்; பூச்சிகளைக் கொல்ல மருந்துகளைத் தயாரிக்கலாம்; மனிதர்களைப் பாதுகாக்கவும் மருந்துகளைத் தயாரிக்கலாம்.
ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் கேள்வி. ஏப்போது புங்க மரத்தை டீசல் மரமாக அறிமுகம் செய்யப் போகிறீர்கள் ?
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment