"என்ன சார் இத்தனை தடவை வர்றீங்க கொடைக்கானலுக்கு ? மதிகெட்டான் சோலை பார்க்கவில்லைங்கறீங்க" என்று கேட்டார் பெருமாள்மலையைச் சேர்ந்த எனது நண்பர் ராமராஜன். பெருமாள்மலை கொடைக்கானலின்; ஒரு பகுதி .வித்தியாசமான பெயராய் இருக்கு என்றேன். பிறகு அதன் விபரம் சொன்னார். மூனார் போகும் வழியில் இருக்கிறது பேரிஜம் ஏரி. அதற்கு பக்கத்தில்இருக்கும் சோலைக்காடுதான் மதிகெட்டான் சோலை என்றார்.
வித்தியாசமான பெயராய் இருக்கே மதிகெட்டான் சோலை என்று அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார், “அந்த காட்டுக்குள் ஒரு மூலிகை இருக்கு .அதுக்குப்பேரு திகைப்பூண்டு. அதை மிதிச்சாலும் சரி தொட்டாலும் சரி. நமக்கு கிறுக்கு புடிச்சிடும். மென்ட்டலா ஆயிடுவோம். நாம யாருன்னு நமக்கே தெரியாது. அது அந்த காட்டுல இருக்கறதாலதான் அது மதிகெட்டான் சோலை" என்று சொல்லி முடித்தார் அவர்.
நீங்க அந்த திகைப்பூண்டு செடியைப் பார்த்திருக்கீங்களா? இப்போ அங்கே இருக்கா ? அதைப்பார்க்;க முடியுமா? இது என்ன நிஜமா கதையா ? கேள்வி மேல் கேள்வியாக கேட்டேன்; அதை நான் பார்த்ததில்லை என்று சொல்லி தனக்கு அறிமுகமான அத்தனை மூலிகைகள் பற்றியும் ஒரு வகுப்பே எடுத்து முடித்தார் .
அதன்பிறகு நான் மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். ஒரு நாள் கொடைக்கானலிலிருந்து மன்னவனூர் என்ற ஊருக்கு விவசாயிகளை பேட்டி எடுப்பதற்காக புறப்பட்டேன். ஜெரானியம் என்னும் வாசைன எண்ணெய்தரும் பயிரை அந்தப்பகுதியில் சாகுபடி செய்து கொண்டிருந்தார்கள். மனதை சுண்டி இழுக்கும் வாசைன அது.
என்னோடு என் நண்பரும் உடன்வந்தார். என் நண்பர் பாபு அந்தப் பகுதியின் தோட்டக்கலை பயிர்களுக்கான உதவி இயக்குநர். அவர் என்னோடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் படித்தவரும் கூட. நான் வானொலி நிலையத்தில் மதுரையிலும், அவர் கொடைக்கானலில்; தோட்டக்கலைத்துறை அலுவலராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
அவருடைய ஜீப்பில் அவரும் நானும் மன்னவனூர் செல்ல புறப்பட்டோம். மலைப்பகுதியில் அதுவும் ஜீப்பில் பயணம் என்றால் எனக்கு குஷி. காலை நேரம் மணி எட்டு இருக்கும். சூரியன் வெளிவர தயங்கிக் கொண்டிருந்தது. மலை முகடுகளில் இன்றும் அடர்த்தியாய் மேகங்கள் நத்தையாய் ஊர்ந்துக் கொண்டிருந்தன. ஜீப்பின் பக்கவாட்டு ஜன்னலில் அடித்த குளிர் காற்றில் எனது கைவிரல்கள் மரத்துப்போயின. நுரையீரல் நடுங்கியது.
மூனார் ரோட்டில் ஏறத்தாழ பாதி தூரம் வந்திருப்போம். "நாம் இப்போது பேரிஜம் ஏரிக்கு பக்கத்தில் வந்துவிட்டோம். வலதுபக்க ரோட்டில் திரும்ப வேண்டும் என்றார். இதுதான் பேரிஜம் லேக். பக்கத்தில் இருப்பதுதான் மதிகெட்டான் சோலை." அவர் சொல்லி முடித்தார். எனக்கு உடனே பெருமாள் மலை நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது.
