Image Courtesy: Thanks Google |
ஆக்சிஜன் பற்றிய ஒரு அடக்கமான அறிமுகம்.
A MODEST INTRO
OF OXYGEN AND
RESPIRATION
(நாம் நல்ல காற்றை சுவாசிக்கும்போது நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். நல்ல காற்றுடன் அம்மோனியா, ஃபார்மால்டிஹைட், டெகுளோரோ எதிலீன், பென்சீன், சைலீன், டொல்யூன் இப்படி அக்கப்போரும் அடாவடித்தனமும் செய்யும் சிங்கம் புலி கரடி இவற்றையும் சேர்த்து சுவாசித்தால்; என்ன நடக்கும் ? இதை யோசித்துப்பார்த்தால் சுவாசிக்கவே வெறுப்படிக்கிறது.)
காற்று என்பது 13 வகையான வாயுக்களின் ஒரு தொகுதி என்று பார்த்தோம். காற்றில் உள்ள வாயுக்களின் நாட்டாமை நைட்ரஜன்தான்;. அதுதான் சகல அதிகாரம் படைத்தது. அதன் கைதான் ஓங்கி இருக்கும். அதற்கு அடுத்த முக்கியமான புள்ளி ஆக்சிஜன் என்பதையும் புரிந்துகொண்டோம். காற்றில் தொடங்கி காற்றில் முடியும் நைட்ரஜனின் கதைதான் நைட்ரஜன் சுழற்சி என்றும் தெரிந்துகொண்டோம்.
அடுத்த நிலையில் இருக்கும்; முக்கியமான இரண்டு வாயுக்களைப் பற்றி பார்க்கலாம். ஒன்று காற்றில் 21 சதம் இருக்கும் ஆக்சிஜன், இரண்டு மிகக் குறைவாக இருந்தாலும் முக்கியமான வாயு என்று சொல்லப்படும் ஆர்கன்.
“மனுஷன் கற்பூரம் மாதிரி லேசா காட்டினா போதும் ‘குப்’;புன்னு பத்திக்குவார்” இப்படிபட்ட ஓவர்ரீயாக்க்ஷன்ஆசாமி மாதிரிதான் ஆக்சிஜன்.
“சுனாமியா? வருதா? வந்தா மிஸ்சுடுகால் குடு பாக்கலாம்” இப்படி நோ ரீயாக் க்ஷன் ஆசாமிமாதிரிதான் இந்த ஆர்கன். அதனால்தான் இதன் பெயர் ‘இனெர்ட்கேஸ்’; (INERT GAS)அப்படீன்னு சொல்றாங்க.
இரண்டு ஆக்சிஜன் அணு (ATOM) ஒண்ணா சேர்ந்தா அது ஆக்சிஜன். இதுக்கு கலர் இல்ல. டேஸ்ட் இல்ல. வாசனையும் இல்ல. 1774 ல் ஜோசப் பிரிஸ்ட்லி (JOSEPH PREISTLY) மற்றும் கார்ல் வில்ஹெல்ம் ஷீலி (CARL WILHELM SCHEELE) ஆகிய இருவரும்தான் இதனை கண்டுபிடித்த புண்ணியவான்கள்.
குழந்தைக்கு அம்மா ஒரு பெயர் வைப்பார். அம்மா ஒரு பெயர் வைப்பார். பள்ளிக்கூட அட்மிஷன் போடுவதற்குள் அந்த இரண்டும்போய் மூன்றாவது வந்துவிடும். அதுபோல பிரிஸ்ட்லி அதற்கு ‘டெஃபலாஜிஸ்டிகேட்டட் ஏர் (DEFALOGISTIGATED AIR)’ என்று அழைத்தார். ஷீலி அதை ஃபயர் ஏர் ( FIRE AIR) என்று அழைத்தார். குத்துமதிப்பாக இதற்கு எரியும் வாயு அல்லது காற்று என்று அர்த்தம் சொல்லுகிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி.
அதன் பின்னர் ஆன்டொனி லவாய்சியர் (ANTOINE LAVAISIYAR) என்பவர் வைத்த ஆக்சிஜன் என்ற பெயர்தான் நிலைத்தது.
