புங்கன்
பூச்சிகளை
கட்டுப்படுத்தும் மரம்
PUNGAN - NATURAL PEST CONTROL TREE
- வேம்புக்கு அடுத்த நிலையில் பயிர் பாதுகாப்புக்கு ஏற்றது புங்கன். இலை, விதைப்பருப்பு, எண்ணெய், பிண்ணாக்கு அனைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
இலைச்சாறு (PUNGAN LEAF SOLUTION)
- 200 கிராம் புங்கன் இலைகளை இடித்து அரைத்து கூழாக்கி ஒரு லிட்டர் நீரில் அவற்றை இட்டு, ஒரு இரவு முழுக்க ஊற வைத்து அடுத்தநாள் காலை மெல்லிய துணியில் வடிகட்டி, அத்துடன் 4 மில்லி காதி சோப்புக் கரைசல், கலந்து இலைச்சாறு தயாரிக்கலாம்.
- 50 கிராம் புங்கன் விதைப்பருப்பை பொடித்து தூளாக்கி அதனை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி 1 லிட்டர் தண்ணீரில் முக்கி ஒரு இரவு முழுக்க வைத்திருந்து, அடுத்த நாள்காலை துணிமூட்டையை நன்கு பிழிந்து அத்துடன் 4 மில்லி காதி சோப்புக் கரைசலைக் கலந்தால் விதைக்கரைசல் தயார்.
பிண்ணாக்குக்கரைசல் (PUNGAN CAKE SOLUTION)
- 100 கிராம் புங்கன் பிண்ணாக்கை இடித்து பொடி செய்து அதனை மூட்டையாக ஒரு துணியில் கட்டி ஒரு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மூழ்கி இருக்குமாறு ஒரு இரவு முழக்க ஊற வைத்து, அடுத்தநாள் காலை மூட்டையை அழுத்திப் பிழிந்து கரைசலை மட்டும் வடித்து அத்துடன் 4 மில்லி காதி சோப்புக் கரைசலை கலந்து பயன்படுத்தலாம்.
எண்ணெய்க்கரைசல் (PUNGAN OIL SOLUTION)
- புங்கன் எண்ணெய்க் கரைசல் நெல் பச்சை தத்துப் பூச்சியைக் கட்டுப் படுத்தும்.
- இதன் மூலமாக துங்ரோ வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும். இது நெல் பயிரைத் தாக்கும் புகையான் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
- புகையான் பூச்சியைக் கட்டுப் படுத்தும் திறன,; புங்கன் எண்ணெயில், வேம்பு எண்ணெயைவிட சிறப்பாக உள்ளது.
- பயிரில் தெளிக்குமபோது புங்கன் எண்ணெய் நன்மை செய்யும் சிலந்திப் பூச்சிகளையும் பாதிப்பதில்லை.
மரப்பட்டை (TREE BARKS)
- புங்கன் பட்டைகளைத் தூளாக்கி தூவுவதன் மூலம் கரையான், கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இதனால்தான் புங்கன் மரத்தின் வைரப்பகுதியை கரையான்கள் தாக்குவதில்லை.
வேறு எவற்றை கட்டுப்படுத்தலாம் ? (CONTROL OF OTHER PESTS)
- உலர்ந்த புங்கன் தழைகளை குதிர்களில் போட்டுவைத்து, அதில் சேமிக்கும் தானியங்களை, பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம்.
- நெல் புகையான், கூண்டுப்புழு, மற்றும் காப்பி பச்சை நாவாய்ப்பூச்சி, கடுகுப் பயிரின் அசுவணிப் பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த எண்ணெய்க்கரைசல் தெளிக்கலாம்.
- புங்கன் பிண்ணாக்கை இட்டு கரும்புப் பயிரைத் தாக்கும் சிவப்பு எறும்புகள், காப்பி மற்றும் தக்காளி வயல்களில் வேர்முண்டுகளை காயப்படுத்தும் நூற்புழுக்களையும் கட்டுப்படுத்தலாம். இதர நூற்புழுக்களின் தாக்குதலும் குறையும்.
No comments:
Post a Comment