Thursday, June 22, 2017

INDIAN TREES - GOLDEN SHOWER TREE - சரக்கொன்றை - 1


சரக்கொன்றை 
(GOLDEN SHOWER TREE)  

*********************************************************************************
தாவரவியல் பெயர் : கேசியா பிஸ்டூலா (CASSIA FISTULA)
தாவரக்;குடும்பம் : சீசால் பீனியேசியே (CESALPINEACEAE)
சொந்த  ஊர் : இந்தியா

*********************************************************************************
ஐரோப்பாவின் மிக அழகான மரத்தின் பெயர் ஐரோப்பிய லெபர்னம்; மரங்களின் மஞ்சளழகி சரக்கொன்றையின் சர்வதேசப்பெயர் இந்திய லெபர்னம் ;தங்கக் குளியல் எனும் ‘கோல்டன் ஷவர்’ இதன் ஆங்கிலப் பெயர்.
அளவெடுத்து தைத்த சட்டைப்; போல தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற தகுதியான மரம்.

நெடுநெடுவெனவும்  வளராது ; குறு மரமாகவும் வளராது; நடுத்தரமாக வளரும.

தலைபருத்த  பஞ்சு மிட்டாய் போல  தழை அமைப்பு கொண்ட  மரம்; .
மழைக்காலம்  முடிந்த பின்னால்  பாருங்கள் !  இலைமுழுக்க  உதிர்த்துவிட்டு  எக்ஸ்ரே  மரம்போல  நிற்கும்.

வெய்யில் விஸ்வரூபம் எடுக்கும்  மாதங்களில்தான்
சரக்கொன்றை மரத்தில் அரைத்த மஞ்சள் நிறத்தில்
பூங்கொத்துக்கள் புறப்பட  ஆரம்பிக்கும்.

ஆங்கிலத்தில் இதனை தங்கக் குளியல் மரம் என அழைத்தாலும்
தமிழில் இதனை பீறிட்டுக் எழும் தங்க ஊற்று எனலாம்.

அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தால்; பகல் இரவு  தெரியாது ; பார்க்கும்போதே  பாதங்களில்;  வேர் இறங்கினாலும்  பலருக்கும்  தெரியாது.
சரக்கொன்றை மரத்தில் காய்கள் இறங்கிவிட்டால் கரடிகளுக்கும் குரங்குகளுக்கும் கொண்டாட்டம் தான் ;காரணம்  அவைதான் கரடிக்கு குச்சி மிட்டாய் ; குரங்குக்கு குருவி மிட்டாய்.

ஓட்டைகள் போடாத  முரட்டு புல்லாங்குழல் இதன்  நெற்றுகள் ;  அதற்குள் அடுக்கிவைத்த  புதிய பத்துரூபாய் காசு மாதிரி  விதைகள் ; ஒரு புல்லாங்குழலில்;  ஒரு நூறு இசை  ஒளிந்திருப்பது போல  ஒரு நெற்றில்  ஒரு  நூறு  விதைகள் ஒடுங்கி  இருக்கும் ..!

இலை பூ, காய் நெற்று   மரம் வேர்  அத்தனையும்
மருந்துகள்  செய்ய மகத்தான  சரக்குகள்  என்கிறார்கள்
சித்த மருத்துவ  சிறப்பு  அறிஞர்கள்.

கரிசல்  மண் தவிர,  அனைத்து மண் கண்டங்களிலும்
சரக்கொன்றை செழித்து வளரும்.
மண் கண்டம்  குறைந்த  கரம்பிலும்
வறண்ட  மணலிலும்கூட
சரக்கொன்றை சரஞ்சரமாய்  பூத்து   சாதனை  செய்யும்.

ரகசியமாய்ச்  சொல்லுகிறேன்  கேளுங்கள் !
அய்நூறு மில்லி  மழைகூட  ஆண்டு  முழுவதும் பார்க்காத
ராஜஸ்தானத்து   மண்ணில்கூட சரக் கொன்றை ரம்மியமாய் வளரும்.

விதையாக விசிறி விதைக்கலாம் ; நாற்றாக  நடவு செய்யலாம் ;  வேர்ச்  செடியாக  எடுத்து நடலாம் !

'இது வெறும்  மரக்கொன்றை  அல்ல ; சரக் கொன்றை"

அழகு தேவைப்படும் அத்தனை இடங்களிலும் சரக்கொன்றையை சகட்டுமேனிக்கு நடலாம்.

பூமி,  ஞானசூரியன், 8526195370




DEMONITIZATION -- குறைந்த பணபரிவர்த்தனை


நல்ல காலம் பொறக்குது 

குறைந்த பணபரிவர்த்தனை

 


சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்

 (இளங்காலை நேரம். குடுகுடுப்பைக்காரன் தனது சிறு பறை அடித்து குறி சொன்னபடி செல்லுகிறான். மகளிர் குழுவின் தலைவி பாரதி குறி கேட்க வீட்டைவிட்டு வெளியே வருகிறாள்)

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி
மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே ஆயி உமையே  
அகிலாண்ட ஈஸ்வரியே

தேவி ஜக்கம்மா ராக்கு சொடலை
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு
நீ ஒரு நல்ல சேதி சொல்லு

இந்த மண்ணுமனையப் பற்றி பார்த்தேன் குறையில்ல
வீடுவாசலைப்பற்றி  பாத்தேன் குறையில்ல
மனைவிமக்களப்பற்றி பாத்தேன் குறையில்ல
குழந்தை குட்டியப்பற்றி  பாத்தேன் குறையில்ல
ஆடு மாட்டப்பற்றி பாத்தேன் குறையில்ல
கோழி குஞசப்பற்றி பாத்தேன் குறையில்ல

பாரதி: வணக்கம் கோடாங்கி.. ஒனக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன் என்பேரு பாரதிஎங்க அம்மா பெயர் தமிழச்செல்வி; அவுங்களுக்கு உன்னை நல்லாத் தெரியும்னு சொன்னாங்க..


கோடாங்கி: தமிழ் அம்மாவோட பிள்ளையா.. ? உங்களப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ?

பாரதி;;: என்ன கேள்விபட்டிருருக்கிங்க ?

கோடாங்கி: உங்க பேரு பாரதி..எம் ஏ தமிழ் படிச்சிருக்கிங்க.. மகளிர் குழு வச்சிருக்கிங்க. அந்தக்குழு மூலமா நிறை பேருக்கு உதவி செய்யறீங்க. இந்த பகுதியில பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிறைய வேல பாக்கறீங்க.. சரீங்களா தாயி.?

பாரதி; எனக்கு மயக்கமே வருது.. என்னோட சரித்திரத்தையே விரல்நுனியில வச்சிருக்கிங்க..

கோடாங்கி: என்ன செஞ்சாலும் அதுல எனக்கு என்ன கிடைக்கும்னு யோசனை பண்ற இந்த உலகத்துல..உங்கள மாதிரி பாக்கறது அபூர்வம். அதனாலதான் உங்களப்பற்றி நிறைய கேட்டு விசாரிச்சி தெரிஞ்சிகிட்டேன்..

கோடங்கிநீங்க பேசறது என்னை இன்னும் அதிகமா உழைக்கணும்னு உற்சாகப்படுத்துது..ரொம்ப நன்றி கோடாங்கி.

கோடாங்கி: இருக்கட்டும்மா உங்களுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க தாயி..

பாரதி: போனவாரம் மன்கி பாரத் நிகழ்ச்சியில நம்மோட பிரதமர் குறைந்த பண பரிவர்த்தனைபற்றி பேசினார்..அதுல இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் வச்சார்...அதாவது வீட்டுல இருககும் பெரியவங்களுக்கும் இதைப்பற்றி சொல்லிக் குடுங்கன்னு சொன்னார்.. இதனால கருப்புப்பணமும், கள்ளநோட்டும், லஞ்ச லாவண்யமும்  ஒழிக்கமுடியும்னு பேசினார்.. அதனால எங்க பகுதியில இருக்கற எல்லா மகளிர் குழுக்களும் இதை நடைமுறைப்படுத்தணும்னு முடிவுபண்ணணியிருக்கோம்..அதற்கான விழிப்புணர்வை குடுக்கணும்னு நினைக்கறோம்.. அதனால குறைந்த பணப்பரிவர்த்தனைப்பற்றி கொஞ்சம் விவரமா சொல்லு கோடாங்கி.. 

கோடாங்கி: உங்க ஒருத்தருக்கு சொல்றது ஒரு ஆயிரம் பேருக்கு சொல்ற மாதிரி கொஞ்சம் இரு தாயி.. ஆத்தாவை கேட்டு சொல்றேன்..

மக்களா கேளுங்க
மகமாயி வாக்கு இது
ஜனங்களா கேளுங்க
ஜக்கம்மா வாக்கு இது

ஒரு பண்டத்தை குடுத்து
பண்டத்தை வாங்கறது
பண்டமாற்று பரிவர்த்தனை தாயி
ஆட்டைக்குடுத்து மாட்டை வாங்கினா
அதுபண்டமாற்று பரிவர்த்தனை..
மாட்டைக்குடுத்து ஆட்டை வாங்கினா அதுவும்
பண்டமாற்று பரிவர்த்தனை..

இந்த பரிவர்த்தனையில
பலபல பண்டங்களுக்கு பதிலா
ரூபா நோட்டையும்
சில்லறையும் சிதறவிட்டா
அது பணபரிவர்த்தனை தாயி

பாரதி: ஒரு காலத்துல பண்டமாற்று முறை இருந்ததுன்னு
கேள்விபட்டிருக்கேன். மேல சொல்லு

கோடாங்கி: பணபரிவர்த்தனையில
உப்புபுளி மிளகாய் உடைச்சகடலை உருட்டுகட்டை
கமருகட்டு கடலை உருண்டை
எது வாங்கினாலும்
அணாபைசா சுத்தமா எண்ணி வைக்கறதும்
ஆடுமாடு கோழிகொக்கு அரிசிமாவு அவிச்ச மக்காச்சோளம்
புண்ணாக்கு பொரிமாவு
எது வித்தாலும்
அதுக்கு உரிய காசை
உடனடியா வாங்கறதும்;
பணபரிவர்த்தனை தாயி

சேமிச்ச பணத்தை
வங்கிக் கணக்குல போடறதும்
தேவைக்கு எடுக்கறதும்
பணபரிவர்த்தனைதான்

பண்டமாற்று பரிவர்த்தனைக்கு
மாற்றாக வந்ததும்
பணபரிவர்த்தனைதான் தாயி..

அதுலதான்
அரையணா ஒரணா வந்தது
அஞ்சிபைசா பத்துபைசா வந்தது
ஐநூறும் ஆயிரமும் போனது
ரெண்டாயிரம் வந்தது
எல்லாமே பணபரிவர்த்தனைதான் தாயி..

பாரதி: அணாபைசா பற்றியும் தெரியும். அதுக்குப்பிறகு வந்த
நயா பைசாவும் தெரியும் அது என்ன குறைந்த பணபரிவர்த்தனை?

கோடாங்கி.. பணபரிவர்த்தனைக்கு ஏறத்தாழ மாற்றுதான் குறைந்த பண பரிவர்த்தனை;

குறைவான பண பரிவர்த்தனை
இந்திய தேசத்துல
எடுத்தடி வச்சிடுத்து தாயி
உருக்கி ஊத்தின
சில்லரைக்காசும்
அச்சடிச்ச ரூபாய் நோட்டு;ம் இனி;
அடக்கிவாசிக்கப் போகுது தாயி

கைமேல காசுகொடுத்து
வாய்மேல தோசை வாங்கற
கலாச்சாரம் காலாவதி
ஆகப்போகுது தாயி

அதுக்கு பதிலா
டேபிட் கார்ட் வந்தாச்சி
கிரிடிட் கார்ட்  வந்தாச்சி
மொபைல் பேங்கிங் வந்தாச்சி
அதுக்கு உதவியா
மொபைல் போனும் வந்தாச்சி

கருவாடும் காய்ஞ்சமிளகாயும்
கால்கிலோ அரைச்ச மஞ்சளும
தேனும் மீனும்;
தேங்காயும் மாங்காயும்
ஆன்லைன் மார்கட்டிங்ல
மக்கள் ஆர்டர்பண்ண
ஆரம்பிச்சுட்டாங்க தாயி

பாரதி: நீ சொல்றது சரிதான் கோடாங்கி..

