சிரபுஞ்சியில்
குடிநீர்ப் பஞ்சம்
DRY FACE OF CHERRAPUNJI
நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம்கூட நான் பலமுறை இந்தக் கேள்வியைக் கேட்பேன்.
உலகத்தில் அதிக மழு எங்கு பெய்கிறது. ? பால் மனம் மாறாத அந்தக் குழந்தைகள் கூட சரியாகச் சொல்லிவிடும். சிரபுஞ்சி என்று.
இப்போது சிரபுஞ்சி பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியை உங்களுக்கு சொல்ல வீரும்புகிறேன்.
உலகத்தில் அதிக மழைபெறும் சிரபுஞ்சியில் மக்கள் “ குடம் இங்கே…. குடிநீர் எங்கே…? என்று அல்லாடுகிறார்கள்.
தேனீக்கள் பட்டாம்பூச்சிகளைப் போல அன்றாடங் காய்ச்சிகளல்ல…. குடித்தது போக மீதியை நாளைய தேவைக்கு தன் தேன்குடங்களில் சேமிக்கின்றன.
சில செய்திகளை உடனே நம்பத் தோன்றும். சந்தேகம் வராது. தலையில் அடித்துச் சொன்னாலும், சிலவற்றை நம்ப முடியாது. சிரபுஞ்சியில் தண்ணீர்ப் பஞ்சம் என்பது இரண்டாவது வகை.
உலகநாடுகளின் மழையைவிட இந்தியாவில் பெறும் மழை அதிகம். இதை முதலில் நான் நம்பவில்லை. அதைத் தெரிந்துக் கொண்டதும், நம்பியதும் தனிக்கதை.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அங்கு பெய்யும் மழையைப் பொருத்தது. அதை எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தது. எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தது.
150 ஆணடுகளாக உலகின் அதிகமழை பெறும் ஊர், என்ற கிரீடத்தை சுமந்த ஊர் சிரபுஞ்சி. சிரபுஞ்சியின் பூர்வீகப்பெயர் சோரா (SHORA). வெள்ளைக் காரர்களின் வாயில் அது ‘ச்சூர்ரா’ என்ற பின்னர்தான் நுழைந்தது. நம் தமிழுக்கு வசதியாக அது சிரபுஞ்சி ஆனது.
இந்த பெருமழை பெறும் பூமி பிரிட்டிஷ்காரர்களுக்கு பிடித்துப் போனது. அதனால் அஸ்ஸாமின் தலைநகர் அந்தஸ்த்தை இதற்குக் கொடுத்தார்கள். சிரபுஞ்சி 34 ஆணடுகள் இந்த தலைநகர் மகுடத்தை 1832 முதல் 1866 வரை அணிந்திருந்தது.
இதுவரை சிரபுஞ்சி பதிவு செய்த ஓர் ஆண்டின் அதிகபட்ச மழை 26470 மில்லி மீட்டர். இந்த தலைசுற்றும் மழையளவு அங்குலத்தில் 1041. அடியில் சொல்வதானால் 80.56.
சர்வதேச அளவில் 20 ஆம் நூற்றாண்டில் அதிகபட்சமான மழை பெற்ற ஆண்டு என்ற பெருமைக்கு உரியது 1974. அந்தப் பெருமைக்கு உரியதும் சிரபுஞ்சிதான். பதிவு செய்யப்பட்ட மழைஅளவு 24553 மில்லி மீட்டர்.
சிரபுஞ்சியின் ஆண்டு சராசரி மழை 10877 மில்லி மீட்டர். இது 147 ஆண்டுகளின் சராசரி. இந்திய வானிலை மையத்தின் (INDIAN MEETEOROLOGICAL CENTRE) அதிகாரபூர்வ அறிவிப்பு இது.
ஒரு நாளில் இங்கு அதிகபட்சமாக பதிவான மழை 1563 மில்லி மீட்டர். பதிவானது 1965 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் நாள்.
மனித மூளைக்கு எட்டாத, மதிப்பிட முடியாத, இயற்கையின் ஆற்றல் வெளிப்பாடுதான் சிரபுஞ்சி. உலகின் மிக அரிய அதிசயம்.
எல்லா இயற்கை நிகழ்வுகளிலும் பருவகால மாற்றத்தின் தாக்கம் தெரிகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது சிரபுஞ்சியின் மழையிலும் பிரதிபலித்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக சிரபுஞ்சியின் மழையின் வரைபடக் கோடு கீழ் நோக்கி பயணிக்கிறது.
சிரபுஞ்சியின் மழைக்குறைவு சோகம் ஒருபுறம் இருக்க. இங்கிருக்கும் மக்களை வாட்டி வதக்குகிறது குடிநீர்ப் பஞ்சம்.
இதுபற்றி உண்மையா என்று கேட்டால், “மழை எவ்ளோ பேஞ்சாலும், அதை சேமிக்கலேன்னா, குடிநீர் பஞ்சமும் வரும்… வறட்சியும் வரும்னு தெரிஞ்சிக்கிட்டோம்” இது இன்றைய சிரபுஞ்சி மக்களின் ஒட்டு மொத்தமான குரல். “இது நாங்க கத்துக்கிட்ட பாடம்” என்கிறார்கள் .
இந்தப் பாடத்தை இந்திய மக்கள் அனைவருமே சிரபுஞ்சி யிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
சிரபுஞ்சியின் 79 ஆண்டுக்கால சராசரி மழைஅளவு 1143 செ.மீ. என்று அறிவித்துள்ளது உலகசாதனை புத்தகம் கின்னஸ்.
இன்று கின்னஸ் சாதனை ஊர் சிரபுஞ்சியில் ஒரு வாளி தண்ணீர் எட்டு ரூபாய். மலை அடிவாரத்திலிருந்து, ட்ரக் லோடுகளில், சிரபுஞ்சிக்கு தண்ணீர் போகிறது.
ஒரு ஆண்டில் சராசரியாக 20000 பேர் சுற்றுலாப் பயணிகள் வந்து போகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் நாட்களில், இங்கு தண்ணீர் வியாபாரம் சூடுபிடிக்கிறது.
மழை வராததாலா சிரபுஞ்சியில் குடிநீர் பஞ்சம் ? இல்லை என்கிறார்கள், சிரபுஞ்சி மக்கள்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment