Tuesday, July 18, 2017

இந்தியாவின் நான்கு பருவமழைகள் - INDIA'S SEASONAL RAINFALLS

                                                          இந்தியாவின்  
                                               நான்கு 
பருவமழைகள்  

INDIA'S 
SEASONAL 
RAINFALLS

ஒரு சிறுமி ஒரு பெரிவரிடம் புதிர் போட்டாள். அந்த பெரிவர் அந்த புதிர் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினார்.

" வராது ஆனா வரும், அது எது ?"

இது தான் அவள் கேட்ட கேள்வி

எதோ ஒரு சினிமாவில் வந்த பிரபலமான 'பஞ்ச் டயலாக்' என்பது மட்டும் அவருக்கு தெரிந்தது. அதற்கு மேல் அவரால் யோசிக்கமுடியவில்லை.

"இது கூட தெரியலியா?" என்று கேலியுடன் கேட்டுவிட்டு "நானே சொல்லேறன் வராது ஆனா வரும் என்றால் அது மழை" என்று சொல்லிவிட்டு கல கல என சிரித்தாள்.

வராது ஆனா வரும் அப்படித்தான் மழையை நாமும் புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் நம் பெரிவர்கள் தங்கள் அனுபவத்தில் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இன்னும் கூட கிரமத்து பெரிவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து மேகங்களின் நிறம், அசைவு, சேர்ந்திருக்கும் முறை, இதை எல்லாம் வைத்து இன்னிக்கு கண்டிப்பா மழை வரும் வராது என்று சொல்லிவிடுவார்கள்.

இதுதான் பாரம்பரிய அறிவு. இதைத்தான் நாம் ஆங்கிலத்தில் "ட்ரெடிஷனல்  நாலெட்ஜ் " என்றும்" இண்டிஜினஸ் நாலெட்ஜ்" என்றும் சொல்லுகிறோம்.

ஆனாலும் மழைக்குக் காரணமாக இருக்கக்கூடிய தென் மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை, குளிர் பருவ மழை, கோடை மழை பற்றியெல்லாம் அந்த காலத்து நமது பெரிவர்கள் விரல் நுனியில் நிறைய செய்திகளை வைத்து இருந்தார்கள். அவர்களுடைய அனுபவங்களாக பழமொழிகளை விட்டு சென்றுள்ளார்கள்.
"கார்த்திகைக்குப்பின் மழை இல்லை கர்ணனுக்குப்பின் கொடையில்லை."

"அந்தி நேரத்தில் தும்பி தாழப்பறந்தால் மழை."

"எறும்புகள் திட்டை ஏறிப்போனால் மழை."

இப்படி ஏகப்பட்ட பழமொழிகள் தமிழில்.

மடிக்கணினியை தலையணையாய் பயன்படுத்தும் தகவல் யுகம் இது.
மழை பற்றிய தகவல்களை கண்டிப்பாய் நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

தென் மேற்கு பருவ மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்களிலும், வடகிழக்கு பருவ மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களிலும், குளிர் பருவ மழை ஜனவரி பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களிலும், கோடை மழை மார்ச் முதல் மே வரை மூன்று மதங்களிலும் வரும்.

தென் மேற்கு பருவக்காற்று பூமத்தியரேகைக்கு தெற்கு திசையில் மே மாத வாக்கில் உருவாகி பூமத்தியரேகையைக் கடந்து ஆப்ரிக்க நாட்டின் ஓரமாக பொடி நடையாய் நடந்து ஜூன் மாத வாக்கில் இந்து மஹாசமுத்திரம் மற்றும் அரபிக்கடலில் இருந்து அபரிதமான நீராவியை அள்ளி எடுத்துக்கொண்டு கேரளாவில் இருந்து தன் கருணை மழையை பொழியும்.


இந்தியாவிற்கு கிடைக்கக்கூடிய மழையில் 70 சதவிகிதத்தை தென் மேற்கு பருவ காற்று வழங்குகிறது.  ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பெரும் தூற்றலாக கிடைக்கும் மழை வெறும் 32 சதவிகிதம்தான்.

இந்தியா முழுவதற்கும் படியளந்து செல்லும் தென் மேற்கு பருவ காற்று நேராக சீனா வரை சென்று மிச்ச சொச்சமாய் இருக்கும் மழையை உதறி விட்டு மீண்டும் அது வட கிழக்கு பருவ  காற்றாக புதிய அவதாரம் எடுக்கிறது.

வட கிழக்கு பருவ காற்றாக திரும்பி வரும் வழியில் வங்காள விரிகுடா கடலில் தனக்கு தேவையான நீரவியினை கொள்முதல் செய்துகொண்டு ஒரிசா ஆந்திரா என தன் பயணத்தை தொடங்கி அதிகபட்சமான 48 சதவிகித மழையை தமிழ் நாட்டுக்கு அளிக்கிறது.

இவை தவிர குளிர் பருவத்தில் 5 சதமும் கோடை பருவத்தில் 15 சதமும் தமிழ்  நாட்டிற்கு மழை கிடைக்கிறது.

இந்த நான்கு பருவங்கள் மூலம் தமிழ் நாட்டிற்கு ஒரு ஆண்டில் சராசரியாக 942.8 மில்லிமீட்டர்  மழை வரும், ஆனால் வராது.

மழையின் குணம் வரும் ஆனால்  வராது. வராது. ஆனால் வரும்
ஆனால்

ஆனால் அது எப்போது வந்தாலும் அதை மடக்கிப் பிடித்து மரியாதையாய் மண்ணுக்குள் அனுப்பும் குணம் நமக்கு வருமா வராதா ?

பூமி ஞானசூரியன்
----------------------------------------------------------------------------------------------------------------
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் - குறள் 14
(மாரி பெய்யவில்லை எனில் ஏரும் உழவும் உழவர்க்கு தேவை இல்லை)

கெடுப்பதுஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதுஉம் எல்லாம் மழை – குறள் 15
(பெய்யாமல் உலகில் அழிவைத் தரும் மழை பின் பெய்து செழிப்பைத் தரும்)

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது – குறள் 16
(மழைத்துளி விழாமல் போனால் பூமியின் மேல் புல்லும் தலை நீட்டாது)


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...