Tuesday, June 14, 2016

REJUVENATION OF DRIED WELLS & BOREWELLS - இறைக்காத போர்வெல்லை இறைக்க வைப்பது எப்படி ? சுரக்காத கிணற்றை சுரக்க வைப்பது எப்படி ?

இறைக்காத போர்வெல்லை இறைக்க வைப்பது எப்படி ? சுரக்காத கிணற்றை சுரக்க வைப்பது எப்படி ?

(பண்ணைகுட்டை, வற்றிப்போன போர்வெல், தண்ணீர் கிடைக்காத போர்வெல்கள், வறண்டுபோன கிணறுகள், மற்றும் பாழடைந்த கிணறுகள் மூலம் மழைநீர் அறுவடை) 

கேள்வி: 01. வயலில் பண்ணைகுட்டை அமைப்பதனால் என்ன பயன் ?
ஓன்று மழைநீரை சேமிக்க முடியும், இரண்டாவது நிலத்தடி நீரை மேம்படுத்தலாம், தேங்கி நிற்கும் தண்ணீரை பழமரக்கன்றுகளுக்கு எடுத்து ஊற்றலாம். நல்ல தண்ணீரில் வளரும் மீன்வகைகளை வளர்க்கலாம்.

ஆனால் சில பேர் பண்ணைகுட்டைபோடுவதால் ஒரு பகுதி நிலம் வீணாய் போவதாக கருதுகிறார்கள். எவ்வளவு தண்ணீரை அதன் மூலம் சேமிக்க முடியும் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

நம் வயலில் சிறியதாக 5 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் 1 மீட்டர் அகலத்தில் ஒரு பண்ணை குட்டை அமைக்கலாம். இந்த பண்ணைகுட்டையின் அளவு 10 கனமீட்டர். ஒரு கனமீட்டர் குழியில் அல்லது பள்ளத்தில் 1000 லிட்டர் நீர்சேகரம் ஆகும். அப்படி என்றால் 10 கனமீட்டர் கொள்ளளவு கொண்;ட ஒரு பண்ணைகுட்டை ஒரு முறை நிரம்பினால் 10000 லிட்டர் தண்ணீர் சேகரம் ஆகும். 10000 லிட்டர் நீரை நிலத்தடியில் நீராக சேர்க்கும். ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 30000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். 

இந்த கணக்கு தெரிந்தவர்கள் யாரும் பண்ணைகுட்டையை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். 

02. ஆரம்பத்தில் தண்ணீர்தந்த போர்வெல்கள் போகப்போக குறைந்து ஒரு சில ஆண்டுகளில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. இதுபோல பொய்த்துப்போன போர்வெல்களை சரிசெய்யமுடியுமா?

லட்சக்கக்கான ரூபாய் செலவு செய்து பேர்போடறோம். இறைத்துக்கொண்டிருந்த போர் இறைக்காமல் போனால் அதை அப்படியே கைக்கழுவிவிடுவோம். அப்படி இல்லாமல்  வரண்டுபோன அந்த போர்வெல்லை வரத்து உள்ளதாக மாற்றிவிட முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான்.  கிணற்றைச்சுற்றிலும் ஐந்தடிக்கு ஐந்தடி அல்லது பத்தடிக்கு பத்தடி மழைநீர் உறிஞ்சு குழியை அமைக்கலாம். ஐந்தடி நீள அகல ஆழமுள்ள குழி எடுக்க வேண்டும். 5 அடி ஆழமுள்ள அந்த குழியின் அடியில் 2 அடிக்கு பெரிய செங்கல் ஜல்லிகளை நிரப்ப வேண்டும். அதன்மீது ஒண்ணரை ஜல்லியை அரையடிக்கு நிரப்ப வேண்டும். அதன்மீது முக்கால் ஜல்லியையும் அரையடிக்கு நிரப்ப வேண்டும். இந்த மூன்று அடுக்குகளை போட்டபின்னால் ஒரு அடி உயரத்திற்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும். அதன் பிறகு பெய்யும் மழை நமது நிலத்தில் எங்கு பெய்தாலும் நமது உறிஞ்சு குழியில் இறங்குமாறு செய்ய வேண்டும்.

நல்லமழை கிடைத்தால் ஒரே ஒரு பருவமழையில்கூட நமது போர்வெல் உயிர் பிழைத்துவிடும். இந்த நீர் உறிஞ்சுகுழி எவ்வளவு பெரியதாக உள்ளதோ அந்த அளவுக்கு சீக்கிரமாக, நின்றுபோன போர்வெல்லை நீர் இறைக்கும் போர்வெல்லாக மாற்றிவிடமுடியும்.

கேள்வி:03. இதுவரை போர்வெல்லில் மழைநீரை சேகரிக்கும் முறையை சொன்னீர்கள். அதுபோல வரண்டுபோன கிணறுகளில் நீர்மட்டத்தை உயர்த்த வழி உள்ளதா ? 
பெய்யும் மழைநீர் மண்கண்டத்தின் ஊடாக இறங்கி ஊற்றோட்டமாக கிணற்றை அடைய அதிக நாட்கள் பிடிக்கும். ஆனால் கிணற்று நீர் உறிஞ்சுக்குழிகள் அமைத்தால் ஓரே நாளில்கூட கிணற்றின் நீhமட்டம் உயர்ந்துவிடும்.

இதனைச் செய்வதும் சுலபம். இதற்கு அதிக செலவும் ஆகாது. இதற்கு தேவைப்படும் பொருட்களும் அதிகம் இல்லை. 

கிணற்றில் இருந்து 4 அல்லது 5 அடி தள்ளி ஒரு குழி எடுக்க வேண்டும். அந்தக்குழி 5 அடி நீள அகலமும் 3 அடி ஆழமும்; இருக்க வேண்டும். அந்தக் குழியின் அடிப்பகுதியில் ஒரு 2.5 இன்ச் பிவிசி குழாயை பொருத்த வேண்டும். அதன் ஒரு நுனியை குழியிலும் மறு நுனியை கிணற்றிலும் இருக்குமாறும் பொருத்த வேண்டும். குழியிலிருந்து கிணற்றில் வடியுமாறு குழாயை மேலிருந்து கீழாக சரிவாகப் பொருத்த வேண்டும். குழியில் இருக்கும் நுனியில் சல்லடை போன்ற கம்பி வலையை பொருத்த வேண்டும். இதனால் நீருடன் மணல் கலந்து கிணற்றுக்குள் செல்வதைத் தடுக்கும்.

குழியின் அடிப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு உடைந்த செங்கல் ஜல்லிகளை நிரப்ப வேண்டும்.

அதன் மீது ஒண்ணரை ஜல்லிகளையும் முக்கால் ஜல்லிகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக நிரப்ப வேண்டும்.

குழியில் அரையடி பள்ளம் இருக்குமாறு ¾ ஜல்லி அடுக்கின்மீது ஆற்று மணலை நிரப்ப வேண்டும். இப்போது கிணற்று நீர் உறிஞ்சுக்குழி தயார்.
இதைச்செய்து முடித்த பின்னால் மறக்காமல் இன்னொரு காரியத்தை செய்ய வேண்டும்.

உங்கள் நிலத்தில் பெய்யும் மழை அனைத்தும் இந்த நீர் உறிஞ்சுக் குழியில் வருமாறு வாட்டம் கொடுக்க வேண்டும். இப்போது குறைவான அளவு மழை பெய்தாலும் கிணற்று நீர் உறிஞ்சுக் குழியில் இறங்கி தானாக கிணற்றில் வடியும். நல்ல மழை பெய்தால் ஒரேமழையில்கூட அரைவாசி கிணறு நிரம்பிவிடும். இது உங்கள் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயரச்செய்யும்.

கேள்வி: 04. சில வயல்களில் சில கிணறுகள் பாழடைந்துபோய் இருக்கின்றன. அவற்றை என்ன செய்யலாம் ?
நமது வயல்களில் பாழடைந்த கிணறுகள் இருந்தால் அதைப்பற்றி கவலைப்படவேண்டாம். அந்த கிணறுகளைக்கூட மழைநீரை அறுவடை செய்ய பயன்படுத்தலாம். 

பெய்யும் மழை நீர் அந்த கிணறுகளில் சேகரம் ஆகும்படி வாட்டம் செய்யலாம். அதிலும் கிணற்று நீர் உறிஞ்சு குழிகளை அமைத்தால் அதில் சேகரம் ஆகும் தண்ணீர் நிலத்தடி நீராக மாறும். அந்த வயலில் உள்ள இறைத்துக்கொண்டிருக்கும் போர்வெல் அல்லது கிணற்றுக்கு உதவியாக அது இருக்கும்.

05. நமது வயலில் போர்போடும்போது தண்ணீர் கிடைக்காமல் போய்விடுகிறது. அல்லது சொற்பமாக தண்ணீர் மட்டுமே வருகிறது. வேண்டாம் என அந்த போர்வெல்களை ஒதுக்கிவிடுகிறோம். அப்படி ஒதுக்கப்பட்ட போர்வெல்களை என்ன செய்யலாம் ?

அந்தமாதிரி விடப்பட்ட போரின் துளைகளை மண்போட்டு மூடி அடைத்துவிடாதீர்கள். வயலில் வாட்டம் செய்துவிட்டால் அந்த துளைகளின் வழியாகவும் மழைநீர் இறங்கி நிலத்தடி நீரை சேமிக்கும்.

விவசாய பெருமக்களே, இதுவரை நாம் மழைநீரை எப்படி சேமிக்கலாம் என்று பார்த்தோம்.

இது பருவமழைக்காலம். தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. இந்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை கிடைக்கும் என்கிறார்கள் மழை விஞ்ஞானிகள்.

பெய்யும் மழையை அறுவடைசெய்து நிலத்தடி நீரை மேம்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் பயிர்களை  சாகுபடி செய்து சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து உற்பத்தியையும் வருமானத்தையும் லாபத்தையும் பெருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இது பற்றி மேலும் விளக்கம் வேண்டுவோர் எங்களை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். விளக்கமும் ஆலோசனையும் இலவசமாகப் பெறலாம். இது தொடர்பான வேலைகளை நியாயமான கட்டணம் செலுத்தியும் செய்துகொள்ளலாம். 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: டி.ஞானசூரியபகவான், இயக்குநர், பூமி அறக்கட்டளை, 3ஃ265, மல்லகுண்டா ரோடு, தெக்குப்பட்டு ரூ அஞ்சல், வாணியம்பாடி தாலுக்கா, வேலூர் மாவட்டம். தொலைபேசி எண்:08526195370. 
மழை வருபோதே பிடித்துக்கொள்
Image Courtesy: Thanks Google




   

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...