Saturday, May 7, 2016

மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உபயோகப்படும் டிப்ஸ் ! -தொடர் - பகுதி 1


Image Courtesy:Thanks Google


                    (அதிக செலவில்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்தும் நிரூபிக்கப்பட்ட  வழிமுறைகளில்  ஒன்றினை  இங்கு  தந்துள்ளேன்.     ஒரே வாரத்தில் கைமேல் பலன் கிடைப்பதை உணர முடியும். இது  40 ஆண்டு கால அனுபவம். இதில் குறை இருந்தால் எனக்குசொல்லுங்கள்.     பலன் தெரிந்தால் பலருக்கும் சொல்லுங்கள்;)

மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மனைவிக்கு உதவியாக இருக்கவேண்டும் என்ற ஞானோதயம் ,ஆபீஸ் ஆபீஸ் என்று 63 வருஷம் அலைந்த பின்னால்இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான்; இந்த ஞானம் கிட்டியது. போதி மரம் புத்தருக்கு தந்ததுபோல எனக்கு குடும்பம் தந்தது ஞானம் இது.

வாழ்க்கையை வாழ்வது என்பது வேறு. சந்தோஷமாய் வாழ்வது என்பது வேறு. இதனை புரிந்துகொள்ள இத்தனை ஆண்டுகள் ஆனது. 

காரணம் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னால் 12 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் நியூஸ்பேப்பரை பிரித்து வைத்துக்கொண்டு ஒரு எழுத்தும் பாக்கியில்லாமல் பொறுக்குவதுமட்டும்தான் நான் பாhத்த ஒரே வேலை.

வாழ்க்கை  மறுபடியும் ஆனாஆவன்னாவிலிருந்து தொடங்கியது. எனக்கு புதுசாய் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாப்பு சேர்ந்தது மாதிரி இருந்தது. 24 மணிநேரமும் மனைவியோடு இருப்பது வித்தியாசமாக இருந்தது.
 
எதுவும் தெரியாமல் ஒரே நாளில் எப்படி உபயோகமாய் இருப்பது என்று யோசித்தேன். என் மனைவி அதிகம் சிரமப்படுவது சமையல்கட்டில்தான். இதில் நான் எப்படி உதவமுடியும் ? யோசித்து யோசித்து மண்டை காய்ந்துபோனது.

 “ஏங்க இந்த பூண்டை கொஞ்சம் உறிச்சித் தர்றீங்களா ?” தயங்கியபடி கேட்டாள் என் மனைவி. உடனே நான் “சரி” என்று ஒத்துக் கொண்டேன். அவளுக்கே ஆச்சரியம்.

“கேஸ் ஆன் செய்யக்கூட தெரியாது அவருக்கு..சுடுதண்ணி போடத் தெரியுமான்னு கேளுங்க.. சாப்பிட்ட கையை புடவை முந்தானையிலதான் துடைச்சிவிடுவாங்க அவுங்க அம்மா …”அடுத்த வீட்டிலிருந்து யாராவது வந்தால் என் அருமைபெருமைகளைச் சொல்லி என்னை அறிமுகப்படுத்தி வைப்பாள் முன்பெல்லாம், என் மனைவி.

“உறிக்க ஏதாச்சும் பூண்டு இருக்கா ?” அடுத்த நாள் நானே கேட்டுவாங்கி உறித்தேன். அதற்கு அடுத்தநாள் வெங்காயம், இஞ்;சி, கொத்துமல்லி, காய்கறிகள் என்று பிரமோஷன் கொடுத்தாள் என் மனைவி.

இப்போது மறுபடியும் ஒரு முக்கிய நபர் ஆகிவிட்டேன். “உங்களுக்கு என்ன காபியா டீயா ? என்ன வேணும்னு சொல்லுங்க”. நான் கேட்காமலே பல உதவிகள் மானியமாக கிடைத்தன என் மனைவியிடம். 

“அவர் மாதிரி செய்ய முடியாது…. அவர் எதைச்செய்தாலும் ஒரு பெர்பெக்ஷன் இருக்கும்..” இப்படி எனக்கு பாராட்டுக்களும் வர ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து அடுத்த வேலையும் வரும். “ரொம்ப நேரமா கொடியில் துணி காயுது பாருங்க. அதக்கொஞ்சம் எடுத்துகிட்டு வர்றீங்களா.. ?” 

இதற்கிடையே, பூண்டு, வெங்காயம், இஞ்சி;, தவிர தமிழ், இங்லீஷ், இந்தி இப்படி பலமொழி காய் காய்கறிகளை சமையலுக்கு தயார் செய்வதில் படிபடியான   பயிற்சிகளைத்  தந்தாள் என் மனைவி.

அலுப்பும் அயர்ச்சியும் தரும்படியான ஆபீஸ் வேலைகளைவிட இது உற்சாகம் தந்தது.

‘இப்போதாவது புத்தி வந்ததே இந்த மனுஷனுக்கு’என்று என் மனைவி ரகஸ்யமாய் ஆனந்தகண்ணீர் வடிக்க நானும் வெங்காயம் நறுக்கியபடி அவளுக்கு கம்பெனி கொடுப்பேன்.

காய்களை எப்படி நறுக்குகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது சமையலின் ருசியே. நிறைய பேருக்கு இது தெரியாது. நான் அதை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்டேன்.

சொத்தைகளை முற்றியவைகளை நீக்குவது, தேவையான அளவு காய்களை எடுத்துக் கொள்வது, அவற்றின்மீது ஒட்டிஇருக்கும் தூசி-துப்பட்டை, மண்-மசால்வடை ஆகியவற்றை சுத்தமானநீரில் கழுவி நீPக்குவது, காய்கள் நறுக்கப்பட வேண்டிய சைஸ் ஆகிவற்றை தெரிந்துகொள்வது, ; நறுக்குவதற்கு ஏற்ற கூர்மையான கத்தி, காய் நறுக்கும் மனை, ஓரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் அத்தனையும் காய் நறுக்குவதற்கு முன்னால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்று தெரிந்து கொண்டேன்;.

இப்படிப்பட்ட வேலைகளை ‘கிமுகிபி’ மாதிரி இதற்கு ‘சமுசபி’ வேலைகள் என்று பிரிக்க வேண்டும். ‘சமு’ என்றால் சமையலுக்கு முன்னால் செய்ய வேலைகள், ‘சபி’ என்றால் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, சமையலுக்கு பின்னால் செய்ய வேண்டிய வேலைகள் என்று.

அதேபோல ‘சாமுசாபி’ என்பதையும் ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். சாமு என்றால் சாப்பாட்டுக்கு முன் செய்யும் வேலைகள்,  ‘சாபி’ என்றால் சாப்பாட்டுக்குப்பின் செய்ய வேண்டியவை. இவை எல்லாம் ‘ஃபுட்கோர்ட’ தொடர்பானவை.

இந்த அடிப்படையை எல்லாம் புரிந்துகொண்டால்தான் நாம் மனைவிக்கு உபயோகமாக இருக்க முடியும். நாம் உபயோகமாக இருந்தால்தான் மனைவி உபயோகமாக இருப்பாள். இப்படி ஒருவருக்கொருவர் உபயோகமாக இருந்தால் வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும்.

இப்படி இருக்க வேண்டுமானால் முதலில் ‘நான்’ஐ தூக்கி தூர எறிய வேண்டும்.

காய்கறி நறுக்குவதில் நான் கற்றுக்கொண்ட அதிநுட்பமான சமாச்சாரங்களை அடுத்த பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்ளுகிறேன். 

Image Courtesy:Thanks Google


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...