மதிகெட்டான் சோலை விளக்கத்தை பாபுவிடம் கேட்டேன். அவர் ஆங்கிலத்தில் எனக்கு விளக்கம் சொன்னார். "ஷோலா, வேர் ஒன் லூஸ் ஒன்செல்ஃ;ப் (SHOLA WHERE ONE LOOSE ONESELF)" ஒரு மனிதன் இந்த சோலைக்காட்டின் அழகில், எந்த மனிதனும் தன் வசம் இழந்துவிடுவான்” என்று அதற்கு விளக்கம் சொன்னார். ஆனால் எனக்கு ராமராஜன் சொன்னது மூலிகைக் கதை சரியாக இருக்கும் எனத்தோன்றியது.
பேரிஜம் ஏரியிலிருந்துதான் பெரியகுளத்திற்கு குடி தண்ணீர் போகிறது என்ற விஷயத்தையும் எனக்குச் சொன்னார் பாபு. அங்கிருந்து பெரியகுளம் 18.7 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து நேராய் இறங்கினால் கும்பக்கரை வழியாய் பெரியகுளம் போகலாம்.
பேரிஜம் ஏரி என்று சொன்னாலும், ஒரு நீர் தேக்கமாகக் கட்ட, வாய்ப்பான இடமாக இருந்தது .நிறைய ஓடைகள் தண்ணீரை சேமிக்கும் இடமாகவும் இருந்தது. நீர்த்தேக்கம் அமைத்தார்கள். அதற்கும் பேரிஜம் என்ற பெயரே நிலைத்தது. ஆனாலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பெரும் ஏரிக்கரை சூழ ஏற்பட்ட பெரும்பள்ளமே பேரிஜம் ஏரி.
கொடைக்கானலில் ‘பில்லர் ராக்;’ என்பது பிரபலமான இடம்; அந்த மலைக்குன்றுகளில் கடைசியாக அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. பேரிஜம் ஏரியின் தண்ணீர் சொக்கத் தங்கம். தூசு தும்பு இல்லா நீர். மாசி மரு இல்லா தண்ணீர். பேரிஜம் ஏரி புதைச் சகதி மிக்க இடமாக இருந்தது. இதனை நீர்த் தேக்கம் அமைக்க தேர்ந்தெடுத்த வெள்ளைக்காரர் பெயர் கலோனல் டவுக்ளஸ் ஹாமில்ட்டன்(1864). இதன்நீளம் 8 கி.மீ. அகலம் 1 ,210 மீட்டர் ஆழம் 21 மீட்டர். இங்கிருந்து வடிந்து செல்லும் மிகையான நீர், அமராவதி நதியைப்போய்ச் சேர்கிறது.
இந்த அணைக்கட்டின் நீளம் 180 மீட்டர், அகலம் 91 மீட்டர், ஆழம் 27 மீட்டர். 1867 ஆம் ஆண்டு இதனைக் கட்டி முடித்தனர். சர் வேரி லெவிக்னி என்ற வெள்ளைக்காரர் இதனைக்கட்டினார். அவர் மதுரையில் அப்போதைய கலெக்டராக இருந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கிடைத்த பென்ஷன் தொகையிலிருந்து இதனைக் கட்டச் செய்தார். அதன்பிறகு அணைக்கட்டும் நீர்த்தேக்கமும் மேம்படுத்தப்பட்டது. பின்னர்தான் பெரியகுளத்திற்கு தண்ணீர் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு வெள்ளைக்காரர் தனக்கு சொந்தமில்லாத நாட்டில், தனக்கு ஓய்வுத் தொகையாக கிடைத்த பணத்தில் இந்த அணையைக் கட்டினார் என்பது நம்ப முடியாத செய்தி. இந்தத் திட்டம் 1912 வாக்கில் முடிவடைந்தது. அதற்கு ஆன செலவு 132500 அமெரிக்க டாலர்.
அணைக்கட்டு நீர்த்தேக்கமும் புதியது .ஆனால் இயற்கையாக அமைந்த இந்த ஏரியின் வயது இருபதினாயிரம் வருடங்கள் என அனுமானம் செய்கிறார்கள்.
மேல் பழனி மலையில் பெய்யும் மழைதான் இந்த ஏரிக்கு முக்கிய நீர்வரத்து. இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 1,500 மி.மீ. பழனி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரிதான் வராக நதியின் தொடக்கப்புள்ளி அது குடிநீருக்கும், பாசனத்திற்கும் உதவியாக உள்ளது .
இந்த அணைக்கட்டின் மொத்தக் கொள்ளளவு 1.91 கன ஹெக்டேர் மீட்டர். இது 1911 ஆம் ஆண்டு 1804 கன ஹெக்டேர் மீ ஆகக் குறைந்தது. இதற்கு காரணம் கடந்த 76 ஆண்டுகளாக தூர் எடுக்காததுதான். இதனால் 23 % கொள்ளளவு குறைந்துள்ளது.
இங்கு மிகப் பழமையான இரட்டை மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது.
பிரிட்டிஷ் ராணுவம் ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடம் (BRITISH TRANSMIT CAMP) அது .இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரிடம் தோல்வியடைந்தால் தப்பி ஓட ஒரு மறைவான பாதுகாப்பான சாலை தேவைப்பட்டது. அந்த சாலை ஓரத்தில் கட்டப் பட்டதுதான்; அந்த பாழடைந்த கட்டிடம். பார்க்க பேய் மாளிகை மாதிரி இருக்கும்.
தப்பி ஓடுவதற்கான சாலையை கொடைக்கானலிலிருந்து மூனார் வழியாக கொச்சி வரை அமைத்திருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் இந்த சாலையை எஸ்கேப் ரூட் என அழைத்தனர். தப்பிச் செல்லும்போது இடைஇடையே ஓய்வெடுப்பதற்கு கட்டப்பட்டது தான் அது.
மிகவும் விசித்திரமான தாவரங்களை உள்ளடக்கிய பகுதி இது என்கிறார்கள் தாவரவியல் வல்லுநர்கள். சிறு பூச்சிகளை பிடித்து தின்னும் ஒருவகை செடிகளும் இங்கு உள்ளன. அதன் ஆங்கிலப்பெயர் ‘பிளாடர் வொர்ட்” இதன் தாவரவியல்பெயர் யுட்ரிகுளொரியா ஆஸ்ட்ரேலிஸ் (UTRICULARIA ASTRALIS) இது ஒருவகை மிதக்கும் தாவரம்(FLOATING INSECTIVORUS PLANT).
திகைப்பூண்டு பற்றியும் , மதிகெட்டான்சோலை பற்றியும், சந்தேக அலைகள் என்மனதில் பல ஆண்டுகள் அடித்துக் கொண்டே இருந்தன. 2007 ஆம் ஆண்டு என் சந்தேகத்தை போக்கினார் எனது நண்பர் டாக்டர். ராமலிங்கம். அவர் சென்னையில் இருக்கும் பிரபலமான சித்த மருத்துவர். அவர் எழுதிய பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற நூலில் திகைப்பூண்டு பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் எனக்கு தி.பூ மிதித்தமாதிரி இருந்தது.
கொடைக்கானல் மலைமேல் பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ளது மதிகெட்டான் சோலை. அங்கு உள்ளது தான் திகைப்பூண்டு மூலிகை. அது நம் உடலில் பட்டவுடன் மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும். நினைவுகள் தடுமாறும். தன்னிலை மறக்கும். பின் காட்டிற்குள்ளேயே சுற்றிசுற்றி வந்து இறந்து விடுவார்களாம்.
இதைப்படித்ததும் எனக்கு ஒரு ஆசை. மீண்டும் ஒருநாள்; பேரிஜம் போக வேண்டும். திகைப்பூண்டை தொடாமல் பார்க்க வேண்டும்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல் :gsbahavan@gmail.com
No comments:
Post a Comment