கோடாங்கி:

பொருள் வாங்கறதும் விக்கறதும் ஆன்லைன்ல செஞ்சா அது
அது ஆன்லைன் மார்கெட்டிங்.
வங்கியில பணத்தை எடுக்கறதையும் அனுப்பறதையும்
ஆன்லைன்ல செஞ்சா அது ஆன்லைன் பேங்கிங் தாயி

இதெல்லாம் பால பருவத்தில விளையாட்ற கோலிகுண்டு மாதிரி
ரொம்ப சுலபம் தாயி..

ஆனா அதுக்கு
வங்கியில கணக்கு இருக்கணும்
கணக்கில பணம் இருக்கணும்
கையில டெபிட் கார்டு கிரிடிட் கார்டு
இருக்கணும்
வாயில போன் இருக்கணும்
அம்புட்டும இருந்தா
ஆன்லைன் பேங்கிங்லயும் மார்கெட்டிங்லயும்
ஆல்ரவுண்டரா அடிச்சி ஆடலாம்னு
ஆத்தா சொல்லுது தாயி

வங்கிக்கு தகவல் மட்டும்
குடுத்தா போதும்
வாங்கின பொருள் அத்தனைக்கும்
பணம் அத்தனையும்
பட்டுபட்டுன்னு பட்டுவாடா ஆகிடும் தாயி

இனி ரூபா நோட்டையும்
சில்லரை காசையும்
கண்காட்சியில் பார்க்கற மாதிரி
கணிசமா குறைஞ்சிடும்
காலம் கனிஞ்சிடும் தாயி..


பாரதி: இதனால நமக்கும் நாட்டுக்கும் என்ன பிரயோஜனம்னு சொல்லேன் கோடாங்கி..

கோடாங்கி:தாயி ஏற்கனவே நீங்க சொன்ன மாதிரி..

கருப்புப்பணத்தோட
கைங்கர்யம் குறையும்
கள்ளப்பணத்தோட
சவுந்தர்யம் குறையும்
லஞ்ச லாவண்யத்தோட
நடமாட்டம் குறையும் 
ரூபா நோட்டு அடிக்கற செலவும்
சில்லரைக்காசு உருக்கி ஊத்தற செலவும்
சிக்கல் இல்லாம
குறையும் தாயி
அத்தோட பணபரிவர்த்தனையில
ஆகக்கூடிய காலநேரம்
மிச்சமாகும்னு ஆத்தா சொல்லுது தாயி..

பாரதி: ரொம்ப நன்றி கோடாங்கி.. எங்க மாவட்டம் முழுக்க இருக்கற மகளிர் குழுக்களுக்கு இதப்பற்றி ஒரு விழிப்புணர்வு நடத்தலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் கோடாங்கி..

கோடாங்கி:  எதாவது ஒரு கூட்டத்துக்காவது இந்த கோடாங்கிய கூப்பிடுங்க தாயி

பாரதி: சாமக்கோடாங்கின்றதால சாமத்தில கூப்பிட்டததான் வருவேன்னு அடம் புடிக்கமாட்டீங்கல்ல..? (சிரிக்கிறார்)

கோடாங்கி: (சிரித்துக்கொண்டே)
இல்லதாயி இல்லதாயி
அந்தி சந்தி
ஏந்த நேரமும்
ஏனக்கு சம்மதம் தாயி

குறைவான பணபரிவர்த்தனை
நிறைவான வாழ்க்கைக்கு
அடையாளம்னு ஆத்தா சொல்லுது
நான் வர்றேன் தாயி..

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி

(இன்னொரு வீட்டின் எதிரில் சாமக்கோடாங்கியை ஒருவர் அழைக்க அவருக்கு குறிசொல்ல அவரை நோக்கி நடக்கிறார். தெரு நாய்கள் வாய்விட்டு குலைத்து அவரை வரவேற்கின்றன.)
































ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...