Tuesday, May 3, 2016

PREVENTION OF ACCIDENTS IN FACTORIES - தொழிற்கூடங்களில் விபத்துக்களை தடுக்கலாம்.

Image Courtesy:Thanks Google

தொழிற்கூடங்களில் விபத்துக்களை
தடுக்கலாம்.

(கிட்டத்தட்ட  ஏழெட்டு ஆண்டுகள் அகில இந்திய வானொலியில் சக்கைப்போடு போட்ட வடிவம் இது. சொல்லவேண்டிய செய்திகளை ஒரு குடுகுடுப்பக்காரனாக வந்து எளிமையாக சொன்ன நிகழ்ச்சி இது. மதுரை மற்றும் சென்னை வானொலிகளில் தொடராக வந்து பட்டையைக்  கிளப்பியது.)

நள்ளிரவில் வந்து குறி சொல்லுபவர்களை சாமக்கோடாங்கி என்றும் குடுகுடுப்பைக்காரர் என்று சொல்லுவார்கள். 

வீடுவீடாக சென்றுகுறிசொல்லும் கோடாங்கி இன்று ஒரு பேக்டரிக்குப் போகிறார். ஒரு தொழிலாளி சா.கோ.சங்கரலிங்கம் பேக்டரியை சுற்றிக் காட்டுகிறார்.


நல்ல காலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி …

மாரி மகமாயி   !
ஆயி உமையே  !
அகிலாண்ட ஈஸ்வரியே  !
தேவி ஜக்கம்மா  !
ராக்கு சொடலை  !
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு …
நீ ஒரு நல்ல சேதி சொல்லு …

காஞ்சி காமாட்சி  !
கவனமா சொல்லு தாயி …
காசி விசாலாட்சி கருத்தா  !
சொல்லு தாயி…
மதுரை மீனாட்சி   !
மறைக்காம சொல்லு தாயி …

இந்த நாட்டைப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …
மழை மாரியப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …

காடு கழனியப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …
பயிர் பச்சையப்பத்திப் பாத்தேன்
கொறையில்ல …
மாடு கண்ணப்பத்திப் பாத்தேன்
கொறையில்ல …

தொழிலாளி;: கோடாங்கி ஒருநிமிஷம் இங்க வா …
தெனைக்கும் ரோடு ரோடா கடந்து
ஊருஊரா குறி சொல்லிட்டுப் போற …
இன்னைக்கு ஒரு நாளைக்கு  … எங்க
பேக்டறிய சுத்திப்பாத்து ஒரு குறி சொல்லு

கோடாங்கி …இந்த மண்ணு
மனையப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல. …
இந்த மனைக்கு
சொந்தமான பேக்டரிப்பத்திப்
பாத்தேன் கொறையில்ல …

இதுல வேலை பாக்கற
விசுவாசமான
தொழிலாளிங்களப்பத்திப்
பாத்தேன் கொறையில்ல …
தொழிலாளிகள்
வீடு வாசலப்பத்திப்  பாத்தேன்
கொறையில்ல …
அவுங்க மனைவி
மக்களப்பத்தி பாத்தேன்
கொறையில்ல …

(பளு தூக்கும் பிரிவில் இருவரும் நுழைகிறார்கள்)


தொழிலாளி: நீ சொல்றதக் கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு …தோ …பாரு …இதுதான் பளு தூக்கற எடம் …

கோடாங்கி: அடுக்கறது
மயில் தோகைன்னாலும் …
அளவில்லாம அடுக்கனா …
அச்சிமுறிஞ்சி அம்பேலாயிடும்ன்னு …
திருவள்ளுவர் சொல்றார் சாமி …

இந்த
பளுதூக்கி
சக்திக்கு மேல …
பாரத்த தூக்கி வச்சா…
அதுக்கு சவுகரியப்படாதுன்னு
ஆத்தா சொல்லுது சாமி…

தொழிலாளி: நீ என்னா கோடாங்கி சொல்றே.  ?
அந்த பளுதூக்கியோட சக்திக்குமேல …
பாரத்தை ஏத்தக் கூடாதுங்கறே … சரியா …?

கோடாங்கி :--ஆமா   சரி …
குருவித் தலையில பனங்காயை
ஏத்தறது சரியில்லன்னு
ஜக்கம்மா சொல்லுது சாமி …
அத்தோட இன்னொரு
சமாச்சாரம் சாமி …

இந்த பளு தூக்கியில …
பளுவை பாரதத்தை …
சரியான மொறையில …
தொங்க விடலன்னா …
சங்கடம் வாறது … சகஜம்னு
ஆத்தா சொல்லுது சாமி …

(அடுத்து மின்சாரப்பிரிவில் இருவரும் நுழைகிறார்கள்)

தொழிலாளி: இதுததான் கோடாங்கி
மின்சாரப்பிரிவு  --  இங்க இருந்துதான்
மின்சாரம் எல்லாப் பிரிவுக்கும்
போகுது…

