காற்றே காற்றே மாசு நீக்கி வா - தொடர்
POLLUTION POLLUTION GO AWAY - SERIAL
துஷ்ட தேவதைகளும்
காத்து கருப்பும் அண்டாது
ONE TREE
WILL OFFER YOU
TEN BENEFITS
நமது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்லாத வாயுக்கள் காற்றுடன் சேர்ந்து இருப்பதுதான் காற்று மாசுபாடு. காற்று மாசுபாட்டுக்கு முக்கியகாரணமாக இருப்பவை மனித செயல்பாடுகள்தான். புரியும்படியாக சொல்வதானால் சொந்தக் காசில் வைத்துக் கொள்ளும் சூனியம்.
விவசாயம் செய்தால் காற்று மாசடைகிறது. தொழில்கள் செய்தால் மாசடைகிறது. மோட்டார் வாகனங்களில் பயணம் செய்தால் மாசடைகிறது. சமையல் செய்தால் மாசடைகிறது. ஃபிரிஜ் வைத்துக் கொண்டால் மாசடைகிறது. ஏர்கண்டிஷன் போட்டால் மாசடைகிறது. ஏன் நாம் மூச்சுவிட்டால்கூட மாசடைகிறது.
ஆகையால் இப்போதைய டிரெண்ட் இதுதான். மாசோடும் தூசோடும்
காசோடும் வாழ்க்கையை ஓட்டுவதுதான் நிம்மதி.
நம் இங்கே பார்க்கப்போவது மரங்கள் இனி நமக்கு எப்படி உதவப்போகிறது என்பதைப் பற்றித்தான். ஒரு கணக்கு சொல்கிறேன். நீங்கள் ஒரு மாதத்தில் 26,000 மைல் காரில் பயணம் செய்கிறீர்கள். அப்போது ஏராளமான கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.
ஒரு ஏக்கர் மரத்தோட்டம் உள்ளது. அதில் முழுக்க முழுக்க மரங்கள்;. அப்படியென்றால் உங்களின் 26000 மைல் பயணத்தில் வெளியிட்ட அத்தனை கார்பன் டை ஆக்சைடையும் காலிபண்ணிவிடும் இந்த ஒரு ஏக்கர் மரங்கள். இது ஒரு ஆராய்ச்சி முடிவு.
மாசுபட்ட காற்றில் நாற்றம் அடிக்கும். வீச்சம் அடிக்கும். நைட்ரஜன் ஆக்சைடு இருக்கும். சல்பர் டை ஆக்சைடு இருக்கும், அம்மோனியா இருக்கும.; ஓசோன் இருக்கும். அத்தனை மாசுபடுத்தும் வாயுக்களையும் காற்றிலிருந்து நீக்கும் சக்தி மரங்களுக்குத்தான் உண்டு. அதுமட்டுமல்ல காற்றிலிருக்கும் தூசுகளை வடிகட்டுகிறது. இதரவகை துகள்களையும் வடிகட்டுகிறது.
18 பேர்கள் ஓராண்டிற்கு தொடர்ந்து சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் வேண்டுமா ? ஒரு ஏக்கரில் மரங்களை நட்டு வையுங்கள்.
உங்கள் தோட்டத்தில் 18 மரங்களை நடுகிறீர்கள். மரங்கள் அத்தனையும் வளர்ந்;துவிட்டது. அந்த மரங்கள் எல்லாமே 60 வருஷம் வயதுள்ள மரங்கள். 18 பேர்கள் அவர்கள் ஆயுசு உள்ளவரை சுவாசிக்க வேண்டிய ஆக்ஸிஜனை ஏற்பாடு செய்துவிட்டீர்கள். அப்படி என்றால் நீங்கள் ‘மிஸ்டர் கிரீன்’ என்று அர்த்தம்.
நகர்ப்புற சாலைகள் மற்றும் வீதிகளில் நிலவும் வெப்பம் அப்பகுதியில் மரங்கள் இருந்தால் கிட்டத்தட்ட 10 டிகிரி பாரன் ஹீட் வரை குறைகிறது. இதற்காக எந்த ஆராயச்சியையும் நாடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு சூரியனின் சூடு நம்மை வறுத்தெடுத்தது.
அப்படி வறுத்தெடுத்த வெய்யிலில் ஒரு அரைமணிநேரம் ஒருநாள் நடந்தேன். பிரார்த்தனை ஒன்றும் இல்லை. நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது நடந்தேன். நெருப்பு சட்டியை தலையில் வைத்தமாதிரி தலைக்கு மேல் சூரியன் நெருப்பை கொட்டிக்கொண்டே வந்தார். ஒரு பொட்டு நிழலாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். பக்கத்திலேயே ரோட்டோரம் ஒரு சீமைக் கருவைமரம். அதனடியில் சல்லடையில் சலித்தமாதிரி கொஞ்சம் நிழல். ஒதுங்கி நின்றேன.; புத்தரின் போதிமரத்தடி ஞானம்போல எனக்கு சீமைக்கருவை மரத்தடியில் சொர்க்கம் சிக்கியது.
