Tuesday, April 26, 2016

ரூஸ்வெல்ட் இயற்கையை பாதுகாக்க இளைஞர் ராணுவம் அமைத்தார் ROOSEVELT FORMED TREE ARMY & SOIL SOLDIERS

மரங்கள் பாதுகாக்கும் ராணுவம் (சிசிசி)(Image Courtesy:Google)
ரூஸ்வெல்ட் 
இயற்கையை 
பாதுகாக்க 
இளைஞர் ராணுவம் அமைத்தார் 

ROOSEVELT FORMED
TREE ARMY & SOIL SOLDIERS

வேலையைத் தவிர வேறு எல்லா காரியங்களையும் செய்யும் இடம் எது என்று கேட்டால் நம்ம ஊர் “100 நாள் வேலைத்தளம்” என்று பச்சைக்குழந்தை கூட சொல்லும். அந்த அளவிற்கு அந்தத் திட்டம் ரொம்பவும் பிரபலமானது.
அங்கு என்னென்ன வேலைகள் நடக்கிறது என்று பார்க்கலாம்.

வேலைத் தளத்தில் சுணங்கி நிற்பது, நிழலில் ஒதுங்குவது, டெலிபோன் பேசுவது, கொஞ்சநேரம் கண்மூடி அமைதிகாப்பது, ஒரு குட்டித்தூக்கம் போடுவது, செல்போன்பேசுவது, வாட்ஸ்அப் பார்ப்பது, மெசேஜ் அனுப்புவது, எஃப் எம் கேட்பது, வீடியோ பார்ப்பது இது போக நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் வேலையும் செய்வது, இதுதான்; 100 நாள் வேலைத்தளங்களின் அஜண்டா. 

வெள்ளத்தில் சில திட்டுக்கள் மாதிரி அபூர்வமாக சில ஊராட்சிகளில்; சிலர் உபயோககரமாகவும் இதனை நடத்தலாம். அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் மழை என்னும் அதிசயம் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது நாம் சிசிசி க்கு வருவோம்.

சிசிசி யில் ஒருகட்டுப்பாடு இருந்தது. ஒரு ஓழுங்கு இருந்தது. எதை எப்போது எப்படி செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதல் இருந்தது. சிசிசி கிட்டத்தட்ட ஒரு ராணுவம் மாதிரி.

நல்ல பழக்கவழக்கங்கள், நேரம் தவறாமை, தனிநபர் ஒழுக்கம், பாதுகாப்பாக Nலை பார்த்தல், செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தல்;, உற்பத்தித்திறனை கூட்டுதல், பொறுப்புணர்வு கொள்ளல், திறமை வெளிப்படுத்தல், விதிமுறைகளுக்கு கட்டுப்படுதல் போன்றவை இந்த வீரர்களின் அடையாளமாக இருந்தன.  

சரியாக காலை 6 மணிக்கு சீனியர் லீடர் விசில் அடிப்பார்;. விசில் சத்தம் கேட்டதும் எழுந்திருப்பார்கள்;. 6.15 க்குள் தங்கள் படுக்கையை சரிசெய்வார்கள். காலை சிற்றுண்டி காலை 6.30 க்கு மேஜையில் இருக்கும்.
இரண்டாவது விசில் 6.45 க்கு பறக்கும். அனைவரும் கொடிமரத்தடியில் கூடுவார்கள். அடுத்து வருகைப்பதிவு நடக்கும். அன்று செய்யவேண்டிய வேலைகளை அறிவிப்பார்கள். 

“யாருக்கெல்லாம் தலைவலி, வயிற்றுவலி வேறு உடல் உபாதைகள் இருக்கு..” என்று கேட்டதும் கைகளை உயர்த்தியவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைப்பார்கள்.

சரியாக காலை 7.00 மணிக்கு டிரக் தயாராக இருக்கும், வீரர்களை ஏற்றிச்செல்ல. வேலை செய்யவதற்கான கருவிகள் மற்றும் உபகரணங்களை முதலில் ட்ரக்கில் ஏறும். அதன் பின்னர் சாப்பாட்டுப் பொட்டலங்கள் ஏறும். மூன்றாவதாக சிசிசி வீரர்கள் ஏறியவுடன் ட்ரக் புறப்படும்.

வேலைத்தளத்தில் இறங்கியவுடன் வீரர்கள் குழுக்களாகப் பிரிந்து வேலை பார்ப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு ஃபோர்மேன். “இதைச்செய் அதைச் செய்யாதே” என்று குழுவை வழிநடத்துவார்; ஃபோர்மேன்.

“வேலை செய்தது போதும் எல்வோரும் சாப்பிட வாருங்கள்”; என்று கூப்பிடும், அடுத்த விசில் 11.45 மணிக்கு. சேண்ட்விச், பழங்கள், கேக், காபி போன்றவை தயாராக இருக்கும்.

