Friday, July 28, 2017

ஜம்பு நாவல் பாரம்பரிய தமிழ்நாட்டு மரம் - JAMBUNAVAL TRADITIONAL TREE OF TAMILNADU



ஜம்பு  நாவல் பாரம்பரிய 
தமிழ்நாட்டு மரம் 

JAMBUNAVAL 
TRADITIONAL TREE
OF TAMILNADU

இந்தியாவின்  புராதானப் பெயருக்கு காரணமாக இருந்தது; தமிழ் கலாச்சாரத்திற்கு வேராக இருப்பது; சுட்டப்பழம் வேண்டுமா சுடாத பழம்  வேண்டுமா, என்று கேள்வி கேட்டு ஒளவைக்கு பாடம் சொல்லித்தர உதவியாக இருந்தது;    பள்ளிக்  குழந்தைகளுக்கு இன்றும் கூட தின்பண்டமாக விளங்குவது;  ஆப்பிள்  பழத்தைக் கூட பின்னுக்கு  தள்ளிவிட்டு அதிக விலைக்கு விற்பனை  ஆவது;  நீரிழிவு நோய் உட்பட பலநோய்களுக்கு மருந்தாக விளங்குவது;  ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கு மேல்  வருமானம் தரக்  காத்திருப்பது;  இத்தனை பெருமைகளுக்கம் உரியது ஜம்பு நாவல் மரம்.

நாவல் மரத்தின்  தாவரவியல் பெயர் சைசிஜியம்யம்  குமினி  (SYSIGIUM CUMINI);   மிர்டேசியே (MYRTACEAE) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. 

‘ஜம்பூத்வீபம்’ என்பது பாரத தேசத்தின் பழம்பெயர்;  ஜம்பு நாவல் என்பதிலிருந்து பெறப்பட்டது;  இந்திய மரம்;   25 முதல்  35 மீட்டர் வரை வளரும்; 4 செ.மீ. நீளமான உருளையான  பழங்கள் தரும்;  தழை கால்நடைகளுக்கு தீவனம்  தரும்;  பூக்கள்  தேன்  தரும்;  பட்டையில் உள்ள ‘டானின’  மூலம் தோல் பதனிடலாம்;  சாயமேற்றலாம் .  

பழங்களிலிருந்து  ஒயின், சாராயம்,  ஜெல்லி, ஜாம், ஸ்குவாஷ், குளிர் பானங்கள்  அத்தனையும்  தயாரிக்கலாம்.

கொட்டையில் கால்நடைத்தீவனம்  தயாரிக்கலாம்;   நீரிழிவு நோய்க்கு  மருந்தாகப்  பயன்படுத்தலாம்.

      மரங்கள் தேக்கைவிட கடினமானது;  அதனை பயன்படுத்தி பயன் படுத்தலாம்;   அறுத்தும்; இழைத்தும், உபயோகப்படுத்தலாம்;  படகுகள், மேஜை நாற்காலிகள், கதவு ஜன்னல்கள், மற்றும் ஒட்டுப்பலகைகள் செய்யலாம்;   சாலையில்  நட்டால் அழகூட்டும்;  வீசும் காற்றின் வேகத்தை  தடுக்கும்;  தழைகளில் ‘டஸ்ஸார்’ பட்டுப்புழு  வளர்க்கலாம்;  நாவல் இலையும், பட்டையும், பழத்தசையும், விதையும் வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.

மிகவும்  குறைவான மழையுள்ள பகுதிகளில்கூட  வளரும்;  கால்வாய்கள், ஓடைகள், பள்ளமான பகுதிகள் பார்த்து நடவு செய்தால் பழுதுபடாமல் வளரும்.

இருமண்பாடு  கொண்ட மண்;   நீர் தேங்கும் நிலங்கள்,  செவ்வல்  நிலங்கள், மிதமான  உலர் நிலங்கள்,  சுண்ணாம்புத்தன்மை கொண்ட நிலவாகு, போன்ற பரவலான மண்வகைகளிலும்  வளரும்;   மிகையான  கரிப்புத்தன்மை கொண்ட நிலங்களும்,  ஈரமில்லா வறண்ட மணல்சாரி  நிலங்களும் இதற்கு  ஏற்றதல்ல.

      இயற்கை வளங்களை பாதுகாப்பது, பராமரிப்பது, மேம்படுத்துவது;  அவற்றின்  மூலம்  மறைந்திருக்கும் தொழில் வாய்ப்புக்களை செயல்படுத்துவது;  அதன்மூலம் கிராமப்புறங்களில் அதனடிப்படையில் தொழிற்சாலைகளை நிறுவுவது;   அங்கு  வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, நகர்ப்புறங்களை நோக்கி மக்கள்  நகர்வதை தடுப்பது, போன்றவை  மட்டுமே, நம்மை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும். 

அந்த வகையில் பார்த்தால், கிராமப்புறங்களில்  தொழிற்சாலைகளை  உருவாக்கவும், வேலை வாய்ப்புக்களை  அதிகரிக்கவும் உதவும் அற்புதமான  மரம் ஜம்புநாவல்.

கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் உள்ள மெட்டூர்  கிராமத்தில் ஜம்புநாவல் சாகுபடியை லாபகரமாக செய்து வருகிறார்,   ஜெயக்குமார் என்பவர். இவர் 1.5  ஏக்கரில் நடவு செய்ய 80  ஒட்டுச் செடிகளை ஆந்திராவிலிருந்து வாங்கி  வந்தார். அவற்றை  8 மீட்டர் இடைவெளியில்  நடவு செய்தார்;  நான்காவது ஆண்டில் ஒரு மரத்திற்கு இரண்டு கிலோ என காய்க்க ஆரம்பித்தது;   தற்போது 11 ஆவது ஆண்டில் ஒரு மரத்தில் 60 -- 70 கிலோ சராசரியாக அறுவடை  செய்கிறார்;  ஒருகிலோ பழங்களை ரூ. 150  க்கு  விற்பனை  செய்கிறார்;  ஓர்  ஆண்டில்  80  மரங்களின் மூலம்  6 லட்சம் ரூபாய்  வருமானம் எடுத்தேன் என்கிறார்.

தொழுஉரம், எலும்புத்தூள், கோழி எரு,  சர்க்கரை ஆலைக்கழிவு  உரம்;;, அசோஸ்பைரில்லம், பாஸ்போ  பாக்டீரியா,  மண்புழு உரம், மற்றும் பஞ்சகவ்யா  ஆகியவற்றை மரங்களுக்குத்  தருகிறார். ரசாயன  உரம் எதுவும்  இடுவதில்லை.  அவை தேவையும்  இல்லை  என்கிறார்.

 ராம்ஜாமூன், இண்டியன் பிளாக்  செர்ரி, இண்டியன் பிளாக் ப்ளம் என்ற வேறு பெயர்களும் இதற்கு  உண்டு . 

நாவல் பழங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்; ரத்தத்தை சுத்தப்படுத்தும்;  கண் மற்றம் சருமப் பாதுகாப்பிற்கு நல்லது; செரிமானப்  பிரச்சனைகளை சரி செய்யும்;  சிறுநீரகக் கற்களை கரைக்கும்;  புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தியையும் உள்ளடக்கியது. 

இந்தியாவில்  அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் மஹாராஷ்ட்ரா  அடுத்த நிலையில் இருப்பது  உத்திரப் பிரதேசம்;  தமிழ்நாடு, குஜராத், அஸ்ஸாம், ஆகிய மாநிலங்களிலும் அதிகம் சாகுபடி ஆகிறது; உலக அளவில் நாவல் உற்பத்தியில், இந்தியா இரண்டாம் நிலையில்  உள்ளது.

இதில் திருத்திய ரகங்கள் என்று ஏதும் இல்லை;  சாதா  நாவல்  பழங்கள் உருண்டையாக கறுப்பு கோலி   குண்டுகள் போல இருக்கும்; தமிழ் நாட்டில்  பெரும்பாலான மாவட்டங்களில் இந்தவகைதான் உள்ளது;  கர்நாடக எல்லையிலுள்ள ஓசூர், கிருஷ்ணகிரி, பாகூர்,  நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், ஜம்னாமரத்தூர், ஆகிய பகுதிகளில்,  ஜம்பு நாவல் மரங்கள் காணப்படுகின்றன. 

ஜவ்வாது மலையிலுள்ள ஜம்னா மரத்த}ரில் அதிகமாக ஜம்புநாவல் இருந்ததாக சொல்லுகிறார்கள்;   இன்று ஊர்ப்பெயரில்   மட்டும்தான்  ஜம்புநாவல் உள்ளது;        ஆனால் ஏக்கர் கணக்கில்,  யாரும் தமிழ்நாட்டில் சாகுபடி செய்வதாகத் தெரியவில்லை.

வட மாநிலங்களில், ராஜா ஜாமூன்   என்று அழைக்கப்படும்;;  ஜம்பு நாவல் பழங்கள் அளவில் பெரியவை;    பழங்கள் நீள் உருண்டை வடிவில் கருநீல நிறத்தில் இருக்கும்;   கொட்டை சிறியது;   தசைப்பகுதி அதிகம் இருக்கும்;  கொஞ்சம் அழுந்தத் தொட்டால் கூட சாறு வடியும்;    பழத்தின் சுவை என்றால், அப்படி ஒரு சுவை;  பழங்கள் பார்க்க  கறுப்பு வைரம் போல  பளபளக்கும். 

பழங்கள் ஜூன்  ஜூலை வாக்கில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும்; சில சமயம் ஆகஸ்ட் வரை கூட தள்ளிப் போகும். 

உத்திப் பிரதேசத்தில்  விதையில்லா நாவல் ரகம் உள்ளது.  அதுபோல பெரியகுளம்  பழ ஆராட்சி நிலையத்தில் ஒரு பெரிய நாவல் மரம் உள்ளது .அதன் பழங்கள் சிறியதாக உள்ளன.  ஒன்றில் கூட விதையில்லை. அதுவும் உத்திரப்பிரதேச ரகமாக இருக்கும். 

பழப்பயிர் தொடர்பான  ஆராய்ச்சிகளில். பிரபலமான விஞ்ஞானி டாக்டர் இருளப்பன் 1987 -- 90 வாக்கில் பெரியகுளம் பழ ஆராட்சி நிலையத்தில், முதல்வராக இருந்தார்.  அவர்தான்  விதையில்லா நாவல் பழங்களை, என்னிடம் காட்டினார்;  ஒன்றிரண்டு பழங்களை ருசித்தும் பார்த்தேன்;  அற்புதமான சுவை ! 

வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களின் தட்ப வெப்பநிலை இதற்கு உகந்தது;   பூக்கும் மற்றும் பிஞ்சு இறங்கும் சமயங்களில் வறட்சியான சூழல் அவசியம். 

நீர் தேங்கும்  நிலங்கள், களர் நிலங்கள், வடிகால் வசதியுள்ள நிலங்கள், மற்றும் இருமண் பாடான நிலங்கள், நாவல் பயிரிட உகந்தவை; பழங்கள் முதிர்வடையும் சமயம் மண் கண்டத்தில் ஈரம் இருத்தல் அவசியம்; கார அமில நிலை  6.5 முதல் 7.5 வரை இருக்கும் நிலங்கள் நாவல் பயிரிட ஏற்றவை.

விதைகள் விதை உறக்கம் இல்லாதவை. 10 முதல் 15 நாட்களுக்குள் விதைக்க வேண்டும்.

மார்ச்  அல்லது  ஜூலை ஆகஸ்டு மாதங்களில் கன்றுகளை நடலாம்; 1மீ x 1மீ x 1மீ அளவில் குழி எடுக்க வேண்டும்;  3 பங்கு மண்ணுடன் ஒரு பங்கு தொழு உரம் சேர்த்து குழிகளை நிரப்ப வேண்டும்; ஒரு எக்டரில் 120 முதல். 160 செடிகளை நடலாம். 

இளம் மரங்களுக்கு மாதம் ஒரு தண்ணீர் போதுமானது;  வளர்ந்த மரங்களுக்கு 2 மாதங்களுக்கு  ஒரு தண்ணீர் போதுமானது.

தரையிலிருந்து 60 முதல் 100 செ.மீ. வரை  உள்ள கிளைகளை அப்புறப்படுத்த  வேண்டும்; நோய் தாக்கப்பட்ட, உலர்ந்த, ஒழுங்கற்ற கிளைகளை ஆண்டுதோறும் அப்புறப் படுத்த வேண்டும். 

விதைக்  கன்றுகள்  9 முதல் 10 ஆண்டுகளில் காய்க்கும்; ஒட்டுச் செடிகள் 7 முதல் 8 ஆண்டுகளில் காய்க்கும்;  60 ஆண்டுகள் வரை தொடர்ந்த காய்க்கும்; பழங்கள் ஒரே சமயம் பழுக்காது; விதையிலிருந்து வளர்ந்த மரம் ஓர் ஆண்டில் 90 முதல் 100 கிலோவும், ஒட்டுக் கன்றுகள் 75 கிலோவும், காய்க்கும்.

எங்கள் தோட்டத்திலும், சுமார் 80  ஜம்பு நாவல் மரங்கள் வைத்துள்ளோம்; அவை இன்னும் காய்ப்புப் பருவத்தை எட்டவில்லை;  10 முதல் 12 அடி இடைவெளியில்  நடவு செய்துள்ளோம்; ஆனால் நாங்கள் மா, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா ஆகியவற்றுடன் சேர்ந்து அடர் நடவு முறையில் நட்டுள்ளோம்; ஆனால் மரங்கள் நடவு செய்ததிலிருந்தே இங்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது; எங்கள் பகுதியில், எங்கள் தோட்டத்தில்தான் அதிக மரங்கள் உள்ளன. 

மேலும் வேலூர் மாவட்டத்தில், நாட்றம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரங்களில்,  ஜம்பநாவல் பயிரிட, 2003 -- 2004 ஆண்டிலிருந்து விழிப்புணர்வு அளித்து வருகிறோம்; அதுமட்டுமல்ல  தும்பேரி, சிக்கனாங்குப்பம், கிராமங்களில், பொது நிலங்களில், நடவு நெய்த ஜம்புநாவல் மரங்களும் தற்போது பெரிதாகவே வளர்ந்துள்ளன. 

ஜம்பு நாவல் சாகுபடியை பொருத்தவரை மிட்டூர்  ஜெயக்குமார்தான்  முன்னோடி விவசாயியாக விளங்குகிறார். ஆண்டுக்கு ஆறு லட்சம் வருமானம் எடுப்பது சுலபமான காரியமா ?
 
---  பூமி  ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


  .

















No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...