ஒரே ஒரு மரம் இருந்தால் கூட போதும். அதைச்சுற்றி ஒரு ஜில்லிப்பு இருக்கும். அதைத்தான் மைக்ரோ கிளைமேட் என்கிறார்கள மகா விஞ்ஞானிகள்;.
நகர்ப்புறங்களில் மரங்களை வளர்ப்பதால் 10 விதமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
1. ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது.
2. சுறுசுறுப்பான சாலைகளில் போக்கு வரத்து இறைச்சலைக்
குறைக்கிறது.
3. பறவைகள் பூச்சிகள் மற்றும் சிறு பிராணிகளுக்கு வாழிடம்
வழங்குகிறது.
4. சூரியனின் புறவூதாக் கதிர்களை 45 சதம் வரை வடிகட்டுகிறது.
5. நிலத்தடிநீரை சேமிக்க உதவுகிறது.
6. பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தியை குறைக்கிறது.
7. காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
8. ஆரோக்கியமான அல்லது சுகாதாரமான சூழலை தருகிறது
9. சுற்றுச் சூழலின் அழகைக் கூட்டுகிறது. ஆரோக்கியத்தை மீட்கிறது.
10. குளிர்ச்சியான தட்பவெப்ப நிலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
எப்படிப்பட்ட மரங்கள் அதிக ஆக்சிஜனை வெளியிட்டு நமது
சுற்றுச்சூழலை அல்லது நம்மைச்சுற்றி இருக்கும் காற்றை சுத்தம்
செய்கின்றன ..? அதிக இலைகளைக் கொண்ட வேகமாக வளரும் பெரிய மரங்கள் அதிக அளவிலான ஆக்சிஜனை வெளிவிடும்.
ஒளிச்சேர்க்கை (PHOTOSYNTHESIS) செய்யும் முறையைவைத்து தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சி 3, சி 4, சி ஏ எம், (C3, C4, CAM)வகை மரங்கள் என பிரிக்கிறார்கள். சி. ஏ. எம். என்றால் கிராசுலேசியன் ஆசிட்; மெட்டபாலிசம் . (CRASSULACEAN ACID METABOLISM)
ஒரு மரம் ஒரு செடி ஒளிச்சேர்க்கையின் போது ஒரு குறிப்பிட்டஅளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. சுவாசிக்க ஓரளவு ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளவும் செய்கிறது.
எந்தஒரு மரம் அல்லது செடி சூரிய ஒளியை பயன்படுத்தி குறைவாக சுவாசிக்கிறதோ அது மிகுதியான ஆக்சிஜனை வெளிவிடுபவை. சர்வதேச அளவில் உள்ள மரம், செடி, கொடிகளில், 80 % மட்டுமே ஒளிச்சேர்க்கை (PHOTO SYNTHESIS) செய்பவை. இவற்றில் 1 % மட்டுமே சி 4 வகையை சேர்ந்தவை.
போட்டோ ரெஸ்பைரேஷன் குறைவாக செய்யும் மரங்களை, செடிகளை, (CAM) வகை என்கிறார்கள். இவை தண்ணீரையும் குறைவாக செலவு செய்யுமாம். வெப்ப மண்டலத்தில் அல்லது வறட்சியான நிலங்களில் வளரும் தாவரங்கள் பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தவை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் நமது சோற்றுக் கற்றாழை.
இந்தக்கருத்துப்படி பார்த்தால் அநேகமாய் சப்பாத்திக்கள்ளி வகைச்செடிகள் (CACTUS) அனைத்;தும் சி. ஏ .எம். வகையே.
வீட்டு வாசலில் சோற்றுக் கற்றாழைச் செடியை கட்டிவிட்டிருப்பதை நான் சமயங்களில் பல வீடுகளில் நான் பார்த்திருக்கிறேன். வீட்டுக்கு நல்லது நடக்கும். துஷ்ட தேவதைகளும் காத்து கருப்பும் அண்டாது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
போரில் மோசமாய் காயமடைந்த வீரர்களின் புண்களை ஆற்ற ரோமானியர்கள் சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தினார்கள் என்று ‘ பூமிக்கு வெளியே ஒரு புதையல் “ என்னும் நூலில் எழுதியுள்ளார் டாக்டர் .ஏ. ராமலிங்கம்.
பஞ்சம் காலத்தில் இதன் இலை மடல்களில் உள்ள நுங்கு போன்ற தசையை சோறாக சாப்பிட்டு பசியாற்றினார்கள். அதற்கு சோற்றுக் கற்றாழை எனப்பெயர் வந்ததாக நான் படித்திருக்கிறேன். சித்த மருத்துவத்தில் இதன்பெயர் குமரி கற்றாழை.
சோற்றுகற்றாழை |
No comments:
Post a Comment