இந்த பிரபஞ்சத்தில் மூன்றாவது நிலையில் மிக அதிகமாக இருப்பது ஆக்சிஜன். மனித உடலில் 3 ல் ஒரு பகுதியும் தண்ணீரில் 10 ல் 9 பங்கும் இருப்பது ஆக்சிஜன்தான்.
அசிட்டிலீன்’னுடன் இதை சேர்த்தால் வெல்டிங் செய்யலாம். திரவ ஹைட்ரஜனுடன் திரவ ஆக்சிஜனை சேர்த்தால் ராக்கெட்டுக்கு எரிபொருள் தயாரிக்கலாம். மூன்று ஆக்சிஜன் சேர்ந்த ஓசோன் இந்த பூமியை சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களிடமிருந்து உயிரினங்களைப் பாதுகாக்கிறது. இன்னும் என்னென்னமோ செய்யலாம்.
இவை எல்லாம் ஆக்சிஜனைப்பற்றிய ஒரு அடக்கமான அறிமுகம்.
ஆக்சிஜனை நாம் சுவாசிக்கும்போது என்ன நடக்கிறது ? அது ஒரு பெரிய கதை. சுவாசிக்கும் போது குளுகோசுடன் ஆக்சிஜன் சேர்ந்து கார்பன்டை ஆக்சைடையும் தண்ணீரையும் உருவாக்குகிறது. இதனால் சக்தி பிறக்கிறது. இதனால்தான் பாரதி ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று பாடி இருப்பாரோ ?
நாசித்துவாரங்களில் நடைபயிலும் பிராணவாயு எங்கே போகிறது? என்ன செய்கிறது? எங்கிருந்து திரும்பி வருகிறது ? இதுபற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
மூக்குக்குள் நுழையும் காற்று நேராக நுரையீரலுக்குப் போகிறது. அங்கு காற்றிலுள்ள ஆக்சிஜனை ரத்தம் எடுத்துக்கொண்டு திசுக்களுக்கு கொண்டுபோகிறது. அத்தோடு நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் சக்தியையும் எடுத்துக்கொண்டுபோய் திசுக்களுக்கு கொடுக்கிறது.
ஆக காற்றிலிருந்து பெறும் ஆக்சிஜனை செல்கள் எனும் திசுக்களுக்கு டெலிவரி செய்யும் போஸ்ட்மேன் உத்தியோகம் பார்க்கிறது ரத்தம். இப்படி ரத்தத்தை சென்றடையும் ஆக்சிஜன் உணவிலிருக்கும் கரிச்சத்துடன் சேர்ந்து கார்பன்டை ஆக்சைடை உருவாக்குகிறது. கரிச்சத்து என்றால் கார்பன் என்று என் பேத்திகூட சொல்லுவாள்.
இன்னொரு பகுதி ஹைட்ரஜனுடன் சேர நீர் உருவாகிறது. இந்த மாற்றங்கள் நிகழ்ந்த பின்னால் வெப்பம் உற்பத்தி ஆகிறது. நமது உடலை எப்போதும் சீரான வெப்பநிலையில் வைத்துக்கொள்ள இது உதவுகிறது. மேலும் நாம் செய்யும் வேலைகளுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கிறது.
கார்பன்டை ஆக்சைடு, நீர், வெப்பம், சக்தி ஆகிய நான்கையும் சுவாசிப்பின்போது உருவாக்குவதுதான் ஆக்சிஜனுடைய உத்தியோகம்.
நாம் நல்ல காற்றை சுவாசிக்கும்போது நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். நல்ல காற்றுடன் அம்மோனியா, ஃபார்மால்டிஹைட், டெகுளோரோ எதிலீன், பென்சீன், சைலீன், டொல்யூன் இப்படி அக்கப்போரும் அடாவடித்தனமும் செய்யும் அரைடஜன் வாயுக்களையும் சேர்த்து சுவாசித்தால் என்ன நடக்கும் ? இதை யோசித்துப்பார்த்தால் சுவாசிக்கவே வெறுப்படிக்கிறது.
Reference: 1. http://education.jlab.org/itselemental/ele008.html
3.https://www.google.co.in/?gws_rd=ssl#q=what+happens+to
+oxygen+during+respiration
4. காற்றின் கதை – பதிப்பாசிரியர்: லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம் - 1990, தியாகராய நகர், சென்னை – 600 017Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment