Thursday, July 20, 2017

சொட்டு நீர்ப்பாசனம் - ஒவ்வொரு துளிக்கும் உற்பத்தியை அதிகரிக்கும் - DRIP IRRIGATION ENHANCE PRODUCTION


சொட்டு நீர்ப்பாசனம் - 
ஒவ்வொரு 
துளிக்கும் 
உற்பத்தியை 
அதிகரிக்கும் 

DRIP IRRIGATION
ENHANCE PRODUCTION
FOR EVERY DROP


                                                                   (கேள்வி பதில்)

1.இன்றைய நிலையில் உற்பத்தியை பெருக்க வேண்டுமானால், என்னென்ன நீர் வேளாண்மை முறைகளைக் கையாள வேண்டும் ?

உங்கள் கேள்விக்கு என்னால் ஒரே வரியில் பதில் சொல்ல முடியும்.  ஒவ்வொரு துளி நீருக்கும் ,நமக்கு கிடைக்கும் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க முடியும்  என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.  நான் மீண்டும் சொல்கிறேன்.  ஒவ்வொரு துளி நீருக்கும் நமக்கு கிடைக்கும் உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்க முடியும்.  என்று நம்ப வேண்டும் அதுதான் முக்கியம்.

2..இன்னும்  கொஞ்சம்  புரியும்படியாக,  விளக்கமாக சொல்ல முடியுமா.. ?  இதற்கு ஏதாவது உதாரணம் சொல்ல முடீயுமா  ?

இன்றைய நிலையில் விவசாயத்தின் முகம் மாறிவிட்டது.  படித்த இளைஞர்கள்  விவசாயத்தை  கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். நீர் மேலாண்மை மட்டும்தான்  உற்பத்தியை பெருக்க முடியும்.  என்பதற்கு சிறந்த உதாரணம் இஸ்ரேல்.  தோராயமாக சொல்வதென்றால் உள்ளுரில் ஒரு ரூபாய்க்கு விற்பனை ஆவது,  வெளிநாடுகளில் 10 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஏற்றுமதி செய்வதன்  மூலம்  வருமானத்தை பத்து மடங்கு  பெருக்க முடியும். 

உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்;  சென்ற ஆண்டு நான் லண்டன் சென்றிருந்தேன். ஆச்சரியம், இங்கு என்னென்ன வாங்குகிறோமோ அத்தனையும் அங்கே கிடைக்கிறது.  ஆனால் ஆனைவிலை குதிரைவிலை.  பாதி உலர்ந்த நிலையில் விறகாக மாறும் தருவாயில் இருந்த ஒரு முருங்கைக் காயை 120 ரூபாய் கொடுத்து வாங்கினேன்.  தரமாக நமது விளை பொருட்களை உற்பத்தி செய்தால், நம்முர் காய்கறி பழங்களுக்கு  அங்கு நல்ல கிராக்கி ஏற்படும். 

நான் சொல்ல வந்தது இதுதான். இஸ்ரேல் நாட்டின் விளைபொருள் உற்பத்திக்கு காரணம் கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனமாக சிறப்பாக பயன்படுத்தியதே. 

3. முக்கியமான நீர் மேளாண்மை முறைகள்  என்னென்ன என்று சொல்ல முடியுமா ?

நீர்வள மேளாண்மை என்றால் ஒன்று,  இருக்கின்ற நீர் வளத்தைப் பெருக்குதல்.  இரண்டாவது,  நீரை சிக்கனமாக பயன்படுத்துவது.

தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவதில் சிக்கனமாக பாசனம் தரும் சொட்டு நீர்ப்பாசனம்  மற்றும் தெளிப்பு நீர்ப்;பாசனத்தைப் பயன்படுத்துவது.  கொடுக்கும் நீர் ஆவியாகிப் போகாமல்  பயிருக்கு கிடைக்கச் செய்வது.  பயிர்களின் தேவை அறிந்து  பாசனம் கொடுப்பது இவை எல்லாம்தான்  நீர் மேலாண்மை என்பது.

4.சொட்டு நீர்ப் பாசனம்  எப்படி உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது  என்பதை சொல்ல முடியுமா  ?

இதற்கு நான் தோராயமாக  ஒரு கணக்கைச் சொல்கிறேன்; உதாரணமாக எனக்கு 3 ஏக்கர்  சொந்த நிலம் இருக்கிறது.  ஆனால் அதில்  இருக்கும் ஆழ்குழாய் கிணற்றில்  கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு  என்னால் ஒரு ஏக்கர்தான் சாகுபடி செய்ய முடியும்.  ஆனால் சொட்டு நீர்ப் பாசனம் போட்டால்   இரண்டு மடங்கு தண்ணீih மிச்சம் பிடிக்க முடியும்  என்று சொன்னார்கள்.  

நான் சொட்டு நீர்ப்பாசனம் போட்டேன். அதனால் இப்போது  எனது மூன்று ஏக்கரிலும் பயிர்  சாகுபடி செய்கிறேன்.  இதனால்  என்னுடைய உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்து விட்டது. இப்போது என்னிடம் இருப்பில் உள்ள ஒவ்வொரு சொட்டு நீர் பாசன உற்பத்தியையும்   3 மடங்கு அதிகரித்து விட்டேன். நான் செய்த ஒரே காரியம் சொட்டு நீர் போட்டதுதான்.  

ஓவ்வொரு சொட்டு நீரிலிருந்தும் கிடைக்கும் வருமானத்தை மூன்று மடங்காக அதிகரித்து விட்டேன்.  ஒவ்வொரு சொட்டு நீரிலிருந்தும்  கிடைக்கும் லாபத்தை  3 மடங்காக அதிகரித்து  விட்டேன்.

ஆகையால் சொட்டு நீர்ப்பாசனம், அமைப்பதால் ஒன்று  நமது சாகுபடி பரப்பை அதிகரிக்க முடியும். இரண்டு நமது உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும்.மூன்று நமது வருமானத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும். நான்கு  நமது லாபத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும்.

5. இவைத்தவிர சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதனால் வேறு  நன்மைகள்  என்னென்ன   கிடைக்கும் ?

சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதனால் நிலத்தில் அதிக களைகள் முளைப்பதில்லை.  இதனால் களை எடுக்கும் செலவு மிச்சமாகிறது.

நாம் பயிர்களுக்கு இடும் உரத்தை பாசன நீரிலேயே, சொட்டுநீர்ப்பாசனம் மூலம்  கொடுத்து விடலாம். இதனால்  உரமிடுவதற்கான  கூலியாள் செலவு  மிச்சமாகிறது.  உரத்தை வேர்களுக்கு மிக அருகில் அளிப்பதால், உரம் சேதாரமாவதில்லை.  உரத்தினால் கிடைக்கும் அதிகப்படியான பயன் பயிருக்கு கிடைக்கிறது.

பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும். மருந்துகளையும் சொட்டு நீரிலேயே கொடுக்கலாம்.  இதனால் பூச்சிபூசண மருந்துகள் தெளிக்கும் அல்லது தூவும்  செலவுகள் மிச்சமாகிறது.

பூச்சிகள் நோய்கள்  அதிகம் தாக்குவதில்லை.  அதனால் விளை பொருட்கள்  தரம் மிக்கவைகளாக உற்பத்தி செய்ய முடிகிறது.

தரமான பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கிடைப்பதால்  சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.  இதனால் கூடுதலான வருமானம் மற்றும்  லாபம் கிடைக்கிறது.

தரமாக உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின்  சுவை கூடுகிறது. கீப்பிங் குவாலிட்டி என்று சொல்லப்படும்,  அதிக நாட்கள் கெடாமல் வைத்திருந்து விற்பனை செய்யும் தரம் கூடுகிறது.

6.தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும்  பயிர்களைப் பற்றி சொல்லுங்களேன்.. ?

இதுவரை நாம் பழக்க தோஷத்தில்  பயிர்சாகுபடி செய்து வந்தோம்.  ஆனால் இனி நம்முடைய நிலத்தின் தன்மை,  நீரின் கையிருப்பு இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு  பயிர்செய்ய வேண்டும். இதை நீர் வரவு செலவு திட்டம் (WATER BUDGET) என்கிறார்கள். 