கோடாங்கி: என்னா சாமி இது …
“மின்சாரம் பிரிவு…”ன்னு சொன்ன ஒடனே …
மின்சாரம் பட்டுன்னு கண்ணை மூடிடுச்சி …

தொழிலாளி:: கொஞ்சம் அசையாம அப்படியே நில்லு …
பக்கத்துல மெழுகு வத்தி இருக்கான்னு
பாக்கறேன்…

கோடாங்கி: அப்படி இல்லாம
இருட்டல்ல மெழுகுவர்த்தி
தேடினா …  மிச்ச சொச்சமா
சுத்திச்  சொழல்ற
மெஷின்ல  … நம்ம
கையும்  காலும்
இடம் மாறிப்போகும் …
தடம் மாறிப் பொகும்னு
ஆத்தா சொல்லுது சாமி …

இப்படி தடுக்கிவிழுந்தா
தவணை முறையில
வந்துபோகற  மின்சாரம் …
சட்டுன்னு சொன்னா
பட்டுன்னு போடணும்  …
எமர்ஜன்சி  லேம்ப் ன்னு
எடும்பாடு எசக்கியம்மா
எங்காதுமேல சொல்லுது சாமி ...

(ஒரு இடத்தில் வாயு கசிந்துக் கொண்டிருக்க – ஒரு
தொழிலாளி பார்த்துக் கொண்டிருக்க…)

கோடாங்கி: இந்த மாதிரி
விஷ வாயு
விவகாரமான வாயு
நச்சுவாயு  …  நாசவாயு  …
கசிஞ்சி  வந்தா …
அசைஞ்சி  வந்தா
அடுத்த நிமிஷம்
அத்தனை பேரும்
அந்த எடத்தை காலி பண்ணிட்டு
பாதுகாப்பான எடத்துக்கு
பறந்து போகணும்னு …
இல்லன்னா போபால் மாதிரி
ஆயிடும்னு ஆத்தா சொல்லுது சாமி …

தொழிலாளி: இந்த மாதிரி விஷவாயு கசிஞ்சு வந்தா …
உடனடியாக அதுல இருந்து தப்பிக்கணும்  …
போபால் மாதிரி ஆயிடும் சொல்ற …

(ஒரு இடத்தில் சின்னதாய் தீ பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. தீ  …  தீ  ….  என சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்)


கோடாங்கி;;: திடு திப்புன்னு
தீப்பிடிச்சா  …  இந்தமாதிரி
கூப்பாடு  போகாம  …
கூச்சல் போடாம  …
பயந்து போகாம  …
பக்கத்துல இருக்கற
தீ அணைப்புக் கருவிய
பக்குவமா பயன் படுத்தனும்னு
ஆத்தா சொல்லுது..

தொழிலாளி: அதனாலதான் எங்க பேக்டரியில  அங்கங்க
தீ அணைப்புக் கருவிய வச்சிருக்கிறோம்  …   கோடாங்கி.

  (கிரைண்டிங் பிரிவில் இருவரும் நுழைகிறார்கள்)


தொழிலாளி: இதுதான் கிரைண்டிங் பிரிவு   கோடாங்கி …
கோடாங்கி: கிரைண்டிங் செய்யறதுக்கு
முன்னாடியே  …
கண்ணாடி போட்டுக்கணும் சாமி  …
இல்லன்னா  …
துள்ளிக் குதிக்கற

துண்டு இரும்பெல்லாம்
இத்தனூண்டு பார்வைக்கூட இல்லாமல்
பண்ணிடும் சாமி  …
பின்னாடி கண்ணாடி
போட்டாலும் கண்ணை
காப்பாத்த  வழியில்ல
வகையில்லன்னு ஆத்தா
சொல்லுது  சாமி  …

தொழிலாளி: இந்த மாதிரி
கண்ணாடி போடாம
கிரைண்டிங் பண்ணக் கூடாதுன்னு
சொல்றே  சரியா …?

கோடாங்கி: சர்தான் சாமி  …

தொழிலாளி: ஏன் கோடாங்கி
பேக்டரியில விபத்து நடக்காம இருக்கறதுக்கு
ஏதாவது வழி இருந்தா ஆத்தாவைக் கேட்டு
சொல்லேன் கோடாங்கி 

கோடாங்கி: ஜனங்களா கேளுங்க
ஜக்கம்மா வாக்கு இது  ,,,
மக்களா கேளுங்க
மகமாயி வாக்கு இது  …
பேக்டரியில்  விபத்து நடக்காம
இருக்க மூனு வழி இருக்குன்னு
ஆத்தா சொல்லுது  சாமி …

தொழிலாளி: மூணுவழி என்னான்னு
சொல்லு கோடாங்கி
அப்படியே கடைபிடிக்கிறோம்…

கோடாங்கி: அதுல முதல்வழி  ‘ கவனம் ’
இரண்டாவது  வழி ‘ கவனம் ’
மூன்றாவது வழி  ‘கவனம் ’

தொழிலாளி: என்ன கோடாங்கி மூணு வழின்னு சொல்லிட்டு
ஒரே  வழியை மூணு தடவை சொல்றே …?

கோடாங்கி: அதான் சாமி…
விபத்து நடக்காம இருக்கனும்ன்னா  …
கவனம் வேணும் சாமி.
அதான் சாமி  …   அதையே ஆத்தா
மூணு தடவை   …  சொல்றது சாமி  …
கவனம் இல்லாது 
செய்யற  வேலையும் …
கருநாகத்  தோட
கண்டபடி  வெளையாடறதும்  …
ஒண்ணுன்னு ஆத்தா
சொல்லுது சாமி  …

தொழிலாளி: அப்படி கவனமா இருந்தும்
விபத்து நடந்துடுத்துன்னு வையி   …

கோடாங்கி:  அப்படி
கவனமா இருந்தும்
கருத்தா இருந்தும்
கணக்கா இருந்தும்
விபத்து நடந்ததுன்னா   …
பயப்படாம …  பதட்டப்படாம …
அவசரப்படாம …  ஆத்திரப்படாம  …
முதல் உதவியை
முக்கியமா குடுக்கணும்  …



முதல் உதவி குடுத்த பின்னாடி  …
அக்கம்  பக்கத்துல இருக்கற
ஆஸ்பத்ரிக்கு  …
அடுத்த வினாடியே கொண்டு போகணும்  …
அப்படி
கொண்டு போகலன்னா
கஷ்டம்  வரும்  …  நஷ்டம்  வரும்னு
ஆத்தா   சொல்றா    …



தொழிலாளி: ஒரு விபத்து நடந்ததுன்னா
ஒடனடியா முதல்வுதவி கொடுத்து
ஆஸ்பத்ரியிpல் சேர்க்கணும்னு சொல்றே …
ஏன் கோடாங்கி வேறு ஏதாவது
முக்கியமான விஷயம்னு  ஏதாலது
சொல்றதுக்கு   இருக்குதா …?



கோடாங்கி: அதாவது
வெள்ளம் வர்றதுக்கு
முன்னாடி அணை போடணும்  சாமி  …



தொழிலாளி: (சிரித்தபடி )   பேக்டரிக்குள்ள
வெள்ளமெல்லாம் வராது கோடாங்கி  …
பேக்டரியச்சுத்தி மதில்வேற 
போட்டிருக்கோம் ….



கோடாங்கி: நான் அதைச் சொல்லல சாமி …
நான்சொன்னது தடுப்பு நடவடிக்கை சாமி …
அம்மைக்கு போடற மாதிரி
காலராவுக்கு போடற மாதிரி
தடுப்பு நடவடிக்கை சாமி  …



தொழிலாளி: இன்னும் கொஞ்சம் வெளங்கும்படியா
வெளக்கேன் கோடாங்கி



கோடாங்கி: ஒரு பேக்டரிக்கு
மின்சாரமும் அமிலமும்
மூலாஸ்தானம் மாதிரி
கர்ப்பக் கிரகம் மாதிரி
காரியாஸ்தானம் மாதிரி …



அதனால
மின்சாரத்தையும் …
அமிலத்தையும் …
கூரான பொருளையும்
கையாளும்போது  …
கை உறை போட்டு
கவனமா கையாளனும் …
கருத்தா கையாளனும் …
இப்படி கருத்தா செஞ்சா
கவனமா செஞ்சா
ஆபத்தும் அணுகாது
விபத்தும் அணுவாகாது சாமி  …



ஆக மொத்தத்துல
பாதுகாப்பா வேலை செஞ்சா
பத்திரமாக வேலை செஞ்சா
நமக்கும் நல்லது
நம்ம குடும்பத்துக்கும்
பேக்டரிக்கும் நல்லது  …
நாட்டுக்கும் நல்லது  …



கவலை வேணாம்
கலக்கம் வேணாம்  …
காரியம்  ஜெயம்ன்னு
கருத்தமாரி  சொல்லுது…
நான் வரேன் சாமி  …



தொழிலாளி: காலங்காத்தால வந்து
நல்ல சேதி சொன்ன …
ஒனக்கு எப்படி நன்றி
சொல்றதுன்னே தெரியல கோடாங்கி  …

(  கோடாங்கியின் கைகளை பற்றுகிறார்; )



கோடாங்கி: காலங்காத்தால எங்கைய புடிக்காத சாமி
போயி மிஷினப் புடி சாமி ….
நாலு வேலை நடக்கும் …
நானும் நாலு வூடு பாக்கணும் …
நான் வரேன் சாமி  …
நல்லகாலம் பொறக்குது  …
நல்லகாலம் பொறக்குது  …
அம்மா  தாயி  …






                 



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...