புங்கன்
டீசல் எண்ணெய்
உற்பத்தி மரம்
PUNGAN
BIO DIESEL
PRODUCING
TREE
தாவரவியல் பெயர்:-- டெர்ரிஸ் இண்டிகா (DERRIS INDICA)
தாவரக் குடும்பம்:-- ஃபேபேசியே (FABACEAE)
பொதுப் பெயர்: புங்கம் (PUNGAM)
தமிழ் இலக்கியங்களில் அகம் சார்ந்த பாடல்கள் கூட இயற்கையைப் பரதிபலிக்காமல் இருக்காது என்பார்கள்.
அப்படி ஒரு பாடலில் , தலைவனைப் பிரிந்த தலைவி அவனுக்காக காத்திருக்கிறாள்; அப்போது வேனில் என்ற வெயில் முடிந்து இளவேனில் மழையை வருவிக்கிறது; ஆறு நிரம்பி ஓடுகிறது ; கரையோர மரங்களில் மலர்கள் குலுங்குகின்றன் இதனை கலித்தொகை பாடல் ஒன்று காட்சிப்படுத்துகிறது.
'செவ்விலவு மரங்கள் நெருப்பை அணிந்துக் கொண்டிருக்கின்றன. பொறியினை வாரி இறைத்ததைப் போல புங்க மலர்கள் உதிர்ந்து
கிடக்கின்றன ! கோங்கம் பூக்கள் பொன்தூள் போல சிதறிக்கிடக்கின்றன. இந்த மலர் சூடும்படி என்னவன் வரவில்லையே ... "
இந்த அற்புதமான காட்சியை சொல்லும் பாடல் இது.
'எரிஉரு உறழ இலவம் மலர
பொறிஉரு உறழ புன்குபூ உதிரப்
புதுமலர்க் கோங்கம் பொன்னைத் தாதூழிப்பத்
தமியார்ப் பிறந்துஎறிந்து எள்ளி முனிய வந்து
ஆர்ப்பது போலும் பொழுது; என் அணிநலம் . "
யார் சொன்னார்கள் ..? நான்கு சுவர்களுக்கு இடையேதான் குளிர் சாதனம் செய்ய முடியுமென்று ..?
நான்கு மூலை ரோட்டில்கூட குளிர்சாதனம் செய்யலாம்; அய்ந்தாறு புங்கம் மரங்களை நட்டுப் பாருங்கள் !
குளிர்சாதனம் காற்றுக்கு குளிர்ச்சி மட்டும்தான் கொடுக்கும்; ஆனால் இம்மரத்தின் தழை காற்றில் கரைந்திருக்கும் தூசையும், மாசையும் துப்புரவாய் துடைத்துத் தரும் !
கோடுகளை வளைத்துப் போட்டால்தான் அவை சித்திரமாகும். அது போல புங்கன் கிளைகள் கோணல் மாணலாய் இருந்தாலும், அழகாய் வளரும்;
முழுசாய் பயன்படுத்தப் படாத மரங்கள் என்று பட்டியல் போட்டால், அது முன்னூரைத் தாண்டும் ! அதில் பிரதானமான ஒன்று தான் புங்க மரம் !
இலைகள் தோல் பதனிடும் தொழிலுக்கு உதவும்; பயிருக்கு உரமாக்கலாம்; தானியம் குதிர்களில் இலைப்பொடி இட்டு பூச்சிகள்; வராமல் அடித்து விரட்டலாம்.
விதைகளில் வடிக்கும் எண்ணெயில் சோப்பு செய்யலாம்; தோல் பதனிடலாம்; டீசல் தயாரிக்கலாம்; வேம்பு எண்ணெய்ப் போலவே புங்கன் எண்ணெய்யும் பூச்சிகளை விரட்ட புத்திசாலித்தனமாய், உபயோகப்படுத்தலாம்.
எனக்கு அரைக்கால் சட்டை வயசிலேயே அறிமுகமானது புங்கன் கொட்டைகள்தான்; அவற்றை நான் தாயத்து என்று நினைத்திருந்தேன் ;குழந்தைகள் கழுத்திலும், அரைஞாண் கயிற்றிலும் கட்டிக்கொண்டு இருப்;பார்கள்; பேய் பிசாசு வராது எனபார்கள்.
புங்கன் கொட்டைகள் பார்க்க அழகாய் இருக்கும்; தொட்டுப் பார்க்க மெத்தென இருக்கும்; முதிர்ந்த விதைகள் பார்க்க 'லெதர்; கோட் " போட்டது மாதிரி தெரியும் !
புங்கன் மரத்தை தோட்டத்தைச் சுற்றிலும் நட்டால் அது காற்றுத்தடுப்பு மரம்; வயலில் நட்டால் அது தழை உர மரம் ;மண்ணில் நட்டால் அது காற்றுஅரிப்பு தடுப்பு மரம் ;சரிவு நிலங்களில் நட்டால் அது மண்அரிப்பு தடுப்பு மரம் ;சாலைகளில் நட்டால் அது நிழல் மரம ;பூங்காக்களில் நட்டால் அது பூ மரம்; சாகுபடிக்கு நட்டால் அது எண்ணெய் மரம்; ஆனால்; எங்கு நட்டாலும் அது பருவகால மாற்றத்திற்கு மருந்து மரம் ! எப்படி நட்டாலும் அது பருவகால மாற்றத்திற்கு தடுப்பு மரம் !
மணல்சாரி, செவ்வல், கரிசல், உவர் இப்படி எத்த்தனை வகை மணணாக இருந்தாலும் புங்கன் சாதனை நிகழ்த்தும் !
உகாண்டா, கேமரூன், ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில், பாலைவனம் பரவுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக புதிய புங்கன் விதை ஒன்றை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்; இதன் தாவரவியல் பெயர் மில்லேஷியா பின்னேட்டா (MILLETIA PINNATA )
புங்கன் மரம் ஒரு புதையல் மரம் ! எல்லோரும் சொல்கிறார்கள் இது பயோ டீசல் தரும் என்று ! அங்கொன்றும் இங்கொன்றும் ஆமை வேகத்தில், சில ஆய்வுகள் நடக்கின்றன் இந்த ஆய்வுகள் வெற்றி கண்டால், புங்கன் மரம் 'டீசல் மரம்" என்ற புதிய நாமகரணம் பெறும் !
புங்கன் ஓர் எண்ணெய் மரம்; இதன் பயோ டீசலில் கார்கள்; ஓட்டலாம்; உயவு எண்ணெயாக உபயோகப் படுத்தலாம்; பெயிண்ட் மற்றும் வார்னிஷ் செய்யலாம் ; சோப்பு செய்யலாம்; சீப்பு செய்ய பிளாஸ்டிக் செய்யலாம்; பூச்சிகளைக் கொல்ல மருந்து தயாரிக்கலாம் ;மனிதரைப் பாதுகாக்கவும் மருந்து தயாரிக்கலாம்.
ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் கேள்வி. ஏப்போது புங்க மரத்தை டீசல் மரமாக அறிமுகம் செய்யப் போகிறீர்கள் ?
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment