கல்யாண முருக்கு
அம்சமான
ஆட்டுத்தீவன மரம்
KALYANAMURUNGAI
NUMBER ONE
GOAT FODDER TREE
தாவரவியல் பெயர்: எரித்ரீனா இண்டிகா (ERYTHRINA INDICA)
தாவரக் குடும்பம்: பேபேஸி (FABACEAE )
மாப்பிள்ளை முருக்கு என்பதை நாம் கேள்விப்படிருக்கிறோம்; கல்யாண முருக்கு என்பது இதுதான் புதுப்பெயர்; காக்கா பூ மரம், சூடு கொட்டை மரம், தீவன மரம் எல்லாம் இதன் கூடுதலான பெயர்கள்.
பலவகையான பயன்பாடுகளை இது தந்தாலும், பிரதானமாக இது ஒரு தீவன மரம் ;கிராமங்களில், கல்யாண முருக்கு மரம் எந்த வீட்டில் இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக ஆடுகள் இருக்கும்; ஆடுகள் இதன் தழைகளை அல்வா போல ரசித்து ருசித்து சாப்பிடும்.
எனது பள்ளிப்பருவத்தில், சூடுகொட்டை மரம் என்ற பெயரிலேயே இதைத் தெரியும்; குறும்புக்கார சிறவர்கள் பாக்;கெட்டுக்களில், ஐந்தாறு கல்யாணமுருக்கு கொட்டைகள் இருக்கும்; அதன் பெயர் சூடுகொட்டை; சூடுகொட்டையை தரையில் தேய்த்து, நமது உடலில் எந்தப்பதியில் வைத்தாலும், நெருப்பில் சூடு வைத்த மாதிரி இருக்கும்; இந்த சூடு கொட்டையினால் பள்ளிக்கூடத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்; சில சமயம் ஆசிரியர்கள், 'செக்யூரிட்டி செக்கப்' மாதிரி, பையன்களின் பாக்கெட்டுக்களை சோதனையிடுவர்; அதையும் மீறி மாணவர்கள் ரகசியமாக சூடு கொட்டையை எடுத்துச்செல்வர்.
இதன் பூக்கள் இரத்த சிகப்பு நிறத்தில், பெரிய பூக்களாக, இலைகளே இல்லாமல், மரம் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்ததுபோல் இருக்கும்; இந்த மரங்களின் மீது காகங்கள் அதிகம் அமர்ந்து, நீண்ட நேரம் விளையாடும்; இந்தப் பூவில் காகங்கள், தேன் குடிப்பதாக சொல்வர்; அது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.
கல்யாண முருக்கு மரங்களில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன். மரத்தில் முள் இருப்பது, கரிய நிறத்தில் சிறு சிறு முட்கள் இருப்பது ஒருவகை; முட்களே இல்லாதது ஒரு வகை; காப்பித் தோட்டத்தில் நிழலுக்காக வளர்ப்பது இது; இன்னொரு வகையை மிளகுகொடியை ஏற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்; இந்த மரத்தை அழகு மரமாகவும் பயன்படுத்துவர்; இது 15 முதல் 17 மீட்டர் வரை உயரம் வளரும்.
இந்தியாவின் சில பகுதிகளில் வெள்ளை நிற பூக்களையுடைய மரங்கள் உள்ளன. இதன் நெற்றுக்கள் அதிக பட்சமாக அரை அடி அல்லது ஒரு அடி வரை இருக்கும்; கறுப்பு நிறத்தில் இருக்கும்; இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த ஒரு கவர்ச்சிகரமான நிறத்தில், இதன் விதைகள் இருக்கும்; விதைகளைப் பார்ப்பதற்கு பெரிய உருவத்தில் பெரி ய, 'பெரும்பயறு' போல இருக்கும்.
இதன் தழைகளில் புரதம் 16.37 சதம், மாவுப் பொருட்கள் 37.12 சதம், மற்றும் கொழுப்பு சத்து 5.38 சதமும் அடங்கியுள்ளது; ஆடுகள் மாடுகள் என்று அனைத்து விதமான கால்நடைகளுக்கும் தீவனம் அளிக்கலாம்.
இம்மரம் வலுவில்லாதது; சரிவர எரியாது; ஆனால், தீக்குச்சிகள் செய்யலாம்; பெட்டிகள் செய்யலாம்; இதர தட்டு முட்டு சாமான்கள் செய்யலாம்; காகிதக்குழம்பு தயாரிக்கலாம்; படகுகள், தோணிகள், கட்டுமரங்கள் செய்யலாம்.
இந்த மரங்கள் கிராமங்களில், வயல்களில் வேலியாகவும், குளம் மற்றும் குட்டை, ஏரிக்கரைகளில், வீட்டுத் தோட்டங்களில் வளர்ந்திருக்கும் .
நகரங்களில் அழகு மரமாக, வீடுகளின் முகப்பில், தோடத்தில், சாலை ஓரங்களில், பூங்காக்களில், பெரும் கட்டிட வளாகத்துக்குள்; இதனை நட்டும் வளர்க்கலாம்.
ஒரு கிலோ எடையில் சுமார், 2,000. விதைகள் இருக்கும்; இதன் முளைப்புத்திறன் 50 முதல் 60 சதம்; விதைகளை நீரில் ஒரு நாள் ஊற வைத்து விதைத்தால், நன்கு முளைக்கும்; 6 அடி நீளமுள்ள போத்துக்களையும் வெட்டி நடலாம்.
தீவனத்திற்காக நடும்போது, நெருக்கி நட்டு, அவ்வப்போது தழைகளை இறக்கி, கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
இதன் இலைகள் மூன்றிலைகளைக் கொண்டு கொத்து கொத்தாக வளரும்; இந்த மூன்று இலைகளும் மும்மூர்த்திகளை குறிப்பதாக சொல்வர்; வலப்பக்கம் உள்ள இலை சிவபெருமானையும், நடுப்பக்கம் உள்ள இலை பிரம்மாவையும், இடப் பக்கம் உள்ள இலை விஷ்ணுவையும் குறிக்கும்.
ஆடுமாடுகளுக்கென உருவாக்கும் மரத் தோப்புகளிலும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அழகு தரும் மரமாகவும் வளர்க்கலாம.
பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370, மின்னஞசல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment