Thursday, April 7, 2016

ராபர்ட் கியோசாகி - பணக்கார அப்பாவும் ஏழை அப்பாவும் - ROBERT KIYOSAKI - RICH DAD POOR DAD




ராபர்ட் கியோசாகி - பணக்கார 
அப்பாவும் ஏழை அப்பாவும் 

ROBERT KIYOSAKI - RICH DAD POOR DAD
ராபர்ட் டி கியோசாகி

'நம்முடைய தேவை என்ன ? நம்முடைய இலக்கு என்ன ? நமது வாழ்க்கையை எதை நோக்கி நகர்த்த வேண்டும் ? " இதை எப்படி முடிவு செய்வது ?

இதை எந்த பள்ளிக்கூடத்திலும் எந்த வாத்தியாரும் சொல்லித்தர மாட்டார். இந்தியாவில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் வாத்தியார்கள் அப்படிப்பட்ட பாடங்களை நடத்துவதில்லை. காரணம் அவை எல்லாம் எந்த பாடத் திட்டத்திலும் இல்லை என்பதுதான்.

இந்த பாடத்தை பள்ளிக்கூடத்தில் சொல்லித்தர வேண்டும் என்பதில்லை. வீட்டில் பெற்றோர்கள் கூட சொல்லித்தரலாம். அவர்களால்தான் இதை சொல்லித்தர முடியும்.

ஒரு அப்பா தன் மகனுக்கு எப்படி சொல்லி தருகிறார் என்று பாருங்கள்.

'மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும்.
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் நீ என்று
போற்றிப் புகழ வேண்டும் "

எம்.ஜி.ஆர், வேட்டைக்காரன் படத்தில் தன் மகனுக்கு "எப்படி அவன் வளர வேண்டும்" என்று சொல்லும்படியாக அமைந்த பாட்டு. இந்தப்பாட்டு பற்றிய இன்னொரு செய்தி எனக்கு நினைவுக்கு வருகிறது.

நான் அகில இந்திய வானொலியில் வேலை பார்த்த போது, நடிகர் சத்யராஜ் அவர்களை பேட்டி கண்டேன். எனக்கு பிடித்தமான நடிகர்களில் அவரும் ஒருவர்.

'நீங்கள் முன்னுக்கு வருவதற்கு காரணமாக இருந்தது எது என்று சொல்ல முடியுமா ?" என்று நான் கேட்டதற்கு பதிலாக இந்த பாட்டைத்தான்; பாடினார்.

' மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும்.

ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் நீ என்று
போற்றிப் புகழ வேண்டும் "

இந்தப் ;பாட்டுதான் என் வாழ்க்கையை தலைகுப்புற புரட்டிப் போட்ட பாட்டு என்று உணர்ச்சிவசப்பட்டார். ராகத்துடன் அதைப் பாடியும் காட்டினார்.

சத்யராஜ் அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோளை தீர்மானிக்க ஒரு சினிமாப்பாட்டு போதுமானதாக இருந்துள்ளது. அவர் தனக்காகப் பாடிய பாடலாக அதை எடுத்துக் கொண்டார்.

'கையில சில்லரைய சேத்துக்க இல்லன்னா நீயே  ஒரு சில்லரைன்னு உன்னை தூக்கி எறிஞ்சிடும்; 'என்று திருவள்ளுவரே சொல்லுகிறார்.

' அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு "

பொருளாதாரத்தை பின்புலத்தில் கொண்ட குறிக்கோளாக தீர்மானிக்கும்போது வெற்றி என்பது சுலபமாய் வசப்படும்.

பணம் சம்பாதிக்கும் அறிவையும்,  அதனை நிர்வாகம் செய்யும் வழிமுறைகளையும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். இந்த அடிப்படை இல்லாத எந்தக் கல்வியும் ஏட்டுசுரைக்காய்தான் என்று அற்புதமாய் எழுதி இருப்பார், ராபர்ட் டி கியோஸ்கி தனது  'ரிச் டாட் புவர் டாட் " என்ற தன் புத்தகத்தில்.

குழந்தைகளின் முக்கியமான ஆசிரியர்களான பெற்றோர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன் என்று எழுதியிருப்பார்.

உலகில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய புத்தகம் அது. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

எனது 60 வது வயதில் 2010 ஆண்டு இந்த  'ரிச் டாட் புவர் டாட்" புத்தகத்தை நான் படித்தேன். பத்து வருசம் முன்னாடியாவது இதைப் படித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இப்படிப்பட்ட செய்திகளை நாம் பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.

இன்று தினசரி பத்திரிக்கைகளே அதைக் கையில் எடுத்துக் கொண்டு கலக்குகின்றன. போதாதற்கு வலைத்தளங்களில் வண்டி வண்டியாய் இது போன்ற செய்திகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பள்ளிப் பாடங்கள் மார்க் எடுக்கவும் மனப்பாடம் செய்யவும் என்று ஆகிவிட்டதால், அவை நம்மை வெகுவாகக் கவருவதில்லை.

பாடம் நடத்துவது என்பது வேறு. கற்றுக்கொள்ளச் செய்வது என்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

உங்கள் குறிக்கோளாக எதை வேண்டுமானாலும் தீர்மானியுங்கள். ஆனால், அதைத் தீர்மானிக்கும் போது, "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு " என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

Image Courtesy:Google










No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...