பவளமல்லி
வீட்டு தோட்ட
அழகு மரம்
PAVAZHAMALLI
TREE OF GARDEN
BEAUTY
(NICTANTHUS ARBORTRISTIS)
தாவரவியல் குடும்பம்: ஓலியேசியே (OLEACEAE)
ஆங்கிலப் பெயர்: ட்ரீ ஆஃப் சாரோ (TREE OF SORROW)
----------------------------------------------------------------------------------------------------------------
பவளவல்லி என்னும் பெயரால் பரவலாக அறியப்படும்
பாரிஜாத மரத்தின் நதிமூலம் சொல்லுகிறேன் கேளுங்கள்
ஒரு ஊரில் ஒரு அரசகுமாரி இருந்தாள்; அழகான அரசகுமாரிகள் அரிதாக இருந்த காலம்அது;;;; அவள் பெயர் பாரிஜாதம் !
அவனி அம்பத்தாறு தேசத்தின் அரசகுமாரர்களும் அந்த
அதி ரூபினியான அந்த அரசகுமாரியைக் காதலித்தார்கள் !
ஆனால் அவளோ ஆயிரம் கிரணம் அணிந்து
ஆகாயத்தில் பயணிக்கும்; ஆதவனைப் பார்த்து மயங்கினாள்
அருணன் ஓட்டிய அழகு ரதத்தில் ஆதவன் அனுதினமும் பயணம் செய்தான்
அணையா அனலையும் தணலையும் அழகாய் மூட்டிச் சென்றான், அவள் மனதில்
பாரிஜாதம் தன் மனதில் ஆசையை விதைத்தாள்; விதை முளைவிட்டு கிளைவிட்டு காதலாய் முகிழ்த்தது; விரைவாய் முகிழ்த்த காதல் ராட்சசமாய் வளர்ந்தது.
“பாரிஜாதம் நீ அழகின் சிகரமாக இருக்கலாம். ஆனால் என் மனதில் நீ ஒரு மண்மேடாகக் கூட இல்லை” என்றான் ஆதவன் ஒரு நாள்; அவள் மனதில் இடியாய் இறங்கியது அந்த சேதி.
பாரிஜாதம,; அழுது புரண்டாள்; வெடித்து விம்மினாள்; அவள் காதல் கானல் நீரானது; ஒரு தலையாய் தொடர்ந்த காதல் ஒன்றுமே இல்லாமல் போனது;; மனம் உடைந்த அந்த மகாரூபினி மரணத்தின் கரம் பற்றினாள்; அவள் அது ஆனாள் .
அவள் அஸ்தியிலே அதிசயமாய் முளைத்தது ஒரு அபூர்வ மரம்;; அந்த அபூர்வமே பாரிஜாதம் ஆனது; பவளமல்லியும் ஆனது.
மரமாக ஜனித்த பாரிஜாதம் அர்த்த ராத்திரியில் பூ பூப்பாள்; அடுத்த நாள் ஆதவன் முகம் காட்டும் முன்னால் அத்தனையும் உதிர்த்துவிட்டு நிற்பாள்.
அவள் கரம்பற்ற மனம் இன்றி கைவிட்ட ஆதவனின் முகம் பார்க்க விரும்பாமல் முகிழ்த்த பூக்கள் அத்தனையும் முற்றாக உதிர்ப்பாள்; உதிர்த்து பூமிக்கு பூச்சூட்டுவாள்.
இதுதான் பாரிஜாத மரத்தின் சோக சரித்திரம் !
பாரிஜாத மரத்தின் பூக்கள் மல்லிகையாய் வாசம் தரும்
நாசியை மிரட்டாத சுவாசம் தரும் !
பாரிஜாத மரங்களை வீட்டின் முகப்பில் நடலாம்; வீதியின் முகத்தில் நடலாம்
கும்பிடும் கோயிலில் நடலாம்; மகிழ்வாய் மசூதியில் நடலாம்; தேடிப்பிடித்து தேவாலயத்தில் நடலாம்.
இந்த தேவ விருட்சத்தின் விதை எடுத்தும் விருப்பமாய் நடலாம்; வெட்டி எடுத்த போத்தையும் நடலாம்.
வளர்ந்த செடியை வெட்டிவிட்டால் குட்டிப் புதராய் குறுகி வளரும்;; வெட்டாமல் விட்டாலும் சிறு மரமாய் சிக்கனமாய் வளரும.;
காசு மண்டலமே கதி என ஆனதனால் காற்று மண்டலமே தூசு மண்டலமானது;பசுமை இல்ல வாயு பலமாய் சேர்ந்து அது மாசு மண்டலமானது.
தூசையும் மாசையும் துடைத்து எடுத்து சுத்தமான காற்றை மட்டுமே சுவாசிக்கத் தரும்.
இமயம் முதல் குமரி வரை வளரும் இந்திய மரம்; உயரம் அதிகம் வளராத அகத்தியர் மரம்; சில இடங்களில் குறு மரம்; பல இடங்களில் சிறு மரம்;
புவள நிறக் காம்பில் சங்கு நிறப் பூக்கள்; ஆண்டு முழுவதும் அயராமல் பூக்கும்; மழை வந்தால் மரம் நிறைய பூக்கும்; ஆசைக்கும் சூடலாம்; பூசைக்கும் சூடலாம்; தைலம் தரும் பூக்கள்; சாயம் தரும் காம்புகள்; முட்டைக்கு மூக்கு வைத்தது போன்ற நீள்வடிவ இலைகள்; பயிர்களுக்கு இட்டால் உரமாகும்; நிலங்களுக்கு இட்டால் அவை தரமாகும்; நட்டு வளர்த்தால் கண்ணுக்கு விருந்தாகும்; கசக்கிப் பிழிந்தால் மருந்தாகும்: பூக்களை கட்டி விற்றால் காசாகும்.
- பூமி, ஞானசூரியன், செல்பேசி: +918526195370: மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment