Saturday, July 22, 2017

தினசரி வருமான விவசாயம் DAILY PROFIT MAKING AGRICULTURE

                                                        
 நல்ல 
காலம் 
பொறக்கு

தினசரி 

வருமான 

விவசாயம்


DAILY PROFIT

MAKING

AGRICULTURE



நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி

நல்லுசாமி: கோடாங்கி.. கோடாங்கி..ஒரு நிமிஷம்..

கோடாங்கி: வணக்கம் சாமி

நல்லுசாமி: நல்லா வணக்கம் சொன்ன.. அஞ்சி நாளா உன்னை ஆளக் காணோம்..ஒரு வாரமா உன்னத் தேடி அலஞ்சிட்டு இருக்கேன். நீ என்னடான்னா சாவதானமா வந்து நிக்கறே..

கோடாங்கி: நாலு ஊரு போயி நாப்பது தெரு நடந்து 400 பேரைப்பாத்து 4000 வார்த்தைப் பேசினாத்தான் சாமி எங்க ஊட்ல நாலு நாளைக்கு ஒலை கொதிக்கும்…இல்லன்னா 40 நாளைக்கு என் சம்சாரம் குதிக்க ஆரம்பிச்சுடுவா அப்பொறம் நம்ம பாடு பெரும்பாடு ஆயிடும்..

நல்லசாமி;: வீட்டுக்கு வீடு வாசப்படி.. ஆயிப்பாத்தா குடும்பத்தை போயிப்பாத்தா தெரியும்னு சொல்லுவாங்க..

கோடாங்கி: சரி சாமி என்னா சேதின்னு சொல்லுங்க சாமி..ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணிருக்கணும்..

நல்லசாமி;: மழை சுத்தமா வராமப் போச்சின்னு போன வாரம் நம்ம பொறையாத்தா கோவில்ல பொங்க வச்சி கூழ் ஊ;த்தினோம்.. எல்லாருக்கும் சோறு போடற விவசாயியை பட்டினி போட்டுடாத தாயின்னு வேண்டிகிட்டேன்.. அண்ணக்கி ராத்திரியே தாயி என் கனவுல வந்துடுத்து..

கோடங்கி;;: நீங்க சேத்துல கைய வச்சாத்தா எல்லாரும் சோத்துல கைய வைக்க முடியும்னு சாமிக்குத் தெரியும். ஆசாமிங்களுக்குத்தான் தெரியாது..சரி சாமி கனவுல வந்த ஆத்தா என்ன சொல்லிச்சி ?


நல்லசாமி: மகனே நான் சொல்றதை கவனி..நான் சொல்றதை செஞ்சா ஒனக்கு தண்ணி பிரச்சினை வராது; விவசாயம் லாபகரமா மாறிடும்; வெள்ளாமைக்கு நல்ல விலை கிடைக்கும்..நீ தினசரி வருமான விவசாயம் செய்யணும்னு சொல்லிட்டு மறைஞ்சிடுத்து..ஒரு வாராமா யாரைக் கேட்டாலும் தெரியல தெரியலங்கறாங்க .. தினசரி வருமான விவசாயம்னா என்னான்னு ஆத்தாவைக் கேட்டு நீதான் சொல்லணும்.

கோடாங்கி: மாரி மகமாயி மணி மந்திர சேகரியே
ஆயி உமையே அகிலாண்ட ஈஸ்வரியே
தேவி ஜக்கம்மா ராக்கு சொடலை
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு
நீ ஒரு நல்ல சேதி சொல்லு

தினசரி வருமான விவசாயம்னா
என்னன்னு தெரியாம
அலஞ்சி திரிஞ்சி ஆத்தாவை தேடி வந்திருக்கற இந்த
சம்சாரிக்கு ஒரு வாக்கு சொல்லு தாயி

மக்களா கேளுங்க மகமாயி வாக்கு இது
ஜனங்களா கேளுங்க ஜக்கம்மா வாக்கு இது
கவனமா கேளு இது கருத்த மாரி வாக்கு இது
கருத்தா கேளு இது காசி விசாலாட்சி வாக்கு இது

ஒரு ஏக்கர் நிலத்தை
பாகம் பத்தா பிரிக்கணும்
பிரிச்ச நிலத்துல பத்துவகையான
விவசாயத்தை பக்குவமா
பாக்கணும் சாமி

அந்த பத்து வகை விவசாயமும்
அத்தனையும் தினம் தினம் வருமானம் தரணும்

தினசரின்னா அன்றாடம்
தினம் தினம்னு அர்த்தம் சாமி

வருமானம்னா காசுபணம்
டப்பு துட்டு அத்தனையும்
ஆன்லைன்ல ஆஃப்லைன்ல 
ஏ டி எம் ல தினம் தினம் வரணும்
திடும் திடுமுன்னு வரணும்
திசை எட்டும் வரணும்
சொல்லி வரணும் சொல்லாமலும் வரணும்
கேட்டும் வரணும் கேக்காமலும் வரணும்னு
ஆத்தா சொல்லுது சாமி
அப்பிடி தினம் தினம்
வருமானம் வந்ததுன்னா அதுதான்
தினசரி வருமான விவசாயம் சாமி

நல்லுசாமி: நீ சொல்றது நல்லாத்தான் இருக்கு..அந்த மாதிரி
தினம் தினம் வருமானம் வர்ற விவசாயம் இருக்கா கோடாங்கி ? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு கோடாங்கி

கேடாங்கி:
முட்டைக் கோழி விவசாயத்துல தினசரி வருமானம்
கறிக்கோழி விவசாயத்துல தினசரி வருமானம்;
பால்மாடு விவசாயத்துல தினசரி வருமானம்
பூப்பயிர் விவசாயத்துல தினசரி வருமானம்
கீரை விவசாயத்துல தினசரி வருமானம்
காய்கறி விவசாயத்துல தினசரி வருமானம் சாமி
ஒரு நாளைக்கு எவ்ளோ வருமானம் வேணுமோ
அதுக்கு தகுந்த மாதிரி திட்டமிட்டு செய்தா
கஷ்டமில்ல நஷ்டமில்ல தொட்ட காரியம் துலங்கும்னு
பட்ட மரமும் துளிர்க்கும்னு ஆத்தா சொல்லுது தாயி..

நல்லுசாமி: நான் நல்லா புரிஞ்சிகிட்டேன்
ஒரு ஏக்கih 10 பகுதியா பிரிச்சி பத்து பகுதியிலயும்
10 விதமான விவசாயம் பாக்கணும். அந்த விவசாயம் அத்தனையும்
தினசரி வருமானம் தரக் கூடியதா இருக்கணும். ஒரு பகுதியில
100 ரூபா வருமானம் வந்தாக் கூட ஒரு நாளைக்கு 1000 ரூபான்னா
30 நாளைக்கு 30 ஆயிரம் ரூபா..

கோடாங்கி: ஒரு ஏக்கர்ல ஒரு நாளைக்கு எவ்ளோ
பணம் வேணும் ? ஒரு மாசத்துக்கு எவ்ளோ காசு வேணும் ? ஒரு வருசத்துக்கு எவ்ளோ துட்டு வேணும் ? அதுக்கு எவ்ளோ முட்டை வேணும் ? எவ்ளோ இறைச்சி ? எவ்ளோ மீன் ? எவ்ளோ கீரை ? எவ்ளோ பால் ? எவ்ளோ மல்லிகைப் பூ ? எவ்ளோ முல்லைப்பூ ? எவ்ளோ ரோஜாப்பூ ? எவ்ளோ சமபங்கிப்பூ ? எவ்ளோ கீரை ? எவ்ளோ தக்காளி ? எவ்ளோ கத்தரிக்காய் ? எவ்ளோ வெங்காயம் வேணும்? எவ்ளோ வெள்ளப்பூண்டு வேணும் ?;

அப்புறம் நிலத்தப் பாக்கணும், நில வளத்தப் பாக்கணும,; கிணத்தப் பாக்கணும், கிணத்துத் தண்ணியப் பாக்கணும், வேலைவெட்டி பாக்க ஆளைப்பாக்கணும் சாமி

அத்தனையும் பாத்து செய்தா பக்குவமா ஜெயிக்கலாம்னு ஆத்தா சொல்லுது சாமி !

நல்லசாமி: கோடாங்கி இன்னும் ஒரேஒரு சந்தேகம் என்னன்னா ?

கோடாங்கி: நீ உடனே இடத்த காலிபண்ணு, இல்லன்னா, நல்லுசாமி நிமிசத்துக்கு நாப்பது சந்தேகம் கேப்பாரு. நீ அம்புட்டும் சொல்லி முடிக்கறதுக்குள்ள அடுத்த நாள் விடிஞ்சிடும்னு ஆத்தா சொல்லுது..  நான் வரேன் சாமி..

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி

- சாமக்கோடங்கி சங்கரலிங்கம், செல்பேசி:+918526195370, மின்னஞ்சல்: gsbahavan@ggmail.com




 
















No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...