சில பயிர்கள் தண்ணீரை மிக அதிகமாக   செலவு செய்கின்றன.  அதிகமாக தண்ணீர் எடுத்துக்கொண்டு  குறைவான மகசூலைத் தருகின்றன. சில பயிர்கள் குறைவான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதிக மகசூலை தருகின்றன. அப்படிப்பட்ட பயிர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

என்னென்ன பயிர்கள் தண்ணீரை ஊதாரித்தனமாக செலவு செய்கின்றன ?  இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.   உதாரணமாக கரும்பு, வாழை, நெல் ஆகிய பயிர்கள் அதிகப்படியான நீரை செலவு செய்கின்றன. 

இந்த ஆண்டு நான் கரும்பு போடலாமென்று திட்டமிட்டேன்.  என் நண்பர் சொன்னார்.  அதே அளவு தண்ணீரைக்கொண்டு  நான் 5 ஏக்கர்  காய்கறி சாகுபடி செய்யலாம் என்று.  அப்படி என்னிடம் இருக்கும் தண்ணீரில், ஒரு சொட்டு தண்ணீரைக் கொண்டு 5 மடங்கு உற்பத்தியை பெருக்குகிறேன் என்று அர்த்தம்.

காய்கறிப்பயிர்கள்,  பழப்பயிர்கள் மற்றும் மலர்ப்பயிர்கள் மிகக் குறைவான தண்ணீரைக் கொண்டு அதிகமான உற்பத்தி வருமானம், மற்றும் லாபத்தை அளிக்கிறது என்பதை நாம் மறத்தல் கூடாது. 

8.இஸ்ரேல் முறைப்படி  ஒரு ஏக்கரில் 800 மாமரங்கள் நடுகிறார்கள். அதற்கும் நீர் சிக்கனத்திற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா ..?  

நீங்கள் சொல்வது சரிதான். நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் முயற்சிதான் அது.  இஸ்ரேலின் மூன்றில் இரண்டு பகுதி நெகேவ் பாலைவனம். சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே  பிரபலமானதாக இருந்தது, நெகேவ் பாலைவனம். இஸ்ரேலின் மொத்த பூகோளப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு  இந்த நெகேவ் பாலைவனமதான்; அவ்வளவும் மணற்பிரதேசம். 

பகல்நேர வெப்பநிலை 102 டிகிரி. 

தார்ச்சாலை என்றால் ஒரு துளி தார் கூட சாலையில் தங்காது. 

தகிக்கும் வெய்யலில் உருகி தண்ணீராக,   ஓடிவிடும்.   இரவு ஆனால் போதும்.  தண்ணீர் உறைந்துவிடும் அவ்வளவு குளிர்.  

பகலில் பனியன்கூட போட முடியாது. ராத்திரியானால் சொட்டர் போட்டால்கூட சொகப்படாது என்கிறார்கள்.

ஓராண்டில் இந்த பாலைவனப் பகுதியில் பெய்யும் மழை ஒரு அங்குலம் மட்டுமே.  இதை வைத்துக்கொண்டு நாக்கைக்கூட வழிக்க முடியாது  என்று நாம் நினைப்போம்.

இந்தப் பாலைவன தேசத்தில் ஏக்கருக்கு 160  பீச் என்னும் பழச்செடிகளை  சாகுபடி செய்த இவர்கள்,  இப்போது 4000   செடிகளை  நடுகிறார்கள்.  160 மரங்களாக இருந்தபோது எவ்வளவு பழங்களைக் கொடுத்ததோ, அதே அளவு, 4000 மரங்களில் ஒவ்வொன்றும் அதே அளவு மகசூல் தருகின்றன என்று நம் வயிற்றில் புளி கரைக்கிறார்கள். 

அத்தோடு இந்த அடர் நடவு முறையில் 60 சதம்  தண்ணீரை மிச்சப்;படுத்த முடியும்   என்கிறார்கள் இஸ்ரேல் காரர்கள்.

நெகேவ்  பாவைவனப் பகுதியில்   விளைந்த தக்காளி ஐரோப்பிய மார்க்கெட்டுகளில்  சக்கைப்போடு போடுகின்றன.  இந்த தக்காளியை ஒரு மாதம்  வைத்திருந்தால்  கூட  கெடுவதில்லை.  வேறு எந்த நாட்டு தக்காளியையும் ஐரோப்பியர்கள்  திரும்பிக்கூட பாபபதில்லை. 
   
பருத்தி என்றால்  எகிப்து   மற்றும் வட அமெரிக்காவின்  கலிபோர்னியா,  அரிசோனா பருத்திகள்தான் பெயர் போனவை.

அவற்றையெல்லாம்  நெகேவ் பாலைவனப்  பகுதி  ஓரங்கட்டி விட்டது என்பது சமீபத்திய தகவல். 
 
என்ன மந்திரம் போடுகிறார்களோ தெரியவில்லை. தக்காளி  தர்பூசணி,  கத்தரி, மிளகாய் ,பேரீச்சை, அவகேடா,  ஆகியவை ஒரு வருஷத்தில் முப்போகம் விளைகிறதாம். 

அதுமட்டுமில்லாமல் எண்ணெய் தரும்,  ஆர்கன் மற்றும்,  ஆலிவ் எண்ணெய்தரும்  மரங்களுக்கும், உவர் நீர்தான் பாசனமாக கொடுக்கிறார்கள்.  உவர் நீரை உட்கொண்டாலும் உற்பத்தியை குறைப்பதில்லையாம் இரண்டுமே.

9. .பயிர்களோட தேவையை தேவையை அனுசரித்தும், தண்ணீர் பாய்ச்சினால், நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமல்லவா ..?

பயிர் சாகுபடியில் அனுபவமுள்ள விவசாயிகள் இதனை சரியாகச் சொல்லுவார்கள். பொதுவாக பயிர்களோட வளர்ச்சிப் பருவத்தில் கொஞ்சம் கூடுதல் பாசனம் தேவைப்படும்.
 
பொதுவாக பழப்பயிர்களுக்கும்;  பூ பயிர்களுக்கும்,  கூடுதலாக பாசனம் அளிப்பதை  தவிர்க்க வேண்டும். அது போல அறுவடைக்கு முன்னால்  பாசனம், அளிப்பதை தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் பாசனம் கொடுப்பதால் அறுவடை தள்ளிப்போகும். 

அதேபோல பூக்கும் சமயம், நீர்ப்பாசனம் அதிகம் தந்தால் பூப்பு  தள்ளிப்போகும், காய்ப்பும் மட்டுப்படும்.

பாசனத்தை சிக்கனப்படுத்துவதில் மூடாக்கு போடுவது அற்புதமான முறை.
வேளாண்மை அறிவியல் நிலையங்களின், பாலித்தீன் தாள்களை, நிலப்பரப்பின்மீது பரப்பி வைத்தும் பயிர் மூடாக்கு போடுகிறார்கள்;. எங்கள் பூமி நிறுவனத்தின் பழத்தோட்டத்தில் காலி சிமெண்ட் கோணிகளைக் கூட மூடாக்கு போட பயன்படுத்தினோம்.

சிறுசிறு கூழாங்கற்கள் எங்கள் நிலத்தில் அதிகம் இருந்தது.  அவற்றைக்கூட நாங்கள் மா சப்போட்டா பழமரக்கன்றுகளுக்கு பயன்படுத்தி, மூடாக்கும், போட்டோம். உடைந்த டைல்ஸ் ஓடுகளைக்கூட  மூடாக்குப்போட பயன்படுத்தினோம்.

பயிர் மூடாக்கு போடுவதன் பயனை,  நான்பல ஆண்டுகளாக அறிந்திருந்தேன். அதனை என்னுடைய தோட்டத்திலும் பயன்படுத்தி இருந்தேன். 

2014 ஆம்ஆண்டு வட அமெரிக்கா செல்லும் வாய்ப்பு  எனக்கு கிடைத்தது. அங்கு ஒரு நாள் நியூயார்க் நகரத்தில் ஒரு பிரபலமான சாக்லெட் கடைக்குப் போயிருந்தேன். கடைக்கு முன்னால் ஐந்தாறு  மேப்பிள்  மரங்;களை  நட்டு  வைத்திருக்கிறார்கள்.  அந்த மரங்களின் அருகே சென்றதும், எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

கடைக்கு முன்னால் அகலம் குறைவான நீண்ட புல்வெளி.  அதற்கு நடுவே முத்து பதித்த மாதிரி, இருந்த  மேப்பிள் மரங்களுக்கு மூடாக்கு போட்டிருந்தார்கள்.  ஒரே ஒரு செ.மீ. மண்கூட தெரியாமல், போட்டிருந்தார்கள், மூடாக்கு. மரவாடிகளில் விழும் மர இழைப்புச்சீவல்களை மூடாக்குபோட பயன்படுத்தி இருந்தார்கள். 

இதன்பிறகு கிட்டத்தட்ட ஒருமாதம்        வட அமெரிக்காவின் பல மாநிலங்களுக்குச் சென்றேன். அதற்குப் பிறகு சென்ற இடங்களில், தென்பட்ட அத்தனை மரங்களுக்கும் போட்டிருந்தார்கள் மூடாக்கு.

நீரை சிக்கனமாக பயன்படுத்துவதில், பயிர் முடாக்கு எவ்வளவு முக்கியமானது  என்பதை அப்போதுதான் நான்  உணர்ந்தேன்.

9. ஒரு விவசாயி தன்னுடைய நிலத்திலுள்ள போர்வெல் அல்லது கிணற்றில். நீர் மட்டத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை சொல்ல முடியுமா ..?

பண்ணைக்குட்டை அமைப்பதன் மூலம், மழை அறுவடை செய்யலாம். நீர் உறிஞ்சுக் குழிகள் கூட அமைத்து நீர் அறுவடை செய்யலாம். கோடைக்காலத்தில் சரிவுக்கு குறுக்காக உழவு போட்டும், நீர் அறுவடை செய்யலாம்.வயலின் ஓரங்களிலும், சாகுபடிக்கு ஏற்பில்லாத இடங்களிலும், மரங்கள் வளர்ப்பதன் மூலம், நீர் அறுவடை செய்யலாம்.

நமது நிலத்திலேயே சில பகுதிகளில்,சாகுபடி செய்யமுடியாத கல்லும் கரம்புமாக இருக்கும், முள்ளும் முரடுமாக இருக்கும், மேடுபள்ளமாக இருக்கும், அப்படிப்பட்ட இடங்களில் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கலாம். நமது வயலில் பண்ணைக்குட்டை போடுவதால், நிலத்தின் ஒரு பகுதியை இழந்து போவதாகாதா ?

பண்ணைக்குட்டை என்றால் பலபேர் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஒரு துண்டு நிலம் போய்விடுகிறது  என்று நினைக்கிறார்கள்.  ஆனால் அது உண்மை அல்ல.  அதன்மூலம் எவ்வளவு மழை நீரை சேமிக்க முடியும் என்று தெரிந்தால் அப்படி நினைக்க மாட்டார்கள்.

ஒரு மீட்டர் நீளம்,  ஆழம், அகலம், உள்ள,  ஒரு குழியை உங்கள் நிலத்தில், எடுக்கிறீர்கள்.  அதன்மூலம்  எவ்வளவு  நீரை சேமிக்கலாம் ..?

ஒரு கன மீட்டர் குழி நிரம்பினால், அதில் 1000 லிட்டர் நீரை  சேமிக்க முடியும். குறைவாக மழை பொழியும் தன்மை, ஒரு வருஷத்தில் மூன்று முறை, அந்தக்குழி நிரம்பும்.   அப்படி யென்றால், ஒரு மீட்டர் நீள, அகல, ஆழமுள்ள,  குழி எடுத்தால் ஒரு ஆண்டில், 3000 லிட்டர் நீரை சேமிக்க முடியும். 

அப்படி யென்றால் ஒரு பண்ணைக்குட்டையின் மூலம் ஒரு வருஷத்தில் எவ்வளவு தண்ணீரை செமிக்க முடியும் என்று  கணக்குப்போட்டுப் பாருங்கள்.

பூமி ஞானசூரியன் - செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com

                    

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...