நிம்மதியான சாப்பாட்டுக்குப்பின் கொஞ்ச நேரம் சிலர் நண்பர்களுடன் மொக்கை போடுவர். சிலர் சிகரெட் பிடிப்பார்கள். சிலர் சுருட்டு பிடிப்பார்கள். சிலர் உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என மயங்கி இருப்பர். சிலர் அப்போதும் வேலைபற்றி ஃபோர்மேனிடம் கிண்டுவார்கள்.

“ரெஸ்ட் எடுத்து போதும் மக்களா வேலை பாக்கலாம் வாங்க” என்ற அடுத்த விசில் அவர்களைக் கூப்பிடும் சரியாக 12.45 மணிக்கு.

கோடையின் பிற்பகல் வெயில் வேலையை கடுமையாக்கும். மழைக்காலம் வேலை செய்யவிடாமல் அலைக்கழிக்கும். குளிர் காலத்தில் ஜில்லிப்பு எலும்பு மஜ்ஜைக்குள் இறங்கும். எப்படிப்பட்ட மோசமான பருவ நிலைகளையும் போர்வீரர்களுக்கு சமமாக எதிர்கொண்டார்கள்.

நான்கு மணிக்கு வேலை முடிய டிரக்குகள் தயாராக நிற்கும். முதலில் வீரர்கள் கருவிகளையும் பாத்திர பண்டங்களையும் ஏற்றுவார்கள். டிரக்குகள் முகாம்களுக்கு புறப்படும். வீரர்கள் கருவிகளை இறக்குவார்கள். கருவி கிடங்குகளில் இறக்கி வைப்பார்கள். அதன் பின்னர் இரவு உணவு வரை அது அவர்களுடைய நேரம்.

குளிப்பது, முகச்சவரம் செய்வது, துணிதுவைப்பது, வீட்டுக்கு நல்ல பிள்ளையாய் கடிதம் எழுதுவது போன்றவற்றில் ஈடுபடுவர்.

முகாமின் பொது இடத்தில் மாலை 5 மணிக்கு முகாமின் கமாண்டிங் ஆபீசர் வீரர்களை சந்திப்பார். அவர் முக்கியமான அறிவிப்புகளை செய்வார். வீரர்களின் தோற்றம், உடை, போன்றவை சரியாக உள்ளதா என்றும் கவனிப்பார். “மேல் சட்டையில பட்டன் என்னாச்சு ? எலி தின்னுடுச்சா? எவ்ளோ அவசரமா இருந்தாலும் பேண்ட் ஜிப்பை போடாம வரக்கூடாது புரிஞ்சிதா…?” இப்படியெல்லாம்கூட கேட்பார்கள். 

இரவு உணவு மாலை    5.45 மணிக்கெல்லாம் மேஜைக்கு வந்துவிடும். காலை சிற்றுண்டி, மதிய உணவு சாப்பிடும்போது இருக்கும் டென்ஷன் இருக்காது. நிதானமாக சாப்பிடுவார்கள். ரொம்ப நிதானமாக சாப்பிடுபவர்களுக்கென்று தனியாக ஒரு மேஜை போட்டிருப்பார்கள். அதில் உட்கார்ந்து விடியவிடிய சாப்பிடலாம்.

சிலர் சாப்பிடுவது ரொம்ப காமெடியாக இருக்கும். சிலர் சாப்பிடுவதைப் பர்த்தால் நாம் சாப்பிட முடியாது. சிலர் சாப்பிட்ட இடத்தை சுத்தம்செய்ய இரண்டு அக்ரோணி சேனை வேண்டும். இதற்கென உயர் அதிகாரிகள் “டேபிள் மேனர்ஸ்”பற்றி பயிற்சி; தருவார்கள்.
மண் பாதுகாப்பு ராணுவம் (Image Courtesy: Google)

சாப்பிட்டு முடித்த பின்னால்; சிலர் படிக்க நூலகம் போவார்கள். சிலர் விளையாடப் போவார்கள். இன்னும் சிலர் அங்கு நடைபெறும் பயிற்சியில் பங்குபெற போவார்கள். பயிற்சி வகுப்புகள் இரவு 7.45 க்கு தொடங்கும். 

பெரும்பாலோர் இரவு 9.30 மணிக்கெல்லாம் படுக்கைக்கு திரும்புவர். பத்து மணி வாக்கில் விளக்குகள் அணையும். இரவுநேர காவலர்கள் முகாமை சுற்றி வருவர். காலை சரியாக 4.30 மணிக்கு சமையல்காரர்களை காவலர்கள் உசுப்பிவிடுவர்.

காலை 6 மணிக்கு மீண்டும் விசில் சத்தம் அடுத்தநாள் வேலைகளுக்கு பிள்ளையார்சுழி போடும்.

(NOTE: I made a study on Civilian Conservation Corps during my short visit in USA in 2012.)






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...