ஆத்தி பாரம்பரிய
தமிழ் மரம்
AATHI - TRADITIONAL TREE OF TAMILNADU
தாவரவியல் பெயர்: பாஹினியா வேரிகேட்டா (BAUHINIA VARIEGATA)
தாவரக் குடும்பம்: சிசால்ஃபீனியேசியே (CESALPINIACEAE )
ஆங்கிலப் பெயர்: கேமல் ஃபூட் ட்ரீ (CAMAL FOOT TREE )
---------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவிலேயே அழகான, பத்து மரங்களுள் ஒன்று மந்தாரை என்னும் ஆத்தி ; மிக அழகான பூக்களைத் தரும் மரம்; இதில் இரண்டு வகைகள் உள்ளன; ஒன்று சிவப்பு நிற பூக்களைத் தரும்; இரண்டு ஊதா நிறப் பூக்களைத் தரும்; இதன் இலைகளின் தோற்றத்தை வைத்துத்தான் ஆங்கிலத்தில் இதனை ஒட்டகக்கால் மரம் என்கிறார்கள்;
சங்ககாலத்தில் இதன் பெயர் ஆத்தி; அவ்வைக்கு பிடித்த பூமரம்; இல்லை என்றால் தனது நூலுக்கு ஆத்திச்சூடி என்று பெயர் வைத்திருப்பாரா ? ; தமிழ் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது, மந்தாரை என்னும் ஆத்தி.
இமய மலையில் தொடங்கி, குமரிவரை பரவலாக தென்படுகின்றன ஆத்தி மரங்கள்.
சுமார் 10 மீட்டர் உயரம் வளரும் நடுத்தரமான மரம் இது; இதன் கிளைகள் பெரும்பாலும் மெல்லியதாக இருக்கும்; பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் பூக்கள் அதிகம் காணப்படும்; நுனிக் கிளைகளில் பூக்கள் அடர்ந்திருக்கும்; இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகும்; இதன் பூக்கள் தேனீக்களுக்கு உணவு தரும்; வேளாண் கருவிகள் செய்ய மரம் தரும்; பூக்கள், பட்டை, வேர், அனைத்தும் மருந்து தரும்; இதன் தழைகள் 10 முதல் 15 சதம் வரை புரதம் தரும்.
இதன் முற்றிய இலைகளில், டேனின் சத்து அதிகம் இருப்பதால், இதன் இளம் இலைகளையே கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துவர்; சிலசமயம் கன்று ஈன்ற பின்னர், நச்சுக்கொடி தாய்ப்பசுவின் வயிற்றுக்குள்ளேயே தங்கிவிடும்; அவற்றிற்கு ஆத்தி இலையைக் கொடுத்தால், நச்சுக்கொடி இயல்பாக வெளியேறிவிடும்.
ஆத்தி இலைகளை பீடி சுற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்; சில வகைகளின் இலைகள் அகலமாக உள்ளன; அவற்றை ஹோட்டல்களில் பொட்டலங்கள் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்; தையல் இலைகள் தயாரிக்கக்கூட இது பயன்படுகிறது; பட்டைகளில் டேனின் சத்து அதிகமிருப்பதால், தோல் பதனிடலாம், சாயமேற்றலாம். மரங்களின் பட்டையிலிருந்து, நார் உரித்தெடுக்கவாம்; ஆத்தி மரங்கள் அதிகமிருந்தால், அங்கே தேனிப் பெட்டிகள் வைத்து, தேன் உற்பத்தி செய்யலாம்; சிலர் இதன் பூக்களை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
ஆத்தி மரங்கள், சிறு குன்றுகளின் சரிவுகளிலும், ஏரி ஓரங்களிலும், தோட்டங்களிலும், பொது இடங்களிலுள்ள வீடுகள் அல்லது இதர கட்டிட முகப்புக்களில், அழகூட்டுவதற்காக நடவு செய்கிறார்கள்.
செஞ்சரளை மண், சுண்ணாம்பு நிலங்கள், இருமண்பாடான நிலங்கள், போன்ற எல்லா நில வகைகளிலும் ஆத்தியை நட்டு வளர்க்கலாம்; ஆனால் வடிகால் வசதி மட்டும் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீளம்குறைந்த நெற்றுக்கள், ஆழ்ந்த காவி வண்ணமுடையதாக இருக்கும்; இவை வெடித்துச்சிதறும் முன், இதை பறித்து விதைகளை சேகரிக்கலாம்; விதைகள் நீளமான வட்ட வடிவில், காவி வண்ணத்தில் இருக்கும்; ஒரு கிலோ எடையில் 2800 முதல் 3,800 விதைகள் வரை இருக்கும்; 100 விதைகளை விதைத்தால், 95 விதைகள் அப்;பழுக்கு இல்லாமல் முளைக்கும்; தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால், அவை; விரைவாக முளைக்கும்; ஆனால் முளைப்பு முப்பது நாள்வரை நீடிக்கும்; ஆத்தி மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதைவிட, விதைகளை விதைப்பதே சிறந்தது.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment