Sunday, May 15, 2016

காற்றின் பெரும்பங்காய் இருப்பது நைட்ரஜன் THE MAJOR SHARE IN AIR IS NITROGEN


POLLUTION POLLUTION GO AWAY - SERIAL

 காற்றே காற்றே மாசு நீக்கி வா -தொடர்

 

காற்றின் 

பெரும்பங்காய் 

இருப்பது 

நைட்ரஜன்


THE MAJOR

SHARE IN AIR

IS NITROGEN


காற்றின் கதை 

நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டால் எப்படி இருக்கும் ? இப்படி ஒரு நகைச்சுவை நாடகத்தை மதுரை வானொலிக்காக எழுதினேன். எல்லோரும் வயிறு குலுங்க சிரித்த நாடகம் அது.

“வேலைகள் செய்வது நான் சம்பாதிப்பது நான் தலைமை தாங்குவது மட்டும் மூளையா ?” என்ற கைகள். “உலகை ஆட்சி செய்வதே அன்புதான்.  அதன் அடையாளமே நான்தான். தலைமை தாங்க என்னைவிட பெரியதா மூளை ?” என்று பேசியது இதயம். “நான் சுவாசிக்காவிட்டால் நீங்கள் எப்படி உயிர்வாழ முடியும்? உங்கள் எல்லேரையும்விட நான்தான் பெரும்புள்ளி. மூளை அப்படி என்ன வேலைதான் செய்கிறது?” என்று கேள்வியெழுப்பியது நுரையீரல். “மூளை என்ன செய்தது என்று மூலைக்கு மூலை கேட்கிறீர்கள் ? உங்கள் எல்லோரிடமும் வேலை வாங்குவதுதான் என் வேலை? என்றது மூளை.

“நீங்கள் எல்லோரும் ஒரு உடலைச் சேர்ந்த உறுப்புகள். உங்களைச் சேராதவன் நான். ஆனால் நான் வரவில்லை என்றால் உங்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு பெயர்தான் நிலைக்கும். அதுதான் பிணம். சவம் என்று இன்னொரு பெயரும் சொல்லலாம். நான் வேறு யாரும் அல்ல நான்தான் மூச்சு ! நான் தான் காற்று ! நான் வராமல் நின்று பார்க்கட்டுமா ?” என்று சொல்லி நாடகத்தை முடித்து வைக்கும், காற்று.

  ஆக நீ நான் என்று நாம் தினம் தினம் நடத்தும் நாடங்கள் எல்லாம் முடிந்து போகும். நாம் புனையும் வேஷங்களும் கலைந்து போகும்,  காற்று நம்மை கை கழுவிவிட்டால். 

அதனால் எல்லா உயிர்களுக்கும் உயிர் விநியோகம் செய்யும் காற்றின் கதையைப் படிக்கலாம்.

பதின்மூன்று வகையான வாயுக்களின் கலவைதான் காற்று. ஆக காற்று என்ற பெயரில் நாம் சுவாசிப்பது இந்த 13 வகையான வாயுக்கள்தான். இதில் அதிகபட்சமாக இருப்பது நைட்ரஜன் கிட்டத்தட்ட 78 சதவிகிதம்.

இதற்கு அடுத்தபடியாய் அதிகம் இருப்பது ஆக்சிஜன் என்னும் பிராணவாயு. இதனை உயிர்வாயு என்றும் தமிழில் சொல்லலாம். இந்த தமிழ் உயிர்வாயு 21 சதம் காற்றில் இருக்கிறது. இவை இரண்டும் சேர்ந்த காற்றின் அளவு மட்டுமே 99 சதம்.

மீதம் உள்ள ஒரு சதவிகிதத்தில் என்ன இருக்கிறது ?

அந்த ஒரு சதவிகிதத்தில்; இருப்பவை 11 விதமான மைனாரிட்டி வாயுக்கள்;. ஹைட்ரஜன், கார்பன்டை ஆக்சைடு, ஆர்கன், மீதேன், ஹீலியம், நியான், கிரிப்டான், ஷெனான், ஓசோன், ராடான்,  நைட்ரஸ் ஆக்ஸைடு அனைத்தும் அந்த ஒன்பதில் அடக்கம்.

இதில் முக்கியமானவை என்று விரல் நீட்டச் சொன்னால், மூன்று விரல்களை நீட்டலாம். அந்த இரண்டு நமக்குத் தெரிந்த விரல்கள். அவை நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன். மூன்றாவது முக்கியமான விரல் ஆர்கன். இது மைனாரிட்டியில் இருந்தாலும் மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு.

காற்றில் இத்தனை வாயுக்கள் இருக்கின்றன என்று முதன்முதலில் 1784 ம் ஆண்டிலேயே பட்டியல் போட்டுக்காட்டியவர் ஹென்றி கேவண்டிஷ் என்ற இயற்கை விஞஞானி. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவரும் இவர்தான்.  இவர் ஒரு இங்கிலீஷ்காரர்.

கார்ல் வில்ஹாம் சீல், ஜோசப் ப்ரீட்ஸ்லே ஆகிய இருவர் 1773 – 74 லேயே பிராணவாயு என்னும் ஆக்சிஜனை கண்டுபிடித்தார்கள்.

நம் உடலில் புரோட்டீன் உருவாகக் காரணமாக உள்ளது, காற்றின் பெரும்பகுதியாய் இருக்கும் நைட்ரஜன்.  புரோட்டீன் நமது உடல் வளர்ச்சிக்கு எவ்வளவு உதவியாக உள்ளது? இது ஊரறிந்த ரகசியம். 

வானவெளியில் இருக்கும் நைட்ரஜனை பாக்டீரியாக்கள் எடுத்து மண்ணில் சேர்க்கின்றன. மண்ணில் சேரும் நைட்ரஜனை தாவரங்கள் வளர எடுத்துக் கொள்ளுகின்றன. தாவரங்களை உணவாக உண்ணும் பிராணிகளும் நாமும் நைட்ரஜனை எடுத்துக் கொள்ளுகிறோம். நாமும் பிராணிகளும் இறந்த பின்னால் வாங்கிய நைட்ரஜன் கடனை மண்ணுக்கு திரும்பச் செலுத்துகிறோம். இதற்காகவே காத்திருக்கும் பாக்டீரியாக்கள் நமது உடல்களிலிருக்கும் நைட்ரஜனை எடுத்து காற்று மண்டலத்துக்கு சேர்க்கிறது. இதற்கு பெயர்தான் நைட்ரஜன் சைக்கிள்.

அதாவது காற்றுமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் காற்றிலிருந்து புறப்பட்டு பாக்டீரியாக்களின் வழியாக மண்ணுக்கு போய் பின் தாவரங்களுக்குப் போய் பின் உயிரினங்களுக்குப் போய்  நமக்கும் போய் பின் மண்ணுக்கு போய் மறுபடியும் பாக்டீரியாக்களின் வழியாக காற்று மண்டலத்துக்குப் போய் சேர்வதுதான் நை.சை.

(தலை சுற்றுவது மாதிரி இருக்கும். இதுதான் ‘நை.சை’ அல்லது நைட்ரஜன் சுழற்சி. இன்னொரு முறை படியுங்கள், புரியலாம்.)

 
“மார்க் வாங்க படிச்சதை எல்லாம் எதுக்கு சார் மறுசுழற்சி செய்யறீங்க ?” என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்த அடிப்படையை எல்லாம் தெரிந்து கொண்டால்தான் நாம் எப்படி கண்ட ‘கஸ்மாலத்தை’ எல்லாம் காற்றோடு சேர்த்து சுவாசிக்கிறோம் என்று புரியும்.

Image Courtesy:Thanks Google

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...