Thursday, May 5, 2016

GIRL CHILD - பெண்குழந்தை கரிசனம்





பெண்குழந்தை கரிசனம்

(விடிய நிறைய நேரம் இருந்தது. 
இருட்டின் அடர்த்தி கரையாமல் 
இன்னும் மிரட்டிக் கொண்டிருந்தது. 
இன்னும் யாரும் எழுந்திருக்க 
எத்தனிக்கவில்லை. தெருவின் 
இரு மருங்கிலும் மரமல்லிகை 
மரங்கள் தெளித்திருந்த பூக்களின்; 
வாசம் மட்டும் விழித்திருந்தது. 
பங்குனியின் பல்கிட்டும் குளிரை 
உதாசீனப்படுத்தியபடி சாமக்கோடாங்கி 
சங்கரலிங்கம் சொல்லும் குறி 
ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது) 

கோடாங்கி: நல்ல காலம் பொறக்குது …
நல்ல காலம் பொறக்குது …
நல்ல காலம் பொறக்குது …
அம்மா  தாயி …

மாரி மகமாயி

மணிமந்திர சேகரியே …
ஆயி உமையே
அகிலாண்ட  ஈஸ்வரியே …

தேவி ஜக்கம்மா

ராக்கு சொடலை …
சிறுவாச்சி மதுர காளி
திருவேற்காடு  கருமாரி …
திருக்கடவூர் அபிராமி
தில்லை  சிவகாமி …
ராஜ ராஜேஸ்வரி
தேவி புவனேஸ்வரி …
கன்னிகா பரமேஸ்வரி

காஞ்சி கமாட்சி

கவனமா சொல்லு தாயி …
காசி விசாலாட்சி
கருத்தா சொல்லு தாயி …
மதுரை மீனாட்சி
மறைக்காம சொல்லு தாயி …

ஜனங்களா கேளுங்க

ஜக்கம்மா வாக்கு இது  …
மக்களா கேளுங்க
மகமாயி வாக்கு இது …

இந்த மண்ணு மனையப் பத்திப்

பாத்தேன் கொறையில்ல …
வீடு வாசலப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …
வீட்டுல வாழுமான
கொம்பனப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …
மனைவி மக்களப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …
கொழந்த குட்டியப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …

மழை மாரியப்பத்திப் பாத்தேன்

கொறையில்ல …
காடு கழனியப் பத்திப் பாத்தேன்
கொறையில்ல …
பயிர் பச்சையப் பத்திப்
பாத்தேன் குறையில்ல …
மாடு கன்றைப்பத்திப்
பாத்தேன் குறையில்ல …

கோழி குஞ்சப்பத்திப்

பாத்தேன்  குறையில்ல …

(நிசப்தமான அதிகாலைப்பொழுதில் ஒரு தாயின் சோகம் ததும்பும் ஒரு தாலாட்டுப்பாடல் கேட்கிறது. ச கோ ச தயங்கி நிற்கிறான்)
தாயின் குரல் :--  ( தாலாட்டுப் பாட்டு )
ஆராரோ ஆரரிரோ  …
ஆராரோ ஆரரிரோ   …

(விசும்பலும் தேம்பலுடன் கூடிய அழுகையும் அந்த தாலாட்டுப் பாடலோடு இசைந்து ஒலிக்கிறது. கோடாங்கின் கால்கள் பாடல் வந்த திசை நோக்கி செல்கின்றன. மீண்டும் அந்தப் பாடல் தொடர்கிறது.)
கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு   கண்ணுறங்கு …
எங்கண்ணே கண்மணியே
காரிருளில் வந்துதித்த
நன்மணியே கண்ணுறங்கு …

பெத்தவளை கண்கலங்க

வைத்துவிட்ட பெண்மயிலே …
கண்ணுறங்கு கண்ணுறங்கு  …

(பாடல் ஒரு விசும்பலுடன் நிற்கிறது. அந்த குடிசையின் முன்னால் போய் கோடாங்கி நிற்கிறான்)


கோடாங்கி: என்னா தாயி விடியங் காத்தால அழுதுக்கிட்டிருக்க …? அப்பிடி என்னா தாயி நடந்துபோச்சி …?  எந்த கப்பல் கவுந்து போச்சின்னு இப்பிடி தேம்பி அழற தாயி …?


குழந்தையின் தாய்:  ( விசும்பி அழுதபடி ) பொழுது விடிஞ்சதத் தவிர  ….என்னோட வாழ்க்கை விடியல கோடாங்கி


கோடாங்கி: அப்படி என்ன தாயி ஒனக்கு கஷ்டம் …?


குழந்தையின் தாய்: நான் என்ன கோடாங்கி சொல்றதுக்கு  …தவமா தவமிருந்து பெத்த ஒரு பிள்ளையும் பொம்பளயாப்போச்சி …பொட்டப் புள்ளைய வச்சிக்கிட்டு …  என் வாசப்படிய மிதிக்காதன்னு மாமியாரும் சொல்றாங்க …  மாமனாரும் சொல்றாரு  …  அதாவது பரவால்ல கோடாங்கி …அம்மி மிதிச்சி …  அருந்ததி பாத்து  …    தொட்டு தாலி கட்டின புருசனும்  …வெளிய போன்னு சொன்னா  …  நான் என்ன பண்ணுவேன் கோடாங்கி  …?    சாகறதத் தவிர  எனக்கு வேற வழியே தெரியலை கோடாங்கி …  நான் சாகறதுக்காகக் கூட கவலைப்படல கோடாங்கி … ஆனா இந்த பச்சைக் குழந்தைய, சிசுவை …நெனச்சுத்தான்  …  எனக்கு கஷ்டமா இருக்குகோடாங்கி

கோடாங்கி: சனிமூலை கணபதியே
சபரிமலை ஐயப்பா
மருவத்தூர் பராசக்தி
மருவில்லா  மஹாசக்தி  …
மனசு கலங்கி நிக்கற
இந்த மகராசிக்கு - ஒரு
மார்க்கஞ் சொல்லு  …
பச்சப் புள்ளையோட
பரிதவிச்சி நிக்கற  …
இந்தப் பதிவிரதைக்கு
பாங்கான ஒரு வழிய சொல்லு தாயி  …

மண்ணுக்கு மரம்பாரமில்ல  …

கண்ணுக்கு இமைபாரமில்ல
கொடிக்கு காய்பாரமில்ல  …
செடிக்கு மலர்பாரமில்ல
தாய்மடிக்கு சேய்பாரமில்லன்னு
ஆத்தா செல்லுது தாயி….

குரல் :--  ( அழுதபடி )ஏன் கோடாங்கி …இந்த பச்சை மண்ணை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது கோடாங்கி…?


கோடாங்கி: பெத்த புள்ளையோட

பேதலிச்சு நிக்கற   --  இந்த
பெண்மணியை   …
தனிச்சி நிக்கச்சொல்லு
தனியா நிக்கச்சொல்லு
நல்லது நாடிவரும்
பொல்லாதது போய்சேரும்;னு
ஆத்தா சொல்றாதாயி  …

குழந்தையின் தாய்:   (தொடர்ந்து அழுதபடி) நீ என்ன சொல்றேகோடாங்கி …? பொட்டக் கோழிகூவி பொழுது விடியுமா …?


கோடாங்கி: சேவல் கூவலன்னாலும் பொழுது விடியும் தாயி  …ஆனைக்கு தும்பிக்கை மாதிரி நமக்கு நம்பிக்கை தாயி…


குழந்தையின் தாய்:  அப்படின்னா.. நானும் இந்த பொம்பள புள்ளயும் சாகக் கூடாதுன்னு ஆத்தா சொல்றாளா  கோடாங்கி…?


கோடாங்கி: ஆமா தாயி  …
குழந்தையின் தாய்:  அதுசரி கோடாங்கி எனக்கு யாரு  இருக்காங்க
கோடாங்கி…?

கோடாங்கி: கையி காலு இருக்கேல்ல தாயி  …

குழந்தையின் தாய்:  கையும் காலும் இருந்தா போதுமா கோடாங்கி  …?

கோடாங்கி :--கையும் இருக்கணும்

காலும் இருக்கணும்  …
கூட நம்பிக்கையும்
இருக்கணும்னு  …
ஆத்தா சொல்லுது தாயி   …

குழந்தையின் தாய்: நல்லவேளை கோடாங்கி நல்ல சமயத்துல வந்து என்னையும் எம்புள்ளையையும் காப்பாத்திட்டே…


கோடாங்கி :--

நான் காப்பாத்துல தாயி  ,,,
ஆத்தா காப்பாத்திட்டா தாயி  …
நான் வரேன் தாயி  …

நல்ல காலம் பொறக்குது  …

நல்ல காலம் பொறக்குது  …
நல்ல காலம் பொறக்குது  …
அம்மா  தாயி  …

(அடுத்த தெருவை நோக்கி நடந்து போகிறார் சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்)
 
(Image Courtesy: Thanks Google)



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...